பாலுணர்வெழுத்து- சாரு- கடிதங்கள்

சாரு நிவேதிதா – தமிழ் விக்கி 

dear jeyamohan

பாலுணர்வெழுத்தும் தமிழும் கட்டுரை படித்தேன். அருமையான கட்டுரை. குறிப்பாக ஜெ.பி. சாணக்யா பற்றிய அவதானம். அவருடைய கதைகளை சில ஆண்டுகளுக்கு முன் கையெழுத்துப் பிரதியிலேயே படித்து இதே கருத்துக்களைத்தான் சொன்னேன். அதிலிருந்து அவர் என்னைச் சந்திப்பதை நிறுத்தி விட்டார். பலருடைய சந்தேகங்களைத் தீர்க்கக் கூடிய கட்டுரை உங்களுடையது.

கட்டுரையில் Kathy Acker மற்றும் Georges Bataille இருவரையும் சேர்க்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால் இந்த இருவரையும் சூஸன் ஸொண்டாக், ரொலான் பார்த் போன்றவர்கள் கொண்டாடினாலும் எனக்கு இந்த இருவரின் pornographic கதைகளில் இலக்கிய இன்பம் கிடைப்பதில்லை. கேத்தி பரவாயில்லை, படிக்க அலுப்பாக இருந்தாலும் அவர் தன் அந்தரங்க அனுபவங்களை எழுதியிருக்கிறார் என்ற வகையில் ஏற்றுக் கொள்ள முடிகிறது. ஆனால் பத்தாயின் நாவல்கள் ஏதோ ஒரு கடுமையான இலக்கண வரம்பிற்குள் நின்று கொண்டு எழுதியது போல் இருக்கிறது. கடுமையான மன அதிர்ச்சியைத் தருவதைத் தவிர அதன் தாக்கம் வேறு எந்த வகையிலும் நம்முள் தங்குவதில்லை. ஒரு intellectual exerciseஆக மிஞ்சி விடுகிறது…

உங்கள் கட்டுரையைப் படித்ததும் இது மனதில் தோன்றியது.

சாரு நிவேதிதா

அன்புள்ள சாரு

அன்புள்ள சாரு

நான் பாலுணர்வு எழுத்துக்களை அதிகம் வாசித்த காலம் மிகமிக முன்னால் எப்போதோ என்று தோன்றுகிறது. மிக அபூர்வமாகவே பாலுணர்வு எழுத்து ஈர்ப்பை அளிக்கிறது. அது என் மன அமைப்பு மாறுபட்டுவிட்டதனால் இருக்கலாம். இன்றைய என் நிலையில் மனப்பிறழ்வுக்கும் தியானத்துக்கும் நடுவே உள்ள நிலையிலேயே ஆர்வம் செல்கிறது. வரலாற்று எழுத்துக்கும் உண்மைக்குமான இடைவெளியையே அதிகம் மனம் நாடிச்செல்கிறது

நான் டி.எச்.லாரன்ஸ், மொரொவியோ, ஹென்றி மில்லர் வரைத்தான் பாலுணர்வு எழுத்துக்களை வாசித்திருக்கிறேன். நீங்கள் குறிப்பிட்டபின்னர்தான் கேத்தி ஆக்கர் பத்தாய் இருவரின் ஒரு ஒரு படைப்புகளை வாசித்தேன். கேத்தி ஆக்கரின் நோய் அவரது பாலுணர்வுச்சித்தரிப்புக்கு ஓர் ஆழத்தை அளிக்கிறது என்று தோன்றியது.

என் வரையில் பாலுணர்வு எழுத்தை மூன்றாகப் பிரித்து வைத்திருக்கிறேன். பால்கிளர்ச்சி எழுத்து அதிகமாக இங்கே எழுதப்பட்டு வாசிக்கப்படுகிறது. அது முதிராவாசகர்களுக்கானது என்பதே என் எண்ணம். அதுவே வணிக ரீதியாக பெரும் செல்வாக்குடன் இருக்கிறது. பழைய ஹெரால்ட் ராபின்ஸ் வகை கதைகள் , அனானிமஸ் வரிசை கதைகள் போன்றவை. இப்போது என்ன ‘டிரெண்ட்’ என தெரியாது

இவை சில இயங்குமுறைகள் கொண்டவை

1. அவை உடலைத்தான் பெரும்பாலும் சித்தரிக்கின்றன. உணர்ச்சிகள் அவற்றுக்கு முக்கியமல்ல

2. எப்போதும் அவை பகற்கனவுகள்

3 அவை மீறலையே வழிமுறையாக கொண்டுள்ளன. சமூகம், அறவியல் உருவாக்கி அளித்த தடைகளை மீறுவதே அவை திரும்பத்திரும்பச் சொல்லும் கதை.

காரணம் அவை உத்தேசிக்கும் வாசகர்கள் முதிரா இளைஞர்கள், பாலியல் வறட்சிகொண்ட மூத்தவர்கள். இவர்கள் பகற்கனவுகளுக்கு வாசிப்பை துணைகோருபவர்கள். இவர்கள் சமூகத்தின் கட்டுப்பாட்டால் அவதியுறுபவர்கள். மீறுவதைப்பற்றிய பகற்கனவுகள் கொண்டவர்கள்.

ஒவ்வொரு சமூகத்துக்கும் ஒவ்வொரு ஒழுக்கவியல். அதைமீறுவதே இத்தகைய பால்கிளர்ச்சி எழுத்தின் வழிமுறை. அமெரிக்காவில் கன்னங்கரிய ஒருவன் வெள்ளைப்பெண்ணை புணர்வது உச்சகட்ட பால்கிளர்ச்சி. இங்கே 90 சதவீத குடும்ப யதார்த்தமே அதுதான்.

இந்தியாவில் முதியபெண்ணுக்கும் இளைஞர்களுக்குமான உறவே இன்று அதிகபட்ச பால்கிளர்ச்சி. ஆனால் இதே இந்திய சமூகத்தில் நூறாண்டுகளுக்கு முன் அது ஒருவிஷயமே இல்லை. இனக்குழுவுக்குள் முதிர்ந்த பெண்கள் இளைஞர்களுடன் உறவுகொள்வது சாதாரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தது.

சமூகம் அளிக்கும் கட்டுப்பாடுகளின் வரலாற்றுப்பின்புலத்தை அறிந்த ஒரு வாசகனுக்கு அதை மீறுவதைப்பற்றிய பகற்கனவுகளை திரும்பத்திரும்பச் சொல்லும் எளிமையான பால்கிளர்ச்சி எழுத்துக்கள் பெரிதாகப்படாது. அவை ஒரே கட்டமைப்பில் திரும்பத்திரும்ப எழுதப்படுவன என்றே தோன்றும்.

சரோஜாதேவி எழுத்து எப்படி ஏன் எழுதப்படும் என தெரிந்த பின் அதில் ஒன்றுமே இல்லை. [நானே 21 வயதில் நான்கு புத்தகங்கள் எழுதியிருக்கிறேன். புறப்பாடு நூலில் வாசிக்கலாம்]

பால்கிளர்ச்சி எழுத்தில் இரண்டாவது வகை கட்டற்ற நுகர்வை வலியுறுத்துவது. அதை நவீன ஐரோப்பாவும் அமெரிக்காவும்– அங்குள்ள முதலாளித்துவம்- மீளமீள வலியுறுத்துகிறது. கட்டற்ற நுகர்வே களியாட்டம் என்கிறது. களியாட்டமே வாழ்க்கையின் ஒரே இன்மம் என்கிறது. அதை கட்டுப்படுத்தும் எல்லா மதிப்பீடுகளையும் நிராகரிக்கிறது. அவற்றிலிருந்து வெளியே வருவதே சுதந்திரம் என்கிறது. இவ்வகை எழுத்தை நுகர்பொருட்களை உற்பத்திசெய்து குவிக்கும் முதலாளித்துவம் ஊக்குவிப்பது இயல்பு.

மேலே சொன்ன இருவகை எழுத்தையும் நான் இலக்கியமாக ஏற்கமுடியாது. இலக்கியத்தகுதி கொண்ட பாலுணர்வுஎழுத்து என்பது வேறு

அது மானுட உடலை ஒரு குறியீடாகக் கொண்டு அதில் தொடங்கி உறவுகளையும் உணர்ச்சிகளையும் சொல்வதாக இருக்கும் என நினைக்கிறேன். அதிலுள்ள பாலியல் வெறும் பாலியல் மட்டுமல்லாமல் ஆகுமென தோன்றுகிறது.

எப்படி இருந்தாலும் பாலுறவு என்பது ஒரு இருத்தலியல் சிக்கலே. தன் மீது கவிந்திருக்கும் தவிர்க்கவே முடியாத பிரபஞ்சத் தனிமையில் இருந்து மனிதன் பாலுறவு வழியாக மீள முயல்கிறான். மீள்வதாக பாவனை செய்கிறான். பாவனையை காதல் என்றும் கலை என்றும் சொல்லி வளர்த்து வளர்த்துச்செல்கிறான். அவ்வப்போது அதன் உள்ளீடற்ற தன்மையைக் கண்டு மேலும் அதிகமாக பாவனைசெய்கிறான். இந்த உள்ளீடற்ற தன்மையையும் அது உருவாக்கும் வெறுமையையும் சிறந்த பாலுணர்வு எழுத்து கொண்டுவருமென நினைக்கிறேன்.

நான் உங்களை பாலுணர்வு எழுத்தாளர் என்று நினைக்கவில்லை. உங்கள் எழுத்தின் மிகச்சிறிய பகுதிதான் அது

ஜெ

டியர் ஜெ,,

நம்ப சிரமமாக இல்லை. நீங்கள் எழுதியது போலவே ஒரு நீண்ட பத்தியை இப்போதைய எக்ஸைலில் எழுதியிருக்கிறேன். நேற்று காலைதான் பத்ரிக்கு அனுப்பினேன்.

வாசகர் வட்ட விவாதங்களின் போது என் மீது பாலுணர்வு எழுத்தாளர் என்ற குற்றச்சாட்டு வீசப்படுவது பற்றி நண்பர்கள் கவலையுடன் குறிப்பிடும் போது, நான் இன்னும் அதை எழுதவே ஆரம்பிக்கவில்லையே என்று குறிப்பிடுவதுண்டு. என் கதைகளில் (எக்ஸைலுக்கு முன்பு வரை) பாலுணர்வு என்றால், இயலாமை, வெறுப்பு, போதாமை, தனிமை, துயரம், வெறுமை, பதற்றம், துவேஷம், அழுகை, புலம்பல், சுய இரக்கம், பொறாமை, ஆற்றாமை போன்ற உணர்வுகளே நிரம்பியிருக்கக் காண்பேன், ஒரு வாசகனாக. திட்டமிடுவதில்லை எழுதும் போது. எக்ஸைலில் தான் முதல்முதலாக நாயகன் யமுனாவைத் தொடுகிறான், சிலிர்க்கிறான். தொட்டவுடனே “என்” வாசகர்களுக்குப் பிடிக்காமல் போய் விட்டது. என் கதைகளின் பதற்றம் தரும் பாலுணர்வு வேட்கையைப் பார்க்கும் போது எனக்கு எப்போது டாலி வரைந்த Le Masturbateur நினைவில் வரும். கிட்டத்தட்ட மனவெளியில் நிரந்தரமாகப் பதிந்து விட்ட சித்திரம் அது. கணினி வருவதற்கு முந்தைய இந்திய இளைஞனின் சித்திரம் அது என்று நினைக்கிறேன்.

உங்களுடைய சிந்தனை எந்த விஷயத்தையும் பகுத்து அறியும் ஆற்றல் கொண்டதாக இருக்கிறது. இது உம்பர்த்தோ எக்கோ போன்ற அறிஞர்களுக்கே வாய்க்கக் கூடியது. பொதுவாக அறிஞர்கள் எழுத்தாளர்களாக இருப்பதில்லை. நல்ல வேளை நீங்கள் இருவரும் விதிவிலக்காக இருக்கிறீர்கள்.

இந்தக் கடிதத்தைத் தட்டச்சு செய்து கொண்டிருக்கும் போது ஸோரோ என் கன்னத்தை நக்கி நக்கி மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்கிறது. இரவு மூன்று மணிக்கு என்னை எழுப்பி சிறுநீருக்காகக் கதவைத் திற என்றது. தூக்கக் கலக்கத்தோடு நான் வந்து பூட்டைத் திறப்பதற்குள் வீட்டுக்குள்ளேயே போய் விட்டதற்காக இந்த மன்னிப்பு. அதனால் தட்டச்சு செய்ய கொஞ்சம் தடுமாறினேன்.

அன்புடன்
சாரு

முந்தைய கட்டுரைஇணையும் கண்ணிகளின் வலை
அடுத்த கட்டுரைநோபல் பரிசுகள்