ஒரு வரலாற்று நாயகன்

1975ல் நெருக்கடிநிலை அறிவிக்கப்பட்டபோது எனக்கு வயது 13 தாண்டியிருந்தது. எட்டாம் வகுப்பு மாணவன். இருபது அம்சத் திட்டத்தைப் பற்றிய கட்டுரை,பேச்சுப்போட்டிகள் அப்போதெல்லாம் மாதம் இருமுறை நடக்கும். அனேகமாக நான் பரிசுபெறுவேன். ஒருகட்டத்தில் இருபதம்சத்திட்டத்தைப் பற்றிய சொற்பொழிவை கடைசியில் இருந்து ஆரம்பம் வரைக்கூட சொல்லும் திராணி உள்ளவனாக ஆனேன்.

இக்காலகட்டத்தில் நான் குமுதத்தின் தீவிர வாசகன். சாண்டில்யன் கனிந்திருந்த காலம், சுஜாதா விளைந்து வந்தார். அக்காலத்து குமுதன் கார்ட்டூன்களில் ஜெயப்பிரகாஷ் நாராயணன் அடிக்கடி இடம்பெற்றார். சோடாப்புட்டிக் கண்ணாடி நீண்ட ஜிப்பா. ஒரு கார்ட்டூனில் அவர் ஒரு அழகான பானையை தடியால் அடிக்கிறார். அதன் பெயர் ஜனநாயகம். அருகே தக்ளி ஓட்டிக்கொண்டிருக்கும் வினோபா நீ தடியை எடுத்தபோதே நினைத்தேன்என்கிறார்.

அவ்வாறுதான் ஜெயப்பிரகாஷ் நாராயணன் அறிமுகம். அப்போது சிவாஜி கணேசன் நடித்த மன்னவன் வந்தானடி படம் வெளியாகியிருந்தது. அதில் சிவாஜி கழுதைமேல் ஏறி கோமாளிக்கோலத்தில் ஒரு பாட்டு பாடுவார் நான் நாட்டைத்திருத்தப்போறேன் அந்த கோட்டையைபிடிக்கப்போறேன்அந்தப் பாடலுக்கு ஜெபியை வரைந்து வெளிவந்த கேலிப்படம் நினைவிருக்கிறது

பின்னர் ஜனதாக்கட்சி ஆட்சி அமைந்து அதில் ராஜ்நாராயணும் சரண்சிங்கும் கூத்தடித்து அவர்களைக்கொண்டு ஆட்சியை இந்திரா கவிழ்த்தபோது ஜெபியைப் பற்றிய சித்திரம் ஒன்று வலுவாகவே உருவானது. குரங்குகளை திரட்டி ராணுவம் அமைக்க முயன்று தோற்ற ஒரு அசடு அல்லது இன்னொரு குரங்கு. அந்தச் சித்திரத்துக்கு எதிராகப் பேசிய ஒரே இதழ் துக்ளக் மட்டுமே. பின்னர் துகளக் வழியாகவே ஜெயப்பிரகாஷ் நாராயணன் குறித்த உண்மையான சித்திரம் எனக்குள் உருவாகியது.

ஆனால் ஜெயப்பிரகாஷ் நாராயணன் யார்? இந்திய வரலாற்றில் நாம் சுத்தமாக மறந்துவிட்ட வரலாற்று நாயகன் என்றால் அது ஜெயப்பிரகாஷ் நாராயணன் தான். அவரை நாம் இன்று பாடப்புத்தக வரலாற்றில் இருந்து அறிய முடிவதில்லை. அவரது பெயரை அனேகமாக எந்த அரசியல்கட்சியும் இன்று சொல்வதில்லை. அவரது பிறந்தநாளோ நினைவுநாளோ கொண்டாடப்படுவதில்லை. அவரை நமது மாற்றுவரலாற்றாசிரியர்கள்கூட மறந்துவிட்டிருக்கிறார்கள். சர்வசாதாரணமான சாதித்தலைவர்கள்கூட வாழும் வரலாற்றில் ஜெயப்பிரகாஷ் நாராயணன் அழிக்கப்பட்டிருக்கிறார்.

ஆனாலும் மானுட மனம் எப்போதும் ஒரு மூலையில் உயர் விழுமியங்களுக்கான விருப்புடன் இருக்கிறது. அப்படி இருக்கும்வரை அது ஜெயப்பிரகாஷ் நாராயணன் போன்றவர்களை மறக்க முடியாது. எங்கோ எவரோ உணர்ச்சியால் நனைந்த குரலில் அவரைப்பற்றிச் சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள். கிழக்கு வெளியீடாக வந்துள்ள ஜெ.பி.யின் ஜெயில்வாசம்அத்தகைய ஒரு முக்கியமான குரல்.

இதை எழுதிய எம்.ஜி.தேவசகாயம் இந்திய ஆட்சிப்பணியில் 1975ல் ஹரியானாவில் சண்டிகரின் ஆட்சியராகப் பணியாற்றியவர். நெருக்கடிநிலை நிலை அறிவிக்கப்பட்டதுமே ஜெயப்பிரகாஷ்நாராயணன் கைதுசெய்யப்பட்டு சண்டிகருக்குத்தான் அனுப்பி வைக்கப்பட்டார். செய்தியாளர்களின் கண்ணுக்குப்படாத மூலைக்கு அவரை விலக்குவதும் அதேசமயம் அவர் கையெட்டும் தூரத்திலேயே இருப்பதும் ஆட்சியாளர்களின் தேவையாக இருந்திருக்கிறது. ஆகவே சண்டிகர்.

சண்டிகருக்கு வரும் ஜெயப்பிரகாஷ் நாராயணன் உடைந்துபோன, உடல்நலமற்ற மனிதராக இருக்கிறார். நெருக்கடிநிலையின் ஆரம்பகாலத்தில் என்ன நடக்கிறதென்று எவருக்குமே தெரிந்திருக்கவில்லை. காங்கிரஸ்காரர்கள், காவலதிகாரிகள், நிர்வாக அதிகாரிகள் உட்பட. ஏனென்றால் நெருக்கடி நிலை என்பது வெளிநாட்டு உள்நாட்டு படைஎடுப்புகளால் நாட்டின் இறையாண்மைக்கு ஆபத்து ஏற்படும்போது கொண்டுவரப்படவேண்டியது. அப்படி ஒரு நிலை அதற்கு முன்னரும் இந்தியாவுக்கு வந்ததில்லை. அப்போது எந்த நெருக்கடியும் இல்லை.

இந்திரா காங்கிரஸ் கட்சிக்குள் கொஞ்சம் பலவீனமாக இருந்தார் என்று சொல்லலாம். மூத்த தலைவர்கள் தனக்கெதிராக மனநிலையில் இருக்கிறார்களோ என்று அவர் ஐயப்பட்டார். அவர் ராணுவ வாகனங்களை தேர்தலுக்குப் பயன்படுத்தினார் என்று குற்றம் சாட்டி ராஜ்நாராயண் தொடுத்த வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சின்கா அவருக்கு எதிரான தீர்ப்பளித்திருந்தார். அதற்கு எதிராக இந்திரா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். ஆனால் இதெல்லாமே சாதாரண அரசியல் சிக்கல்களே.

அதைவிட உக்கிரமான சமூகச் சிக்கல் வெளியே இருந்தது. இந்தியஅரசு நேரு-மகாலானோபிஸ் கொள்கையின்படி அமல்படுத்திய மையப்படுத்தப்பட்ட நிர்வாக முறை படுதோல்வியைச் சந்தித்திருந்தது. கம்யூனிச அரசுகளைப்போல அதிகாரிவற்கத்தின் கட்டுப்பாட்டில் பொருளாதாரத்தை ஒப்படைத்திருந்த இந்த முறைக்கு கலப்புப் பொருளாதாரம்என்று செல்லப்பெயர் அரசு தரப்பில் அளிக்கப்பட்டது. நடைமுறையில் கோட்டா-பெர்மிட்-லைசன்ஸ் ராஜ்என்று அது சொல்லப்பட்டது.

IndiaTv621d49_jp

அது இந்தியாவில் ஊழலைப் பெருக்கியது. தனியார்துறையை சூம்பி நிற்கச் செய்தது. விளைவாக வேலையின்மை பெருகி நாடெங்கும் கசப்பு எழுந்தது. இன்றைய இளைஞர்கள் அந்தச் சூழலை புரிந்துகொள்வது கடினம். ஜஞ்சீர் போன்ற இந்திப்படங்கள், வறுமையின் நிறம் சிவப்பு,பாலைவனச்சோலை போன்ற தமிழ்ப்படங்களை வைத்து அதை ஊகிக்கலாம். எங்கும் வேலையில்லா இளைஞர்கூட்டம். அவர்கள் தேசத்தின் சுமைகளாக அறியப்பட்டார்கள். அன்று வெளிநாட்டுக்கு வேலைக்கு போவதற்கே ஆயிரம் கட்டுப்பாடுகள் இருந்தன. இளைஞர்களின் கலகமாக எழுந்த நக்சல்பாரி இயக்கம் அதற்குள் வேருடன் கெல்லி எறியப் பட்டிருந்தது. அதில் கிட்டத்தட்ட ஒருலட்சம்பேர் அரசால் கொல்லப்பட்டிருந்தார்கள்.

அந்த அதிருப்தியை காந்திய வழியில் ஒருங்கிணைத்து நாடளாவிய ஒரு இளைஞர் இயக்கத்தை ஆரம்பித்திருந்தார் ஜெயப்பிரகாஷ் நாராயணன் . அவரது இயக்கம் உத்தரபிரதேசத்திலும் பிகாரிலும் சரசரவென வளர ஆரம்பித்தது. அரசியல் பொருளியல் சமூக தளத்தில் ஒட்டுமொத்தமான ஒரு மாற்றத்துக்கான அறைகூவலாக இருந்த அவரது இயக்கம் அவரால் முழுப்புரட்சிஎன்று அழைக்கப்பட்டது. அது வன்முறைக்கான அறைகூவல் அல்ல. மாறாக ஓர் அடிப்படை மாற்றத்துக்கான காந்திய அறைகூவல்.

அதை அஞ்சித்தான் இந்திரா நெருக்கடி நிலையைக் கொண்டு வந்தார் என்று சொல்லப்பட்டது. இன்றும்கூட நெருக்கடி நிலைக்கான காரணங்கள் மர்மமாகவே உள்ளன. இந்திரா ஜெயப்பிரகாஷ் நாராயணனை ஒரு சாக்காகச் சொன்னார். அவர் உருவாக்கும் இயக்கம் வன்முறைக்குச் சென்று இந்திய ஜனநாயக அமைப்பையே அழிக்கும் என்றார். ஆக, ஜனநாயகத்தைக் காக்கவே அவர் நெருக்கடி நிலை சர்வாதிகாரிகாரத்தைக் கொண்டு வந்தார் என்பது அவரது பாடம்.

சண்டிகருக்கு வரும் ஜெயப்பிரகாஷ் நாராயணன் என்ன நடக்கிறது என்றே முதலில் புரியாமலிருக்கிறார். ஒரு தற்காலிகச் சிறைவாசம் என்று அவர் எண்ணியிருக்கலாம். ஆனால் தொடர்ச்சியாக மொரார்ஜிதேசாய் போன்ற தலைவர்கள் கைது செய்யப்படுவதை அவர் அறிய நேரிடும்போது தான் நினைத்ததை விட தீவிரமான ஒரு சூழல் உருவாகிறது என்று அவருக்குப் புரிகிறது. ஒவ்வொருநாளும் இந்திரா நாளிதழ்களில் சொல்லும் அப்பட்டமான பொய்களை வாசித்து அருவருப்பும் கோபமும் கொள்கிறார் ஜெயப்பிரகாஷ் நாராயணன்.

ஜெயப்பிரகாஷ் நாராயணனின் உடல்நிலை மிக மோசமான நிலையில் இருக்கிறது. அவருக்கு கடுமையான சர்க்கரை நோயும் ரத்த அழுத்தமும் இருக்கின்றன. அவர் அதிகநாள் வாழமாட்டார் என்ற நிலையில் அவர் சிறையிலேயே செத்து மடிய வேண்டும் என்று அரசு எதிர்பார்க்கிறது. இந்நூலில் ஜெயப்பிரகாஷ் நாராயணன் சிறைக்கு வந்ததுமே சிறையில் அவர் செத்துப்போனால் என்னென்ன செய்ய வேண்டும் என்பதைப்பற்றிய விரிவான திட்டம் வகுக்கப்படுகிறது. அதற்கு ஆபரேஷன் மெடிசின்என்று ரகசியப்பெயரும் சூட்டப்படுகிறது.

சிறைவாசத்தில் ஜெயப்பிரகாஷ் நாராயணன் எப்படி இருந்தார் என்பதை மிக நுணுக்கமாக பதிவுசெய்கிறார் தேவசகாயம். ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆரம்பத்தில் தளர்ந்து போகிறார், எல்லாம் முடிந்தது, இந்திய ஜனநாயகம் அழிந்தது என்று புலம்புகிறார். சிறு சிறு நம்பிக்கைகளுடன் காத்திருக்கிறார். உச்சநீதிமன்றம் தலையிடும் என நினைக்கிறார். ஒவ்வொன்றாக அழிகின்றன. அதைவிட மக்கள் நெருக்கடி நிலையை சாதாரணமாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்ற தகவல்கள் வந்து அவரை சோர்வடையச் செய்கின்றன

அதன் பின் ஜெயப்பிரகாஷ் நாராயணன் அந்தச் சூழ்நிலையை புரிந்துகொள்ள முயல்கிறார். ஒவ்வொருநாளும் தன் சிந்தனைகளை டைரியில் எழுதுகிறார். அந்த போக்கில் உண்மைக்கு மிக நெருக்கமாக அவர் வந்திருப்பதை இந்நூல் காட்டுகிறது. நெருக்கடிநிலை என்பது உண்மையில் இந்திராவின் திட்டம் அல்ல, அது சோவியத் ருஷ்யாவின் திட்டம். நேரு காலத்திலேயே சோவியத் பிடியில் அடங்கிவிட்டிருந்த இந்தியா அப்போது கிட்டத்தட்ட கெஜிபியால் ஆளப்பட்டது. அன்று தங்கள் ஆதரவுநாடுகளில் பொம்மைச் சர்வாதிகார ஆட்சிகளை நிறுவி வந்தது ருஷ்யா. இந்தியாவிலும் அதை முயன்றுபார்த்தார்கள்.

அம்முயற்சி வென்றிருந்தால் ஏதோ ஒரு கட்டத்தில் இந்திராவே விலக்கப்பட்டு நேரடி சோவியத் ஆட்சி வந்திருக்கும். புரட்சியை ஏற்றுமதிசெய்வது எழுபதுகளில் சோவியத் ருஷ்யாவின் வழிமுறையாக இருந்தது. அன்று நெருக்கடி நிலையின் மிகத்தீவிரமான ஆதரவுக் கட்சியாக, அதன் அனைத்துச் செயல்பாடுகளிலும் பங்கெடுக்கும் இயக்கமாக, இருந்தது சோவியத் ருஷ்யாவின் கையாளாக இருந்த இந்தியக் கம்ப்யூனிஸ்டுக் கட்சி.

தன்னை கொஞ்சம் கொஞ்சமாக திரட்டிக்கொள்கிறார் ஜெயப்பிரகாஷ் நாராயணன். அவர் இந்திராகாந்திக்கு எழுதிய கடுமையான கடிதங்கள் அவர் தன் சினத்தையும் அறச்சீற்றத்தையும் தொகுத்துக்கொள்வதற்கான முயற்சிகள். ஒரு கட்டத்தில் எப்படியாவது சிறையில் இருந்து மீளவேண்டுமென முயல்கிறார். அதற்காக இந்திராகாந்தியிடம் சமரசத்துக்குக் கூட வருகிறார். அரசியலில் ஈடுபட மாட்டேன், இயக்கத்தைக் கலைக்கிறேன் என்றும் சொல்ல்கிறார். சமரசத்துக்கு ஷேக் அப்துல்லா உட்பட பலரிடம் பேச தயாராக இருக்கிறார். ஆனால் இந்திரா அவரை நம்பவில்லை. காந்தியவாதிகளின் வழி என்ன என்பதை அவர் அறிந்திருந்தார், அவர்கள் ஒருபோதும் விட்டுக்கொடுக்கமாட்டார்கள், எல்லா சமரசத்தையும் ஒரு போராட்டமாகவே எடுத்துக்கொள்வார்கள் என.

ஜெயப்பிரகாஷ் நாராயணன் பிகாரில் வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபடுவதற்காக விடுதலையை கோரியதை போர்தந்திரமாக புரிந்துகொள்வதா இல்லை உண்மையான மனஎழுச்சியா என்பது கடினம். அவர் எப்போதுமே பிகாரின் புதல்வர். பிகாரின் பெரும்பஞ்சங்களில் அவர் உருவாக்கிய கஞ்சித்தொட்டி இயக்கம் அரசாங்கம் செய்ததைவிட பலமடங்கு பணியாற்றியிருக்கிறது. ஆனால் ஜெயப்பிரகாஷ் நாராயணன் கடைசியில் பேசுவதை வைத்துப்பார்த்தால் அவருக்கு தெளிவான திட்டம் இருந்திருக்கிறது என்றே தெரிகிறது.

ஆகவேதான் அவரை சாகவிட முயன்றார்கள் மருத்துவர்கள். அவருக்கு சிறுநீரகச் சிக்கல் இருப்பதற்கான எல்லா தடையங்களும் இருந்தபோதிலும்கூட அவரது மருத்துவர்கள் சிறுநீரக நிபுணர்களைக் கொண்டு அவரை பரிசோதிப்பதை தவிர்க்கிறார்க்ள். சிறுநீரகப்பிரச்சினைக்கு அவருக்கு மருத்துவம் செய்யப்படவே இல்லை. விளைவாக ஜெபியின் உடல்நிலை மோசமாகிறது அவர் மரணத்தின் விளிம்பை அடைகிறார்.

அதுவே அவருக்கு லாபமாகியது. அவர் காவலில் இறப்பதை அஞ்சிய அரசு அவரை விடுதலை செய்கிறது. உடனடியாக மும்பை ஜஸ்லோக் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவரது சிறுநீரகத்தில் பிரச்சினை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உரிய சிகிழ்ச்சை மூலம் உயிர் பிழைக்கிறார்.

சிறையில் இருந்து மரணத்தருவாயில் விடுதலைச் செய்யப்படும்போது விமானத்தில் இருக்கும் ஜெயப்பிரகாஷ் நாராயணன் தேவசகாயத்திடம் பேசும் காட்சி உணர்ச்சிகரமானது. தன் மீது நீங்காத பற்றுடன் இருக்கும் நூலாசிரியரிடம் கண்ணீருடன் கைப்பற்றி ஆசி அளித்து செல்லும்போது இந்தப்பெண்மணியை தோற்கடித்து ஜனநாயகத்தை மீட்பேன்என்று சொல்லிவிட்டுச் செல்கிறார். அதைப்போலவே அதை வேறும் மூன்று மாதங்களில் சாதித்தும் காட்டினார். மாறுபட்ட மனநிலைகளைக் கொண்ட பல்வேறு அரசியல்கட்சிகளை இணைத்து ஒரு பெரும் கூட்டணியை உருவாக்கினார். ஜனதா கட்சி காங்கிரஸை வீழ்த்தியது.

அதன் வரலாற்று முக்கியத்துவத்தை நாம் இன்று எந்த அளவுக்கு உணர்ந்திருக்கிறோம் என்பதே ஐயத்திற்குரியது. அந்த சோதனை பின்னர் தோல்வியடைந்தது முன்னாள் சோஷலிஸ்டுகளும் ஜனசங்கத்தினரும் கம்யூனிஸ்டுகளும் இணைந்த அந்த அமைப்பால் ஆட்சியை சீராக முன்னெடுக்க முடியவில்லை. அந்த வீழ்ச்சியால் இன்று அதை குறைத்து மதிப்பிடுகிறோம். ஆனால் உண்மையில் அன்று ஜனதாக்கட்சி காங்கிரஸை வீழ்த்தவில்லை என்றால் என்ன ஆகியிருக்கும் என்று சிந்தித்தால் அதன் முக்கியத்துவம் தெரியும். அன்று அது நிகழவில்லை என்றால் இந்தியாவில் ஜனநாயகம் இருந்திருக்காது. இந்திய வரலாறு முற்றிலும் மாறு மட்ட இன்னொரு திசைக்குச் சென்றிருக்கும். அப்படி செல்லாமல் தடுத்த சரித்திர நாயகர் ஜெபி.

ஜெபியின் அழகிய சித்திரத்தை அளிக்கும் முக்கியமான நூல் இது. ஆனால் வழக்கமாக தமிழில் நாம் வாசிக்கும் தழுதழுவரலாறு அல்ல. மிக உண்மையான சித்திரம். ஆகவே ஜெபியின் பலவீனங்களையும் இது காட்டுகிறது. ஜெபி நிதானமற்றவர். உணர்ச்சி வசப்படுகிறவர். அடிக்கடி நம்பிக்கை இழப்பவர் என்பதை இந்நூல் காட்டுகிறது. ஆனால் முற்றிலும் சுயநலம் இல்லாதவர். தேசம் மீது இந்நாட்டின் கோடானுகோடி மக்கள் மீது ஜனநாயகம் மீது ஆழமான நம்பிக்கை கொண்டவர்.

சுதந்திரத்துக்காக போராடியவர்களை மறக்கும் சமூகம் சுதந்திரத்தை இழக்கும் என்பது உலக வரலாறு. ஜெபியை நாம் நினைவுகூர வேண்டியது அதற்காக. அதற்கு உதவும் முக்கியமான நூல் இது. ஜெ.ராம்கி மிக இயல்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார். தடையற்ற வாசிப்பை அளிக்கக்கூடிய ஒரு சரித்திர நூல் இது

ஜெ.பி.யின் ஜெயில்வாசம்‘ கிழக்கு வெளியீடு

மறுபிரசுரம் , முதற்பிரசுரம் Jan 25, 2010

முந்தைய கட்டுரைஒளியை நிழல் பெயர்த்தல்
அடுத்த கட்டுரைவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 48