யானைடாக்டரும் யானைகளும்

ஜெ

சிலநாட்களுக்கு முன் ஒரு புத்தகம் படித்தேன். அது ஒரு கானியல் நிபுணர் எழுதியது -as he claims. அதில் யானைடாக்டர் கதையை கண்டபடி வசைபாடியிருந்தார். யானையெல்லாம் ஒருபோதும் அதில் வருவதுபோல ஆட்களை நினைவில் வைத்திருக்காது, ‘சிகிழ்ச்சை’க்காகத் தேடிவராது, அதெல்லாம் வெறும் கற்பனை என்றும் மக்களை முட்டாளடிக்கும் புராணம் என்றும் எழுதியிருந்தார். சரமாரியாக வசை

இந்துவில் இந்தக்கட்டுரையை வாசித்தால் யானைடாக்டர் கதைக்கு பெரிய ஆதாரங்களை தருவதுபோல இருக்கிறது. யானையின் புத்திசாலித்தனம் இன்னும் அதிகம் என்று சொல்வதுபோல தோன்றுகிறது. எது உண்மையான அறிவியல் என்று தெரியவில்லை

ராமகிருஷ்ணன்

130917-dog-elephant1
அன்புள்ள ராமகிருஷ்ணன்,

முதலில் உண்மையான அறிவியலாளரை கண்டுபிடிப்பது மிக எளிது. முதல் ஆதாரம் அவரது மொழிநடை. அது எப்போதும் புறவயமானதாக இருக்கும். சமநிலைகொண்டதாக இருக்கும். தரவுகளின் அடிப்படையில் மட்டுமே பேசும். ஒருபோதும் எளியமுடிவுகளை ஓங்கிச்சொல்லாது. தன் தரப்புக்காக மூர்க்கமாக வாதிடாது. மாற்றுக்கருத்துக்களுக்கான இடத்தை அளிக்கும். தன் தரப்பு மறுக்கப்படும் இடங்களைச் சுட்டிக்காட்டும்.

நம்மிடம் இயற்கையைப்பற்றி எழுதுபவர்களில் அறிவியல்நோக்கம் கொண்டவர்கள் மிகமிகக் குறைவு. நேற்று கானியலாளர் என்ற பேரில் ஓர் ஆசாமி எழுதியிருந்ததை வாசித்தேன். இந்தியாவில் காடு அழிய பார்ப்பனியம் தான் முதல் காரணம் என்கிறார். இந்த கருமாந்தரங்களை வாசிக்காமலிருப்பதே நுண்ணுணர்வுள்ளவர்கள் செய்யும் காரியம்

பொதுவாக மிருகங்களின் மனம் என்பது அறிவியலாளர்களுக்கு பெரும் புதிராகவே இருந்துள்ளது. நாம் எப்படி விண்வெளியைப்பற்றி, வேற்றுகிரக உயிர்களைப்பற்றி எதையும் அறுதியிட்டுச் சொல்லமுடியாதோ அதைப்போலத்தான் மிருகங்களின் மனம் பற்றியும் சொல்லிவிடமுடியாது
300px-Jane_Goodall_HK
சென்ற ஒருநூற்றாண்டாக டார்வினின் பரிணாமவியல் மிருகங்களைப்பற்றிய ஆய்வில் பெரும்செல்வாக்கு செலுத்தியது. மிருகங்களின் அனைத்து இயல்புகளும் இயற்கையுடனும் சக உயிர்களுடனும் போட்டியிட்டு தங்கிவாழ்தலின் பொருட்டு மட்டுமே உருவானவை என்ற எளிய கோட்பாடு அனைத்தையும் தீர்மானித்தது. ஆகவே விலங்குகளின் மனம், உள்ளுணர்வு, சமூகப்பண்புகள் ஆகியவற்றைப்பற்றிய பேச்சுகள் வெற்றுக்கற்பனைகளாகக் கருதப்பட்டன

ஜேன் குடால் போன்ற முன்னோடி ஆய்வாளர்கள் அந்த முன்முடிவுகளை உடைத்தவர்கள். மிருகங்களுடன் தங்கி வாழ்ந்து உருவாக்கப்பட்ட மிகச்சிறப்பான பல ஆய்வுகள் வெளிவந்து டார்வினிய இறுக்கத்தை மெல்லமெல்ல இல்லாமலாக்கின. அதன்பின் நுண்ஒளிப்பதிவுக்கருவிகள் வந்தன. அவை இரவும்பகலும் மிருகங்களைப் பதிவுசெய்ய ஆரம்பித்தன. விளைவாக பழைய கொள்கைகள் எல்லாம் தகர்ந்துகொண்டே இருக்கின்றன

இன்று அதியற்புதமான பலநூல்கள் இத்தளத்தில் வாசிக்கக் கிடைக்கின்றன. டார்வினின் பரிணாமக்கொள்கையையே விலங்குகளின் நுண்ணுணர்வு மற்றும் சிந்தனைத்திறனை விளக்கும்முகமாக விரிவாக்கிக்கொண்டே செல்கிறார்கள். நான் இப்போது என் மேஜைமுன் Sean Caroll எழுதிய Remarkable Creatures என்ற நூலை வைத்திருக்கிறேன். இயற்கையைப்பற்றிய நம் புரிதலை ஒட்டுமொத்தமாக மாற்றியமைக்கும் நூல் இது

யானைகளைப்பற்றி Elephant Whisperer என்ற அருமையான நூல். யானைடாக்டருக்கு அதைவிடப்பெரிய ஆதாரமேதும் தேவையில்லை.

download

ஆனால் ஒன்றுண்டு, புனைவுகள் எப்போதுமே இந்த அறிவியல் ஆய்வுகளின் நிரூபண எல்லைக்குள் நிற்பவை அல்ல. அறிவியல் நிரூபித்துவிட்ட விஷயங்களை அவை பெரும்பாலும் பொருட்படுத்துவதில்லை.அவை அறிவியலின் மங்கலான பகுதியையே கவனிக்கின்றன. அவற்றை கற்பனைமூலம் வளர்க்கின்றன.

ஓயாமல் பறக்கும்தட்டுகளும் வேற்றுகிரக மனிதர்களும் புனைவில் வருவது இதனால்தான். கார்ல் சகன் போன்ற அறிவியலாளர்களும் அதையே எழுதியிருக்கிறார்கள்.கார்ல் சகனின் புரோகாஸ் பிரெயின் என்ற நூலில் ஒரு கட்டுரை Mystery mongers and night walkers இதைப்பற்றிப்பேசுகிறது.

நேற்று புனைவு சென்று தொட்ட மிருகங்களின் உலகை இன்று அறிவியலே விளக்கிவிட்டதனால் புனைவு நாளை மேலும் முன்னகர்ந்தே செல்லும். கற்பனையைக் கொண்டு இன்னும் புதிய சாத்தியங்களை அறியமுயலும்

ஏனென்றால் எழுத்து ‘யதார்த்தத்தை’ சொல்ல முயலாது. யதார்த்தம் குறியீடாக விரியும் இடமே அதற்கு முக்கியம். இலக்கியத்தின் இந்த தனித்தபாதையை உண்மையான அறிவியலாளன் புரிந்துகொள்வான். ஐன்ஸ்டீனுக்கோ ரோஜர் பென்ரோஸுக்கோ சொல்லிக்கொடுக்கவேண்டியதில்லை. நம்மூரில் ஒரு பெரிய துரதிருஷ்டம் எந்தத்துறையிலும் அரைவேக்காடுகளையே அதிகம் காண்கிறோம். அவர்களுக்குச் சொல்லிப்புரியவைப்பதற்குப்பதில் பேசாமலிருக்கலாம்

ஜெ

இன்னொரு யானைடாக்டர்

யானைகளும் சீமைக்கருவேலமும்

காட்டைவெல்வது

யானை ஒருகடிதம்

மிருகங்களின் உணர்வுகள்

யான ஒருகடிதம்

ஆப்ரிக்க யானைடாக்டர்

யானைடாக்டர் ஒரு கட்டுரை

யானை கடிதம்

யானைடாக்டர் நினைவுகூரல்

முந்தைய கட்டுரைஉடலின் முழுமை
அடுத்த கட்டுரைஒரு தனிப்பட்ட விண்ணப்பம்