அன்புள்ள ஜெ சார்
மழைப்பாடல், வண்ணக்கடல் இரண்டையும் ஒரே மூச்சாக வாசித்துமுடித்தேன். ஏற்கனவே நான் தொடராக வாசித்திருக்கிறேன். மழைப்பாடல் புத்தகம் கிடைத்தபோது அதை வாசித்து அதே சூட்டில் நிறுத்தாமல் வண்ணக்கடலையும் வாசித்தேன்
இருநாவல்களிலும் நகரங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. அஸ்தினபுரம் அழுத்தமாக முன்னாடியே வந்துவிட்டது. அஸ்தினபுரத்தின் அத்தை டீடெய்ல்களும் இப்போது எனக்கே தெரியும் .ஒரு நல்ல வரைபடம் தயாரிப்பேன் [நான் ஒரு சிவில் எஞ்சீனியர்]
அதன்பிறகு நகரங்கள் வந்துகொண்டே இருந்தன. சிபி நாட்டு தலைநகரம் விசித்திரமானது. பாறைகளை வெட்டித்துளைத்து கட்டிடங்களாக ஆக்கியிருந்தனர். வெனிஸ் போல படகுகள் நகரத்துக்குள் ஓடுவது பாஞ்சாலனின் தலைநகரம். சிகண்டி அங்கே செல்கிறான்
அதன்பிறகு நகரங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. சிப்பி ஓடுகள் வேய்ந்த மூதூர் மதுரை. காவேரியின் கடல் அழிமுகத்தில் இருந்த புகார். அதன் மங்குரோவ் காடுகள். பிறைவடிவமான காஞ்சிபுரம். கல்லாலேயே கட்டப்பட்ட கூரைகொண்ட விஜயபுரி. பிரம்மாண்டமான உலோகக்கூரைகள் போட்ட ராஜமகேந்திரபுரி…சொல்லிக்கொண்டே போகலாம்
ஒவ்வொரு நகரமும் பிரம்மாண்டம். அதேசமயம் வர்ணனைகளிலோ டீடெய்ல்களிலோ திரும்பத்திரும்பச் சொல்வதே இல்லை. ஓவ்வொரு நகரமும் ஒருவகை. காட்சிக்கும் சரி. அங்குள்ள வாழ்க்கையும் சரி
நகரங்களை மட்டுமல்லாமல் அங்கே வாழும் மக்களைச் சொல்கிறீர்கள். ஒவ்வொரு நகரத்திலும் சந்தையில் என்னென்ன விற்கப்பட்டது என்ற வர்ணனை விரிவாக இருக்கிறது. அது அந்த நகரத்தின் எகனாமிக்ஸையே சொன்னதுபோல இருக்கிறது
மழைப்பாடலில் ஆரியவர்த்தம் வர்ணிக்கப்படுகிறது. வண்ணக்கடலில் பாரதவர்ஷம் வர்ணிக்கப்படுகிறது .இந்த வேறுபாடுதான் பிரமிக்கவைக்கிறது. பாரதத்தையே கண்முன்னால் பார்த்த அனுபவம்
ஆனால் இத்தனை நகர வர்ணனையும் விரிந்து விரிந்துபோய் மண்ணில் மறைந்த அதிபிரம்மாண்டமான நகரங்களான மாகிஷ்மதியையும் பிற அசுரநாடுகளையும் காட்டுவதற்காகத்தான் என்பது அபாரமான இலக்கிய உத்தி.
அதிலும் சொல்லிச் சொல்லி போய் சொல்லவே முடியாத ஒரு அதிபிரம்மாண்டமான நகரம் மண்ணுக்குள் கிடக்கிறது என்று சொல்லி இளநாகன் அங்கேதான் போகிறான் என்று முடிப்பது கற்பனையை அப்படியே வானத்துக்குக் கொண்டுபோயிற்று
ஆனால் பிறகு யோசிக்கும்போது அது தத்துவார்த்தமாகவும் அர்த்தமாகியது. பார்த்த நகரங்கள் பார்க்காத ஒரு பெரிய நகரத்தின் துளிகள்தான் என்பது எவ்வளவுபெரிய விஷன்
நீங்கள் இனிமேல்தான் இந்திரபிரஸ்தம் பற்றிச் சொல்லப்போகிறீர்கள். அதைச் சொல்வதற்கான prelude ஆகத்தான் இத்தனை நகரங்களைச் சொல்லியிருக்கிறீர்கள் என்று ஊகிக்கிறேன்
நம்முடைய பழைய காவியங்கள் எல்லாமே நகரவர்ணனையை கண்டிப்பாக முன்வைக்கின்றன. இலக்கணம் அப்படிச் சொல்கிறது. ஒரு காவியமாக வெண்முரசு ஆகிறது இத்தகைய அற்புதமான வர்ணனைகள்வழியாகத்தான்
அன்புள்ள சிவராஜ்
நகரங்கள் என்பவை மனிதர்களின் கூட்டான படைப்பூக்கத்தின் தூல வடிவங்கள். ஒரு காலகட்டத்தை, ஒரு சமூகத்தை ஒருநகரத்தின் ஒரு காட்சிப்படிமமே காட்டிவிடும். ஆகவே நகரவர்ணனை எல்லா நாவலாசிரியர்களுக்கும் உகந்ததே. தல்ஸ்தோய் அதில் மாஸ்டர். காவிய ஆசிரியர்களும் அப்படித்தான் இருந்திருக்கிறார்கள்
ஜெ
வெண்முரசு நாவல் தொடர்பான அனைத்து விவாதங்களும்