சென்னை, மூன்று சந்திப்புகள்

சென்னைக்கு செல்வதற்கு மிகவும் பொருத்தமான ரயில் கன்யாகுமரி எக்ஸ்பிரஸ். ஆனால் அதில் எல்லா இடங்களும் பிப்ரவரி முதல்வாரம் வரை முன்பதிவுசெய்யபட்டிருந்தன. எல்லா ரயில் இருக்கைகளும், படுக்கைகளும், சொகுசுப் பேருந்துகளில் சாய்விருக்கைகளும், அரசுப்பேருந்துகளின் குத்திருக்கைகளும் எல்லாமே நிறைவு. ‘அதுவும்பூரணம் இதுவும் பூரணம்’. ஏராளமானவர்கள் பதிவை ரத்துசெய்துகொண்டும் இருந்தார்கள். ஆனால் ‘பூரணத்தில் இருந்து பூரணம் விலகியபின்னரும் பூரணமே எஞ்சியிருந்தது’

ஆனால் தேடிக்கொண்டேபோன பயணநிறுவனப் பெண் அலறினார் ”சார், பதினஞ்சிலே ஏஸி சீட் இருக்கு” ”போடு” என்று கூவினேன். கையை வைப்பதற்குள் இருக்கையை வேறு கழுகு கொண்டுபோன அனுபவம் ஏற்கனவே உண்டு. அது சென்னைக்கு சிறப்பு ரயில். பொங்கல் செரிப்பதற்குள் ரயிலேற மக்கள் விரும்பாததனால் அதில் ஏஸி இருக்கைகள் சில மிச்சமிருந்தன. சென்ற ஜனவரி 15 அன்று மதியம் ஒன்றரை மணிக்குக் கிளம்பினேன். ஆனால் என்னுடைய ஏஸி மூன்றடுக்கு இருக்கையை ஏஸி இரண்டடுக்கு மாற்றிவிட்டிருந்தார்கள். உள்ளே அமர்ந்து எதிரே இருந்த வழுக்கையரைப் பார்த்து புன்னகைசெய்தேன்.  

வழக்கமான நேரப்படி சென்னைக்கு பன்னிரண்டரை மணிநேரம் பயணம் செய்ய வேண்டும். மறுநாள் இரவு இரண்டரை மணிக்கு சென்னைக்குச் சென்று சேரும் என்று சீட்டில் போட்டிருந்தார்கள். ஒருவழுக்கைத்தலையர் யாரிடமோ ·போனில் ”ஏ ஆமா ரெண்டரைக்கு…முஜீபூ..ரெண்டைரைடா…வந்திரு..ஆமா ரெண்டரை” என்றார். நான் அவர் செல்லை அணைத்ததும் ”சார், இது ஸ்பெஷல் டிரெயின். மத்த எல்லா ரயிலுக்கும் வழிய விட்டுத்தான் போகும். எப்டியும் ரெண்டுமணிநேரம் லேட்டாயிடும்..அனேகமா காலம்ப்ற நாலு நாலரைக்குத்தான் போயிச்சேரும்.. முஜீபை எதுக்கு நடுராத்திரியிலே பனியிலே வரச்சொல்றீங்க? ”என்றேன். அவர் ”அப்டியா சொல்றீங்க?” என்றபின் மீண்டும் செல்லை அழுத்தி பேசும்போதே சிந்தனை செய்து ”ஏ முஜீபு நீ ஒரு மூணு…ஏ மூணரைக்கு வந்திருடே” என்றபின் என்னைப்பார்த்து புன்னகைத்தார்.

நான் உடனே படுத்து நன்றாகத் தூங்கினேன். முந்தைய நாள் முற்றாகவே நான் தூங்கியிருக்கவில்லை. நன்றாக தூங்குவதற்காக தலையில் ‘குளூக்க’ எண்ணை தேய்த்து குளித்திருந்தேன். ஆகவே ரயில் கிளம்புவதற்குள்ளேயே எனக்குக் கனவுகள் வர ஆரம்பித்திருந்தன. வழுக்கையர் என்னிடம் தயங்கி மேல் படுக்கையை மாற்றிக்கொள்ளலாமா என்றார். நான் மேல்படுக்கையை அவரிடம் கேட்பதாக இருந்தேன்  என்றேன். புன்னகைத்துக்கொண்டிருக்கும்போதே அவருக்கு செல் அழைப்பு ”ஏ? முஜீபு ஆமா மூணரை…மூணரை…நீ ஒரு மூணுக்கே வந்திருடே…எளவு முன்னாடி வந்திரப்போவுது”

மேலே ஏறி போர்த்திக்கொண்டு ஆழ்ந்து தூங்கினேன். ஏழரை மணிக்கு எழுந்தேன். கையோடு எடுத்துவந்த புத்தகங்களை வாசிக்க ஆரம்பித்தேன். கிழக்கு வெளியீடான  எம்.ஜி.தேவசகாயம் எழுதிய  ‘ஜெ.பி.யின் சிறைவாசம்’ ஒன்று.  இன்னொன்று ஜெ.ராம்கி மொழியாக்கம். விகடன் வெளியீடான ‘தலாய் லாமா’ .ப.முருகானந்தம் எழுதியது.

இரவு பத்துமணிக்கு மீண்டும் தூங்கிவிட்டேன். ரயில் வெளியூர் நாய் உள்ளூர் நாய்களுக்கெல்லாம் பவ்யமாக வழிவிட்ட்டு நிற்பதுபோல வாலை கவைக்கிடையில் போட்டு தலைதாழ்த்தி அரைமணிநேரம் முதல் இரண்டுமணிநேரம் வரை கிடந்து நகர்ந்தது. தூங்கி விழித்தபோது தாம்பரம் தாண்டிவிட்டது என்றார்கள். ”நேரமென்ன?” என்று கேட்டேன். ”அஞ்சரை சார். ஆறுமணிக்குள்ள போயிடும்..” நான் முஜீபை நினைத்து வருந்தினேன். அவருக்கு எப்படியும் சளி பிடித்திருக்கும்.

நான் அன்புவுக்கு குறுஞ்செய்தி அளித்தேன். அவர் தன் பைக்கில் ரயில்நிலையம் வந்திருந்தார். சென்னையில் அந்த அளவுக்கு பனி இருந்தது ஆச்சரியமாக இருந்தது. அன்புவின் வழுக்கை ஹெல்மெட் மாதிரியே இருக்கும். ஹெல்மெட் போட்டுப்போட்டு உருவானது. பனிக்காலத்தில் மட்டும் அவர் ஹெல்மெட்டை ரசிக்கக் கூடும் என்று பட்டது. வழக்கமான ஓட்டலின் வழக்கமான அறை. உள்ளே போனதுமே அன்பு ஏஸியைக் குறைத்து வைத்தார். டீக்குச் சொன்னேன்.

அன்பு அன்று விடுப்பு போட்டுவிட்டிருந்தார். கொஞ்ச நேரத்தில் இன்னொரு வழுக்கைநண்பரான கெ.பி.வினோத் வந்தார். அமெரிக்காவில் இருந்து ‘அர்த்தபூர்வமாக’ திரும்பி வந்த நண்பர்களில் ஒருவர். வந்ததுமே இலக்கியத்திலும் இசையிலும் குதித்தார். அமெரிக்க நினைவை முற்றாக விலக்கி விட்டார். இப்போது இசை வெறி. எனக்குத்தெரிந்து மிகக்குறுகிய காலத்தில் கர்நாடக இசைக்குள் நுழைந்தவர்களில் ஒருவர். இரண்டு மாதங்களுக்குள் நூறு ராகங்கள் வரை துல்லியமாக அடையாளம் கண்டு கேட்கப் பழகிவிட்டிருந்தார். அவரது நுண்ணுணர்வு செவிசார்ந்தது என்பதே காரணம். யார் பேசுவதையும் பேச்சு போலவே திருப்பிச் சொல்ல அவரால் முடியும்.

ஒன்பது மணிக்கு சுகாவிடம் பேசினேன். ‘படித்துறை’ படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இணைப்புக்கான சில துண்டுகள் மிச்சம். பாலு மகேந்திராவைச் சென்று பார்க்க வேண்டும் என்றேன். ‘நீங்கள் வாருங்கள் நான் அங்கே இருக்கிறேன்’ என்றார். நானும் அன்புவும் வினோத்தும் காரில் சாலிக்கிராமத்தில் பாலு மகேந்திராவின் வீட்டுக்குச் சென்றோம். என்னிடம் புதிய நூல்கள் பிரதி இல்லை. பாலுவுக்கு ‘அனல்காற்று’ சமர்ப்பணம் செய்திருந்தேன். ஒரு பிரதி கொடுக்க விரும்பினேன். அன்பு தமிழினி அலுவலகம்போய் எடுத்துவர நேரமில்லை. ஆகவே அவருடைய சொந்தப் பிரதியை எடுத்து வந்தார்.

 

பாலு காலையில் உற்சாகமாக இருந்தார். அவரது சினிமாக் குருகுலம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. சென்றமுறை சந்திக்கும்போதிருந்த மெல்லிய சோர்வு சுத்தமாக இல்லை. இளைஞர்களின் அருகாமையே காரணம். கற்றுக்கொடுக்கும்போதே ஆசிரியர்கள் புத்துணர்ச்சி பெறுகிறார்கள். வழக்கமாக பாலுவின் அலுவலகத்தில் நல்ல கருப்பு டீ கிடைக்கும். பொங்கல் விடுமுறையானதனால் வழக்கமான டீயை ஒருவர் வாங்கிவந்தார்.

மிக உற்சாகமாகப் பேசிக்கொண்டிருந்தோம்.  ”நான் சினிமாவைச் சொல்லிக்குடுக்கிறன் என்பதெல்லாம் ஒரு பேச்சுக்குத்தான்…இந்தப்பிளைகளோட சேந்து நானும் படிச்சுகிட்டு இருக்கிறன்” என்றார் பாலு.  சினிமாவும் இலக்கியமும் மாறி மாறி ஊசலாடும் உரையாடல் எங்களுடையது. அனல்காற்றை பிரித்து சமர்ப்பணத்தைப் பார்த்துவிட்டு ”ஐயம் ஹானர்ட்” என்றார். ”இல்லை சார்…எனக்குத்தான் பெருமை” என்றேன்.

இலங்கையில் அவரது இளமைப்பருவ அனுபவங்களைப்பற்றி பாலு உற்சாகமாகச் சொன்னார். பல விஷயங்களை அவர் ஹாலிவிட்டில் இருந்திருந்தால் சென்ஸாருக்கு பயமில்லாமல் படமாக்கியிருப்பார். குறிப்பாக அந்த ஆள்மாறாட்டக் கதை.  

பதினொருமணிக்கு அவருக்கு வேறு ஒரு சந்திப்பு. பதினொன்றரை ஆகிவிட்டது.  அவர் செல்பேசியில் கூப்பிட்டுக்கொண்டே இருந்தார். ஆகவே நாங்கள் எழுந்துகொண்டோம். வெளியே வந்து வழியனுப்பி வைத்து ”மறுமுறை சென்னை வர்ரப்ப சொல்லுங்க” என்றார் ”கண்டிப்பா சார்” என்று விடைபெற்றுக்கொண்டேன்.

 

நேராக ஜெயகாந்தன் வீட்டுக்குச் சென்றோம். ஜெயகாந்தன் ஏற்கனவே குடியிருந்த அவரது வீடு இடிக்கப்பட்டு அடுக்குமாடியாகிறது. ஆகவே அருகிலேயே ஒரு வாடகைவீட்டில் குடியிருந்தார். உள்ளே சென்றபோது அவரது கடைசிமகள் தீபாவின் [ தீபா வலைப்பூ எழுதுகிறார்] குழந்தையுடன் விளையாடிக்கொண்டிருந்தார். பையன் உற்சாகமாக ஜெயகாந்தனுக்கு உலகத்தைச் சுட்டிக்காட்டி விளக்கிக்கொண்டிருந்தான்.

ஜெயகாந்தனுக்கு ‘இன்றைய காந்தி’ நூலைக் கொடுத்தேன். அவர் அதைப்புரட்டி பார்த்தார். கொஞ்சம் பலவீனமாக இருப்பதுபோலத்தான் எனக்குப்பட்டது. ஆனால் முன்பிருந்ததை விட பரவாயில்லை என்றார் அன்பு. ”என்ன மாதிரி புஸ்தகம்?” என்றார். ”காந்தியைப்பத்தி நம்ம நாட்டிலே இளைஞர்கள்கிட்ட பலவிதமான அபிப்பிராயங்கள் இருக்கு….அவங்களோட சந்தேகங்களுக்கெல்லாம் பதில் சொல்றமாதிரியான புஸ்தகம்” என்றேன்

”அபிப்பிராயம் இல்லாம இருக்கிறதேகூட ஒரு அபிப்பிராயம் தானே” என்று சொல்லி புரட்டிக்கொண்டே இருந்தார். அதிகமாகப் பேச முடியவில்லை. மன எழுச்சி காரணமாக மூச்சுத்திணறுவதுபோலப் பட்டது. ”நண்பர்கள் பார்க்க வருகிறார்களா:?” என்றேன் ”வர்ராங்க…முன்ன மாதிரி அதுக்கான எடம் இல்லையே” என்றார். அருகே ஒரு பூங்கா இருக்கிறது. அங்கேதான் சாயங்காலத்தில் சிறிய ‘சபை’ கூடுகிறது என்றார். போகலாம் என்று சுகா கண்ணைக் காட்டினார். ‘கிளம்புகிறோம்’ என்று சொல்லி வணங்கிவிட்டு எழுந்தேன்.

நேராக விடுதியறைக்கு வந்தோம். நானும் சுகாவும் தயிர்சாதம் சாப்பிட்டோம். பேசிக்கொண்டிருந்தபோது சுகாவுக்கு இளையராஜாவிடமிருந்து குறுஞ்செய்தி வந்தது. ”வருகிறாயா?” என்று. நானும் வருவதாகச் சொல்லி கிளம்பினேன். பிரசாத் ஸ்டுடியோவுக்குச் சென்றபோது இளையராஜா எங்களுக்காக அவரது அறைக்கு வெளியே சோபாவில் காத்திருந்தார். சிரித்தபடி ”வாங்க வாங்க” என்று வரவேற்றார். நான் காந்தி புத்தகத்தை அவருக்கு அளித்தேன்.

”இதிலே காந்தியை எப்டி டி·பைன் பண்றீங்க?” என்றார் ”கீதை சொல்ற அர்த்தத்திலே ஒரு கர்மஞானின்னு சொல்றேன்” என்றேன். புன்னகையுடன் ”சரிதான்” என்றார். நான் அறிந்த இளையராஜா எந்தவிதமான தோரணைகளும் பாவனைகளும் இல்லாத மிகஎளிமையான குதூகலமான மனிதர். எல்லாக் கலைகள் மீதும் இலக்கியம் மீதும் ஆழமான மதிப்புள்ளவர். எல்லாவிதமான நுண்மையான இசையையும் பெரும் பரவசத்துடன் ரசிக்கக் கூடியவர். அவற்றைப்பற்றி உற்சாகமாகப் பேசக்கூடியவர்.

சென்றகாலத்திலும் சமகாலத்திலும் இளையராஜா பெரிதும் மதிக்கும், வழிபடும் பல இசையமைப்பாளர்கள் உண்டு. நான் அவரை சென்றமுறை சந்தித்தபோது பலரது பாடல்களை அவரே உற்சாகமாக ஆர்மோனியம் இசைத்துப்  பாடிக் காட்டினார். பின்பு அந்தப்பாடல்களை தன் பாணியில் வேறு மெட்டு போட்டும் பாடிக்காட்டினார்.  உலக இசையில் அவருக்கென ஒரு ரசனைப்பாணி உண்டு. வெகுஜன ரசனைக்கான தொழில்நுட்ப இசையை, அல்லது பாப் இசையை அவர் அதிகமும் பொருட்படுத்துவதில்லை என்பதை கவனித்திருக்கிறேன்

தன் மனதில் ஆழமாக பதிந்த பழைய எழுத்தாளர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் குறித்து இளையராஜா பேசும்போது அவரில் ஓர் எளிய மாணவருக்குரிய பணிவும் பரவசமும் உருவாவது மிகவும் ஈர்ப்பூட்டுவது. தமிழகமெங்கும் இளையராஜா அலைந்திருக்கிறார். அந்த அனுபவங்களைப்பற்றி உற்சாகமாகப் பேசினார். அவரது அறையின் நீலக்கண்ணாடிக்குள் மாலையொளியில் மென்மையான நரைத்தலைமுடியும் தாடியும் வெள்ளை உடையுமாக அவர் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த காட்சியை  என்றென்றைக்குமாக நினைவில் பதித்துக்கொண்டேன். நாகர்கோயிலில் கம்யூனிஸ்டுக் கட்சி அலுவலகம் மணிமேடை அருகே இருந்த காலத்தைப் பற்றிச் சொன்னார். நான் இருக்கும் பார்வதிபுரத்தையெ அவர் நன்றாக அறிந்திருந்தார். அங்கே ஒரு சானல் ஓடும், அருகே அக்ரஹாரம் உண்டு என்றார்.

”பாட்டைக் கேட்டிருவோமா” என்றார். ஒலிப்பதிவு அறைக்குச் சென்றோம். பாடல்கள் முழுமைபெற்றிருந்தன. படித்துறையில் நானும் ஒருபாடல் எழுதியிருந்தேன். ஆனால் அது பதிவாகவில்லை, அந்தக் கதைச்சந்தர்ப்பம் படத்தில் இல்லை. நாஞ்சில்நாடனும் எஸ்.ராமகிருஷ்ணனும் எழுதிய பாடல்களைக் கேட்டேன். மிக நுட்பமான இசைக்கோலங்கள். என் எளிமையான ரசனைக்கு அதில் உள்ள ‘என்னை வளைச்சு பிடிச்சு..” என்ற பாடல் மனதைக் கொள்ளைகொள்வதாக இருந்தது. அதன் அற்புதமான நேர்த்தியும் ஒழுங்கும். அந்தப்பாடலைக் கேட்ட அக்கணம் முதல் இப்போது வரை அதுவே என்னுள் அறுபடாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. என் எளிமையான பார்வையில் சந்தேகமில்லாமல் ராஜாவின் மிகச்சிறந்த பாடல்களில் ஒன்று அது. படத்துக்கே அது முக அடையாளமாக ஆகக்கூடும். பழனிபாரதி எழுதியது.

மீண்டு அவர் அறைக்கு வந்தோம். ”ஜீவா கம்பனைப்பற்றி மேடையிலே பேசுவார்… அப்ப நானெல்லாம் அரைடவுசர் போட்ட பையன். முன்வரிசையிலே உக்காந்து கேப்போம். கம்பன் ஒரு ஆபாசக்கவிஞன்னு தி.க.காரங்க பிரச்சாரம் பண்ணின காலம். ஜீவா அடுக்கடுக்கா கம்பராமாயணத்திலே உள்ள நுட்பங்களையும் ஜனநாயகக் கருத்துக்களையும் எடுத்து எடுத்துச் சொல்லுவார். ஆன்னு கேட்டுட்டு இருப்போம். குட்டைக்கை போட்ட சட்டை. புஸ்தி மீசை. அன்பான கண்கள்…அப்டி இருப்பார். கையை ஆட்டி ஆட்டி திரும்பித்திரும்பி பேசுவார்… முன்வரிசையிலே தலைவர்கள் இருப்பாங்க. ஆர்.கெ.கண்ணன், கெ.சி.எஸ்.அருணாச்சலம்…அவங்ககூட அண்ணனும் இருப்பார்…”

இளையராஜாவின் வேர் அந்த கருத்துப்புரட்சிக் காலகட்டத்தில் பரவியிருக்கிறது. சந்தித்துப்பழகிய மனிதர்களின் நினைவுகள் அவரில் ஒளியேற்றுவதை கண்டுகொண்டிருந்தேன். ”இதிலே காந்தியோட பர்சனல் லை·ப் பத்தி இருக்கா?” என்றார். ஆமாம் என்று சொல்லி அவரது யோகசாதனைகளைப் பற்றி சொன்னேன். அவரது பிள்ளைகளின் வரலாற்றைச் சொன்னேன். இளையராஜா ஹரிலால் குறித்து கேட்டார். நான் ஹரிலாலின் கதையைச் சொன்னேன். ‘காந்தி தன்னில் இருந்து விலக்கிய அனைத்தும் ஹரிலாலாக மாறி அவர் முன் நின்றன’ என்று சொன்னபோது சட்டென்று அவர் உணர்ச்சிவசப்பட்டு நெகிழ்வதைக் கண்டேன். காந்தியைப்பற்றிய பேச்சு ஒருகட்டத்தில்  எங்கள் மூவரையுமே ஓர் உச்சகட்ட நெகிழ்ச்சி நோக்கிக் கொண்டுசென்றது. 

இரண்டுமணிநேரம் கழித்து விடைபெற்றுக் கிளம்பினோம். சுகா அவரது வீட்டுக்குச் சென்று இரவு வருவதாகச் சொன்னார். நான் அறைக்குச் சென்றபோது அங்கே கெ.பி.வினோத் சுருண்டு தூங்கிக்கொண்டிருந்தார். அன்பு வாசித்துக்கொண்டிருந்தார். இருவரிடமும் பேசிக்கொண்டிருந்தேன். வாசிக்கும்போது தூக்கம் வருவதென்பது ஒரு தப்பான பழக்கம். பலர் தூக்கம் வருவதற்காக கொஞ்சம் வாசிப்பதை பழகிக்கொள்கிறார்கள். கண்கள் களைப்பது தூக்கத்தைக் கொண்டுவரும் என்பதும் உண்மை.

ஆனால் தூங்குவதற்காக வாசிக்க ஆரம்பித்தால் மெல்ல மெல்ல வாசிப்பதே தூக்கத்துக்கான மனநிலையை உருவாக்கும். நான் ஒருபோதும் வாசித்துக்கொண்டே தூங்குவதில்லை. வாசிப்பது என் மனதை ஊக்கமூட்டி தூக்கத்தை விரட்டிவிடும். வாசித்து முடித்து கொஞ்சநேரம் வேறு எதையாவதுசெய்துதான் தூக்கத்துக்கான மனநிலையை அடைவேன். அதை வினோதுக்கு எடுத்துச் சொன்னேன். ‘அட்வைஸ்’ செய்யும்போதுதான் எவ்வளவு குதூகலமாக இருக்கிறது. நம்முடைய தவறுகளை மறைப்பதற்கு மற்றவர்களுக்கு  உபதேசம் செய்வது போல நல்ல வழி வேறு இல்லை!

ஒன்பது மணிக்கு சுகா வந்தார். அன்பு வீட்டுக்குப் போய்விட்டு பத்துமணிக்கு வந்தார். வினோத் அவரது வீட்டுக்குச் சென்றார். இரவு இரண்டு மணிவரை பேசிக்கொண்டிருந்தோம். சுகா அவரது பட அனுபவங்களைச் சொல்லிக்கொண்டிருந்தார். ஒரு சினிமாவை எடுத்து முடிப்பதென்பது சாதாரண விஷயமல்ல. சுகாவுக்கு அவரது கடந்த பத்தாண்டு கால வாழ்க்கையில் எத்தனை அனுபவங்கள் இருந்தனவோ அத்தனை அனுபவங்கள் இந்த எட்டுமாதத்தில் நிகழ்ந்திருக்கும்.

மறுநாள் காலைமுதல் மாலை வரை நான் அவசர வேலைகளில் இருந்தேன். இரண்டு இயக்குநர்களைச் சந்தித்தேன். அன்று மாலை அறைக்கு அன்புவும்  வினோதும் சென்றமுறை அறிமுகமான நண்பர் ராஜகோபாலனும் வந்திருந்தார்கள். வினோத் பதினொரு மணிக்குப் போனார். ராஜகோபால் பின்னிரவு ஒன்றரை மணிக்குச் சென்றார். அதுவரை பேசிக்கொண்டிருந்தோம். அரசியல் இலக்கியம் பங்குச்சந்தை…

மறுநாள் காலை இன்னொரு சினிமாச் சந்திப்பு முடிந்து சுகாவின் அலுவலகம் சென்றேன். படித்துறை படத்தின் காட்சிகளை பார்த்தேன். பாடல்களை தேர்ந்த இயக்குநருக்குரிய கச்சிதமான சிறு சித்தரிப்புகளாக அளித்திருந்தார் சுகா. நெல்லை வாழ்க்கை அப்படியே கண்முன் அவிழ்வது போல் இருந்தது. பிரமித்துப்போய்விட்டேன் என்றே சொல்லலாம். ஒருவேளை ‘காதல்’ போல ‘சுப்ரமணியபுரம்’ போல இந்த வருடத்தின் பெருநிகழ்வாக இந்தப் படம் அமையக்கூடும். அவரது திறமை, அவர் பயின்ற குருகுலம் எல்லாம் எனக்கு தெரியும். என்றாலும் பலசமயம் நட்பு கண்களை மறைக்கிறது. எப்படி எடுப்பார் என்ற உதறல் எனக்கே இருந்தது. கலைஞனை கலைவழியாக மட்டுமே அடையாளம் காணமுடியும் என்று நினைத்துக்கொண்டேன்.

அன்று மாலை ஆறேமுக்காலுக்கு மீண்டும் சிறப்பு ரயில். மீண்டும் இரண்டடுக்கு ஏஸி பெட்டிக்கு இடமாற்றம். ரயில் நிலையத்திற்கு ராஜகோபாலன் வந்திருந்தார். ரயில் கிளம்பும்போது தெரிந்த முகம் சிரித்தது. அதே வழுக்கைத்தலை மனிதர். முஜீப் வந்து ஏற்றிவிட்டாரா இல்லை அவருக்கு சளிக்காய்ச்சலா என்று எனக்குள் கேட்டுக்கொண்டேன்.

அவர் நான் அறிமுகத்துக்கு உகந்தவன் என்று இப்போதுதான் முடிவுசெய்திருந்தார். ”நான் ஒரு சின்ன பேக்டரி வச்சிருக்கேன் சார்…அட்டை பேப்பர் கப்பு செய்றோம்” என்றபின் ”சார் என்ன செய்றீங்க?” என்றார். ”பீயெஸ்ஸென்னலிலே இருக்கேன் சார்” ”அப்டியா” என்றபின் மெல்ல ”என்னவா இருக்கீங்க?” என்றார். ”கிளார்க்குதான்” சட்டென்று அவர் முகத்துடன்  சூழ இருந்த அனைவர் முகங்களும் அணைந்தன. உள்ளுக்குள் சிரித்துக்கொண்டேன்.

வாசித்துக்கொண்டிருந்தபோது  தாண்டிச் சென்ற ஒருவர் என்னருகே நின்று பார்த்து புன்னகை செய்தார் . நான் புன்னகை செய்ததும் ”ஜெயமோகன்?” என்றார். ”ஆமா” என்றேன். அருகே அமர்ந்துகொண்டார். ”நான் ஏ டூவிலே இருக்கேன் சார்…என்பேரு பிரகாஷ்.. பெங்களூரிலே இருக்கேன்” நான் சிரித்து ”ஐடியிலே இருக்கீங்களா?” என்றேன். ”அங்கதான் தப்பு பண்றீங்க…மீசை இல்லேன்னா உடனே ஐடியா…நான் ஷேர்புரோக்கர் சார்”

என் இணையதளம் மூலம் என்னை அறிந்தவர், எந்த புத்தகமும் வாசித்ததில்லை என்றார். அப்படி பலரை இப்போது சந்திக்கிறேன். ”விகடன் இந்தவாரத்திலே புக்·பேரை வச்சு கிண்டல் பண்ணி கார்ட்டூன் போட்டிருக்கான். உங்களை மீசையோட வரைஞ்சிருக்கான். நீங்க மீசை இல்லாம நாலஞ்சு ·போட்டோ அனுப்பிக்குடுங்க சார்” என்றார். ”கார்ட்டூனிஸ்டுக்கு எங்கியாவது பிடி வேணுமே” என்றேன்.

என்னுடைய அறிவியல் சிறுகதைகளைப்பற்றியும் காந்தி கட்டுரைகளைப்பற்றியும் உற்சாகமாகப் பேசினார். என் கையில் இருந்த இன்றைய காந்தி, இந்தியஞானம் இருநூல்களையும் அவர் கேட்டு வாங்கிக்கொண்டு விலை தந்தார். என் தொலைபேசி எண்ணையும் வாங்கிக்கொண்டார். பங்குச்சந்தை பற்றி கொஞ்ச நேரம் அவர் பேசியது தெளிவாக புரிவதுபோல ஆரம்பித்து சுத்தமாக புரியாமல் ஆகியது. முந்தைய நாளிரவு ராஜகோபால் வேறு பங்குச்சந்தையைப்பற்றி நிறையச் சொல்லியிருந்தார். பங்குச்சந்தை நமக்கு ஆகாது என்ற எளிய முடிவுக்கு நிறைய நியாயங்களைக் கண்டுபிடிக்க அந்த பேச்சுகள் உதவின.

வழுக்கையர் என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். ஆயிரத்து இருநூறு ரூபாய் கொடுத்து ரயிலில் போகும் தொலைபேசி கிளார்க்! அந்தப் புதிரை விடுவிக்காமல் அவர் இன்னும் ஒருவாரம் தூங்க முடியாது. என் கண்கள் சந்தித்தபோதெல்லாம் பதறி விலகினார்.  உள்ளுக்குள் சிரித்துக்கொண்டே இருந்தேன்.

நான் சென்னையில் எப்போதுமே மிகக்குறைவாகவே தூங்க முடியும். நண்பர்கள்! ஆகவே ரயிலில் நன்றாகவே தூங்கிவிடுவேன். இந்தமுறை தண்ணீர் புட்டியை மிகமிகமிக இறுக்கமாக மூடிவிட்டு படுத்துக்கொண்டேன். நள்ளிரவில் தூக்கம் விழித்து கழிப்பறை சென்று திரும்பும்போது ஒரு அப்பா தன் குழந்தையுடன் நடந்துகொண்டிருப்பதைப் பார்த்தேன்.

சின்னக்குழந்தை, ஒருவயதிருக்கும். கம்பிளிசட்டைக்குள் உருண்ட குண்டுமுகம். பெண்குழந்தை. நள்ளிரவுகளில் தூங்காமல் முரண்டும் இந்தமாதிரி ஐட்டங்களை அப்பா கையில் ஒப்படைத்துவிட்டு நவீன அம்மாக்கள் தூங்கிவிடுவது வழக்கம். குழந்தை தூங்கும் நோக்கமே இல்லாமல் புத்தம்புதிதாக இருந்தது.

அருகே வந்தபோது அந்தக்குழந்தையின் குரல் காதில் விழுந்தது. மொழியாக இன்னமும் மாறாத பேச்சு. குழந்தை அன்பான பேச்சைத்தான் அடிக்கடிக் கேட்கிறது. அது அன்பாக இருக்கும்போது அந்தப்பேச்சையே தானும் பேசுகிறது. அது ஒரு தாய் பேசும் அதே பாவனையில் இருக்கும். அதேபோல அப்பாவின் முகவாயை பிடித்து திருப்பி மெல்லிய குரலில் இழுத்து இழுத்துப் பேசியது. குழந்தை தாயாக ஆகும் பொற்கணம்

புன்னகையுடன் தூங்கிபோனேன்.

சென்னையில் மூன்றுநாட்கள்

முந்தைய கட்டுரைவைக்கமும் காந்தியும் 2
அடுத்த கட்டுரைஆர்.எஸ்.எஸ்