நண்பர் நவீன் இந்த அறிவிப்பை அனுப்பியிருக்கிறார்
2.11.2014ல் வல்லினம் இலக்கியக்குழு முதன் முறையாக ‘வல்லினம் விருது’ வழங்கும் நிகழ்வை நடத்துகிறது. விருது தொகையாக 5000 ரிங்கிட்டுடன் அ.ரெங்கசாமி அவர்களின் ஆவணப்படம் மற்றும் அவரது வாழ்வைச்சொல்லும் நூலும் இந்நிகழ்வில் வல்லினம் குழுவினர் மூலம் வெளியீடு காண்கிறது.
இதே நிகழ்வில் இயக்குனர் லீனா மணிமேகலையும் கலந்துகொண்டு தனது ஆவணப்படங்கள் குறித்த அறிமுகத்தைச் செய்வார். அவருடன் கலந்துரையாடல் நிகழ்வும் நடைபெறும்.
வல்லினம் ஆறாவது ஆண்டாக நடத்தும் கலை இலக்கிய விழாவில் இந்த அங்கங்கள் இடம்பெறுகின்றன.
கிராண்ட் பசிப்பிக் தங்கும் விடுதியில் மதியம் 2.00 முதல் மாலை 5.00 வரை நடைபெறும் இந்நிகழ்வில் கலந்துகொள்ள முன்பதிவு அவசியம்.
அனைத்துத் தொடர்புக்கும் : ம.நவீன் 0163194522
அ.ரெங்கசாமி மலேசியாவின் மூத்த எழுத்தாளர். அவரது இமையத்தியாகம், லங்காட் நதிக்கரை என்னும் இரு நாவல்களை தமிழினி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.நினைவுச்சின்னம் என்னும் நாவல் மலேசியாவில் வெளிவந்தது
ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரான ரங்கசாமி ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக மலேசியத்தமிழிலக்கியத்தில் செயல்பட்டுவருகிறார்.இப்போது எண்பது வயதைக்கடந்துவிட்டார்.
இமையத்தியாகம் சுபாஷ் சந்திரபோஸின் வரலாற்றைப் பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்ட முதல் தமிழ்நாவல். சுபாஷ் ஜப்பானியருடன் இணைந்து இந்தியாமீது படைஎடுத்துவந்த நாட்களின் உத்வேகமிக்க நிகழ்ச்சிகளை சித்தரிக்கும் நாவல் இது. தமிழ் மக்கள் இரண்டாம் உலகப்போரின்போது அடிமைகளாக சயாம் ரயில்பணியில் ஈடுபடுத்தப்பட்ட வரலாற்றைச் சொல்லும் நினைவுச்சின்னம் நாவலும் முக்கியமானது
மூத்த படைப்பாளியான அ.ரெங்கசாமிக்கு வாழ்த்துக்கள்.