பாரத தரிசனம்

watchers__tower_by_narholt-d5yrqux (1)

அன்புள்ள ஜெ சார்

மழைப்பாடல் நாவலை இன்றுதான் வாசித்துமுடித்தேன். பிரம்மாண்டம். மிகநுட்பமாக ஒவ்வொரு அத்தியாயமும் அமைந்திருந்தாலும் ஒவ்வொன்றும் தனியாக நிற்காமல் ஒன்றுடன் ஒன்று சரியாக இணைந்து விரிந்து ஒரு மாபெரும் கதையாக ஆகி நின்றிருப்பதை வியக்காமல் இருக்கமுடியவில்லை. வெறுமே கதையாக வாசிக்காமல் கவித்துவமாக அதை வாசிக்கவும் எல்லா அத்தியாயங்களும் இடம் அளிக்கின்றன

மழைப்பாடலின் மிகப்பெரிய அழகே அது அளிக்கும் பிரம்மாண்டமான landscape சித்திரம்தான். முதலில் மழையில்லாத அஸ்தினபுரி. அதன்பிறகு பாலைவனம். பலபக்கங்களாக நீண்டுசெல்லும் பாலைவன வர்ணனை பெரிய ஒரு கனவை உருவாக்குகிறது. நாம் பாலைவனத்திலேயே வாழ்வது போலத் தோன்றவைக்கிறது. இனி வேறு ஒரு நிலத்தை கற்பனையிலே உருவாக்கமுடியாதபடி அப்படியே அந்த சிவந்த பாலைமண்ணிலே ஆழமுடிகிறது

அதன்பின் குந்தி வாழும் மழைப்பகுதி. அதைவாசிக்கும்போது பாலைவனம் மறந்தே போகிறது. ஈரத்திலேயே வாழ்வதுபோலத் தோன்றுகிறது. அதன்பிறகு அஸ்தினபுரியில் வரும் அந்தவெள்ளம். அந்த சேறு. கதாபாத்திரங்களும் கதையுமெல்லாம் கூட இரண்டாவது விஷயம்தான். நிலம்தான் முக்கியம் என்ற எண்ணம் வந்துகொண்டே இருந்தது. வாசிக்க வாசிக்க பழைய இந்தியாவிலே வாழ்ந்துகொண்டே இருப்பதுபோன்ற அனுபவம்

அதன்பின்னர் சதசிருங்கம். அங்கே செல்லும் பாதையில் உள்ள அந்த கற்பனை அம்சம். உறுமும் மலை. கந்தகச் சமவெளி. சதசிருங்கத்தின் அழகை என்னவென்று சொல்வது. கண்ணிலே இருக்கிறது அந்த நிலம். ஒரு புத்தகம் வழியாக இந்தியாவையே பார்த்துவிடமுடியும் என்றால் அது மழைப்பாடல்தான்

அர்ஜுனன் பிறக்கும் அந்த மலைச்சமவெளி ஒரு கனவு. அதேபோல கங்கை. கங்கையின் எத்தனை முகங்கள். அதோடு சிந்து. திரும்பத்திரும்ப கங்கையும் சிந்துவும் துணைநதிகளும் வந்தாலும் ஒருமுறைகூட வர்ணனை திரும்ப வரவில்லை. பாய்கள் விரிவதைப்பற்றியே நூற்றுக்கணக்கான வர்ணனைகள்.

மழைப்பாடல் போன்ற நூலை வாசிப்பவர்கள் அதன் நிலம் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்திருக்கிறார்களா என்றே தெரியவில்லை. போகிறபோக்கில் கதையை வாசித்துக்கொண்டு போய்விடுவார்கள். ஆனால் பாரதத்தை பாரத மண்ணிலிருந்து பிரிக்கமுடியாது என்று காட்டுகிரது வெண்முரசு. பாரதத்தின் அத்தனை பகுதிகலையும் சொல்லிவிடமுடியும் என்று காட்டுகிறது

வெண்முரசு என்பது பாரத தரிசனமேதான்

சிவம்

indraprastha_by_ballerin_na-d5i31jx
அன்புள்ள சிவம்,

பாரதத்தை அல்ல , பாரதம் என்ற அழியாத கனவை எழுதுகிறேன்.எழுத்தாளன் எழுத விரும்புவது நிஜத்தை அல்ல. இலட்சியத்தை. உலகமெங்கும் உண்மையில் உள்ள இயற்கை அளவுக்கே பெரியது எழுத்தாளர்களும் கவிஞர்களும் உருவாக்கிய இயற்கை.

ஆனால் பாரதம் முழுக்க அலைந்து அக்கனவின் எச்சங்களை கண்டு என் கனவில் விதைகளாக நிறைத்திருக்கிறேன். அவற்றை என் கற்பனையால் முளைக்கவைத்துக்காடாக் ஆக்குகிறேன்

ஜெ

வெண்முரசு நாவல் தொடர்பான அனைத்து விவாதங்களும்

மழையின் இசையும் மழையின் ஓவியமும் மழைப்பாடல் பற்றி கேசவமணி


வியாசமனம் முதற்கனல் பற்றி மரபின் மைந்தன்

முந்தைய கட்டுரைஅஞ்சலி : ராஜம் கிருஷ்ணன்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 4