நீலமும் இந்திய மெய்யியலும்

mukesh_singh_1
அன்பு ஜெயமோகன்,

வெண்முரசின் எப்பகுதியையும் நான் படித்ததில்லை. மகாபாரதத்தின் கதைத்தொகுதியை உங்கள் எழுத்தின்வழி நீங்கள் அணுகும் முயற்சி மட்டுமே புரிந்திருந்தது. இயல்பான மகாபாரதக் கதைப்போக்கை அப்படியே கொண்டுவருவதில் உங்களுக்கு உடன்பாடில்லை என்பதையும் நான் அறிந்திருந்தேன். மகாபாரதம் எனும் காப்பியம் ஆதியின் மனிதகுல வரலாற்றைப் புனைவு கலந்து சொன்ன வாய்மொழிக்கதைகளின் தொகுப்பு என்பதான என் புரிதல் அதையும் தாண்டிய தத்துவத்தளத்திற்கு விரியக் காரணமாக இருந்தவர்களில் நீங்களும் ஒருவர். அதற்காக இவ்விடத்தில் உங்களுக்கு நன்றி பகர்கிறேன். எனினும், வெண்முரசில் வெளிப்பட்டிருந்த உங்களின் மொழிநடையும் கதைக்களன் தொடர்பான விரிவான அறிமுகமின்மையும் தயக்கத்தை ஏற்படுத்தின. சில பகுதிகளைத் தொடர்ந்து வாசிக்க முயன்று தோற்றுப்போனதை ஒப்புக்கொள்வதில் எனக்கு எவ்விதத்திலும் கூச்சமில்லை.

நீலம் மலர்ந்த நாட்களை சமீபமாய் நீங்கள் எழுதி இருந்தீர்கள். அப்போதுதான் வெண்முரசுக்குப் பின்னிருக்கும் உங்களின் தத்தளிப்பை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. முன்கூட்டிய திட்டமிடலோடுதான் வெண்முரசை நீங்கள் துவங்கி இருந்தீர்கள். என்றாலும் அதன் நகர்வை அப்படைப்பின் பாத்திரங்களே எடுத்துக்கொண்டு சென்றன என்பதைக் கொஞ்சமும் மறைக்காமல் நீங்கள் பகிர்ந்து கொண்டிருந்தவிதம் நெகிழ்வைத் தருகிறது. தானாய் உருவாகும் இலக்கியம் இன்று ‘உருவாக்கப்பட்டுக்’ கொண்டிருப்பதில் கொஞ்சமும் விருப்பமில்லாத என் போன்றோர்க்கு உங்களில் அறம் சிறுகதைத் தொகுப்பு புதிய சாளரம். மிகச்சாதாரணமாக நாங்கள் கடந்து வரும் மனிதர்களைப் புரிந்துகொள்ளவும் கவனிக்கவும் ’அறம்’தான். அத்தொகுப்பும் திடீரென நீங்கள் எழுத அமர்ந்ததில் உருவானதுதான் என நீங்களே பகிர்ந்தும் இருக்கிறீர்கள். திட்டமிடுவதற்கு முன், திட்டத்தின் போது, திட்டம் முடிவடைந்த பிறகு என்பதான மூன்று தளங்களிலும் பயணிக்கும்போதான தத்தளிப்பையும், பரவசத்தையும் நீங்கள் எவ்வளவு முயன்றாலும் எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாது என்பதே உண்மை.

முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல் மற்றும் நீலம் போன்றவற்றை அச்சு நூல்களாக வாங்கி வாசிக்க முடிவு செய்திருக்கிறேன். இரண்டு அல்லது மூன்று வருடங்கள் கூட நான் வாசிக்கலாம். அப்போது ஒருவேளை உங்களின் மொழிநடையும், கதைச்செறிவும் எனக்குப் புலப்படலாம். அச்சமயத்தில் அதுபற்றி விரிவாகப் பேசுகிறேன். இப்போதைக்கு, வெண்முரசு தொடர்ந்து ஒலிக்கட்டும்.

அரும்பெறல் மரபில் அக்கறை கொண்டிருக்கும்,
முருகவேலன்(சக்திவேல் ஆறுமுகம்)
படைவீடு பண்பாட்டு அறக்கட்டளை,
கோபிசெட்டிபாளையம். ஈரோடு மாவட்டம்.

அன்புள்ள முருகவேலன்,

நாம் மிகப்பெரிய ஒரு ஞானமரபை பாரம்பரியமாகக் கொண்டவர்கள் என்பதை உங்களுக்குச் சொல்லவேண்டியதில்லை. மெய்யியல்,தத்துவம், புராணம் என மூன்றாக அது பிரிந்து விரிந்திருக்கிறது. சிற்பவியல், யோகவியல், நுண்கலைகள் சார்ந்த குறியீடுகளால் ஆனது அதன் மொழி

அறிவியலின் அடிப்படைகளைப் படிக்கவே நாம் எவ்வளவு கடும் உழைப்பைச் செலுத்துகிறோம். அப்படி இருக்க மூவாயிரம் வருடத்துக்கும் மேலாக சீராக வளர்ந்து வந்துள்ள ஒரு ஞானமரபை எளிதில் வாசித்து, புரிந்து கடந்துவிட முடியுமா என்ன? அதற்கான உழைப்பு, கவனம், தியானம் தேவை அல்லவா?

அதை ‘எளிமைப்படுத்த’ முடியாது. கடலை சிறியதாக்கி செம்பில் மொண்டு கொடுப்பதற்குச் சமம் அது. அதன் விரிவையும் ஆழத்தையும் அதில் இறங்கித்தான் புரிந்துகொள்ளமுடியும். வியாசமகாபாரதம் நம்முடைய மொத்த ஞானமரபையும் தன்னுள் கொண்ட நூல். அதில் மெய்யியல் தத்துவம் அழகியல் எல்லாமே உள்ளது. நான் அனைத்தையும் உள்ளடக்கி அதை மறு ஆக்கம் செய்ய முயல்கிறேன். நாமனைவரும் அறிந்த பாரதக்கதையை திருப்பிச் சொல்ல முயலவில்லை

இந்த ஞானமரபைக் கற்பதற்குரிய பொறுமையையும் உழைப்பையும் ஒரு சராசரி மனிதரால் கொடுக்கமுடியாதென்பது உண்மை. ஆனால் சற்றேனும் வாசிப்பும் தேடலும் கொண்டவர் அதற்குத் தயங்க்கூடாது. முன்னரே என் எல்லை இது, இவ்வளவுதான் என்னால் முடியும், இதற்குமேல் போனால் எனக்குப்புரியாது என்று தன்னையே குறுகவைத்துக்கொள்ளக்கூடாது. ஞானம் நோக்கி நாம் விரியவேண்டும். அதுவே ஞானத்தின் பயன். நம்மைநோக்கி நூல்களைக் குறுக்கிக்கொள்ளக் கூடாது

அந்த சிறு கவனத்தையும் முயற்சியையும் அளித்தால் வெண்முரசு எவருக்கும் புரியாமல் போகாது. பிளஸ்டூ வரை ஆங்கில வழியில் கற்ற, தமிழில் பெரிய புலமை ஏதுமில்லாத , என் 17 வயது மகள் நீலம் வரை வாசித்துவிட்டாள். தெளிவாகப்புரிந்துகொண்டு. என் அளவுகோல் அவள்தான்

நான் கோருவது சற்று உழைப்பை, கொஞ்சம் கவனத்தை மட்டுமே. அதுகூட இல்லாத வாசகர்கள் என் வாசகர்கள் அல்ல, அவர்களுக்குரியதை அவர்கள் வாசிக்கட்டும் என்றே எண்ணுவேன்

ஜெ

மறுபிரசுரம்/  Oct 14, 2014

வெண்முரசு நாவல் தொடர்பான அனைத்து விவாதங்களும்

மழையின் இசையும் மழையின் ஓவியமும் மழைப்பாடல் பற்றி கேசவமணி


வியாசமனம் முதற்கனல் பற்றி மரபின் மைந்தன்

முந்தைய கட்டுரையுவன் 60
அடுத்த கட்டுரைஆதி இந்தியர்கள் – ஒரு நச்சுநூல்-கடலூர் சீனு