ஒருமுறை அருமனை அருகே ஒரு திருமணவீட்டுக்குச் சென்றிருந்தேன். திருமணம் முடிந்தபின் மாப்பிள்ளைவீட்டுக்கு வந்துவிட்டு வாசலில்பேசிக்கொண்டிருந்தோம். உள்ளிருந்து ஒரு பாட்டி வந்தார். தரையில் வெவ்வேறு சேலைகள் துண்டுகள் சிதறிக்கிடந்தன. பாட்டி துணிகளை அள்ளிவிட்டு கரிய சிமிண்ட் தரையில் வரையப்பட்டிருந்த பெரிய மாக்கோலத்தையும் எடுக்க முயன்றபோது எல்லாருமே சிரித்துவிட்டோம்.
‘தடுக்கிலே பாயலாம் கோலத்திலே பாயலாமா?’ என்ற பழமொழி எனக்கு அப்போதுதான் பொருள்பட்டது. பலவகையிலும் பொருள் தரும் ஓரு கவித்துவமான படிமம் அது. உருவமானவற்றை வைத்து அருவமானவற்றை வரையறைசெய்யலாமா என்று அதை சிலசமயம் எடுத்துக்கொள்வேன். தடுக்கிலே பாய்ந்தால் பின்னர் கோலத்தில்தானே பாய்ந்தாகவேண்டும்?
மிதமிஞ்சி அருவத்திற்குள் ஊடுருவுவதை நடைமுறை விவேகத்துடன் கண்டிக்கும் இந்தப் பழமொழி செல்லுபடியாகாத ஓர் இடமுண்டு, இலக்கியம். இங்கே கோலத்திற்குள் மட்டுமல்லாமல் கோலத்தின் புள்ளிகளுக்குளும் பாய்ந்தால்மட்டுமே இலக்கிய அனுபவம் பூர்ணமாகும். சாதாரணமாக ஒரு வாசகன் இலக்கியப்படைப்பில் தான் வாசித்தவற்றைப் பற்றிச் சொல்ல வந்தாலே கேட்கப்படும் மூன்று கேள்விகள் உண்டு .1. இதையெல்லாம் அந்த எழுத்தாளன் உத்தேசித்திருப்பானா? 2. இதுக்கெல்லாம் அந்த எழுத்திலே இடமிருக்கா 3. இது எனக்கு ஏன் தோணல்லை?
மூன்றுமே இலக்கியத்தை சரிவர உள்வாங்கத் தடையாகும் வினாக்கள். எழுத்தாளன் எதையுமே உத்தேசித்திருக்க வேண்டியதில்லை. அவன் அளிப்பது ஓர் அனுபவத்தை. அந்த அனுபவத்தை நான் பொருள்கொள்வதுபோலத்தான் அவனும் பொருள்கொள்ளவேண்டும் என என்ன கட்டாயம்? அவன் படைப்பில் உருவாக்குவது சில பண்பாட்டுக் குறிப்புகளை.
நான் அந்தப்பண்பாட்டுக் குறிப்புகளை உள்வாங்கும் என் ஆழ்மனத்தின் உதவியால் ஒரு வாழ்வனுபவத்தை அடைகிறேன். அந்த எழுத்தாளனுக்கும் எனக்கும் இடையெ உள்ள அந்த பண்பாட்டுக்குறிப்புகள் பொதுவானவை. அவற்றுக்கு நானும் அவனும் அளிக்கும் அர்த்தங்கள் பலவகையில் மாறுபடலாம். பண்பாட்டுக் குறிப்புகள் படைப்பில் படிமங்களாக, குறியீடுகளாக, குறிகளாக உள்ளன. அவற்றை வாசகன் தான் அர்த்தம் செய்துகொள்ள வேண்டும்.
அந்த அர்த்தம் எல்லா வாசகர்களுக்கும் ஒன்றல்ல. அவை அவ்வாசகரின் நுண்ணுணர்வு அனுபவதளம் அவர் கொண்ட வாசிப்புமனநிலை ஆகியவற்றை பொறுத்து மாறுபடுகின்றன.
ஆகவே இலக்கிய ஆக்கங்களைப் பற்றி பேசுவது முக்கியமானது. பிழையான பேச்சு என ஏதுமில்லை, உண்மையாக பேசியிருந்தால். எல்லா வாசிப்புகளும் முக்கியமானவையே. அவற்றைப் பகிர்ந்துகொண்டு முரண்பட்டு வாசிப்பது வழியாக நாம் படைப்புகளை நோக்கி நெருங்கிச் செல்கிறோம்.
அதீத வாசிப்பு என்று ஒன்று உண்டா? என் நோக்கில் அப்படி இருந்தால்கூட அது தேவையானதே. குறைந்த வாசிப்பு என்பதைவிட அது பயன் தருவதே. ஏனென்றால் ஒரு இலக்கிய ஆக்கம் என்பது நுண்மையான பண்பாட்டுக் குறியீடுகளால் ஆனது. அவை நம் ஆழ்மனத்துடன் பேசுபவை. அவற்றை வைத்து நாம் செல்லும் தூரம் முழுக்க நம் ஆழ்மனத்துள் செல்லும் பயணம் தான்
எஸ்.ராமகிருஷ்ணனின் கதைகளை வைத்து ‘பைத்தியக்காரன்’ என்னும் வலைப்பதிவர் எழுதியுள்ள விமர்சனமும் எதிர்வினைகளும் இவ்வெண்ணத்தை உருவாக்கின.
http://naayakan.blogspot.com/2010/01/blog-post.html
1 comment
1 ping
Dondu1946
June 21, 2010 at 6:31 pm (UTC 5.5) Link to this comment
நண்பர்களுக்குள் கடன், உறவினரிடம் கடன் வாங்குவது ஆகியவை எப்போதுமே சிக்கல் அளிக்கக் கூடியவை. இது பற்றி கு.ப.ராஜகோபாலனும் ஒரு அருமையான கதையை எழுதியுள்ளார், டைட்டில் மறந்து விட்டது.
தங்கையின் கணவருக்கு கொடுத்த கடனுக்காக அவர் வீட்டை ஜப்தி செய்ய, தங்கை அதானால் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் விழ, அவள் மரணத்தின் விளிம்பில் இருக்கையில் கணவரும் தமையனும் ஒற்றுமையாவதை குறிப்பிட்டிருப்பார்.
ஆனால் பல தருணங்களில் நண்பனிடம் அதீதமான அளவில் கடன் வாங்கி, அதை திருப்பித் தர வக்கில்லாமல் அதே நண்பனின் முதுகில் குத்துவதும் நடக்கிறது. அதுவும் பைத்தியக்காரனின் இப்பதிவை படிக்கும்போது அதுதான் முக்கியமாக நினைவுக்கு வந்து தொலைக்கிறது.
பார்க்க, எனது இப்பதிவின் பின்சேர்க்கையை: http://dondu.blogspot.com/2010/06/blog-post_03.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
Paithiyakkaaran on S Ramakrishnan Short Story collection: Tamil Fiction Reviews « Tamil Archives
July 7, 2012 at 12:30 am (UTC 5.5) Link to this comment
[…] http://www.jeyamohan.in/?p=6321 […]