அன்புள்ள ஜே,
உங்கள் இணைய எழுத்துக்களைக் கூர்ந்து வாசித்துவருகிறேன். நீங்கள் காந்தியின் படுக்கையறை விஷயங்களை எழுதுகிறீர்கள். நேருவின் தொடர்புகளை எழுதுகிறீர்கள். உடனே எம்.எஸ்.சுப்புலட்சுமி பற்றி எழுதுகிறீர்கள். பெரியாரின் வைக்கம் மித் பற்றி எழுதுகிறீர்கள். சூடாகவெ பாரதியைப்பற்றி எழுதுகிறீர்கள். காந்தி நேருவைப்பற்றிச் சொல்லும்போது ரசிப்பவர்கள் பெரியாரைப்பற்றி சொன்னால் எகிறுகிறார்கள். பெரியாரைப்பற்றிச் சொல்லும்போது சிரிப்பவர்கள் எம்.எஸ்.சுப்புலட்சுமியைப்பற்றிச் சொன்னால் சீறுகிறார்கள். பாரதிக்குக் கூட ஆளிருக்கிறது,பாவம் காந்தி.
சிலசமயம் உங்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என்று நான் நினைப்பதுண்டு. நீங்கள் உங்களை ஒரு சிலைதகர்ப்பாளர் என்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்களா என்ன? சிலைதகர்ப்பாளர்களுக்கு எல்லாருமே எதிரிகள். காரணம் சிலைவழிபாடு செய்யாதவர்கள் இல்லை. [ஆனால் முத்துராமலிங்கத்தேவரைப்பற்றிப் பேசும்போது மட்டும் ரொம்பவே ஜாக்கிரதை))) ]
செந்தில்
அன்புள்ள செந்தில்,
நான் சிலையுடைப்பாளன் அல்ல. சிலைகள் ஒரு விழுமியத்தின் ரத்தினச்சுருக்கமான வடிவங்கள். பலமுனைகளில் விவாதிக்கப்பட்ட ஒரு மையக்கருத்தை ஒரு படிமமாக ஆக்கியே ஒருசமூகம் கடைசியில் தன் நினைவில் இருத்திக்கொள்கிறது. சிலசமயம் அந்தப்படிமமாக அக்கருத்துடன் சம்பந்தப்பட்ட மனிதர்கள் ஆகிவிடுகிறார்கள். எந்தப் படிமத்தையும் பொறுப்பில்லாமல் உடைப்பது தவறு என்றே எண்ணுகிறேன்
ஆனால் என்னுடைய கவனம் உண்மையில் இருக்கிறது. ஓர் எழுத்தாளன் விழுமியங்களை உருவாக்கக் கூடியவன். அவ்விழுமியங்களை தன்மேல் ஏற்றிக்கொண்ட படிமங்களை உருவாக்குவதே இலக்கியம். ஆனால் அவற்றை அவன் தானறிந்த உண்மையிலிருந்தே உருவாக்க வேண்டும். இல்லையேல் அவன் தவறான விழுமியங்களை உருவாக்கியவன் ஆவான். இங்கேதான் நான் எப்போதும் கவனமாக இருக்கிறேன்.
நான் எழுதியவற்றைப்பற்றிச் சொன்னீர்கள். இது நான் ஆரம்பம் முதலே செய்துவரும் செயல்தான். 1992ல் நான் தினமணி நாளிதழின் நடுப்பக்கத்துக் கட்டுரை ஒன்று எழுதினேன். ‘காந்திக்கு மட்டும் வேறு நியாயமா?’ என்ற தலைப்பில் வெளியான அக்கட்டுரையில் இதே கேள்வியையே எதிர்கொண்டிருந்தேன். நமக்கு சில மனிதர்கள் படிமங்களாக அளிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் சில விழுமியங்களின் அடையாளங்கள். அந்த விழுமியங்களை நாம் பரிசோதிக்க வேண்டுமென்றால் அந்த மனிதர்களை கூர்ந்து அறிந்தே ஆகவேண்டும். அவர்களை பலகோணங்களில் விவாதித்தாகவேண்டும்.
ஆனால் நம் சூழலில் காந்தியைப்பற்றி எப்படிவேண்டுமானாலும் விவாதிக்க இடமிருக்கிறது. எவருமே புண்படுவதில்லை. நேருவைப்பற்றிக்கூட விவாதிக்கலாம். காரணம் அவர்கள் ஜனநாயகவாதிகள். அவர்களைப் பின்பற்றுபவர்கள் எந்த சீரழிவுநிலையிலும் ஜனநாயகவாதிகளே. ஆனால் வேறுபலரைப்பற்றி வழிபாட்டு ஒலியன்றி வேறெதுவுமே ஒலிக்க முடியாது. அவர்கள் உருவாக்கிய மனநிலை அப்படிப்பட்டது. அவர்கள் பிற அனைவரையும் விமரிசிபபர்கள், அவர்களைப்பற்றிய எளிய ஆதாரபூர்வ விமரிசனம்கூட அவர்களை கோபம் கொள்ளச்செய்கிறது. அதையே சுட்டிக்காட்டியிருந்தேன்.
பிம்பங்களை நம்பி தங்கள் உலகப்பார்வையை உருவாக்கியிருக்கும் எளிய மனிதர்கள் பிம்பங்கள் உடைபடுவது தங்கள் உலகையே உடைக்கும் என்று எண்ணுகிறார்கள். ஆகவே ஒவ்வொருவருக்கும் தங்கள் பிம்பங்களைப் பாதுகாப்பது தங்களின் பொறுப்பு என்று தோன்றிவிடுகிறது. எது உண்மை என்பது பொருட்டே அல்ல. ஓர் உண்மையை நிராகரிக்க அதைச் சொல்பவனை நிராகரிப்பது மிக எளிமையான விஷயம். அதைத்தான் கடந்த இருபதாண்டுக்களாக என் எழுத்தை எதிர்ப்பவர்களில் பலர் செய்து வருகிறார்கள்.
நான் எந்த மனிதரையும் வழிபடக்கூடாது என்று எனக்குச் சொல்லிக்கொள்கிறேன். அதேசமயம் எவரையும் மதிக்கக்கூடாது என்றல்ல. மானுட சமூகத்திற்கும் பண்பாட்டுக்கும் பங்களிப்பாற்றிய எவருமே என் மதிப்புக்குரியவர்களே. அவர்களை எப்போதும் மதிப்புக்குரிய சொற்களில்தான், வணக்கத்துடன் மட்டுமே குறிப்பிட்டு வருகிறேன். ஆனால் அவர்களைப்பற்றிய மிகைப்பிம்பங்களை உருவாக்கிக்கொள்ள விரும்பவில்லை.
மூன்று வகையில் நான் ‘மறுபக்கங்களை’ பரிசீலிக்க விரும்புகிறேன். அது உண்மையை நெருங்க எனக்கு இன்றியமையாதது என்று நினைக்கிறேன். ஓர் எழுத்தாளனாக ஜனநாயகம் அந்தச் சுதந்திரத்தை எனக்களிக்கிறது என்று எண்ணுகிறேன்.
ஒன்று, மனிதர்கள் எவரும் ஒற்றைப்படையானவர்கள் அல்ல. பலவிதமான உளத்தீவிரங்கள் கொண்டவர்கள். இச்சைகளாலும் சினங்களாலும் வெறுப்புகளாலும் தன்முனைப்பாலும் அலைக்கழிக்கப்படுபவர்கள். பிழையான புரிதல்கள் கொண்டவர்கள், பலவகையான விடுபடல்களைந் இகழ்த்தியவர்கள். அவற்றைக் கடந்து வென்று தங்களை நிறுவியவர்களையே நாம் மாமனிதர்கள் என்கிறோம். அவர்கள் பரிணமித்து வந்த பாதை எப்போதுமே முக்கியமானது. அந்தப்பாதையை கவனிப்பதற்காக அவர்களின் தனிவாழ்க்கைக்குள் சென்றாக வேண்டும்.
ஆனால் இது மாமனிதர்கள் என முன்னிறுத்தப்பட்டவர்களுக்கே. காந்திக்கு, நாராயணகுருவுக்கு, வள்ளலாருக்கு அல்லது நித்ய சைதன்ய யதிக்கு. அவர்கள் வாழ்வில் நாம் அறிந்துகொள்ளத் தேவையில்லாத ஏதும் இல்லை. அவர்களின் மொத்த வாழ்க்கையே நமக்கு ஒரு முன்னுதாரணம், ஒரு வழிகாட்டி என்பதனால்.
இரண்டாவதாக, அரசியல் போன்ற பொதுத்தளங்களில் செயல்படுபவர்களின் வாழ்க்கை. அவர்கள் எடுக்கும் அரசியல் முடிவுகள், கொள்கைகள் நம் அத்தனைபேருடைய வாழ்க்கையையும் பாதிப்பவை. கோடானுகோடி மக்களின் தலையெழுத்தை அவர்களின் மனநிலைகள் தீர்மானிக்கின்றன என்பதனால் அவர்களின் சொந்த வாழ்க்கை பொதுவாழ்க்கையில் இருந்து ஒருபோதும் பிரித்தறியக்கூடியதல்ல. அவர்களின் பலவீனங்கள் தடுமாற்றங்கள் அனைத்துமே வரலாற்றின் பகுதிகளே. மார்க்ஸ்,ஸ்டாலின், மாவோ, நேரு போன்றவர்களை நாம் கவனிப்பது இந்த அடிப்படையிலேயே.
மூன்றாவதாக, அரசியல் நோக்குடன் கட்டி உருவாக்கப்படும் பிம்பங்களை வரலாற்றில் வைத்துப்பார்த்தாகவேண்டியிருக்கிறது. ஸ்டாலினின் ஆட்சிக்காலத்தில் அவரைப்பற்றி பலநூறு பொய்க்கதைகள் உருவாக்கப்பட்டன. அவர் ‘முன்பு’ எழுதிய நூல்களின் மறுபதிப்புகள் வெளியிடப்பட்டன. மாபெரும் சிந்தனையாளர் தத்துவமேதை என்று, ஏன் லெனின் இருக்கும்போதே இவர்தான் பலவற்றை எழுதினார் என்றுகூட, வரலாறுகள் உருவாக்கப்பட்டன. ஆனால் பின்னர் ஆய்வாளர்கள் ஒவ்வொன்றாக பிரித்து போட்டார்கள். ஸ்டாலின் நூல் எழுதியதாகச் சொல்லப்பட்ட நாட்களில் உண்மையில் அவர் எங்கே இருந்தார் என்ன செய்தார் என்று வெட்டவெளிச்சமாக்கப்பட்டது.
எல்லா காலத்திலும் வரலாறு இப்படி அதிகாரத்தால் புனையப்படுகிறது. பாடப்புத்தகங்கள் போல வரலாற்றுப் பொய்களைச் சொல்லும் நூல்கள் வேறில்லை. அந்தப் பாடப்புத்தக உண்மைகளை நம்பும் பாமரமனம் சிந்தனையின் தளங்களுக்கு நகர முடியாது. அவ்வகைப்பட்ட கான்கிரீட் உண்மைகளுக்கு அப்பால் சென்று வரலாற்றில் என்ன நடந்தது என்று அறிபவனே சிந்தனையின் முதல்படிகளுக்காவது செல்ல தகுதிகொண்டவன். அந்த உண்மை தனக்குச் சாதகமா பாதகமா என்றல்ல உண்மை என்ன என்பதே அங்கே வினாவாகும். நேரு குறித்தோ, வி.கெ.கிருஷ்ண மேனன் குறித்தோ, ஈவேரா குறித்தோ, இந்திரா காந்தி குறித்தோ பேசுவது இதனாலேயே.
நம் சூழலில் பிம்பம் சுமக்கும் மனிதர்களின் கோபம் எப்போதுமே சிந்திப்பதற்கு ஒரு தடைதான். இது நம்முடைய பழங்குடி வாழ்க்கையின் மனநிலையின் நீட்சி. நவீன ஜனநாயக சூழலுக்கு நாம் செல்வதற்கு இன்னமும் வெகுதூரம் செல்லவேண்டும். இந்நிலையிலேயே நீங்கள் தேவர் குறித்து கேட்கிறீர்கள். அவர் மேலே சொன்ன மூன்று அடையாளத்திலும் இல்லை. அவர் ஒரு சாதியின் வழிபாட்டுப் பிம்பம். அவரை வழிபடுவதா வேண்டாமா என்பதை அச்சாதிதான் முடிவுசெய்யவேண்டும். இதுவே மதநிறுவனர் பிம்பங்களுக்கும்.
ஆனால் இங்கே கவனிக்க வேண்டியது ஒன்றுதான். விவாதம் எங்கே முடிந்து வம்பு எங்கே ஆரம்பிக்கிறது என்பதற்கு ஒரு நுண்மையான வரம்புதான் உள்ளது. ஆதாரங்கள் இல்லாமல் பேசுவது, வீண் வதந்திகளை உருவாக்குவது ஆகியவை வம்புப்பேச்சின் முதல் படி. ஒருவரை ஓரு தகவலின் அடிப்படையில் ஒட்டுமொத்தமாக தூக்கி வீச, முத்திரைகுத்த முயல்வது அடுத்த நிலை. என் வரையில் எப்போதும் பேசப்படும் விழுமியங்களுக்கே அழுத்தம் அளிக்கிறேன். விரிவான வரலாற்றுப்புலத்தில் வைத்துப்பார்க்க முனைகிறேன். ஆதாரங்களையே பரிசீலிக்கிறேன். அவை ஆதாரங்களால் மறுக்கப்படுமென்றால் ஏற்க, மாற்றிக்கொள்ள எப்போதும் தயாராக இருக்கிறேன்.
என்னுடைய ஆழமான புரிதல் ஒன்றுண்டு. எப்போதுமே நான் இதைச் சொல்லிவருகிறேன். ‘மத்திம மார்க்கம்’ என அதை குறிப்பிடுவேன். உண்மை அங்கும் இல்லை, இங்கும் இல்லை. அது நடுவே உள்ள பாதை. உண்மை எப்போதும் பல்வேறு தரப்புகள் நடுவே உள்ள சமரசப்புள்ளிக்கு அருகே உள்ளது. ஆகவே மனிதர்களை மதிப்பிடுவதற்கும் நடுப்பாதையே சிறந்தது. வழிபாட்டுக்கும் நிராகரிப்புக்கும் நடுவே உள்ள சமநிலை அது.
இத்தனைக்கும் அப்பால் ஒன்றைச் சொல்லிக்கொள்ள எப்போதும் தயாராக இருப்பேன். என்னுடைய எழுத்து வழியாக நான் முன்வைப்பது என்னை. என்னுடைய அந்தரங்கம் என ஏதும் இல்லை. என்னுடைய தனிவாழ்க்கை, என் பலவீனங்கள், அற்பத்தனங்கள் , சிறுமைகள், வீழ்ச்சிகள் எதுவாக இருந்தாலும் எவரும் விவாதிப்பதில் எனக்கு தடையில்லை. காந்தி அளவுக்கு இல்லையென்றாலும் நானும் ‘நானே என் எழுத்து’ என்று திடமாகவே சொல்லிக்கொள்வேன்.
6 comments
Skip to comment form ↓
kuppan_yahoo
January 22, 2010 at 12:07 am (UTC 5.5) Link to this comment
நானும் உங்கள் katchi தான், அரசு செலவில் காந்தி, காமராஜர் , அண்ணாதுரை சிலை வைப்பது சரி எனில் மாயாவதி சிலை வைப்பதிலும் எந்த தவறும் இல்லை என்பேன்.
நவீன்
January 22, 2010 at 8:04 am (UTC 5.5) Link to this comment
மதிப்பிற்குரிய ஜெ, உண்மையை பற்றிய உங்கள் நிலைபாடு என்னுடயதுடன் ஒத்து போகிறது. இதை பற்றி என்னுடைய எண்ணங்கள் கீழே.
>>‘மத்திம மார்க்கம்’ என அதை குறிப்பிடுவேன். உண்மை அங்கும் இல்லை, இங்கும் இல்லை. அது நடுவே உள்ள பாதை. உண்மை எப்போதும் பல்வேறு தரப்புகள் நடுவே உள்ள சமரசப்புள்ளிக்கு அருகே உள்ளது. ஆகவே மனிதர்களை மதிப்பிடுவதற்கும் நடுப்பாதையே சிறந்தது. வழிபாட்டுக்கும் நிராகரிப்புக்கும் நடுவே உள்ள சமநிலை அது.
குறிப்பாக சொன்னால், உங்கள் ‘உண்மை’ ஹெகலின் உண்மையை போன்றது, சரியா? வாத பிரதிவாதங்களின் கூட்டு முயற்சியால் ‘சமநிலையான உண்மை’ கிடைக்கும் என்று ‘நம்புகிறீர்கள்’. நீங்கள் முன்பே கூறியது, வரலாறு அதிகாரத்தால் எழுதபடுகிறது என்று. ஆனால் வாதங்களையும் பிரதிவாதங்களையும் ஒடுக்கி, சமநிலையான உண்மையை பூரண உண்மையிலிருந்து வெகு தூரம் நகர்த்தக்கூடிய சக்தி அதிகாரத்துக்கு இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. காலம் இன்னொரு பாதிப்பு. கால சுழற்சியாலும் சமநிலையான உண்மை விலகி போய்விடலாம். சுலபமான உதாரணம் கிறித்துவம். சுமேரிய நாகரிகத்திலிருந்து, பேகநிசதில் இருந்து இதிகாசங்களையும் தத்துவங்களையும் உள் இழுத்துக்கொண்டு, அந்த தொடர்புகளை அதிகாரத்தால் அழித்தது கத்தோலிக்கம். மறுமலர்ச்சி வரை பைபிள் கடவுளின் வார்த்தை. இன்றைக்கு பைபிள் ஒரு அளிகோரி (பெரும்பாலும்).
அப்போ சமநிலையான உண்மையை வைத்து சந்தோஷப்பட்டுக்க வேண்டியதுதானா? தூய அனர்கிசம் இல்லாத வரை பூரண உண்மை நமக்கு கிடைக்காதா?
நவீன்.
Srinivasan
January 22, 2010 at 2:11 pm (UTC 5.5) Link to this comment
நிஜமாகவே உங்கள் எழுத்துதான் நீங்கள் என்பதை நான் உணர்கிறேன். உங்கள் எழுத்தை சிறிது கூர்ந்து வாசிப்போர் எவரும் இதை உணரமுடியும் என நம்புகிறேன்
ஸ்ரீனிவாசன்
முஉசி
January 23, 2010 at 2:30 pm (UTC 5.5) Link to this comment
தாங்கள் உண்மையின் பன்முகத்தன்மையினை நிறுவமுயல்வதாக உணர்கிறேன். ஒவ்வொருவரும் அவர்கள் பார்வையில் புலப்படுவதை உண்மை என்று நம்புகிறார்கள் அதன் பாதிப்பிலேயே அவர்களின் வெளிப்பாடுகள். தங்களின் எழுத்தின் பன்முகப்பார்வை இந்த மன இயல்பை உணர்த்துமுகமாய் இருப்பதாக நம்புகிறேன். தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
Brahmabhootham
January 24, 2010 at 5:01 pm (UTC 5.5) Link to this comment
ஒரு ஆர்வத்தால் கேட்கிறேன். ஒரு கலையுணர்வுள்ளவராக, ரசிகராக, கொள்கை தீவிரம் மிக்கவரான நீங்கள் வேலைகளை கையாள்வது எப்படி என அறிய ஆர்வமாயிருக்கிறது. உதாரணமாக, நீங்கள் வேறு ஒரு மூடில் இருக்கிறீர்கள். அப்போது அந்த உணர்வுக்கு சம்பந்தம் இல்லாத ஒரு வேலையை செய்ய வற்புறுத்தப்பட்டால், நீங்கள் அந்த வேலையை செய்வீர்களா? உங்கள் மனத்தை ஒவ்வொரு வேலைக்கும் தயார் செய்ய, ஒரு வேலையிலிருந்து மற்றொரு வேலைக்கு மாற நீங்கள் ஏதேனும் செய்வதுண்டா? அவை என்ன?
ஜெயமோகன்
January 25, 2010 at 7:39 am (UTC 5.5) Link to this comment
அன்புள்ள நவீன் உங்கள் எண்ணங்கள் உங்களுக்குள் நிகழும் தொடர்ச்சியான சிந்தனைகளின் நகர்வை காட்டுகின்றன. மகிழ்ச்சியூட்டும் விஷயம் இது. அவை உங்களை எடுத்துச்செல்லும் இடங்களை இப்போது சொல்லமுடியாது. இதில் ஒரு தரப்பாகவே என் குரல் ஒலிக்க முடியும். ஆகவே சில வரிகள் மட்டும்.
உண்மை என்ற வார்த்தை ஒற்றைப்படையானது அல்ல. அது பல முகம் கொண்டது. பொதுவாக விவாதங்கலில் உண்மையை நான்குவகையாக வகுத்துக்கொள்வதுண்டு. 1. தகவல் உண்மை. இது புறவயமாகவே உள்ளது. ராஜராஜசோழனின் மகனா ராஜேந்திரசோழன் என்பது ‘சமன்வயம்’ [முரணியக்க சமரசம்] மூலம் நிறுவப்படவேண்டிய ஒன்றல்ல 2 . சமூகவியல் உண்மைகள் இவை தகவல்சார்ந்த உண்மைகளில் இருந்து உருவகிக்கப்படுபவை. இவை அவை உருவகிக்கப்படும் காலம் சூழல் நோக்கம் ஆகிய பலவற்றுக்குக் கட்டுப்பட்டவை. ஆகவே இவை தகவல்களுக்கும் அத்தகவல்கள் சார்ந்த ஆய்வுகலின் மனநிலைக்குமான சமரசப்புள்ளியிலேயே நிகழ்கின்றன. இவை சமூகங்களுக்கு நடுவே உள்ள சமரசங்கள் மூலம், நோக்குகளுக்கு இடையே உள்ள சமரசங்கள் மூலம் மட்டுமே உருவாகின்றன. 3. தத்துவ உண்மைகள் . இவை எப்போதும் மாறுபட்ட தரப்புகளின் மையப்புள்ளிகளாக மட்டுமே நம்மால் அறிய முடிபவை. வேறு வழியே இல்லை. 4. பேருண்மைகள். முழுமையுண்மைகள். இவை ஏதோ ஒருவகையில் மானுட மனத்தால் மறுக்கமுடியாதபடி உணரப்படுகின்றன. தெளிவற்று இருக்கும்போதுகூட ஒருவகை மறுக்க முடியாமை, விவாதத்துக்கு அப்பாற்பட்டதன்மை அவற்றுக்கு உள்ளது.
இவற்றில் நடுவே உள்ள இரண்டும் ‘இருக்கும்’ உண்மைகள் அல்ல ‘உருவகிக்கப்படும்’ உண்மைகள். அந்த உருவகம் ஒரு சிறந்த சமன்வயத்தின் விளைவாக நிகழ்ந்தால் மட்டுமே அவற்றுக்கு பயன்மதிப்பு, செயல்மதிப்பு உள்ளது
ஜெ