நீலமெனும் அனுபவம்

photoshop_of_sketch_of_shri_krishna_by_bhavasindhu-d7mb9bh

மதிப்புமிக்க ஜெ,

நான் தீபா .ஏற்கனவே தங்களுக்கு எழுதி இருக்கிறேன்.நீலம் வாசித்து அதனுடனே வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.ஏற்கனவே பலர் எழுதுவதால் நானெல்லாம் என்ன எழுதுவது என்று இருந்தேன்.ஆனால் உங்களிடம் பகிராவிட்டால் என் மனம் என்ன ஆகிவிடுமோ.

ஜெ,உண்மையில் ராதையாகவே கண்ணணாகவே என் மனம் உணர்ந்த நாட்கள் உண்டு.நீலக்கடம்பின் கீழே வேய்குழல் கீதம் கேட்டு நிற்கிறேன்.
நாணமற்றது மருதம் நானென்று தருக்கி நதிக்கரையில் நின்றிருக்கும் கீழ்மை கொண்டது.ஆலென்றும் அரசென்றும நிலம் சொல்லி ஏய்க்கும் குணம் கொண்டது.
எத்தனை அழகாக அவளின் நிலையை கூறுகிறீர்கள்.நீரோடும் இடமெல்லாம் வேரோடிச்செல்லல்.உண்ட நீரெல்லாம் உடல் நிறைந்தோட

ஜெ சார் ராதை மட்டுமில்லை பதின்ம வயதில் என் போன்ற பெண்களின் மனம் இதுதான்.நீங்கள் எழுதியது போல பெண்கள் நடைமுறை சார்ந்தவர்கள் தான்.ஆனால் எல்லாவற்றிலும் விலக்குகள் உண்டு.பிரேமை நிலை கொண்ட பெண்களில் நானும் ஒருத்தி.உண்மையில் பிச்சியாக அலைபவள் நான்.ராதையின் நிலை நான் கடந்த என் வாலிப நாட்களே.இதே போன்ற உன்மத்த அன்பு,ஏக்கம்,கோபம்,விரக்தி இறுதியில் சரண் என வாழ்ந்திருக்கிறேன.

ஜெ என்னைப்பற்றி சிறிது கூற எண்ணுகிறேன்.எனக்கு32வயது.இரு சிறு குழந்தைகளின் தாய்.வேலைக்கு செல்பவள்.எனக்கு நேரம் ஒழிவதே எப்பொழுதும் இல்லை.ஆகவே கடந்த ஜனவரி முதல் காலை நான்கு மணிக்கு எழும்பி வெண்முரசு வாசிக்கிறேன்.நானே நேரத்தை உருவாக்கி கொள்கிறேன்.

உண்மையில் நீலம் மலர்தல் பற்றி எழுதுவதே என் நோக்கம்.நான் அதிகம் வாசிப்பவள்.தமிழின் பல படைப்புகளை வாசிக்கையில் இவை உருவான காலங்கள் எப்படிப்பட்டவை என அறிய எண்ணியதுண்டு.வெண்முரசு உருவாகும்போதே வாசிப்பது எனக்கு கிடைத்த பேறு.

ஜெ நீங்கள் எழுதுவது போல இலக்கியம் இருவழிப்பாதை.இதை நானே என் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன்.காடு,கொற்றவை,அனல்காற்று போன்றதங்களின் படைப்புகளும் மோகமுள்,அம்மா வந்தாள் ,சில நேரல்களில்,செம்மீன்,தாய் போன்ற எத்தனையோ படைப்புகள் என்னை பரவசமூட்டிஅவற்றிலிருந்து வெளியே வர இயலா நிலைக்கு அழைத்து சென்றுள்ளன.என் வயது காரணமாக இப்படைப்புகள் என்னை ஈர்த்திருக்கலாம்.

ஆனால் நீலம் இதையெல்லாம் ஒன்றுமே இல்லை என ஆக்கியது.நீலம் தொடங்கியது முதலே நான் இயல்பாக இல்லை.ராதையின் பிரேமை பற்றி வாசிக்கையில் என் உடலிலேயே மாற்றங்களை உணர்ந்தேன்.வயிற்றில் ஒரு துடிப்பு பரவசம்,நெஞ்சிலிருந்து வயிறுவரை சூடான உணர்வு.நெஞ்சின் துடிப்புகள் வெளியில் கேட்குமோ என்ற நிலை.இத்தகைய பரவச மகிழ்வினை என் வாழ்வில் உணர்ந்த நாட்கள் அபூர்வம்.மனம் எப்பொழுதும் உச்ச கட்ட மகிழ்வு அல்லது துக்கத்தில் இருந்தது.வெளியில் என்ன பணி செய்தாலும் உள் மனம் ஒரு பரவசத்திலேயே இருந்தது.சமையலறையில் பாதி சமைக்கையில் உப்பு காரம் போட்டேனா என்று குழப்பம்.குளித்தேனா என மறந்துவிட்டது.உணவு பற்றிய நினைவேயில்லை.மனதை சமன் செய்ய அதிக தூரம் நடைபயிற்சி மேற்கொண்டேன்.பாதி தூரம் செல்கையில் எங்கிருக்கிறேன் என்பதே தெரியாத நிலையில் நின்றேன்.

ராதை அடைந்த எல்லா உணர்வையும் நான் நிஜவாழ்வில் அடைந்தது காரணமாயிருக்கலாம்

இறுதியில் இரு வாரங்கள் முன்பு எனக்கு வயிற்றில் உண்டான சூடு காரணமாக அல்சரோ என பயந்து மருத்துவரிடம் சென்றேன்.ஆனால் எதுவுமில்லை.உடல் எடை கூடினால் இவ்வாறு உடல் வலிகள்வரும் என்றார்கள்.ஆனால் நான் சரியான எடை உடையவள்.அதிக எடையும் இல்லை. என்ன செய்வது என்று குழம்பி மனநல மருத்துவரிடம் செல்லலாமா என எண்ணினேன்.ஆனால் யாரிடமும் சொல்லவில்லை.எனக்கு மிகவும் அணுக்கமான என் கணவரிடமோ,என் நண்பர்களிடமோ சொல்லத் துணியவில்லை. ஏற்கனவே என்னைப்பற்றி உண்ர்ச்சிகரமானவள் என்று எல்லாரிடமும் ஒரு பிம்பம்.

இந்நிலையில் தான் நீலம் மலர்ந்த நாட்கள் எனக்காகவே எழுதப்பட்டது போல வந்தது.மிக்க நன்றி .என் குழப்பங்களை தீர்த்தீர்கள்.என் மனநிலை பற்றிய பயங்கள் குறைந்தன.நன்றி ,இதற்கு மேல் எவ்வளவோ எழுத எண்ணுகிறேன ஆனால் முடியவில்லை.

வணக்கங்களுடன.
தீபா,

அன்புள்ள தீபா,

மனிதர்களுக்கு அந்தரங்கம் உள்ளதுபோல பண்பாடுகளுக்கும் அந்தரங்கம் உண்டு போலும். நீண்டநெடுங்காலமாக நம் பண்பாட்டின் அந்தரங்கமாக இருந்து வரும் ஓர் உருவகம் ராதா-கிருஷ்ணலீலை

அதை நாம் அந்தரங்கமாகவே உணர்கிறோம். அந்தரங்கத்தின் மொழியிலேயே கூறிக்கொள்கிறோம் என்று தோன்றுகிறது. அந்த உணர்வு ஒரு பெரிய வரம்.

நன்றி

ஜெ

வெண்முரசு நாவல் தொடர்பான அனைத்து விவாதங்களும்

மழையின் இசையும் மழையின் ஓவியமும் மழைப்பாடல் பற்றி கேசவமணி


வியாசமனம் முதற்கனல் பற்றி மரபின் மைந்தன்