வேலை – மேலும் ஒரு கடிதம்

15turks2[1]

ஜெ,

வேலை குறித்த எனது கடிதத்தை வெளியிட்டமைக்கு மகிழ்ச்சி. அதில் சில திருத்தங்களையும் பிற்சேர்க்கைகளையும் பகிர விரும்புகிறேன்.

மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கைப் பொறுத்தமட்டில் B.E. படித்தவர்களைவிட டிப்ளமோ படித்தவர்களையே நிறுவனங்கள் விரும்பிகின்றன எனக் குறிப்பிட்டிருந்தேன். அது தவறு. +2 படித்து மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்களை விட டிப்ளமோ படித்து பின்னர் B.E.படித்தவர்களை பணியில் அமர்த்த முன்னுரிமை வழங்கப்படுகிறது என்பதே சரி எனபதை தொடர்ந்த விவாதத்தில் தெரிந்துகொண்டேன்.

www.letsintern.com தளத்தைப் போலவே இன்னொன்று புதிதாக துவங்கப்பட்டுள்ளது. www.twenty19.com என்ற அந்த தளத்தில் புதியவர்களுக்கான சம்பளத்துடன் கூடிய internships மட்டுமல்லாது நிறுவனங்களின் தேவைகளுக்கு தயார்செய்துகொள்ளும் வகையில் பயிற்சி வகுப்புகளும் ஒருங்கமைக்கப்படுகின்றன.

வளாகத்திற்கு வெளியே வேலைக்கு புதுமுகங்களை தேர்ந்தெடுப்பது குறைந்துவிட்டது என்று குறிப்பிடும் நேரத்தில் கல்லூரி வளாகத்திற்கே வந்து மாணவர்களை தேர்ந்தெடுப்பது என்பது மிக மிக அதிகரித்துள்ளது. முன்பு அரசுக் கல்லூரிகளிலும் விரல்விட்டு எண்ணக்கூடிய புகழ்பெற்ற தனியார் கல்லூரிகளுக்கு மட்டுமே சென்றுகொண்டிருந்த நிறுவனங்கள் இன்று பெரு வாரியான கல்லூரிகளுக்குச் செல்கின்றன. அதிக அளவில் குறிப்பட்ட கல்லூரியில் இருந்து மாணவர்களை தேர்ந்தெடுக்க இயலாத நிலையில் ஐந்தாறு கல்லூரி மாணவர்களை ஒரே இடத்திற்கு வரச்சொல்லி தேர்ந்தெடுப்பதும் நிகழ்கிறது.

இன்ஜினியரிங் மாணவர்களின் தேக்கநிலை காரணமாகவும் சம்பளச் செலவைக் குறைப்பதற்காகவும் B.Sc (comp.sci), BCA போன்ற பட்டப்படிப்பு மாணவர்களை நிறுவனங்கள் வேலைக்கு சேர்க்கத் தொடங்கி பல ஆண்டுகள் ஆகின்றன. அதற்கு முன்னர் கலை-அறிவியல் மாணவர்களுக்கு MCA மட்டுமே ஒரே வழியாகவும் M.Sc மிகக்குறைந்த அளவில் பிற்பாடும் இருந்தன. விப்ரோ நிறுவனம் அறிவியல் பட்டதாரிகளைத் தேர்வு செய்து அவர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்ததோடல்லாமல் புகழ்பெற்ற BITS (Birla Insititute of Technology & Science), Pilanai பலகலைக் கழகத்துடன் இணைந்து அவர்களுக்கு பகுதி நேர இன்ஜினியரிங் பட்டப் படிப்புக்கும் (B.S) தங்கள் வளாகத்திலேயே ஏற்பாடு செய்தது நீண்ட வேளை நேரம், அதோடு படித்து குறிப்பிட்ட மதிப்பெண் பெற வேண்டிய நிலை, சில ஆண்டுகள் நிறுவனத்தை விட்டு வெளியே வர முடியாத நிலை போன்றவை இத்திட்டத்தில் குறைகளாக சொல்லப்பட்டன. இன்றைய நிலை என்ன என்று தெரியாது. எனினும் இது ஒரு நல்ல வாய்ப்பே. . இன்று இத்திட்டத்தில் நேரடியாக இன்ஜினியரிங் முதுகலை பட்டம்(M.S) பெற முடிகிறது (http://careers.wipro.com/it/campus/india/wase.htm) என அறியும் போது மகிழ்ச்சியாக உள்ளது.

இன்னும் சொல்லப்போனால் புகழ்பெற்ற கல்லூரியிலிருந்து வரும் மாணவர்கள் நீண்ட நாள் பணியில் தங்குவதில்லை. மேற்படிப்புக்கோ அல்லது வேறு நிறுவனங்களுக்கோ ஓரிரு ஆண்டுகளில் சென்றுவிடுகின்றனர். அதனால் இப்போது சில நிறுவனங்கள் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை கல்லூரிகளிலிருந்து வரும் மாணவர்களை மட்டும் புதுவர்களாக பணியில் சேர்க்கத் தொடங்கியுள்ளனர்.

நிறுவனங்களும் சில தவறான கொள்கைகளைக் கொண்டுள்ளதை மறுக்க முடியாது. இவை ஒருவகையில் தனியாரின் சிவப்பு நாடா முறைமைகள். இவற்றில் அதிகம் பேசப்படுவது pass out year) மற்றும் gap. அதாவது இப்போது 2014-ஆம் ஆண்டு என்றால், 2012 மற்றும் 2013-ஆம் ஆண்டு படிப்பை முடித்தவர்கள் மட்டுமே விண்ணபிக்கலாம் (சில சமயங்களில் கடந்த வருட மாணவர்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படுவார்கள்) என்ற கொள்கை. இது தேவையற்றது. இது ஒருவேளை விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் பணியை குறைப்பதற்கு மட்டுமே உதவலாம். ஆனால் வேலை தேடுபவர்களைப் பொறுத்தவரையில் இது ஒரு தடை. இதனால் ஒருவர் வேறுதுறையில் வேலை செய்துவிட்டு பின்னர் IT -க்கு வருவதை முடியாமலாக்குகிறது. இதனால் அப்படிப்பட்டவர்கள் போலியான அனுபவச் சான்றிதழை தயாரித்தே பணிக்கு விண்ணபிக்க முடியும் என்ற நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இதே போலத்தான பணிக்கு இடையிலான இடைவேளி மற்றும் கல்விக்கு இடையிலான் இடைவெளியும். ஒருவர் பட்டப்படிப்பு முடித்து ஓரிரு ஆண்டுகள் கழித்து மேற்படிப்பு படித்திருந்தாலோ அல்லது பள்ளிப்படிப்புக்கும் கல்லூரிப் படிப்புக்கும் இடைவெளி இருந்தாலோ அல்லது ஒருவேளையிலிருந்து விலகி இன்னொரு நிறுவனத்தில் சேர்வதற்கான இடைவெளி சில மாதங்களுக்கு மேலிருந்தாலோ அது எதிர்மறையாக மனிதவள மேலாளர்களால் கருதப்படுகிறது. இவையிரண்டும் ஒருவர் அவ்வேலைக்கு உகந்தவரா என கணிப்பதில் தேவையில்லாதது. இவற்றைக்கொண்டு ஒருவரின் தனிப்பட்ட குண நலன்களை (attitude) கணிக்க முயல்கிறனர். இவை மறுபரிசீலனை செய்யப்பட வேண்டிய கொள்கைகள்.

இதுபற்றி பேசிக்கொண்டிருக்கும்போது ஆராய்ச்சி முனைவர்கள் நிறுவனங்களில் எப்படி செயல்படுகின்றனர் என்று ஒரு கருத்து எனக்கு சொல்லப்பட்டது. மெக்கானிகல் உற்பத்தித் துறையில், Ph.D. செய்தவர்களை சில சமயங்களில் நிறுவனங்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்காக நிறைய சம்பளத்துடன் சேர்த்துக்கொள்வதோடு அவர்களை நம்பி சில கோடிகளை முதலீடு செய்கின்றன; புதிய பொருட்கள்/கருவிகளை கண்டுபிடிப்பதற்கு. ஆனால் அவர்கள் தனியார் நிறுவனங்கள் கொடுக்கும் குறிப்பிட்ட காலத்திற்குள் தங்கள் ஆராய்ச்சிகளை முடித்து வெற்றிகரமாக பொருட்களை தயாரிக்க முடிவதில்லை. அதைப்பற்றி அவர்களும் கவலைப்படாமல் தங்களுக்கும் இருக்கும் கல்வித்தகுதியை மட்டுமே வைத்துக்கொண்டு வேறு நிறுவனங்களுக்கோ அல்லது கல்லூரிப் பணிக்கோ சென்றுவிடுகின்றனர். இறுதியில் அப்படிப்பட்ட ஆராய்ச்சிகளை செய்து குறிப்பிட்ட கெடுவுக்குள் உற்பத்தி செய்யச் செய்பவர்கள் வேர்வை சிந்தி உழைக்கும் சராசரி கல்வித்தகுதியுள்ள இன்ஜினியர்களே. இது குறிப்பிட்ட ஒருவரின் அனுபவம். இதை எந்த அளவுக்கு பொதுமைப்படுத்த முடியும் என்று தெரியவில்லை.

அன்புடன்,
சாணக்கியன்
http://vurathasindanai.blogspot.in/

முந்தைய கட்டுரைஎன்.எம்
அடுத்த கட்டுரைகிருஷ்ணசிம்மம்