அம்மாவன்

mtvasudev [எம்.டி]

அன்புள்ள ஜெ சார்,

திரு எம். டி. அவர்களின் புனைவுலகு குறித்த நீள் கட்டுரைக்கு மிக்க நன்றி. என் தாய்மொழி மலையாளமானாலும், பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னையானதால், எனக்கு பதின்பருவம் வரை மலையாளம் எழுதவும் படிக்கவும் தெரியாது. பின்னர் மவுண்ட் ரோடு தேவநேய பாவணர் நூலகத்தில் ஒரு நாள் எம்.டி யின் வானபிரஸ்தம் குறுநாவலின் தமிழ் மொழிபெயர்ப்பை வாசித்து மிகவும் மன எழுச்சியுற்றேன். மூல மொழியிலேயே வாசிக்க வேண்டும் என்ற தணியாத ஆர்வத்தால், கேரளத்தில் உள்ள உறவினர்களிடமிருந்து மலையாளம் எழுத படிக்கக் கற்றுக் கொண்டேன் (பள்ளி விடுமுறைக்கு சென்றிருந்த போது!!).

திரு எம்.டி அவர்களின் வானபிரஸ்தம், இரண்டாம் ஊழம், மஞ்ஞு, வாரணாசி ஆகிய நாவல்களையும், ஷெர்லக், அரபிப்பொன்னு ஆகிய கதைத் தொகுப்புகளையும் வாசித்திருக்கிறேன், அவற்றின் எழுத்துகளின் மீது எனக்கிருந்த தணியாத மயக்கத்தை இப்போது நினைத்து பார்க்கும் போது ஒரு இனிய கனவாகத் தோன்றுகிறது. சில வருடங்களுக்கு முன்பு, அவருக்கு நோபல் பரிசு கிடைக்குமா என்று உங்களுக்கு கூட ஏக்கத்துடன் கடிதம் எழுதியிருந்தேன் :))))))

அவரது எழுத்துக்களில் என்னை கவர்ந்தது என்னவென்று தற்போது தங்கள் கட்டுரையை வாசித்த போது என்னால் புரிந்து கொள்ள முடிகிறது: அந்த நடையின் வசீகரம், ஊடுபாவாக கூடவே வரும் melancholy . சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட ஒரு வலிமையற்றவனின் குரல், இன்னும் பல, சரியாக சொல்லத் தெரியவில்லை..மறுபடியும் அவர் எழுத்துக்களை தற்போது படித்தால் கூற முடியும் என்று தோன்றுகிறது.

அவரது சினிமாக்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். அவர் திரைக்கதை அமைப்பில் ஒரு மேதை. அவரும் மோகன்லாலும் இணைந்து செய்த படங்களை (அம்ருதம் கமய, தாழ்வாரம்) எத்தனை முறை பார்த்தாலும் என் மனம் உவகை கொள்ளும், ஏன் என்று தெரியவில்லை (வேறென்ன சாதிப் பாசம் தான். மலையாளத்தானுங்களே இப்டி தான் சார்).

ஆனால் வெண்முரசை விட இரண்டாம் ஊழம் ஒரு படி கீழே தான் எனக்குப் பட்டது..அது ஏன் என்று உங்கள் கட்டுரையிலேயே பதிலும் உள்ளது. அவரது புனைவுகள் மனிதர்களோடு நின்றுவிடுகிறது, ஒரு பிரபஞ்சப் பார்வை இருக்காது. ஆனால் சீரிய இலக்கியத்திற்க்குள் என்னை இழுத்த ஒரு பேராசன் திரு எம்.டி. அவர்கள். அவரது புனைவுகளை குறித்த பார்வையை தொகுத்துக் கொள்ள உங்கள் கட்டுரை உதவியது, மிக்க நன்றி.

மற்றபடி, நான்காம் கொலையை மீண்டும் படித்து விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தேன். அதிலும் கண்ணனை நாயராக்கிய சமையற்கார மாமாவிற்கு நந்நி. ஆனாலும் நீங்கள் நம் நாயர் மக்களை மிகவும் கேலி செய்திட வேண்டாம். நம் சமூகத்தின் பெயரால் ஒரு சினிமா வகைமையே உள்ளது: neo noir என்று ;-) ;-)

அன்புடன்
கிருஷ்ணன் ரவிக்குமார்
basheer1 [பஷீர்]

அன்புள்ள கிருஷ்ணன் ரவிக்குமார்,

எம்.டி மீது பலவகையான விமர்சனங்கள் உருவானபின்னரும் அவருடைய புனைவுலகை தாண்டமுடியாதவனாகத்தான் இருக்கிறேன் என்பதே அவரைப்பற்றி விரிவாக யோசிக்கச்செய்தது. என் முந்தைய தலைமுறையின் உணர்வுநிலையை அவரைப்போல சொல்ல எவராலும் முடிந்ததில்லை. என் இறந்தகாலத்தின் முகம் அவர். அதேசமயம் புறக்கணிக்கப்பட்டவனின் அழியாத கண்ணீர் அவர் எழுத்தில் உள்ளது. உலகமெங்கும் எந்த வாசகனும் அதை அவரில் அடையாளம் காணமுடியும்

எனக்கு அவர் மூத்த ‘அம்மாவனைப்போல’ . தறவாட்டு முகப்பில் சாய்வுநாற்காலியில் கடுகடுவென அமர்ந்திருக்கிறார்.அன்பாக ஒரு சொல் கிடையாது. ஆனாலும் தந்தை வடிவம். எனக்கும் இறந்தகாலத்துக்குமான கண்ணி. பஷீர் என்னுடன் என்றுமிருக்கும் சூஃபி. எம்டி தாய்மாமன்.

நாயர்களுக்கு குலகுரு என்றால் குஞ்சன் நம்பியார்தான். அவர் நாயர்களைப்பற்றி எழுதியதற்குமேலாக எவர் எழுதிவிடமுடியும்? சாப்பாட்டு வெறியில் ‘அதுகொண்டும் அரிசம் தீராது அம்பலமாகே மண்டி நடந்து’ களிக்கும் நாயர்களின் சித்திரம்!

இருக்கவே இருக்கிறார்கள் பஷீரும் புனத்தில் குஞ்ஞப்துல்லாவும். உஸ்தாதும் இக்காவும் படைச்சவன் கைமறதியாக முஸ்லீமாக ஆக்கிய நாயர்கள். அதற்காக முஸலியார்களிடம் படைச்சவன் பலமுறை ஸாரி சொன்னதாகத் தகவல்.

punathil-kunjabdulla [புனத்தில்]

நூலன் வாசு அல்லது கட்டாரி வாசுவைப்பற்றி ஒரு நிகழ்ச்சி. உஸ்தாதுக்கு அடிக்கடி மரைகழலும் பொற்காலம். ஒருநாள் காலையில் அறையில் வேட்டியை உருவி தலையில் கட்டி, முந்தையநாளே கௌபீனமணிய மறந்த உஸ்தாத் கையில் கட்டாரியுடன் நிற்கிறார்

‘இபிலீஸ்!’ என ஆவேசமான உறுமல். ‘அவனை குத்தி மல்லாத்துவேன். ஆஹா அந்தளவுக்கு ஆகிவிட்டானா? வரட்டும்’ படைத்தவனுக்குச் சவாலாக விளங்கும் ஷைத்தானுக்கு எதிர்கால சூஃபியான உஸ்தாதின் அறைகூவல்

வேறுஎவரும் பக்கத்தில் நெருங்கமுடியாது. ஆகவே கட்டாரி வாசுவுக்கு ஆள்போகிறது. அவரும் வேட்டியை மடித்துக்கட்டி சட்டைக்கைகளை சுருட்டி மேலேற்றி கம்பீரமாக நடந்து வருகிறார். ஒரு தயக்கமும் இல்லை ‘என்னதான் இருந்தாலும் நாயருன்னா அதுக்குன்னு ஒரு இது இருக்கத்தான் செய்யுது. அந்த வரவப் பாரு!’ எளிய முஸ்லீம்களின் வியப்பொலிகள்.

கட்டாரி வாசு படிகளில் ஏறும்போது மேலே உஸ்தாதின் குரலோசை ‘அவன் பல வடிவத்திலும் வருவான்’ கட்டாரி வாசு கதவை அணுகுகிறார். அடுத்த வரி ‘அவன் கட்டாரிவாசு வடிவிலும் வருவான்!’ கட்டாரிவாசு நூலன் வாசுவாக மாறி படியிறங்கிவிட்டார்.

சமீபத்தில் ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் புனத்தில் இக்கா அவர் நாயராக மதம்மாறிவிட்டதை அறிவித்தார். ‘இந்துமதத்தின் சித்தாந்தங்கள் பிடித்திருக்கின்றன’ என்றார். பேட்டியாளர் இக்காவிடம் ‘அதென்ன சித்தாந்தங்கள்?’ என்றார். ‘அழகான சித்தாந்தங்கள்’ என்றார் இக்கா

‘அது என்ன சொல்லுங்கள்’ என்றார் பேட்டியாளர். ‘அட இது எந்த நாயருக்கும் தெரியுமே. யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்’ என்று சுருக்கமாக இந்துமெய்ஞானமரபை இக்கா விளக்கி நாயர்களை இறும்பூது எய்தவைத்தார். சிரியன் கிறிஸ்தவ சேட்டன்களும் சேர்ந்து இறும்பூதுக்கு ஆளானார்கள்.

vkn1 [வி கெ என்]

அப்புறம் வி.கெ.என். ‘நாணுவாரு’ என்னும் அமர கதாபாத்திரம். கதாரம்பத்தில் தன் அச்சியுடன் கதைக்குள் ‘அமர்ந்தபடி பிரவேசிக்கும்’ அழகை எத்தனை முறை வாசித்தாலும் தீராது.

ஒரு வி.கே.என் [வாய்மொழிக்] கதை. ஒரு நாயருக்கு தொண்டையில் கட்டி. சோறு இறங்காது. சாப்பிடாமல் சாகக்கிடந்தார். வைத்தியம் பார்க்க வந்தவர் நம்பூதிரி. ’ஒரே ஒரு வழிதான் உள்ளது, குதம் வழியாக சாப்பிடு’ என்றார்

‘அதெப்படி?’ என்றார் நாயர் திகைத்து. ‘ அதெல்லாம் நாயர்களால் முடியும், இதற்கு அப்பாலும் அவர்கள் செய்திருக்கிறார்கள்’ என்றார் நம்பூதிரி. நாயருக்கு குதம் வழியாக ஒருசில பருக்கைகள் சாப்பிடப்பழக்கினார்

ஒருவருடம் கழித்து ‘சிம்ப்ளனாக’ நாயர் நம்பூதிரியைப் பார்க்க வந்தார். ‘ரொம்ப நன்றி திருமேனி. தாங்கள் சொல்லித்தந்த வித்தையால் நன்றாகவே சாப்பிடுகிறேன். உடம்பு ஆரோக்கியமாகிவிட்டது’ என்று நடனமாடியபடியே சொன்னார்

‘அப்படியா?’ என்றார் நம்பூதிரி. ‘நன்றாக சாப்பிட முடிகிறதா?’ என்று கேட்டார். ‘எல்லாமே சாப்பிடுவேன். மீன் மூன்றுவேளையும் சேர்த்துக்கொள்கிறேன்’ நாயர் ஒயிலாக நடனமிட்டுக்கொண்டே சொன்னார்.

‘அதுசரி, நடனம் கற்றுக்கொண்டீர்களா?’ என்றார் நம்பூதிரி. ‘இல்லை. சூயிங்கம் மெல்கிறேன்’ என்றார் நாயர்

ஜெ

முந்தைய கட்டுரைஅழியா இளமை
அடுத்த கட்டுரைநீலமெனும் அனுபவம்