அங்காடித்தெரு படப்பிடிப்புக்காக திருச்செந்தூர் சென்றிருந்தபோது நான் மக்களைத்தான் கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன். கிராமங்களில் படப்பிடிப்பு வண்டிகள் ஒன்றன்பின் ஒன்றாக வரும்போதுதான் மக்கள் படப்பிடிப்பு நடக்கப்போவதை அறிகிறார்கள். பரபரப்புடன் சிறுவர்களும் சிறுமிகளும் அவிழும் கால்சட்டைகளையும் அழுக்குப்பாவாடைகளையும் கையில் பிடித்தபடி பெரிய பற்களைக் காட்டி உரக்கச்சிரித்தபடி ஓடிவந்து கூடி ஒருவரை ஒருவர் பிடித்துத்தள்ளி சண்டைபோட்டு முண்டியடித்து வேடிக்கை பார்க்கிறார்கள். இடுப்பில் பிள்ளைகளுடன் அரக்கப்பரக்க ஓடிவரும் பெண்களின் முதல் வரிசைக்குப் பின் அவசரமாக தலைசீவி சோப்புபோட்டு முகம் கழுவி உடைமாற்றி வரக்கூடிய அடுத்த வரிசைப்பெண்கள். முகவாயில் கைவைத்து கண்கள் கூச வேடிக்கை பார்க்கும் பாட்டிகள். அவ்வழியாக போகும்போது நின்று பார்க்கும் நடுவயது ஆண்கள்.அவர்கள் நீர்ப்பாசிப்படலம்போல. விலக்கியபடியே இருக்க வேண்டும், இல்லையேல் மெல்லமெல்ல வந்து காமிராவையே மூடிவிடுவார்கள். படப்பிடிப்பில் ஒரு பகுதி மனித உழைப்பு இதற்காகவே செலவிடப்படுகிறது.
அத்தனைபேருக்கும் ஒரே கேள்விதான். ”என்ன படம்?” பெயரைச்சொன்னதுமே அடுத்த கேள்வி ”யாரு நடிக்காக?” அப்பகுதியில் முதல் நட்சத்திரம் சரத்குமார்தான். காரணம் சாதி.அடுத்துதான் ரஜினிகாந்த். ”புதுமுகம்தாங்க..”என்றதுமே ஆர்வம் சரசரவென்று சரிகிறது. மக்களுக்கு சினிமாவில் ஆர்வமிருக்கும் ஒரே விஷயம் நடிகர்கள்தான். ”வேற ஆரும் இல்லீங்களா?” ”இல்லீங்க எல்லாருமே புதுமுகம்” இரண்டாவது நாள் அப்பகுதியில் படப்பிடிப்பு நடந்தால் பத்து சதவீத கூட்டம்தான் இருக்கும்.
அங்காடித்தெரு படப்பிடிப்பில் ஒரே நட்சத்திரம் பிளாக் பாண்டி. ‘கனாக்காணும் காலங்கள்’ என்ற தொலைக்காட்சித்தொடர் மூலம் பிரபலமானவர். இயற்பெயர் லிங்கேஸ்வரன். நாடகக் கலைஞராக இருந்த தந்தையின் இறப்புக்குப் பின் நடித்தே தன் குடும்பத்தைக் காப்பாற்றுகிறார். அங்காடித்தெருவில் அவர் ஒரு முக்கியமான கதாபாத்திரம். கிராமங்களில் அவரைச்சுற்றி எப்போதும் ஒரே கூட்டம். விதவிதமான தாள்களில் கையெழுத்து போட்டுக்கொடுத்துக் கொண்டே இருந்தார். 22 வயதானாலும் 18 வயது பையன்போலத்தான் தோற்றம், பேச்சு எல்லாமே. ”பாண்டிண்ணா நீ என்னா படிச்சே?” ”நானா? நான் பத்தாப்பு ·பெயிலு மாப்ள” என்று சாதாரணமாக அனைவரிடமும் பழகுகிறார்.
பிளாக் பாண்டி அதிபுத்திசாலியான இளைஞர். ஒவ்வொரு காட்சிக்கும் நாலைந்து வகை நடிப்புகளை செய்துகாட்டி இயக்குநரை தேர்வுசெய்யச் சொல்லக்கூடியவர். அசலான நகைச்சுவை உணர்ச்சி கொண்டவர். ஐந்துவயது முதலே சினிமாத் தொடர்பு இருப்பதனால் சினிமாவின் தொழில்நுட்பமும் நன்றாகவே தெரிகிறது. சினிமாவில் ஒரு முக்கியமான இடத்தை அவர் அடைவதற்கான வாய்ப்புகள் அதிகம். அவருடன் நான் பேசிக்கொண்டிருக்கும்போது அவரது ரசிகர்கள் மொய்த்துக் கொண்டு ”பாண்டி நீ சூப்பரா நடிக்கிறே.. அப்றம் மத்தவன் ஹீரோ என்ன ஆனான்?” என்று சீரியலைப்பற்றிப் பேசுவார்கள். அவரை அறியாதவர்களே கிராமத்தில் இல்லை. அவருக்கும் எங்கும் ரசிகர்களைப் பார்த்துப் பார்த்து பழகிப்போய் இயல்பாக அவர்களை எதிர்கொள்கிறார். ”பாண்டி ஏன் படிப்ப நிப்பாட்டினெ? ”. ”இல்லபாட்டி சீரியலிலயும் ஸ்கூலுக்குதானேபோறேன்…”
அடுத்தபடியாக வசந்தபாலனை சிலருக்கு தெரிந்திருந்தது. பெயர் சொன்னால் தெரியாது. வெயில் என்றால் தெரியும். வெயில் தென்தமிழ்நாட்டில் இருமுறை வெற்றிகரமாக ஓடியிருக்கிறது. தொலைக்காட்சிகளில் பலமுறை வந்திருக்கிறது. ”ஏல, ஒரு கோட்டிக்காரத்தாயோளி புள்ளை வாழ்க்கைய நாசம் பண்ணுவானேலே, அந்தபடம்”என்று பனையேறுபவர் சொன்னார். மற்றவர் ”பசுபதி குடுத்த படம்தானே? நல்ல நடிப்பு”என்றார். ”ஏஞ்சாமி புள்ளய அப்டியா அடிக்கிறது? அடிக்கலாம்…ஆனா அவமானபப்டுத்தப்பிடாதுல்ல?”என்று என்னை கேட்டார்.
ஆனால் கதாநாயகனை எவருமே கதாநாயகானக் காணவில்லை. ஏனென்றால் அவரும் அவரை அப்படி நினைக்க ஆரம்பிக்கவில்லை. பிளஸ் டூ படித்துக் கொண்டிருந்த வாலிபால் சாம்பியனாகிய மோகன் இப்படத்தின்மூலம் மகேஷ் என்ற கதாநாயகனாக ஆகிறார். அப்பட்டமான தெற்கத்தி முகமும் வெட்கம் கலந்த இயல்பான சிரிப்பும்தான் அவரது தனித்தன்மைகள். சினிமா பற்றி எதுவுமே தெரியாது. எளிய நடுத்தரக் குடும்பத்துப் பின்னணி கொண்டவர். அவரை ஆறுமாதம் முன்னரே சென்னைக்குக் கொண்டு சென்று தங்க வைத்து நடிக்க பயிற்சி செய்து அவற்றை வீடியோ எடுத்து ஆராய்ந்து அசைவில் உள்ள குறைகளைக் களைந்து சினிமாவைக் கற்றுக்கொடுத்து மெல்லமெல்ல நடிகராக ஆக்கினார் வசந்தபாலன். மகேஷின் அப்பாவை தேடிப்போய் உதவி இயக்குநர்கள் இப்போதே கதைசொல்கிறார்கள் என்று தகவல்.
ஆரம்பத்தில் கூச்சம் காரணமாக மகேஷ் ஏராளமாகச் சொதப்பினார் என்றார்கள். நான் பார்க்கும்போது சாதாரணமாக நடித்துக் கொண்டிருந்தார். பாலன் சொல்வதை உடனே புரிந்துகொண்டு அதை இயல்பாகச் செய்தார். அவர் நடிக்கவில்லை. வெளியே பேசும்போதும் அதே வகையான இயல்பான பாவனைகளும் கூச்சச்சிரிப்பும்தான்.
சினிமாநடிப்பு என்பது செயற்கையின் உச்சம். வெளிச்சம் ,காமிராவின் நகர்வு இரண்டையும் எப்போதும் கணக்கில் கொள்ளவேண்டும். பார்வையின் திசை கவனத்தில் இருக்க வேண்டும். எதிரெ நடிப்பவர்கள் அனேகமாக இருக்கமாட்டார்கள். ஆகவே கற்பனையில் நோக்கித்தான் நடிக்க வேண்டும். காட்சிகள் துளிகளாக சிதறடிக்கப்பட்டு வெறும் வசனங்களாகவும் அசைவுகளாகவும்தான் எடுக்கப்படும். ஒரு திசையில் காமிரா இருக்கையில் அத்திசை நோக்கிய வசனங்களும் அசைவுகளும் எடுக்கப்பட்டபின்னர்தான் எதிர்திசைக்கு வருவார்கள். எப்போதும் எண்பதுபேர் சூழ இருக்க, என்னவென்றே தெரியாத நாநூறுபேர் வேடிக்கை பார்க்க, மொட்டைவெயிலில் மேலும் பிரதிபலிப்பான்கள் வைத்து உக்ர வெயிலாக்கி எடுக்கும் போது மீண்டும் மீண்டும் ஒரே வசனத்தைச் சொல்லி ஒரே அசைவை அளித்து நடிக்க வேண்டும். ஆனால் திரையில் இயற்கையாக இருக்க வேண்டும். சவால்தான். ஆனால் மகேஷ் மிக சரளமாக அதைச் செய்தார் என்பதைக் கவனித்தேன்.
அவர் மெல்ல தேறி வந்ததற்கு கதாநாயகி அஞ்சலி காரணம் என்றார் இணை இயக்குநர் சரவணன். [இலக்கிய அறிமுகமும் திரைப்பயிற்சியும் உள்ள சரவணன் அடுத்த வருடம் திரைப்படத்தை இயக்குவார் என்று உறுதியாகத் தோன்றியது] அஞ்சலி ‘கற்றது தமிழ்’ மூலம் அறிமுகமானவர். புதுமுக கதாநாயகனின் முடிவில்லாத தவறுகளை பொறுத்துக்கொண்டு அவரது கூச்சத்தை மெல்லமெல்ல போக்கி சிறப்பாக நடித்தார் என்றார்.
மகேஷ் அவர் இருக்கும் ‘சிம்மாசனத்தை’ இன்னும் உணரவில்லை. வேடிக்கைபார்க்க வந்த இளைஞர்களில் ஒருவர் போல சாதாரணமாக கும்பலில் இருந்தார். பிறர் நடிக்கும்போது விளையாடினார். பையன்களுக்கே உரிய ஆர்வங்கள். செல்போன், விளையாட்டு, பெரியவர்களைப்பார்த்தால் நிறுத்திவிடும் பேச்சுகள். அதைவிட வேடிக்கை என்னவென்றால் அவர்தான் கதாநாயகன் என்று தெரிந்த பின்னும்கூட கூட்டம் அவரை நடிகராக எண்ணவில்லை. வெள்ளித்திரையில் இருநூறு மடங்கு பெரிதாக தெரிய வேண்டியிருக்கிறது அதற்கு. தமிழில் ஒரு நடிகரின் இடம், அதிலும் கதாநாயகனின் இடம் என்பது, புராணகால தேவர்களுக்கு நிகரானது. அதிகபட்சம் டிசம்பர். அதன்பின் அவரது வாழ்க்கையே மாறிவிடும். அலாவுதீனின் விளக்கை தேய்த்துவிட்டார். பூதம் உள்ளே உடைமாற்றிக் கொண்டிருக்கிறது.