«

»


Print this Post

ஒரு வரலாற்று நாயகன்


1975ல் நெருக்கடிநிலை அறிவிக்கப்பட்டபோது எனக்கு வயது 13 தாண்டியிருந்தது. எட்டாம் வகுப்பு மாணவன். இருபது அம்சத் திட்டத்தைப் பற்றிய கட்டுரை,பேச்சுப்போட்டிகள் அப்போதெல்லாம் மாதம் இருமுறை நடக்கும். அனேகமாக நான் பரிசுபெறுவேன். ஒருகட்டத்தில் இருபதம்சத்திட்டத்தைப் பற்றிய சொற்பொழிவை கடைசியில் இருந்து ஆரம்பம் வரைக்கூட சொல்லும் திராணி உள்ளவனாக ஆனேன்.

இக்காலகட்டத்தில் நான் குமுதத்தின் தீவிர வாசகன். சாண்டில்யன் கனிந்திருந்த காலம், சுஜாதா விளைந்து வந்தார். அக்காலத்து குமுதன் கார்ட்டூன்களில் ஜெயப்பிரகாஷ் நாராயணன் அடிக்கடி இடம்பெற்றார். சோடாப்புட்டிக் கண்ணாடி நீண்ட ஜிப்பா. ஒரு கார்ட்டூனில் அவர் ஒரு அழகான பானையை தடியால் அடிக்கிறார். அதன் பெயர் ஜனநாயகம். அருகே தக்ளி ஓட்டிக்கொண்டிருக்கும் வினோபா நீ தடியை எடுத்தபோதே நினைத்தேன்என்கிறார்.

அவ்வாறுதான் ஜெயப்பிரகாஷ் நாராயணன் அறிமுகம். அப்போது சிவாஜி கணேசன் நடித்த மன்னவன் வந்தானடி படம் வெளியாகியிருந்தது. அதில் சிவாஜி கழுதைமேல் ஏறி கோமாளிக்கோலத்தில் ஒரு பாட்டு பாடுவார் நான் நாட்டைத்திருத்தப்போறேன் அந்த கோட்டையைபிடிக்கப்போறேன்அந்தப் பாடலுக்கு ஜெபியை வரைந்து வெளிவந்த கேலிப்படம் நினைவிருக்கிறது

பின்னர் ஜனதாக்கட்சி ஆட்சி அமைந்து அதில் ராஜ்நாராயணும் சரண்சிங்கும் கூத்தடித்து அவர்களைக்கொண்டு ஆட்சியை இந்திரா கவிழ்த்தபோது ஜெபியைப் பற்றிய சித்திரம் ஒன்று வலுவாகவே உருவானது. குரங்குகளை திரட்டி ராணுவம் அமைக்க முயன்று தோற்ற ஒரு அசடு அல்லது இன்னொரு குரங்கு. அந்தச் சித்திரத்துக்கு எதிராகப் பேசிய ஒரே இதழ் துக்ளக் மட்டுமே. பின்னர் துகளக் வழியாகவே ஜெயப்பிரகாஷ் நாராயணன் குறித்த உண்மையான சித்திரம் எனக்குள் உருவாகியது.

ஆனால் ஜெயப்பிரகாஷ் நாராயணன் யார்? இந்திய வரலாற்றில் நாம் சுத்தமாக மறந்துவிட்ட வரலாற்று நாயகன் என்றால் அது ஜெயப்பிரகாஷ் நாராயணன் தான். அவரை நாம் இன்று பாடப்புத்தக வரலாற்றில் இருந்து அறிய முடிவதில்லை. அவரது பெயரை அனேகமாக எந்த அரசியல்கட்சியும் இன்று சொல்வதில்லை. அவரது பிறந்தநாளோ நினைவுநாளோ கொண்டாடப்படுவதில்லை. அவரை நமது மாற்றுவரலாற்றாசிரியர்கள்கூட மறந்துவிட்டிருக்கிறார்கள். சர்வசாதாரணமான சாதித்தலைவர்கள்கூட வாழும் வரலாற்றில் ஜெயப்பிரகாஷ் நாராயணன் அழிக்கப்பட்டிருக்கிறார்.

ஆனாலும் மானுட மனம் எப்போதும் ஒரு மூலையில் உயர் விழுமியங்களுக்கான விருப்புடன் இருக்கிறது. அப்படி இருக்கும்வரை அது ஜெயப்பிரகாஷ் நாராயணன் போன்றவர்களை மறக்க முடியாது. எங்கோ எவரோ உணர்ச்சியால் நனைந்த குரலில் அவரைப்பற்றிச் சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள். கிழக்கு வெளியீடாக வந்துள்ள ஜெ.பி.யின் ஜெயில்வாசம்அத்தகைய ஒரு முக்கியமான குரல்.

இதை எழுதிய எம்.ஜி.தேவசகாயம் இந்திய ஆட்சிப்பணியில் 1975ல் ஹரியானாவில் சண்டிகரின் ஆட்சியராகப் பணியாற்றியவர். நெருக்கடிநிலை நிலை அறிவிக்கப்பட்டதுமே ஜெயப்பிரகாஷ்நாராயணன் கைதுசெய்யப்பட்டு சண்டிகருக்குத்தான் அனுப்பி வைக்கப்பட்டார். செய்தியாளர்களின் கண்ணுக்குப்படாத மூலைக்கு அவரை விலக்குவதும் அதேசமயம் அவர் கையெட்டும் தூரத்திலேயே இருப்பதும் ஆட்சியாளர்களின் தேவையாக இருந்திருக்கிறது. ஆகவே சண்டிகர்.

சண்டிகருக்கு வரும் ஜெயப்பிரகாஷ் நாராயணன் உடைந்துபோன, உடல்நலமற்ற மனிதராக இருக்கிறார். நெருக்கடிநிலையின் ஆரம்பகாலத்தில் என்ன நடக்கிறதென்று எவருக்குமே தெரிந்திருக்கவில்லை. காங்கிரஸ்காரர்கள், காவலதிகாரிகள், நிர்வாக அதிகாரிகள் உட்பட. ஏனென்றால் நெருக்கடி நிலை என்பது வெளிநாட்டு உள்நாட்டு படைஎடுப்புகளால் நாட்டின் இறையாண்மைக்கு ஆபத்து ஏற்படும்போது கொண்டுவரப்படவேண்டியது. அப்படி ஒரு நிலை அதற்கு முன்னரும் இந்தியாவுக்கு வந்ததில்லை. அப்போது எந்த நெருக்கடியும் இல்லை.

இந்திரா காங்கிரஸ் கட்சிக்குள் கொஞ்சம் பலவீனமாக இருந்தார் என்று சொல்லலாம். மூத்த தலைவர்கள் தனக்கெதிராக மனநிலையில் இருக்கிறார்களோ என்று அவர் ஐயப்பட்டார். அவர் ராணுவ வாகனங்களை தேர்தலுக்குப் பயன்படுத்தினார் என்று குற்றம் சாட்டி ராஜ்நாராயண் தொடுத்த வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சின்கா அவருக்கு எதிரான தீர்ப்பளித்திருந்தார். அதற்கு எதிராக இந்திரா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். ஆனால் இதெல்லாமே சாதாரண அரசியல் சிக்கல்களே.

அதைவிட உக்கிரமான சமூகச் சிக்கல் வெளியே இருந்தது. இந்தியஅரசு நேரு-மகாலானோபிஸ் கொள்கையின்படி அமல்படுத்திய மையப்படுத்தப்பட்ட நிர்வாக முறை படுதோல்வியைச் சந்தித்திருந்தது. கம்யூனிச அரசுகளைப்போல அதிகாரிவற்கத்தின் கட்டுப்பாட்டில் பொருளாதாரத்தை ஒப்படைத்திருந்த இந்த முறைக்கு கலப்புப் பொருளாதாரம்என்று செல்லப்பெயர் அரசு தரப்பில் அளிக்கப்பட்டது. நடைமுறையில் கோட்டா-பெர்மிட்-லைசன்ஸ் ராஜ்என்று அது சொல்லப்பட்டது.

IndiaTv621d49_jp

அது இந்தியாவில் ஊழலைப் பெருக்கியது. தனியார்துறையை சூம்பி நிற்கச் செய்தது. விளைவாக வேலையின்மை பெருகி நாடெங்கும் கசப்பு எழுந்தது. இன்றைய இளைஞர்கள் அந்தச் சூழலை புரிந்துகொள்வது கடினம். ஜஞ்சீர் போன்ற இந்திப்படங்கள், வறுமையின் நிறம் சிவப்பு,பாலைவனச்சோலை போன்ற தமிழ்ப்படங்களை வைத்து அதை ஊகிக்கலாம். எங்கும் வேலையில்லா இளைஞர்கூட்டம். அவர்கள் தேசத்தின் சுமைகளாக அறியப்பட்டார்கள். அன்று வெளிநாட்டுக்கு வேலைக்கு போவதற்கே ஆயிரம் கட்டுப்பாடுகள் இருந்தன. இளைஞர்களின் கலகமாக எழுந்த நக்சல்பாரி இயக்கம் அதற்குள் வேருடன் கெல்லி எறியப் பட்டிருந்தது. அதில் கிட்டத்தட்ட ஒருலட்சம்பேர் அரசால் கொல்லப்பட்டிருந்தார்கள்.

அந்த அதிருப்தியை காந்திய வழியில் ஒருங்கிணைத்து நாடளாவிய ஒரு இளைஞர் இயக்கத்தை ஆரம்பித்திருந்தார் ஜெயப்பிரகாஷ் நாராயணன் . அவரது இயக்கம் உத்தரபிரதேசத்திலும் பிகாரிலும் சரசரவென வளர ஆரம்பித்தது. அரசியல் பொருளியல் சமூக தளத்தில் ஒட்டுமொத்தமான ஒரு மாற்றத்துக்கான அறைகூவலாக இருந்த அவரது இயக்கம் அவரால் முழுப்புரட்சிஎன்று அழைக்கப்பட்டது. அது வன்முறைக்கான அறைகூவல் அல்ல. மாறாக ஓர் அடிப்படை மாற்றத்துக்கான காந்திய அறைகூவல்.

அதை அஞ்சித்தான் இந்திரா நெருக்கடி நிலையைக் கொண்டு வந்தார் என்று சொல்லப்பட்டது. இன்றும்கூட நெருக்கடி நிலைக்கான காரணங்கள் மர்மமாகவே உள்ளன. இந்திரா ஜெயப்பிரகாஷ் நாராயணனை ஒரு சாக்காகச் சொன்னார். அவர் உருவாக்கும் இயக்கம் வன்முறைக்குச் சென்று இந்திய ஜனநாயக அமைப்பையே அழிக்கும் என்றார். ஆக, ஜனநாயகத்தைக் காக்கவே அவர் நெருக்கடி நிலை சர்வாதிகாரிகாரத்தைக் கொண்டு வந்தார் என்பது அவரது பாடம்.

சண்டிகருக்கு வரும் ஜெயப்பிரகாஷ் நாராயணன் என்ன நடக்கிறது என்றே முதலில் புரியாமலிருக்கிறார். ஒரு தற்காலிகச் சிறைவாசம் என்று அவர் எண்ணியிருக்கலாம். ஆனால் தொடர்ச்சியாக மொரார்ஜிதேசாய் போன்ற தலைவர்கள் கைது செய்யப்படுவதை அவர் அறிய நேரிடும்போது தான் நினைத்ததை விட தீவிரமான ஒரு சூழல் உருவாகிறது என்று அவருக்குப் புரிகிறது. ஒவ்வொருநாளும் இந்திரா நாளிதழ்களில் சொல்லும் அப்பட்டமான பொய்களை வாசித்து அருவருப்பும் கோபமும் கொள்கிறார் ஜெயப்பிரகாஷ் நாராயணன்.

ஜெயப்பிரகாஷ் நாராயணனின் உடல்நிலை மிக மோசமான நிலையில் இருக்கிறது. அவருக்கு கடுமையான சர்க்கரை நோயும் ரத்த அழுத்தமும் இருக்கின்றன. அவர் அதிகநாள் வாழமாட்டார் என்ற நிலையில் அவர் சிறையிலேயே செத்து மடிய வேண்டும் என்று அரசு எதிர்பார்க்கிறது. இந்நூலில் ஜெயப்பிரகாஷ் நாராயணன் சிறைக்கு வந்ததுமே சிறையில் அவர் செத்துப்போனால் என்னென்ன செய்ய வேண்டும் என்பதைப்பற்றிய விரிவான திட்டம் வகுக்கப்படுகிறது. அதற்கு ஆபரேஷன் மெடிசின்என்று ரகசியப்பெயரும் சூட்டப்படுகிறது.

சிறைவாசத்தில் ஜெயப்பிரகாஷ் நாராயணன் எப்படி இருந்தார் என்பதை மிக நுணுக்கமாக பதிவுசெய்கிறார் தேவசகாயம். ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆரம்பத்தில் தளர்ந்து போகிறார், எல்லாம் முடிந்தது, இந்திய ஜனநாயகம் அழிந்தது என்று புலம்புகிறார். சிறு சிறு நம்பிக்கைகளுடன் காத்திருக்கிறார். உச்சநீதிமன்றம் தலையிடும் என நினைக்கிறார். ஒவ்வொன்றாக அழிகின்றன. அதைவிட மக்கள் நெருக்கடி நிலையை சாதாரணமாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்ற தகவல்கள் வந்து அவரை சோர்வடையச் செய்கின்றன

அதன் பின் ஜெயப்பிரகாஷ் நாராயணன் அந்தச் சூழ்நிலையை புரிந்துகொள்ள முயல்கிறார். ஒவ்வொருநாளும் தன் சிந்தனைகளை டைரியில் எழுதுகிறார். அந்த போக்கில் உண்மைக்கு மிக நெருக்கமாக அவர் வந்திருப்பதை இந்நூல் காட்டுகிறது. நெருக்கடிநிலை என்பது உண்மையில் இந்திராவின் திட்டம் அல்ல, அது சோவியத் ருஷ்யாவின் திட்டம். நேரு காலத்திலேயே சோவியத் பிடியில் அடங்கிவிட்டிருந்த இந்தியா அப்போது கிட்டத்தட்ட கெஜிபியால் ஆளப்பட்டது. அன்று தங்கள் ஆதரவுநாடுகளில் பொம்மைச் சர்வாதிகார ஆட்சிகளை நிறுவி வந்தது ருஷ்யா. இந்தியாவிலும் அதை முயன்றுபார்த்தார்கள்.

அம்முயற்சி வென்றிருந்தால் ஏதோ ஒரு கட்டத்தில் இந்திராவே விலக்கப்பட்டு நேரடி சோவியத் ஆட்சி வந்திருக்கும். புரட்சியை ஏற்றுமதிசெய்வது எழுபதுகளில் சோவியத் ருஷ்யாவின் வழிமுறையாக இருந்தது. அன்று நெருக்கடி நிலையின் மிகத்தீவிரமான ஆதரவுக் கட்சியாக, அதன் அனைத்துச் செயல்பாடுகளிலும் பங்கெடுக்கும் இயக்கமாக, இருந்தது சோவியத் ருஷ்யாவின் கையாளாக இருந்த இந்தியக் கம்ப்யூனிஸ்டுக் கட்சி.

தன்னை கொஞ்சம் கொஞ்சமாக திரட்டிக்கொள்கிறார் ஜெயப்பிரகாஷ் நாராயணன். அவர் இந்திராகாந்திக்கு எழுதிய கடுமையான கடிதங்கள் அவர் தன் சினத்தையும் அறச்சீற்றத்தையும் தொகுத்துக்கொள்வதற்கான முயற்சிகள். ஒரு கட்டத்தில் எப்படியாவது சிறையில் இருந்து மீளவேண்டுமென முயல்கிறார். அதற்காக இந்திராகாந்தியிடம் சமரசத்துக்குக் கூட வருகிறார். அரசியலில் ஈடுபட மாட்டேன், இயக்கத்தைக் கலைக்கிறேன் என்றும் சொல்ல்கிறார். சமரசத்துக்கு ஷேக் அப்துல்லா உட்பட பலரிடம் பேச தயாராக இருக்கிறார். ஆனால் இந்திரா அவரை நம்பவில்லை. காந்தியவாதிகளின் வழி என்ன என்பதை அவர் அறிந்திருந்தார், அவர்கள் ஒருபோதும் விட்டுக்கொடுக்கமாட்டார்கள், எல்லா சமரசத்தையும் ஒரு போராட்டமாகவே எடுத்துக்கொள்வார்கள் என.

ஜெயப்பிரகாஷ் நாராயணன் பிகாரில் வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபடுவதற்காக விடுதலையை கோரியதை போர்தந்திரமாக புரிந்துகொள்வதா இல்லை உண்மையான மனஎழுச்சியா என்பது கடினம். அவர் எப்போதுமே பிகாரின் புதல்வர். பிகாரின் பெரும்பஞ்சங்களில் அவர் உருவாக்கிய கஞ்சித்தொட்டி இயக்கம் அரசாங்கம் செய்ததைவிட பலமடங்கு பணியாற்றியிருக்கிறது. ஆனால் ஜெயப்பிரகாஷ் நாராயணன் கடைசியில் பேசுவதை வைத்துப்பார்த்தால் அவருக்கு தெளிவான திட்டம் இருந்திருக்கிறது என்றே தெரிகிறது.

ஆகவேதான் அவரை சாகவிட முயன்றார்கள் மருத்துவர்கள். அவருக்கு சிறுநீரகச் சிக்கல் இருப்பதற்கான எல்லா தடையங்களும் இருந்தபோதிலும்கூட அவரது மருத்துவர்கள் சிறுநீரக நிபுணர்களைக் கொண்டு அவரை பரிசோதிப்பதை தவிர்க்கிறார்க்ள். சிறுநீரகப்பிரச்சினைக்கு அவருக்கு மருத்துவம் செய்யப்படவே இல்லை. விளைவாக ஜெபியின் உடல்நிலை மோசமாகிறது அவர் மரணத்தின் விளிம்பை அடைகிறார்.

அதுவே அவருக்கு லாபமாகியது. அவர் காவலில் இறப்பதை அஞ்சிய அரசு அவரை விடுதலை செய்கிறது. உடனடியாக மும்பை ஜஸ்லோக் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவரது சிறுநீரகத்தில் பிரச்சினை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உரிய சிகிழ்ச்சை மூலம் உயிர் பிழைக்கிறார்.

சிறையில் இருந்து மரணத்தருவாயில் விடுதலைச் செய்யப்படும்போது விமானத்தில் இருக்கும் ஜெயப்பிரகாஷ் நாராயணன் தேவசகாயத்திடம் பேசும் காட்சி உணர்ச்சிகரமானது. தன் மீது நீங்காத பற்றுடன் இருக்கும் நூலாசிரியரிடம் கண்ணீருடன் கைப்பற்றி ஆசி அளித்து செல்லும்போது இந்தப்பெண்மணியை தோற்கடித்து ஜனநாயகத்தை மீட்பேன்என்று சொல்லிவிட்டுச் செல்கிறார். அதைப்போலவே அதை வேறும் மூன்று மாதங்களில் சாதித்தும் காட்டினார். மாறுபட்ட மனநிலைகளைக் கொண்ட பல்வேறு அரசியல்கட்சிகளை இணைத்து ஒரு பெரும் கூட்டணியை உருவாக்கினார். ஜனதா கட்சி காங்கிரஸை வீழ்த்தியது.

அதன் வரலாற்று முக்கியத்துவத்தை நாம் இன்று எந்த அளவுக்கு உணர்ந்திருக்கிறோம் என்பதே ஐயத்திற்குரியது. அந்த சோதனை பின்னர் தோல்வியடைந்தது முன்னாள் சோஷலிஸ்டுகளும் ஜனசங்கத்தினரும் கம்யூனிஸ்டுகளும் இணைந்த அந்த அமைப்பால் ஆட்சியை சீராக முன்னெடுக்க முடியவில்லை. அந்த வீழ்ச்சியால் இன்று அதை குறைத்து மதிப்பிடுகிறோம். ஆனால் உண்மையில் அன்று ஜனதாக்கட்சி காங்கிரஸை வீழ்த்தவில்லை என்றால் என்ன ஆகியிருக்கும் என்று சிந்தித்தால் அதன் முக்கியத்துவம் தெரியும். அன்று அது நிகழவில்லை என்றால் இந்தியாவில் ஜனநாயகம் இருந்திருக்காது. இந்திய வரலாறு முற்றிலும் மாறு மட்ட இன்னொரு திசைக்குச் சென்றிருக்கும். அப்படி செல்லாமல் தடுத்த சரித்திர நாயகர் ஜெபி.

ஜெபியின் அழகிய சித்திரத்தை அளிக்கும் முக்கியமான நூல் இது. ஆனால் வழக்கமாக தமிழில் நாம் வாசிக்கும் தழுதழுவரலாறு அல்ல. மிக உண்மையான சித்திரம். ஆகவே ஜெபியின் பலவீனங்களையும் இது காட்டுகிறது. ஜெபி நிதானமற்றவர். உணர்ச்சி வசப்படுகிறவர். அடிக்கடி நம்பிக்கை இழப்பவர் என்பதை இந்நூல் காட்டுகிறது. ஆனால் முற்றிலும் சுயநலம் இல்லாதவர். தேசம் மீது இந்நாட்டின் கோடானுகோடி மக்கள் மீது ஜனநாயகம் மீது ஆழமான நம்பிக்கை கொண்டவர்.

சுதந்திரத்துக்காக போராடியவர்களை மறக்கும் சமூகம் சுதந்திரத்தை இழக்கும் என்பது உலக வரலாறு. ஜெபியை நாம் நினைவுகூர வேண்டியது அதற்காக. அதற்கு உதவும் முக்கியமான நூல் இது. ஜெ.ராம்கி மிக இயல்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார். தடையற்ற வாசிப்பை அளிக்கக்கூடிய ஒரு சரித்திர நூல் இது

ஜெ.பி.யின் ஜெயில்வாசம்‘ கிழக்கு வெளியீடு

மறுபிரசுரம் , முதற்பிரசுரம் Jan 25, 2010

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/6347

31 comments

2 pings

Skip to comment form

 1. Ilangovan Paris

  ” அம்முயற்சி வென்றிருந்தால் ஏதோ ஒரு கட்டத்தில் இந்திராவே விலக்கபப்ட்டு நேரடி சோவியத் ஆட்சி வந்திருக்கும்”

  அன்புள்ள ஜெயமோகன், வணக்கம்.
  மேலே உள்ள வரிகள் சற்று அதீதமான கற்பனை என்று தோன்றுகிறது.
  அல்லது இந்தியத் தேசியத்தின் மீதான நம்பிக்கையின்மயா?

 2. நவீன்

  >>நெருகக்டிநிலை என்பது உண்மையில் இந்திராவின் திட்டம் அல்ல, அது சோவியத் ருஷ்யாவின் திட்டம். நேரு காலத்திலேயே சோவியத் பிடியில் அடங்கிவிட்டிருந்த இந்தியா அப்போது கிட்டத்தட்ட கெஜிபியால் ஆளப்பட்டது.

  இதெல்லாம் அப்பட்டமான பொய்கள். இதற்கான மேற்கோள்களை காட்டுங்கள் பார்க்கலாம். காபிடலிஸ்ட்கள் கம்யூனிஸ்ட் கள் மேலிருந்த பயத்தால் தான் நேரு Non-Aligned Movement -கு அடிக்கல் நாட்டினார் (நேஹ்ருவுக்கு அப்புறம் அந்த அணி பிசுபிசுத்து போனது வேறு வரலாறு).

  50-60 களில் சோவியத் யூனியன் இடமிருந்து இந்தியா நிறைய பொருளாதார ராணுவ உதவிகளை பெற்று கொண்டது. ஆனால் இவை எல்லாம் எதிரியாக வளர்ந்து கொண்டிருந்த சீனா வை சமன் படுத்துவதற்காகவே சோவித் யூனியன் செய்தது. 1962 போரில் சோவியத் நடுநிலை எடுத்ததிலேயே அவர்களின் உண்மையான நோக்கங்களை தெரிந்துகொள்ளலாம்.

  பல நூற்றாண்டுகளாக ரஷ்யாவின் செல்வாக்கு கைபர் கணவாயை தாண்டி வந்ததில்லை என்பது வரலாறு.

  >>அம்முயற்சி வென்றிருந்தால் ஏதோ ஒரு கட்டத்தில் இந்திராவே விலக்கபப்ட்டு நேரடி சோவியத் ஆட்சி வந்திருக்கும்.
  மஞ்சள் வதந்திகள்.

  இந்த துணுக்குகள் உங்கள் கட்டுரையின் மைய கருத்துகளாக இல்லாவிட்டாலும் கூட, வரலாற்றை இப்படி உங்கள் ப்ருஷில் ஒரே இழுப்பாக இழுத்திவிட்டு போவதை ஒப்புகொள்ள முடியாது.

 3. sitrodai

  அன்புள்ள ஜெமோ,

  இந்திராவை பற்றிய தங்களின் கூற்றுக்கள் பெருமளவு உண்மையாகவே இருக்கும் என நினைக்கிறேன்
  .
  1971 தேர்தலில் சோவியத் ரஷ்யாவின் பங்கு குறித்து இன்றும் சந்தேகம் உள்ளது.

  – சிற்றோடை

 4. ஜெயமோகன்

  அன்புள்ள நவீன்
  ஒரே இழுப்பாக – அதுவும் மலேசியாவில் இருந்துகொண்டு- இழுப்பது நீங்கல்தான். நான் சொல்லிய விஷயங்களைப்பற்றி இந்தியாவில் எப்படியும் நூறு நூல்கள் வெளிவந்துள்ளன. இந்தியா அறுபது எழுபதுகளி¢ல் கெ.ஜி.பியின் விளையாட்டரங்காக இருந்தது. அதற்கு எதிரான அமெரிக்க CIA அரங்காகவும். நிறைய நூல்கள்… ஒரு தொடக்கத்துக்காக நீங்கள் கன்னர் மிடாலின் ஏஷியன் டிராமாவில் தொடங்கலாம்.

  அக்காலத்தில் ஐரோப்பா தொடங்கி ஆப்கன் வரை ருஷ்யா செய்தது அதையே. முதலில் ஒரு பொம்மை சர்வாதிகாரிக்கு ஆதவரவளிப்பார்கல். பின்னர் அவரக்ளே நுழைவார்கள். ஆப்கனில் நுழைந்தவர்கள் இந்தியாவில் நுழையாமலிருப்பார்களா?

  மேலும் நெருக்கடி நிலை ருஷ்யாவின் திட்டம் என ஜெயப்பிரகாஷ் நாராயணன் சொல்வதாக -டைரியில் எழுதுவதாக- ஜெ.பி. குறித்த நூல் சொல்கிறது. பிரசுரமான ஜெபியின் டைரி மற்றும் குறிப்புகளில் விரிவாக பதிவாகியிருக்கிறது. இந்திய வலராற்று நாயகன் தன் அந்தரங்க டைரியில் எழுதியதை விலக்கிச் செல்ல என்னால் முடிவதில்லை

 5. uthamanarayanan

  எமர்கென்சி கொடுமை ஒரு சிறிய பின்னணி இந்த இணைப்பை படிப்பவர்களுக்கு புரியும்.இது Justice V.R.Krishna Iyer அவர்களால் எழுதப்பட்டது .
  http://www.indianexpress.com/ie/daily/20000627/ina27053.html

 6. ramki

  விரிவான பதிவுக்கு நன்றி ஜெமோ.

  அன்புள்ள இளங்கோவன்/ நவீன்.

  எமர்ஜென்ஸிக்கு முன்னரும் சரி, அதற்கு பின்னரும் சரி இந்திரா காந்தி பலவீனமாக இருந்தார் என்பது ஒரு முக்கியமான செய்தி. எண்பதுகளுக்கு பிந்தைய இந்திராவின் வெற்றிகளில் இது சாமர்த்தியமாக மறைக்கப்பட்டுவிட்டது.

  ரஷ்யாவின் ஊடுருவல் குறித்து ஜெபியின் சகாக்கள் நிறைய எழுதியிருக்கிறார்கள். இந்தப் புத்தகத்தில் மட்டுமல்லாமல் ஜெபியே எழுதிய சொந்தப் புத்தகத்திலும், எமர்ஜென்ஸி குறித்து வட இந்தியர்கள் எழுதி வைத்திருக்கும் ஏராளமான புத்தகங்களிம் காணக்கிடைக்கிறது. இதை தமிழாக்கம் செய்வதற்கு முன்பாக ஜெபி குறித்த இன்னும் சில ஆங்கிலப் புத்தகங்களை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கேஜிபி குறித்து டெல்லி வட்டாரத்தில் உலா வந்த செய்திகளை அதில் நிறையவே குறிப்பிட்டிருக்கிறார்கள்.

  இந்திரா தரப்பிலிருந்து எந்தவொரு மறுப்பும் எண்பதுகளின் இறுதி வரை இல்லை என்று சொல்லலாம். பிரதமர், சிஐஏ ஏஜெண்ட் அல்லது கேஜிபி ஏஜெண்டா என்னும் விவாதம் வடஇந்தியப் பத்திரிக்ககைளில் நிறைய நடந்திருக்கிறது. கடைசிவரை தான் யாரென்பதை இந்திரா வெளிக்காட்டாமல் இருந்தது அவரது அசாத்திய திறமைகளில் ஒன்று.

  ஒட்டுமொத்தமாக இந்திராவை வாசிப்பது குழப்பத்தைத் தான் அளிக்கும். இந்திராவின் முகம் ஒவ்வொரு காலகட்டத்திலும் வித்தியாசமாக இருந்தது. அறுபதுகளில் ஒரு முகம். எழுபதுகளில் ஒரு முகம். எண்பதுகளில் ஒரு முகம். எண்பதுகளின் முகம் தந்த பிரம்மாண்டத்தில் மற்றவையெல்லாம் மறக்கடிக்கப்பட்டுவிட்டன.

 7. நவீன்

  அன்புள்ள ஜெ,
  >>இந்தியா அறுபது எழுபதுகளி¢ல் கெ.ஜி.பியின் விளையாட்டரங்காக இருந்தது. அதற்கு எதிரான அமெரிக்க CIA அரங்காகவும். நிறைய நூல்கள்… ஒரு தொடக்கத்துக்காக நீங்கள் கன்னர் மிடாலின் ஏஷியன் டிராமாவில் தொடங்கலாம்.

  பன்னாட்டு உளவு அமைப்புகள் நம் நாட்டில் செயல்படுவது ஒன்றும் புதிதல்ல. காலம் காலமாக நடந்து வருவது. இப்பொழுதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. நம்முடைய RAW ஆப்கானிஸ்தானிலும் பாகிஸ்தானின் ISI இந்தியாவில் செயல்படுவதும் போல. இப்பொழுதும் CIA வும் MI6 உம், நேபால் மூலமாக சீனாவும் உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டு கொண்டுதான் இருக்கின்றன. இந்தியா போன்ற சுதந்திரமான நாடுகளில் பெரிய உளவு அமைப்புகள் இருப்பது இயல்பு. ஆனால் இந்த உளவு அமைப்புகளில் ஒன்று ‘இந்தியாவை கிட்டத்தட்ட ஆண்டது’ என்ற கூற்றுக்குதான் தேடிப்பார்த்தும் மேற்கோள்கள் கிடைக்கவில்லை.

  >>அக்காலத்தில் ஐரோப்பா தொடங்கி ஆப்கன் வரை ருஷ்யா செய்தது அதையே. முதலில் ஒரு பொம்மை சர்வாதிகாரிக்கு ஆதவரவளிப்பார்கல். பின்னர் அவரக்ளே நுழைவார்கள். ஆப்கனில் நுழைந்தவர்கள் இந்தியாவில் நுழையாமலிருப்பார்களா?

  நுழைந்திருக்கலாம். ஆனால் ஆப்கானில் வெற்றி பெற்றவர்கள் இந்தியாவிலும் வெற்றி பெறுவார்கள் என்று சொல்வது வெறும் non-sequitur. இந்த மாதிரி நிகழ்வுகளால் வரலாறு எப்படி மாறியிருக்கும் என்று விவாதிப்பது பயனளிக்கும் விஷயம் அல்ல என்று நீங்களே பலமுறை சொல்லியிருக்கிறீர்கள்.

  >>மேலும் நெருக்கடி நிலை ருஷ்யாவின் திட்டம் என ஜெயப்பிரகாஷ் நாராயணன் சொல்வதாக -டைரியில் எழுதுவதாக- ஜெ.பி. குறித்த நூல் சொல்கிறது. பிரசுரமான ஜெபியின் டைரி மற்றும் குறிப்புகளில் விரிவாக பதிவாகியிருக்கிறது. இந்திய வலராற்று நாயகன் தன் அந்தரங்க டைரியில் எழுதியதை விலக்கிச் செல்ல என்னால் முடிவதில்லை

  நீங்கள் அதை இரட்டை மேற்கோள்குறியில் சொல்லியிருக்கலாம். மக்கள் மத்தியில் வளராமல், பிறப்பால் பதவி அதிகாரம் பெற்ற இந்திரா போன்ற தலைவர்கள் அந்த அதிகாரத்தை தக்க வைத்துகொள்ள எமெர்ஜென்சி-ஐ கையில் எடுப்பது வியப்பளிக்கும் விஷயம் அல்ல. அவருக்கு வெளி ஆதரவு தேவை இருந்திருக்காது. அதிகாரத்தில் இருப்பவர்கள் அதிகார வெறிகொண்ட sociopath-களாக இருப்பது நாம் வரலாற்றில் அடிக்கடி வாசிக்கும் சங்கதி, சீசர் முதற்கொண்டு.
  நவீன்.

  பி.கு. மலேசியாவுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சொந்த ஊர் பொள்ளாச்சி வட்டத்தில் ஒரு கிராமம். தற்காலிகமாக இருப்பது அமெரிக்காவில்.

 8. நவீன்

  அன்புள்ள ராம்கி,
  தங்கள் பதிவுக்கு நன்றி. இந்திரா – அமெரிக்க உறவுக்கு சமீபத்தில் வெளியான இந்த செய்தி ஒரு நல்ல சான்று.
  http://news.bbc.co.uk/2/hi/south_asia/4633263.stm
  நவீன்

 9. siddharth

  அன்புள்ள ஜெயமோகன்,

  நூல் அறிமுகத்திற்கு நன்றி.

  ஜெ.பி மற்றும் லோகியாவின் சீடர்களாக சோஷியலிஸ்ட் கட்சியிலிருந்து உருவாகி வந்த பலர் இன்றும் தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளில் உள்ளனர். என் தாத்தா ஒ.நா. துரைபாபு மறைந்த பொழுது மதுராந்தகத்தில் அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட பெரும்பாலானவர்கள் ஜெ.பி, லோகியாவின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்குள் நுழைந்த தலைமுறையை சேர்ந்தவர்கள்.

  ஆங்கிலத்தில் பிபின் சந்திரா எழுதிய In the Name of Democracy : Indira and the JP movement நூல் வாசித்து இருக்கிறேன். அவர் ஜே.பி இன்னமும் கொஞ்சம் பொறுமையாக பிரச்சனையை கையாண்டிருக்கலாம் என்ற தொணியில் எழுதி இருந்தார். இந்திரா இப்படி ஒரு முடிவை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் ஜே.பி உட்பட யாருமே என்று தான் எனக்கு தோன்றுகிறது. நீங்கள் கூறிய சோவியத் உளவு பற்றிய கோணம் எனக்கு புதியது.

  ஒரு தகவல் வேண்டும். லோகியா எழுதிய நூல்களை தேடிக்கொண்டிருக்கிறேன். குறிப்பாக Guilty men of indian partition மற்றும் towards a better polity. அவரது எழுத்துக்கள் முழு தொகுப்பாக வந்திருக்கிறதா? தகவல் தேடித்தர இயலுமா? நூற்பட்டியல் இணையத்தில் கிடைக்கிறது. ஆனால் நூல்கள் எங்கும் கிடைக்கவில்லை.

  மீண்டும் நன்றி.

  – சித்தார்த்.

 10. K.R அதியமான்

  அன்புள்ள ஜெ,

  ///////மாறாக ஓர் அடிப்படை மாற்றத்துக்கான காந்திய அறைகூவல்.
  அதை அஞ்சித்தான் இந்திரா நெருகக்டி நிலையைக் கொண்டு வந்தார் என்று சொல்லப்பட்டது. இன்றும்கூட நெருக்கடி நிலைக்கான காரணங்கள் மர்மமாகவே உள்ளன. இந்திரா நாராயணனை ஒரு சாக்காகச் சொன்னார். அவர் உருவாக்கும் இயக்கம் வன்முறைக்குச் சென்று இந்திய ஜனநாயக அமைப்பையே அழிக்கும் என்றார்.//////

  இல்லை. இதெல்லாம் மேலோட்டமான காரணங்கள். அலகாபாத் நீதி மன்ற தீர்ப்பு, இந்திரா காந்திக்கு எதிர்காக திரும்பியது. ஒரு மாதத்திற்க்குள் பதவி விலக வேண்டிய கட்டாயம். அதுதான் அடிப்படை காரணம். தம் பதவியை தக்கவைத்துக் கொள்ள அவர் செய்த ஃபாசிச அயோக்கியத்தனம் தான் மிஸா. அன்னிய சதியெல்லாம் இதில் ஒன்றுமில்லை. காரணங்களில் மர்மம் எதுவுமில்லை.

  மாத்தாய், குல்திப் நய்யார் மற்றும் பலர் விரிவாக எழுதியுள்ளனர்.
  உச்ச நீதிமன்றத்தில் நானி பல்கிவாலாவின் வாதங்கள் பற்றி படியுங்கள்.
  மிஸாவின் போது dissenting verdict அளித்த ஒரே நீதிபதியான திரு.கன்னா அவர்களுக்கு சிலை நிறுவ வேண்டும் என்று சொல்கிறார்கள். (சமீபத்தில் காலமானார்)

  பனி போர் காரணிகள், சோவியத் மற்றும் அமெரிக்க சதிகள் எல்லாம் இந்திராவின் தந்திரங்களுக்கான மேலோட்டமான காரணிகள்.

 11. K.R அதியமான்

  /////////மாறாக ஓர் அடிப்படை மாற்றத்துக்கான காந்திய அறைகூவல்.
  ////

  ஆனால் காந்திய வழிமுறைகளோ, தெளிவான செய்ல திட்டங்களோ இல்லாத போராட்டம் அது. வன்முறையை கட்டுபடுத்த அல்லது தவிர்க்க, காந்தி செய்த முயற்சிகளுக்கு ஈடாக ஜெ.பி செய்யவில்லை அல்லது முடியவில்லை. எல்லோரும் ’சோசியலிசம்’ பேசிய காலம் அது. ஜெ.பி அமைப்பால் உருப்படியான மாற்றம் விளைந்திருக்காது. புதிய மொந்தையில் பழைய கள் இருந்திருக்கும். ஜனதா கட்சியை பார்த்தாலே புரியும். அவ்வாட்சியில் அமைச்சாராக இருந்த புண்ணியவான் ஜார்ஜ் ஃபெர்னாடஸ், கொக்ககோலாவை இந்தியாவை விட்டு துரத்திய போது, கூடவே அய்.பி.எம் கம்யூட்டர் நிறுவனத்தையும் துரத்தி புண்ணிய தேடிக்கொண்டார். அய்.பி.எம் தாய்லாந் சென்றுவிட்டனர். நாம் கம்யூட்டர் துறையில் பல பத்தாண்டுகள் கழித்து தான் முன்னேறினோம்.

  ஜே.ஆர்.டி டாடாவை வரவழைத்து பேசிய பெர்னாண்டஸ், அவருக்கு ஏறக்குறைய ஒரு ஹார்ட் அட்டாக்கை அளித்தார். டாட்டா இரும்பு உருக்காலை நிறுவனத்தை ‘தேசியமயமாக்கும்’ திட்டத்தை அவரிடம் வழிமொழிந்தார். நல்ல வேளையாக அது ஈடேரவில்லை..

 12. K.R அதியமான்

  ////இன்றைய இளைஞர்கள் அந்தச் சூழலை புரிந்துகொள்வது கடினம். ஜஞ்சீர் போன்ற இந்திப்படங்கள், வறுமையின் நிறம் சிவப்பு,பாலைவனச்சோலை போன்ற தமிழ்ப்படங்களை வைத்து அதை ஊகிக்கலாம். எங்கும் வேலையில்லா இளைஞர்கூட்டம்.////

  ஆம். வறுமையின் நிறம் சிகப்பு முக்கியமான படம். (ஒரிஜினல் வி.வி.டியை பத்திரமாக வைத்திருக்கிறேன்). பாலச்சந்தரின் உருப்படியான படங்களில் ஒன்று. அதில் ஒரு முத்து :

  தன் புகைபடத்தை தேடி, குப்பை தொட்டியை கிளரும் கமலை பார்த்து சிரிதேவி : “….. என்னங்க இப்படி தோன்றீங்க !!”

  கமல் : ‘இதென்னங்க பெரிசு. இன்னும் கொஞ்சம் தோண்டினால் சோசியலிசமே கிடைச்சாலும் கிடைக்கும்’ !!!!

  சமீபத்தில் படித்தது :

  அமித்தாப் பச்சனை சூப்பர் ஸ்டார் ஆக்கிய நேரு : நேருவின் சோசியலிச பாணி பொருளாதார கொள்கைகளில் விளைவுகள் 70களில் உச்சமைடந்தன.
  கடும் வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை, விலைவாசி உயர்வு, தொடர் போராட்டங்கள்.. அதுவரை இந்தி திரை நாயகர்கள் காதல், நட்பு, குடும்ப விசியங்களை வெளிப்படுத்தும் மென்மையான கதாபாத்திரங்கள். 70களில் அமித்தாபிற்க்கு அமைந்தது : angry young man ; angry, angry and angrier about society, etc ; பெரிய ஹிட் ஆகி, மெகா ஸ்டார் ஆனார். வாழ்க சோசியலிசம் !!

 13. K.R அதியமான்

  ////இந்தியா அறுபது எழுபதுகளி¢ல் கெ.ஜி.பியின் விளையாட்டரங்காக இருந்தது. அதற்கு எதிரான அமெரிக்க CIA அரங்காகவும். நிறைய நூல்கள்… ///

  இவை ஒரு வகையான paranoid மனோபாவம் அன்று மிக பரவலாக இருந்தது. அப்படி பிரச்சாரமும் நடந்தது. உண்மை எது, பொய் எது என்று உறுதியாக சொல்ல முடியாமல், சகட்டுமேனிக்கு பலரும் முத்திரை குத்தப்பட்டார்கள் : சி.அய்.ஏ ஏஜண்ட், கே.ஜி.பெ ஏஜண்ட் என்று. அன்று இருந்த politicial cimate அய் இன்று புரிந்து கொள்வது கடினம். ஒரு shrill campaign, esp by communists against anybody they deemed as ‘reactionary’ and rightist.
  இன்ற பரவலாக ஏற்றுக்கொள்ளப்படும் தாரளமயவாத, வலதுசாரி பொருளாதார கொள்கைகளை அன்று இருந்த கடுமையான சூழலில் முன்மொழிந்த பலரையும், அமெரிக்க ஏஜண்ட், பிற்போக்குவாதி என்று இகழந்தார்கள். ராஜாஜியின் சுதந்திரா கட்சி எம்.பியான பிலு மோடி, ஒரு கட்டத்தில் வெறுத்து போய், பாரளுமன்ற கூட்டத்திற்க்கு, “I am a CIA agent” என்ற badge அய் அணிந்து சென்றார்.

 14. K.R அதியமான்

  ////ஜெ.பி மற்றும் லோகியாவின் சீடர்களாக சோஷியலிஸ்ட் கட்சியிலிருந்து உருவாகி வந்த பலர் இன்றும் தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளில் உள்ளனர். ///

  பிகாரின் லல்லு பிரசாத் யாதவ் கூட இதில் இருந்து ’உருவாகி’ வந்தவர் தாம்.

 15. sankar.manicka

  ஒரு மேடையில் மைக்கேல் ஜாக்ஸன் டான்ஸ் ஆடுகிறார். பக்கத்துத் தெருவில் அவரது அச்சு அலச் டூப்ளிகேட் டான்ஸ் ஆடுகிறார் என்று வைத்துக்கொண்டால் எதை நீங்கள் விரும்பிப்பார்ப்பீர்கள் ?

  இந்திரா சோசியலிசம் பேசிய சர்வாதிகாரி. ஜே.பி. சோசியலிசம் பேசிய எதிர் கட்சி. அவர் என்றுமே எதிர் கட்சியாகவே இருந்தார் என்பதற்கு இந்திய மக்கள் டூப்ளிகேட்டைவிட ஒரிஜினலையே விரும்பினார்கள் என்பது பொருள்.

 16. bala

  ஜே.பி யின் மிகப் பெரும் பங்களிப்பு, இந்திரா என்னும் சக்தி ஒரு பெரும் நாசகாரச் சக்தியாக மாற இருந்த ஒரு சாத்தியத்தை முறியடித்ததே. மிகத் துரதிருஷ்ட வசமாக அவரிடம் சரியான மாற்றுத் தரப்பு ஏதுமில்லை. பதவி வெறியர்களும், கோமாளிகளும் முட்டாள்களுமே அவர் தரப்பில் இருந்தது ஒரு சரித்திர சோகமே – பாலா

 17. bala

  எழுபது/ எண்பதுகளின் ப்ரச்சினைகளுக்கு அறுபத்து நாலில் செத்துப் போன நேருவைச் சொல்வது நொண்டிச் சாக்கு. நேரு மஹலனாபிஸ் முறை வெற்றி பெற வில்லை என்பது உணமையே. ஆனால், இன்று இந்தியாவை உலகெங்கும் ஒரு மரியாதைக்குரிய நாடாகக் காட்டும் காரணங்களான ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், இஸ்ரோ, அணுசக்தித் துறை எல்லாமே நேரு என்னும் தீர்க்கத் தரிசி உருவாக்கிய நிறுவனங்களே. இந்தியாவில் ஒழுங்காகக் கட்டப் பட்ட ஒரே நகரமும் நேரு கட்டியதுதான். தனியார் துறையிடம் நிதியில்லை எனவே அரசே மிக முக்கியத் தொழில்களை நடத்த வேண்டும் என்று பரிந்துரைத்தது ஜே.ஆர்.டி, ஜி.டி பிர்லா ஆகியோர் நாற்பத்து எட்டாம் ஆண்டில் உருவாக்கிய பாம்பே ப்ளான் தான். பொதுது துரை அந்தப் பரிந்துரையின் காரணமாகத் தான் உருவானது. அவர் பின் வந்தோர் அவரது கொள்கைகளைக் காலத்திற்கேற்ப மறு பரிசீலனை செய்திருக்க வேண்டும். அவரின் கொள்கைகள மாற்றியமைத்திருக்க வேண்டும். paranoid ஆன இந்திரா செய்ய வில்லை. மொரார்ஜிக்கு நேரமில்லை. எல்லோரும் சேர்ந்து, மறு பரிசீலனையை 90 வரை ஒத்திப் போட்டார்கள் – necessasity is the mother of all inventions – நல்ல வேளை – 90 ல் ஒரு பெரும் நெருக்கடி வந்தது – பாலா

 18. ஜெயமோகன்

  Dear Jayamohan,
  M.G. Devasahayam is from Vattavilai near Kottar. He had his education in Carmel Higher Secondary School. He served in the Army before joining the IAS. He is an authority in town planning, writing regularly in Indian Express. If one says Chandigarh is a well-planned City, Devasahayam also has contributed to it.
  kolappan bagwathi

 19. Arangasamy.K.V

  எல்லோராலும் மறக்கப்பட்ட சி.சுப்ரமணியத்தை பற்றி ஒரு பார்வையையும் எங்களுக்கு தரவேண்டுகிறேன் .

 20. K.R அதியமான்

  //// நிறுவனங்களே. இந்தியாவில் ஒழுங்காகக் கட்டப் பட்ட ஒரே நகரமும் நேரு கட்டியதுதான். தனியார் துறையிடம் நிதியில்லை எனவே அரசே மிக முக்கியத் தொழில்களை நடத்த வேண்டும் என்று பரிந்துரைத்தது ஜே.ஆர்.டி, ஜி.டி பிர்லா ஆகியோர் நாற்பத்து எட்டாம் ஆண்டில் உருவாக்கிய பாம்பே ப்ளான் தான். பொதுது துரை அந்தப் பரிந்துரையின் காரணமாகத் தான் உருவானது. /////

  அந்த பாம்பே பிளான் மிக தவறானது என்று பிறகு அவர்களே உணர்ந்து கொண்டார்கள். மேலும் இருக்கும் தனியார் நிறுவனங்களை தேசியமயமாக்க அத்திட்டம் பரிந்துரைக்கவில்லை. MRTP act 1969 போன்றவை உருவாகும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

  நேருவின் பங்களிப்பை குறைத்து மதிப்பிடவில்லை. He was a towering giant and a builder of modern, secular and democratic India. ஆனால் அவரின் பொருளாதார கொள்கைகள் பற்றிதான் விமர்சனம். The road to hell is paved with good intentions என்னும் முதுமொழி இங்கு பொருந்தும். அன்று சோவியத் ரஸ்ஸிய வளமுடன் இருந்த தோற்றம். உலகெங்கும் சோசியலிச பாணி பொருளாதார கொள்கைகள் தான் trend. பாம்பே பிளான் இல்லாதிருந்தாலும், நேரு அதை தான் செய்திருப்பார். கம்யூனிஸ்டுகளில் தீவிர பிரச்சாரங்கள் மற்றும் போராட்டங்கள் அன்று மிக வீரியம் கொண்டதாக இருந்தது.

  ////எழுபது/ எண்பதுகளின் ப்ரச்சினைகளுக்கு அறுபத்து நாலில் செத்துப் போன நேருவைச் சொல்வது நொண்டிச் சாக்கு. நேரு மஹலனாபிஸ் முறை வெற்றி பெற வில்லை என்பது உணமையே.////

  Cumulative effects / long term effects என்று சொல்வார்கள். இன்றளவும் அவை தொடர்கின்றன. நில உச்சவரம்பு சட்டங்களால், இந்திய விவசாயம் நவீன மயமாகாமல், சராசரி பண்ணையில் அளவு இரண்டு ஏக்கருக்கு கீழாக துண்டுகளாகியதன் விளைவை இன்று காண்கிறோம்.

  1960இல் நேருவின் பற்றாக்குறை படஜெட்டுகளின் விளைவால் ஏற்பட்ட கடும் விலைவாசி உயர்வு மற்றும் வறுமை பற்றி ராஜாஜி போன்ற தீர்க்கதரிசிகள் கரடியாக கத்தினர். பார்க்கவும் :

  http://athiyaman.blogspot.com/2007/08/deficit-financing-rajaji-in-swarajya.html
  http://athiyaman.blogspot.com/2009/09/rajaji-on-sri-sri-prakasa-and-nehrus.html

  ராம் மனோகர் லோகிய தம் கடைசி காலங்களில் இதை உணர்ந்து கொண்டதால், he switiched from demanding nationalisation of industries to ceiling on total govt expenditures..(பார்க்கவும் : Rajinider Puri’s excellent book : ‘Crisis of Conscience’ about 1969 Congress split)

  அனைத்து பெரும் தனியார் நிறுவனங்களையும் உடனடியாக தேசியமயமாக்க வேண்டும் என்று ஜெ.பி ஒத்தை காலில் நின்றார். Totally unrealistic and hence his drift into wilderness for decades. Nehru considered JP to be fine person and fit enough to be PM of India. But, JP was obstinate and unrealstic in his views and hence could not follow Nehru.

 21. ஜெயமோகன்

  அன்புள்ள ஜெயமோகன்,

  ‘permit-quota-licence raj’ என்கிற பிரயோகம் ராஜாஜியை ஞாபகப் படுத்தியது. அதனை முதலில் மொழிதவர் அவர் என்பதால். ஜே.பி. ராஜாஜியைப் பற்றிக் கூறியவைகளும் நினைவுக்கு வந்தன.

  ‘Rajaji was one of those leading men who had played a very important role in shaping india’s destiny. Ranking only next to Gandhiji in political wisdom, he has occupied a unique position in the national leadership of the freedom movement. A man of very strong convictions, he often differed with his colleagues and he never faltered when he found himself alone. He was a life-long crusader and even in the evening of his life, he doggedly fought for what he considered right and worked for the re-enactment of moral and human values.” – ‘ராஜாஜி ரீடர்’ என்ற (1980) நூலுக்கு ஜே.பி அளித்த முன்னுரையிலிருந்து.

  அதே முன்னுரையில் அவர் ராஜாஜி “தேச பக்தி” என்றால் என்ன என்று கூறியதையும் நினைவு கூறுகிறார். “Do you love the common folk of our land, the men and women who swarm in town and village? Do you love the languages they speak? Do you love their ways and manners? Do you love the religion they believe in, not looking upon it as ignorance but no better wisdom than your own? All this love sums up to patriotism”

  ராஜாஜி நினைவாலயத்தைத் திறந்து வைக்கையில் “Rajaji is the most misunderstood and wronged person in Indian History. He was next only to Gandhiji in stature. You can believe me, I am not a Brahmin who is telling this.(இன்னும் பச்சையாக தன் ஜாதியைச் சொல்லி)” என்று தமிழக அரசியல் சூழலைப் புரிந்துகொண்டவராகப் பேசினார்.

  நீங்கள் எழுதியது:”ஆனால் ஜெயப்பிரகாஷ் நாராயணன் யார்? இந்திய வரலாற்றில் நாம் சுத்தமாக மறந்துவிட்ட வரலாற்று நாயகன் என்றால் அது ஜெயப்பிரகாஷ் நாராயணன் தான். அவரை நாம் இன்று பாடப்புத்தக வரலாற்றில் இருந்து அறிய முடிவதில்லை. அவரது பெயரை அனேகமாக எந்த அரசியல்கட்சியும் இன்று சொல்வதில்லை. அவரது பிறந்தநாளோ நினைவுநாளோ கொண்டாடப்படுவதில்லை. அவரை நமது ‘மாற்று‘ வரலாற்றாசிரியர்கள்கூட மறந்துவிட்டிருக்கிறார்கள். சர்வசாதாரணமான சாதித்தலைவர்கள்கூட வாழும் வரலாற்றில் ஜெயப்பிரகாஷ் நாராயணன் அழிக்கப்பட்டிருக்கிறார்.”

  இது முழுக்க முழுக்க ராஜாஜிக்கும் பொருந்தும், துரதிருஷ்ட வசமாக மற்றும் குறிப்பாக அவர் பிறந்த தமிழ் மண்ணிலும். ராஜாஜியை யார் நினைவில் வைத்துள்ளார்கள், நினைவில் வைப்பதால் ஒரு புண்ணாக்கு பிரயோஜனமும் வைக்கப் படுபவர்களுக்கு இல்லை எனினும். பெரும்பாலானோர் சிவகுமாரையும், ராஜேஷ்குமாரையும் போல் ஸிம்பிளாக ஏன் நீங்களும் எழுதக் கூடாது என்று கூறுபவர்கள்தானே?

  அன்புடன் வ.ஸ்ரீநிவாசன்.

  பி.கு. நண்பர் அரங்க சாமி கேட்கும் ஸி.எஸ்.ஸை யார் நினைவில் வைத்துள்ளார்கள், அவர் தலைவர் ராஜாஜியையே வரலற்றிலிருந்து அழித்த பிறகு.

 22. K.R அதியமான்

  அன்புள்ள ஜெ,

  ராஜாஜி எ ரீடர் என்னும் நூலை பார்க்க மிக ஆவலாக இருக்கிறது. I am a Rajaji buff and is collecting everything about him. Attended a one day seminar about Rajaji and Swathantra Party in Dec 2004. Met some of the old guards. உங்களுக்கு காந்தி எப்படியோ, எமக்கு ராஜாஜி அப்படி.

  அவர் மிக தவறாக புரிந்துகொள்ளப்ட்ட தலைவர் தான். அவரின் புதிய கல்வி திட்டம், குலக்கல்வி என்று மிக தவறாக பெரியாரால் முத்திரை குத்தப்பட்டு, கடும் எதிர்ப்பை சந்தித்தது. ஆனால் அது உண்மையில் குலகல்வி திட்டம் அல்ல. அதுவரை பள்ளிக்கே வரமுடியாத ஏழை மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்க, பள்ளி நேரங்களை பாதியாக குறைத்த திட்டம். அதை பற்றி சி.சுப்பிரமணியம் அறிக்கை, பரேல்கர் கமிட்டி அறிக்கை விரிவாக பேசுகிறது. ஆனால் அவற்றை இருட்டடைப்பு செய்து, ராஜாஜி ஒரு தந்திரமான பார்பானிய சதிகாரர் என்று அழுத்தமாக அவர் மீது முத்திரை குத்தப்பட்டது.

  Rather than withdraw the educational plan, (which he considered right and neccessay), he choose to resign. Rajaji was a man of rare moral courage. He did not hesitate to part company with Gandhiji, with whom was close. He started Swathantra Party in 1959 at the age of 81 and took on the then mighty Congree and Nehru head on. He was a wise and most far sighted leader.

  ராஜாஜி மற்றும் காந்தியின் பேரானான ராஜ்மோகன் காந்தி (இருவரின் முதல் பெயர்களை சேர்த்து பெயரிடப்பட்டவர் ; பெயர் இட்டவர் வை.மு.கோதைநாயகி அம்மள் !) எழுதிய Rajaji, a life மிக விரிவான வாழ்க்கை வரலாறு. அவசியம் நீங்கள் படிக்க வேண்டும்.

  Catalyst Trust பெரும் முயற்சி செய்து, நான்கு பெரும் தொகுதிகள் கொண்ட ராஜாஜியின் கட்டுரைகளை Sathiya Meva Jeyadhe என்ற பெயரில் (from the weekly Swaraj) வெளியிட்டுள்ளது. அனைவரும் படிக்க வேண்டிய தொகுப்பு.

  ராஜாஜி பற்றியும் நீங்கள் எழுத வேண்டுகிறேன். Gandhi once remarked that Rajaji was his consicence keeper.

 23. Bags

  ஜெயமோகன்,
  நலமா?

  ஜெ.பி., தன் பக்கம் நியாயங்கள் இருந்தாலும், பாப்புலிஸ்ட் பாலிடிக்ஸ் என்ற முறையில் ஜனநாயகத்துக்கு எதிராக (மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கங்களை கலைக்கக் கோரியது மூலம்) நடந்துக் கொண்டார் என இந்து பத்திரிக்கையில் க்யான் ப்ரகாஷ் (http://www.hindu.com/mag/2010/01/24/stories/2010012450040100.htm) கூறியிருக்கிறாரே ? அல்லது நான் தவறாகப் புரிந்துக் கொண்டேனா?

  Bags

 24. bala

  நில உச்ச வரம்புச் சட்டங்கள் மாநில அரசுகளால் கொண்டு வரப்பட்டவை.

  1968 – 69 ன் மத்திய நிதியமைச்சர் அன்றைய துணை பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாய்.
  if rajaji is next only to Gandhi in political wisdom, then why did not the country go behind rajaji and swatantra party? (தமிழகத்தை விட்டு விடுவோம் – இங்கு தான் 60 ளில் விஷ விருக்ஷம் புகுந்து விட்டதே :)
  பாலா

 25. v k

  திரு ஜெயமோகன்,
  ஜெயபிரகாஷ் பற்றிய கட்டுரை.நீங்கள் திடீரென்று ஒருவரைக் கண்டு பிடிக்கிறீர்க்ள்.அவரைப் பற்றிய அவர் காலத்து அனுபவங்கள் எதுவும் இல்லாமல் ஏதோ ஒரு தர்க்கத்தை முன் வைத்து பிரமாதமாக எழுதி விடுகிறீர்கள்.ஜெ.பியின் பிரஜா சோஷலிஸ்ட் அமைப்பு பற்றியோ அதற்கு தமிழ் நாட்டில் இருந்த ஆட்கள் பற்றியோ எதுவும் உங்களுக்கு தரியவில்லை.அவர்கள் நீங்கள் வசிக்கிற நாகர் கோயிலில் இருக்கிறார்கள். நெருக்கடி நிலையின் சமயத்தில் பலர் கன்னியாகுமரியில் இருந்த்ததாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.இத்தனைக்கும் நீங்கள் ஒரு ஆர் எஸ்.எஸ் காரர்….?!

 26. va.srinivasan

  இது ஜெயமோகன் அவர்களுடைய ‘வெப்-ஸைட்’. இதில் தனிப்பட்ட பதில்களைத் தரலாமா என்று தெரியவில்லை. எனினும் சம்பந்தப் பட்டவர்களின் மின்னஞ்சல் முகவரி தெரியாததால்:- திரு. அதியமான்: ‘ராஜாஜி ரீடர்’ பதிப்பகம் ‘வ்யாஸா பப்ளிகேஷன்ஸ்’168, தம்பு செட்டி தெரு, சென்னை – 1 வருடம் (1980௦). இப்போது கிடைக்கிறதா என்று தெரியவில்லை. ‘சத்யமேவ ஜெயதே’ தொகுப்புகளின் தகவல் சொல்லுங்கள். நன்றி.
  திரு பாலா: அவர் காந்திஜி பின்னால் போனதால்தான். அவரைப் போலவே வினோபா, ஜே.பி., லோகியா, மொரார்ஜி பின்னாலும் நாடு போகவில்லை. (இவர்கள் அனைவரும் சேர்ந்து கூட காந்திஜி இல்லை என்பதே என் கருத்து) நேருவின் பின்னால் போயிருந்தால் பூவோடு சேர்ந்த நாராகவாவது ஆகியிருப்பார். ஆனால் அப்போது அவர் என் நினைவில் நிற்கும் இந்த ‘ராஜாஜி’ யாக இருந்திருக்க மாட்டார். அன்புடன் வ.ஸ்ரீநிவாசன்.([email protected])

 27. ஜெயமோகன்

  நெருக்கடி நிலை குறித்தோ ஆர் எஸ் எஸ் அதில் வகித்த பங்கு பற்றியோ அதில் பேசப்படவில்லை. அது ஒரு மதிப்புரை. அவ்விஷயங்களைப்பற்றி விரிவாக எழுத என்னிடம் விஷயங்கள் உண்டு. பிரஜா சோஷலிஸ்ட் அமைப்பு நாகர்கோயிலில் இருந்ததைப்பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது

  ஜெ பி பற்றி என் அனுபவ மண்டலத்துக்குள் வைத்தே எழுதியிருப்பதை நீங்கள் கவனிக்கலாம்

 28. K.R அதியமான்

  நன்றி திரு.வ.ஸ்ரீநிவாசன்.

  ‘Catalyst Trust’ address :
  Contact : R. Desikan
  Phone : 91 44 24480808 , 44 24491317
  Address : 2/380, I Main Road A.G.S. Colony, Kottivakkam Channai – 600 041 Tamil Nadu
  Website : http://www.voterswatchdog.org.in

  ’Sathya Meva Jeyathe’ four volumes price : Rs.500/-
  ———

  பாலா,

  நேரு காலத்தில் துவங்கிய கொள்கைகள் அவரின் மறைவிற்க்கு பிறகும் தொடர்ந்தன. இன்னும் intensify ஆக்கப்பட்டன. யாரும் அவற்றை மாற்ற. revese செய்ய துணியவில்லை. அது அன்று politically correct ஆக இருந்தது! U-turn, 1991இல் மன்மோகன் சிங் மூலம் உருவானது. அப்போது நிகழ்ந்தது ஒரு paradigam shift. ராஜிவ் செய்ததெல்லாம் costemtic changes தான்.

  முன்பு, அனைத்து மாநில மற்றும் மத்திய அரசு ஜனனாயக பாணி சோசியலிச கொள்கைகள் ஏற்றன. 1991க்கு பிறகு அனைத்து மாநில அரசுகளும், மத்திய அரசும் நேர் எதிரான கொள்ளைகளுக்கு மாறின. (இன்னும் மாற்றம் வராத துறைகளும், அரை குறை மாறுதல் அடைந்த துறைகளும் உண்டுதான்).

  சுதந்திரத்திற்க்கு பின் நாடு எந்த தலைவர் பின்னும் செல்லவில்லை. நேரு பிரதமராக தொடர்ந்து இருந்ததால், அவரின் கொள்கைகளை அமலாக்கினார். மேலும் அன்று கம்யூனிசம், சோசியலிசம் மிக சரியானவை என்று பரவலாக நம்பப்பட்டது. நிலபிரபுத்துவம், காலியாதிக்கம், ஃபாசிசம் போன்றவற்றின் நிழல் அன்று வெகுவாக இருந்த காலம். நியாயமான, சரியான, மனிதாபிமான கொள்கை சோசியலிசம் தான் என்று நம்புவது சுலபமாக இருந்தது.

  ///if rajaji is next only to Gandhi in political wisdom, then why did not the country go behind rajaji and swatantra party?//// Alas, the people were not as wise and were swayed by cheap populism built on over simpliefied ‘mantras’ to aleivate poverty and inequality. Gandhiji himself felt that he was ignored by the leaders and people during his last days.

  உங்களை போன்ற படித்த, நல்ல அனுபவம் வாய்ந்தவர்களே, ராஜாஜியின் சுதந்திரா கட்சியின் அருமையை உணராத போது, பெருவாரியான ‘பாமர’ மக்கள் எப்படி உணர முடியும் ? மேலும் அக்கட்சி, பணக்காரகளின் கட்சி, ஏழைகளுக்கு எதிரானது என்று நேரு முதல் பலரும் அநியாயமாக பிரச்சாரம் செய்தனர். பணக்கார் என்ற சொல்லுக்கு அன்று இருந்த அர்த்தம் இன்று இல்லை. இன்று அந்த சூழ்னிலைகளை புரிந்து கொள்வது கடினம்.

 29. bala

  அன்புள்ள அதியமான்,

  உங்களின் பல கருத்துக்களுடன் எனக்கு ஓப்புதலே. ஆனால், மக்களைப் பாமரர்கள் என்னும் கருத்தில் ஒப்புதல் இல்லை. இப்பாமரர்கள் இன்னும் காந்தியைக் கடவுளாக நினைப்பதற்கும், ராஜாஜியை மறந்து போனதற்கும் நிறைய காரணங்கள் உண்டு என நம்புகிறேன். காந்தி walked the talk. rajaji talked. தனது கொள்கையை மக்கள் மறுத்திருந்தால், காந்தி அவர்களுடன் பேசியிருப்பார். ஒரு உண்ணாவிரதம் இருந்தாவது ஒரு சமரசம் கண்டிருப்பார். மக்கள், வெறும் மாக்கள், அவர்களுக்கு மோட்சம் அளிப்பதே நாம் அவதரித்த நோக்கு என்று செயல் பட்ட (படும்) தலைவர்கள் எனது நோக்கில் தலைவர்கள் அல்ல. அந்நோக்கில் காந்திக்கு, நேருவுக்கு அடுத்ததாக எனது வரிசையில் காமராஜர் மட்டுமே. மிக்க மரியாதையுடன் ராஜாஜியை நான் நிராகரிக்கிறேன்.

  அன்புடன்

  பாலா

 30. va.srinivasan

  விவாதங்கள் மிகுந்த சோர்வையும், சுய கசப்பையும் உருவாக்கி விடுவதால் அவற்றில் ஈடுபடுவதை அறவே தவிர்த்து விடுகிறேன். ஏனினும் இது உரையாடல்தான் என்கிற கணிப்பில் இவ்வரிகள்:

  ‘இராஜாஜியா காமராஜா’ என்னும் கேள்வி “உன் அம்மாவை அடிப்பதை நிறுத்தி விட்டாயா ? ஆம்/இல்லை என்ற பதில்களுக்குள் ஒன்றைச் சொல்” என்பதை ஒத்தது. அதை வைத்தே ‘விஷக் கிருமி ‘ தமிழ் நாட்டில் பரவியது. அதில் நுழைவது சரியானச் செய்கை இல்லை. ராஜாஜியும், காமராஜும் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பதுகளில் பிரிந்த போதுதான் தமிழகத்தின் தலைவிதி மாற ஆரம்பித்தது. எழுபதில் காமராஜ் மீண்டும் வந்து சேர்ந்து கொண்டது ராஜாஜியுடன்தான், வேறு எவருடனும் அல்ல. இறுதிவரை அவர் அதிலிருந்து மாறவே இல்லை. காமராஜ் வார்த்தைகளிலும் “காந்திஜிக்கு அடுத்து மாபெரும் தலைவர் ராஜாஜி”தான்.

  உப்பு சத்யாகிரகம், மது விலக்கு, ஹரிஜன ஆலயப் பிரவேசம், தஞ்சாவூர் பண்னையாள் சட்டம் முதலியவை ராஜாஜி மக்கள் தலைவரா இல்லையா என்பதற்கான உரை கற்கள். அவர் பேசாத மக்கள் கூட்டமோ, பிரச்னையோ அக்காலத்தில் இல்லை. ராஜாஜியைப் பற்றி கோவை அய்யாமுத்துவும், ம.பொ.சி., மற்றும் பிமனேஷ் சாட்டர்ஜி எழுதியுள்ள நூலகளும் இதை நிறுவுகின்றன.

  காந்தி குரு. ராஜாஜி அவர் சீடர் மட்டுமே. விவேகாநந்தர் எவ்வளவு ஆளுமை மிக்கவராக இருந்த போதிலும் இராமக்ருஷ்ணர்தான் குரு. குருவையும் சீடரையும் எதிரெதிர் வைப்பதில் பயன் இல்லை.

  அண்ணாவுடனும், எம்ஜியாருடனும், கலைஞருடனும் ஒப்பிடுகையில் காமராஜ் கூட மக்கள் தலைவர் இல்லைதான். ராஜேஷ் குமார், பாலகுமாரன், சிவசங்கரி, அனுராதா ரமணன், ரமணி சந்திரன் முன்பு ஜெயமோகன் கூட மக்கள் எழுத்தாளர் இல்லைதான்.

 31. vks

  அதிகம் பேசப்படாத மனிதராக வினோபா இருப்பதாக உணர்கின்றேன்.
  அவர் குறித்த பார்வை பயனாக இருக்கும்.

 1. அண்ணா ஹசாரே-2

  […] ஒரு வரலாற்று நாயகன் […]

 2. ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்- 2

  […] ஒரு வரலாற்று நாயகன் […]

Comments have been disabled.