அசோகமித்திரனின் ‘இன்று’

asokamithran

ஆர்வி சலிக்காமல் நூல்களைப்பற்றி எழுதிவரும் அவரது தளத்தில் அசோகமித்திரனின் இன்று நாவலைப்பற்றி எழுதியிருக்கிறார். ஆனால் அது நாவல் அல்ல சிறுகதை- கட்டுரைத் தொகுதி என எண்ணுகிறார். அவ்வகையிலேயே அதை வாசித்தும் இருக்கிறார்.

இன்று ஒரு சோதனைமுயற்சி நாவல். சிறுகதைகள், கட்டுரைகள், உரைகள் அடங்கியது. நேரடியாக ஒன்றுடன் ஒன்று தொடர்பு இல்லை. ஆனால் உள்சரடால் அவை இணைக்கப்பட்டிருப்பதனால் நாவல். அது நாவலாகத்தான் அசோகமித்திரனால் முன்வைக்கப்பட்டது. முதலில் அது என்ன என்று சொல்லவேண்டியவர் ஆசிரியர்தானே?

இருவிஷயங்கள் கருத்தில்கொள்ளப்படவேண்டும். ஒன்று அதன்பின்புலம் நெருக்கடி நிலைக் காலகட்டம்.நெருக்கடிநிலை முடிந்தபின்னர் அந்தச் சூழலை முன்வைத்து எழுதப்பட்ட நாவல் அது. நெருக்கடிநிலையை வெவ்வேறு தரப்பினர் எதிர்கொள்வதன் சித்திரங்கள் என அந்நாவலைத் தொகுத்துக்கொள்லலாம்.

தத்துவார்த்தமாக அது எழுப்பும் மையம் இன்னும் விரிவானது. ஒரு பெரிய இலட்சியம், ஒரு பெரிய போராட்டம் காலத்தால் பின்னகர்ந்து வரலாறாக ஆனபின்ன என்ன எஞ்சுகிறது? சம்பந்தப்பட்டவர்களுக்கு உண்மையில் என்ன மிஞ்சும்? சாமானியர்கள் வரலாற்றுத்தருணங்களை எப்படி எதிர்கொள்கிறார்கள்? தங்களை சிறப்பானவர்களாக எண்ணிக்கொள்ளும் இலட்சியவாதிகளும் அறிவுஜீவிகளும் எப்படி எதிர்கொள்கிறார்கள். இவ்வினாக்களுடன் நாவலை வாசித்தால் அது ஒரு வடிவை அடையும்

சாமானியர்கள் எப்படியாவது அந்த வரலாற்றுத்தருணத்தை வாழ்ந்து கடந்துவிட முயல்கிறார்கள். அறிவுஜீவிகள் அதை வகுத்துவிட முயல்கிறார்கள். இலட்சியவாதிகள் அதில் தங்கள் இருப்பை ஸ்தாபிக்க முயல்கிறார்கள். மூன்றுக்குமே பெரிய அர்த்தமில்லை என்கிறார் அசோகமித்திரன் ‘அர்த்தம் நாம் தேடத்தேட அது நழுவிச்செல்கிறது’ என்று முடியும் நாவலின் கடைசிவரி வாசித்து முப்பதாண்டுகளுக்குப்பின்னும் நினைவிலிருக்கிறது!

அந்த வடிவம் நமக்குள் வந்தால்தான் முதியோர் விடுதியில் இருக்கும் சுதந்திரவீரர் [என் காலுக்கு என்ன ஆச்சுன்னு அப்பவாவது கண்டுபிடிப்பாங்களோ இல்லியோ] நெருக்கடிநிலைக்க்கு எதிராகப் போராடி அது விலக்கப்பட்டபின் வாழ்க்கையை அர்த்தமற்ற சலிப்பாக உணர்பவர் [ நிரந்தரமாக சந்தோஷமாக இருக்கவேண்டுமென்றால் நிரந்தரமாக வேட்டையாடப்படவேண்டும் போலிருக்கிறது] ஆகியோருக்கு இடையேயான உறவை நாம் வாசிக்கமுடியும்

முப்பதாண்டுகளுக்குப்பின்னரும் வரிகள் நினைவிலுள்ளன என்பதனால் இந்நாவல் முக்கியமானது. ஆனால் அதன் வடிவம் இன்னும் சரியாக அமைந்திருக்கலாம் என்றே நினைக்கிறேன். அனைத்துப்பகுதிகளும் சரியாக [நம்முள் ] இணையாமலிருப்பதனாலேயே முழுமை கொள்ளாமல் போய்விட்ட ஆக்கம் இது

அசோகமித்திரன் ஒற்றன் நாவலையும் இதேபோல பல தனிக்கதைகளின் தொகுதியாக அமைத்திருக்கிறார். பயணக்கட்டுரை- கதைகளின் தொகுதி என தோன்றும் அதை அவர் நாவலாகவே வெளியிட்டிருக்கிறார்

அசோகமித்திரன் பற்றிய என் பழையபதிவுகள்

அசோகமித்திரன் -ஒருகதை

அசோகமித்திரனுக்கு ஒரு வாசகர்

புலிக்கலைஞன்

சுந்தர ராமசாமி அசோகமித்திரன்

அசோகமித்திரன் இரு கதைகள்

அசோகமித்திரன் தேவதேவன்

இருநகரங்களுக்கு நடுவே -அசோகமித்திரன்

அசோகமித்திரன் என்னைப்பற்றி

பதினெட்டாவது அட்சக்கோடு

அசோகமித்திரன் படைப்புலகுக்கு ஒரு வாசல்

அசோகமித்திரன்- கடிதங்கள்

அசோகமித்திரன் சந்திப்பு

அசோகமித்திரன் -சென்னையில்

அசோகமித்திரனைச் சந்தித்தல்

சென்னை சித்திரங்கள்

ஆட்கொள்ளல்

முந்தைய கட்டுரைபதிற்றுப்பத்து ஆங்கிலத்தில்
அடுத்த கட்டுரைநாளை நெல்லையில்