[கிராண்ட் மோரிசன்/ மகாபாரதப்போர் ]
அன்புள்ள ஜெமோ
மழைப்பாடலை ஒருமுறை வாசித்து முடித்தேன். அது ஒரு மொத்தமான பார்வையை அளித்தது. அதன்பிறகு ஆங்காங்கே வாசித்து அப்படியே இன்னொருவாசிப்பையும் முடித்துவிட்டேன். மழைப்பாடல் மட்டுமே நிறைவூட்டும் ஒரு தனிநாவலாக இருக்கிறது. அதன் நிலக்காட்சிகளும் அதன் அழகியலும் அற்புதமான அனுபவம்.
ஆனால் அதைவிட முக்கியமானது குணாதிசயங்கள். குணச்சித்திரங்கள் எதுவும் சொல்லப்படவில்லை. ஆனால் அவை புழங்கும் விதத்தில் அந்தக்குணச்சித்திரங்கள் தெளிவடைந்து வந்துகொண்டே இருந்தன. ஒரு போட்டோ இணையத்தில் பார்க்கும்போது டவுன்லோட் ஆக ஆக தெளிவாகிக்கொண்டே இருப்பதுபோல கொஞ்சம் கொஞ்சமாக கதாபாத்திரங்கள் அழுத்தமாக ஆகும் அனுபவத்தை இதற்குமுன்னதாக நான் அடைந்தது டால்ஸ்டாய் நாவல்களில்தான்
பீஷ்மர் முதலில் ஒரு கம்பீரமான ஆளுமையாக இருக்கிறார். தியாகியாகவும் மதியூகியாகவும் இருக்கிறார். கொஞ்சம்கொஞ்சமாக அவர் தனிமையான மனிதராக ஆகிக்கொண்டே இருக்கிறார். சத்யவதியால் அவர் திருப்பி அனுப்பப்பட்டு தன் கிராமத்துக்குப்போய் அங்கும் தனிமைப்பட்டு தேசாந்திரியாக போகும்போது அந்தக் கதாபாத்திரம் கனத்துக்கொண்டே போகிறது
சத்யவதி ராஜதந்திரியான குரூரம் கொண்ட பெண்மணியாக வந்து கொஞ்சம் கொஞ்சமாக ஒரு அம்மாவாக மட்டுமே ஆகிவிடுகிறாள். ஆனால் கள்ளமில்லாத பெண்ணாக வரும் குந்தி மெல்லமெல்ல அவளே ஒரு சத்யவதியாக ஆகிறாள். காந்தாரி கம்பீரமான ஒரு அரசியாக வருகிறாள். ஆனால் அவள் குணச்சித்திரத்தில் அற்பத்தனம் குடியேறிக்கொண்டே இருக்க்கிறது கடைசியில் வெறும் அற்பப்பெண்ணாக ஆகிவிட்டிருக்கிறாள்
இப்படி எல்லா கதாபாத்திரங்களும் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். இந்த மாற்றம் கண்ணுக்குத்தெரியாமலேயே நடந்துகொண்டிருக்கிறது. இதுதான் இந்நாவலின் மிகச்சிறப்பான அம்சம் என்று நினைக்கிறேன்
நன் எழுதும் முதல் வாசகர் கடிதம் இது
சந்தானகிருஷ்ணன்
ஆற்றாது அழுத கண்ணீருக்குத் தனிமையே விதிக்கப் பட்டது. எங்குமே ஆற வழியற்ற போது பழி வாங்குகிறது. வாழ்க்கை என்றுமே அப்படித்தான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
பாரததரிசனம்
வெண்முரசு நாவல் தொடர்பான அனைத்து விவாதங்களும்