«

»


Print this Post

கோட்ஸே


அன்புள்ள ஜெ,

உங்கள் இணையதளத்தில் ஒருவர் கோட்ஸேயைப் பற்றி நீதியரசர் மோகன் எழுதிய ‘தியாகதீபம்’ என்ற நூலைப்பற்றிச் சொல்லியிருந்தார். நீங்கள் அந்த நூலை வாசித்தீர்களா? கோட்செயைப்பற்றி உங்கள் எண்ணம் என்ன? காந்தியைப்பற்றிய உங்கள் கட்டுரைகளில் கோட்ஸே எங்குமே இல்லையே?

‘காந்தி வெர்ஸஸ் நாதுராம்’ என்ற நாடகத்தை வாசித்திருக்கிறீர்களா? ”Mee Nathuram Godse Boltoy – The Transcript” என்றபேரில் யூ டியூபில் கிடைக்கிறது. 

சரவணன்

 

 

அன்புள்ள சரவணன்,

அந்நூலை நான் படிக்கவில்லை. அந்நாடகத்தின் சுருக்கத்தை வாசித்திருக்கிறேன். வெறும் அதிர்ச்சிநோக்கு மட்டுமே உள்ள எளிமையான  ஆக்கம். காந்தியை அது எதிர்மறையாகச் சித்தரிக்கிறது.  ஆனால் அது எனக்கு தவறானதாக தோன்றவில்லை. அந்த தரப்பும் வரட்டும், காந்தி ஒன்றும் பாதுகாக்கப்படவேண்டிய தொல்பொருள் அல்ல. விமரிசனம் வந்தால் உடைந்து போகும் கண்ணாடிப்பொம்மையும் அல்ல.

கோட்ஸெ குறித்த எல்லா தகவல்களையும் வாசித்திருக்கிறேன், அவரது வாக்குமூலம் உட்பட. அதற்குமேல் இப்போது புதிதாக வரும் பரபரப்புகளையெல்லாம் வாசிக்க ஆர்வம் இல்லை. காந்தியைப்பற்றிய விவாதத்தில் ஒருவரிக்குமேல் பேசப்படும் தகுதி கோட்ஸெவுக்கு இல்லைதான்.

 

பேசவேண்டியது கோட்செயை உருவாக்கிய கருத்தியல்- மற்றும் உணர்ச்சிப்பின்னணியைப்பற்றி. அதைப்பற்றி பூனாஒப்பந்தம் பற்றியக் கட்டுரையிலும், காந்தியும் தேசியமும் என்ற கட்டுரையிலும் விரிவாகவே பேசப்பட்டுள்ளது. விடிய விடிய ராமாயணம் பேசியபிறகு ராமனுக்கு சீதை என்ன உறவு என்ற கேள்விக்குப் பதிலளிக்க நேர்வது சங்கடமானது. இருந்தாலும் மீண்டும்…

காந்திக்கு எதிரான தரப்புகளில் முதன்மையானது கோட்செயுடையது. அதாவது அந்தத் தரப்பின் ஒரு தொண்டர்தான் கோட்ஸே. அது 1910 முதலே வலிமையாக உருவாகி இன்றும் நீடிக்கும் ஒரு தரப்பு. அதை உருவாக்கியது இரு கூறுகள். ஒன்று தேசிய உருவகம். இரண்டு இந்தியப் பண்பாட்டு உருவகம்.

கோட்ஸே பிரதிநிதித்துவம்செய்த இந்துமகாசபையும் அதன் இணை அமைப்புகளும் இந்தியதேசியம் என்னும்போது ஒற்றை மையமுடைய, ஒற்றைப்பண்பாடு கொண்ட, போரிடும் தன்மை கொண்ட, மத்தியகாலகட்ட ஐரோப்பியபாணி தேசியத்தை மனதில் கொண்டிருந்தார்கள் – பிஸ்மார்க், ஹிட்லர், முஸோலிலின், டிகால், முஸ்தபா கமால் பாஷா முதலியோரின் தேசியம். காந்தி அதற்கு நேர் எதிரான மையமற்ற, பன்மைத்தன்மை கொண்ட, கிராமியம் சார்ந்த தேசியத்தை உருவகித்திருந்தார். ஆகவே அவர்கள் காந்தியை தேசிய ஒருமையை அழிப்பவர், எதிர்களுடன் சமரசம்செய்பவர் என எண்ணினார்கள்.

 

இரண்டு, இந்துமகாசபை ஒரு ஷத்ரிய எழுச்சிக்காக அறைகூவியது. அந்த அறைகூவலை அவர்கள் ஆரம்பகால சுதந்திரப்போராளிகளான அரவிந்தர் திலகர் போன்றோரிடமிருந்து பெற்று அதை மூர்க்கமான ஒரு தரப்பாக ஆக்கிக்கொண்டிருந்தார்கள்.  காந்தி அனைத்து மக்களையும் ஒன்றிணைக்கும் சிரமண மக்களின் சாத்வீக,ஜனநாயக எழுச்சியை முன்வைத்தார். அதை சமண மரபில் இருந்து பெற்றுக்கொண்டார். ஆகவே அவர்கள் காந்தி போராட்ட வீரியத்தை அழித்தவர் என எண்ணினார்கள் – இப்போதும் சொல்கிறார்கள்.

இந்த முரண்பாடு கடும்கசப்பாக ஆகி பலமுறை கொலைமுயற்சிவரை சென்றிருக்கிறது. 1932 ல் காந்தி ஹரிஜன இயக்கத்தை ஆரம்பித்தபோது தொடங்கியது. 1948ல் பாகிஸ்தானுக்கு தேசிய நிதியை பங்கிட்டுக்கொடுக்கவேண்டுமென கோரியபோது முற்றியது. 1932 முதல் பலமுறை காந்திமீது கொலைமுயற்சி நடந்திருக்கிறது. 1948ல் அது வெற்றி பெற்றது. அத்தரப்பில் பலபேர் முயன்று கோட்ஸே வென்றார். 

கோட்ஸே தன்னுடைய அரசியல் நம்பிக்கையை மூர்க்கமான ஒற்றைப்படை நிலைபாடாக ஆக்கிக்கொண்டு அந்தக் கண்பட்டை வழியாக அன்றி எதையுமே பார்க்க முடியாமல் ஆனவர். அதை அவர் உணர்ச்சிகரமாக நம்பி தன் வாழ்க்கையை அர்ப்பணித்தார். ஏறத்தாழ அரசியல் வெறியர்கள் எல்லாருமே அத்தகையவர்களே. இன்றைய தீவிரவாதிகள், தற்கொலைப் படையாளிகள் எல்லாருமே அப்படித்தான். அவர்கள் மாற்றுத்தரப்பை வெறுப்பவர்கள், அழிக்க எண்ணுபவர்கள், தங்கள் தரப்பன்றி வேறெதையுமே காணமுடியாதவர்கள்.

ஆகவே தங்கள் தரப்புக்காக அவர்கள் எதையும் செய்வார்கள். சமரசம் என்பதை தோல்வி என்றே எண்ணுவார்கள். பேச்சுவார்த்தையை துரோகம் என்றே புரிந்துகொள்வார்கள். தங்கள் நம்பிக்கைக்காக எந்த நியாயத்தையும் அழிப்பார்கள் எந்த உன்னதத்தையும் உடைப்பார்கள். வரலாற்றின் பெரும்பாலான ‘தியாக தீபங்கள்’ இத்தகையவர்களே. நம்மவர்கள் என்றால் அவர்கள் தியாகதீபங்கள், மாற்றார் என்றால் கொடூரர்கள்  அவ்வளவுதான். நாம் நம் தரப்பு வன்முறையாளரை  கண்ணீர்க் கவிதைகள் வழியாக தீபமாக மாற்றுகிறோம்.

இத்தகைய முயற்சிகளே கோட்ஸே பற்றிய நாடகம் போன்றவை. காந்தியின் எதிர்ப்பாளர்கள் அத்தனை பேரும் சொல்லும் அதே குற்றச்சாட்டுதான் கோட்ஸேவுக்கும் — காந்தி எதிரிகளுடன் சமரசம் செய்துகொண்டார் என்பது. ஆகவே அவர் துரோகி என்பது. அதைத்தான் 1925 முதல் ஈ.வே.ராவும் சொன்னார். காந்தி கோட்ஸேயின் தரப்புடன் சமரசம் செய்துகொண்டார் என்று!

காந்தியின் வழியே முடிவில்லாத சமரசம்தான். முழுமையாக எதிரியை புரிந்துகொள்ளும் முயற்சியில்தான் அது ஆரம்பிக்கிறது. நாமும் நம் எதிரியும் சென்று§ற்றச் சாத்தியமான ஓர் உயர்ந்த தளத்தை அது கனவுகாண்கிறது. அதைப் புரிந்துகொண்டால் இந்த எதிர்ப்புகளை எளிதில் புரிந்துகொள்ள முடியும்.

என்னைப்பொறுத்தவரை கோட்ஸே முதல் இன்றைய தாலிபான்கள் வரையிலான அந்த ஒட்டுமொத்தத் தரப்பே இன்று காலாவதியாகிப்போன மத்தியகாலகட்டத்துக்குரிய கொள்கைகள் மற்றும் உணர்ச்சிகளினால் ஆனது. நம்மவர் செய்தாலும் நம்மிடம் பிறர் செய்தாலும் அது கொலைதான், வன்முறைதான். இது மாற்றுத்தரப்பை புரிந்துகொள்வதற்கும் ஏற்றுக்கொள்வதற்கும் ஒத்துப்போவதற்கும் மட்டுமே வழி உள்ள காலகட்டம்.

ஆகவேதான் இது காந்தியத்தின் யுகம்

ஜெ

காந்திய தேசியம் 1

காந்தியும் தலித் அரசியலும் 1

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/6330

9 comments

1 ping

Skip to comment form

 1. சங்கரன்

  அன்புள்ள ஜெயமோகன்,
  மேற்குறிப்பிட்ட நூல் கோட்சேவை பற்றியதல்ல.அது காந்தி கொலை வழக்கைப் பற்றிய முழுமையான தகவல்கள் அடங்கிய நூல் . அந்நூலில் ‘தியாக தீபம்’ காந்தியே. நான் அந்நூலை குறிப்பிட்டதன் காரணம் அதில் தான் கோட்செவைப் பற்றி முழுமையான தகவல்கள் கொடுக்கப் பட்டுள்ளது. தாங்கள் குறிப்பிட்டது போல் கோட்சே ஒரு வகையான கருத்து தீவிரவாதியே.. அகண்ட ஹிந்துஸ்தான் கனவு கண்டு அது சிதைத்தபோது மனமுடைந்து, ஹிந்து முஸ்லிம் கலவரங்கள் மூலம் காந்தியின் மீது தவறான , மூர்க்கமான வெறுப்பு கொண்டு கடைசியில் அது காந்தியை கொலை செய்வதில் முடிந்தது.

  நூல் விவரம் :தியாக தீபம், நீதியரசர் ச. மோகன், ஸ்ரீராம் (ஸ்ரீராம் நிறுவனங்கள் ) வெளியீடு .

 2. RVS_Mani

  கோட்சே பற்றி ஒரு முஸ்லிம் நண்பர் கூறியது, அவனுடைய கையில் இஸ்மாயில் என்று பச்சைகுத்தி இருந்தான். இந்து – முஸ்லிம் பிரச்சனைய துண்டவே என்றார். காந்தி படத்தில் கூட, கோட்சேவின் உடை முஸ்லிம்கள் அணியும் உடை போலவே இருந்தது. கோட்சேவின் கோர்ட் வாக்குமுலம் அப்படி இருக்காதோ என்ற சந்தேகத்தை உருவாக்கியது. அவனுள் ஒரு இந்து மத தீவிரவாதம் இருப்பதாவே தோன்றியது. உண்மையை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்.

 3. john

  மொத்தத்தில் என்ன சொல்ல வருகிறீர்கள் சார்? கோட்ஸேயை தியாக தீபமாகக் கொண்டாடுவதிலே ஒரு தப்பும் இல்லை என்றுதானே? அவனும் மற்ற தியாகிகளைப்போலத்தான் என்று இல்லையா? அரசியலில் வாழைப்பழத்தில் ஊசி என்றால் ஜேமோதான்

 4. john

  தமிழிந்து என்ற மதவெறி தளத்திலே உங்களைப் பாராட்டி கட்டுரை எழுதியிருக்கிறார் ஒருவர். உங்கள் மன மகிழ்ச்சிக்காக
  http://www.tamilhindu.com/2010/01/ezham-ulagam-review/

 5. ஜெயமோகன்

  பிதாவே என்னை ஏன் கைவிட்டீர்!!

 6. tdvel

  நீங்கள் எழுதியதையெல்லாம் நாங்கள் படிக்கும்விதமே தனி. நீங்கள் எழுதியவற்றில் அங்கங்கே இருக்கும் சில எழுத்துக்களைபொறுக்கி நாங்களே நாங்கள் எதிர்பார்க்கும் சொற்களை வாக்கியங்களை அமைத்துக்கோள்வோம். அதை உங்களுடையதில்லை என்று உங்களால் மறுக்கமுடியுமா? நீங்கள் என்ன உங்கள் பிதாவே ஒன்றும் செய்ய முடியாது..
  த.துரைவேல்

 7. srinie_er

  @ John : அட பாவிகளா, வடிவேலு சொன்ன மாதிரி ரூம் போட்டு யோசிபிங்கலோ ?

 8. த.ஜார்ஜ்

  கட்டற்ற உணர்ச்சிப் பெருக்கில் செய்யப்படும் வன்செயல்கள் ‘தியாக தீபங்களாக’ மட்டுமல்ல, இரட்சிக்கும் கதாநாயகன் அந்தஸ்துடன் கொண்டாடப்படுவதும் கண்கூடு.
  ஆனால் அதே செயல்கள் நமக்கு நேரும்போது மட்டும் ‘தீவிரவாதமாகி’ விடுகிறது.சரியாகத்தான் சொல்லியிருக்கிறீர்கள்.

  பெருவாரிகள் ஏற்றுக் கொண்டதாலே மட்டும்தான் ஒரு கருத்து உயர்வானதாக போற்றப்படுவதும் அதை குறித்து எதிர் கருத்து கொண்டிருந்தால் அவை துரோகம் என்று சித்தரிக்கப் படுவதும் இந்த மனநிலையோடுதானே.[பெருவாரி கருத்துக்கள் என்பது ஒரு சில தலைவர்களின் எண்ணத்தை அடிப்படையாகக் கொண்டதென்பது வேறு விசயம்!]
  வீரம் என்றும்,தியாகம் என்றும் போற்றப்படும் பல வரலாறுகள் உங்கள் பதிலால் கேள்விக்குறி ஆகிவிட்டது.

 9. uthamanarayanan

  எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும் எப்படி ஒரு விஷயம் சொல்லப்பட்டிருந்தாலும் தானும் படித்து ஆய்ந்து தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலே உடனே எதிர்மறையாக பேசவேண்டும் எழுதவேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து தனித்து நின்று ஒரு மனிதரையோ பிரச்சனையோ அணுக ஏதுவாகும்.கோட்செஇன் இறுதி statement கோர்ட்டில் சொல்லப்பட்டதை படித்தால் அவர் நம்பிய கோட்பாட்டில் இருந்த உறுதி தெரியும்.வாசகர்கள் அதயும் படிக்கலாம் முழுமை வேண்டுமென்றால் .
  உத்தம்

 1. காந்தி , கோட்ஸே- கடிதம்

  […] கோட்சே […]

Comments have been disabled.