ஒளியும் விழியும்

அன்புள்ள ஜெயமோகன்,

இந்த ஒளி வாழ்த்து! , கந்தர் ஷஷ்டி கவசம் இதை எல்லாம் பார்த்தால், சூரியனே (முருகா, பிள்ளையாரப்பா ஏசுவே உன்னை நான் துதிப்பேன், எனக்கு மூட்டு வலியை சரயாக்கு, முதுகு வலியை குணப்படுத்து, மூட்டை மூட்டையாக பணம் கொடு என்று கேட்பதைத் தவிர கடவுளுக்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லையோ என்று தோன்றுகிறது! சூரிய உதயத்தையோ, அஸ்தமனத்தையோ பார்க்கும்போது – அதுவும் திட்டம் எதுவும் இல்லாமல் எதேச்சையாக பார்க்கும்போது ஏற்படும் மன நிறைவு இந்த ரிக் வேதக் கவிதையில் உங்களுக்கு கிடைக்கிறதா?

அன்புடன்
ஆர்வி (நூவார்க், கலிஃபோர்னியா)

 

அன்புள்ள ஆர்வி,

‘கணவனை இழந்தவர்க்குக் காட்டுவது இல்’ என்று கோப்பெருந்தேவி சொன்னதுபோல ‘கவிதை காணாதோர்க்கு காட்டுவது இல்’ என்றே சொல்லலாம். இப்பாடலில் நீங்கள் கவிதையை காணவில்லை என்றால் அவ்வளவுதான். நான் கவிதையைக் காண்கிறேன்.

ஆனால் உங்கள் வரிகளில் உள்ள சில விஷயங்களைப் பற்றி என் மாறுபட்டக் கருத்தைச் சொல்ல விரும்புகிறேன்.

1. ஒரு மாபெரும் பிரபஞ்ச சக்தியிடம் நலத்தையும் இன்பத்தையும் வேண்டுவதில் பிழை ஏதும் இல்லை. மானுடன் என்றுமே விழைவது அது. அந்த இன்பமும் நலமும் மிக மெல்லிய சிலந்திவலையால் ஆனவை என்ற நடைமுறை ஞானமும், அவை பிரபஞ்ச ஆட்டத்தின் அலகிலாத  விளையாட்டுடன்  சம்பந்தப்பட்டிருக்கின்றன என்ற விவேகமும் உடைய ஒரு மனம் பிரார்தனை செய்துகொள்வதில் எந்த பிழையும் காணாது. அது ஓர் அகங்கார அழிவு. தன்னை எளிமையாக்கிக்கொண்டு இயற்கைமுன்பும் இயற்கையை ஆளும் அதற்கப்பாற்பட்ட பிரபஞ்ச விசைகள் முன்பும் நிறுத்திக்கொள்ளும் உயர்நிலை அது. பைபிளில்,குர்ஆனில், தம்மபதத்தில் உள்ள பிரார்த்தனைகளும் அதே மனநிலையில் உள்ளவையே.

2. அந்த மனநிலையை இளக்காரமாக, அற்பமானதாகக் காணும் மனநிலை எனக்கும் இருந்ததுண்டு. அன்று நான் என் அறிவில், என் தனித்தன்மையில் அபாரமான நம்பிக்கை கொண்டு அதைத்தூக்கி ஆணவத்தின் விளிம்பில் கொண்டு சென்று நிறுத்தியிருந்தேன்.  உண்மையில் என் வல்லமையை நான் உணராத நிலை அது என இப்போது  அறிகிறேன். என் வல்லமையை முழுக்க உணர்ந்தபோது என் எல்லைகளும் எனக்குப் புரிந்தன. ஆகவேதான் மாபெரும் ஞானிகளும் பேரறிஞர்களும் பிரார்த்தனை செய்தார்கள்.

முதல்முறையாக, 1993ல் நித்ய சைதன்ய யதி  ஊட்டியின் மலைவிளிம்பு ஒன்றில் நின்று மறையும் சூரியனைப்பார்த்து காயத்ரி மந்திரத்தைச் சொல்லி பிரார்த்தனை செய்தபோது நான் மிக விலகி வேடிக்கை பார்க்கும் மனநிலையில் இருந்ததை நினைவுகூர்கிறேன்.

வரம் தருபவனாகிய சூரியனே
நீ இருளை அகற்று
உன் ஒளியால்
என் புலன்களை நிரப்பு
உன் சுடர்
என் அறிவை துலங்க செய்வதாக!

என்ற அந்தப்பிரார்த்தனையை இன்று நானும் அதே ஆழ்ந்த எளிமையுடன் செய்ய முடியும் என்றே உணர்கிறேன். அது மானுடம் தோன்றிய நாள் முதல் உள்ள பிரார்த்தனை. என்றும் அந்த விழைவு அப்படியேதான் இருக்கும். அந்த விழைவுக்கு அப்பால் நான் இன்னும் சென்று விடவில்லை. அந்த கோரிக்கையை வைக்க முடியாத அளவுக்கு வல்லமையும் பெற்றுவிடவில்லை.

பதினெட்டு வருடம் முன்பு தலைக்காவேரியில் ஒரு சோழநாட்டுக் கிழவி கைகூப்பி சட்டென்று  மனம் நெகிழ்ந்து அழ ஆரம்பித்ததை மெல்லிய இளக்காரத்துடன் பார்த்தவன்தான் நானும். இன்று அந்தக்கண்ணீரை நான் மிக நன்றாகவே அறிகிறேன். நேற்று சூரியன் முன் பொங்கலிட்டு கரும்பும் மஞ்சளும் படைத்து கைகூப்பி வணங்கும்போது கண்கலங்கிய ஒரு கிராமியப் பெண்ணைப் பார்த்தேன். என்னாலும் அப்படிக் கைகூப்ப முடியும். அந்த அளவுக்கு கழற்றி வைத்து மீள முடிந்திருக்கிறது.

இந்த வானமும் ஒளியும் நீரும் நிலமும் எல்லாம் நம்மை விட மகத்தானவை, நமக்கு நலம் தரும் வல்லமை கொண்டவை, நமது வாழ்வு அவற்றின் கருணையே என்ற உணர்வு அளவுக்கு மனிதனை வாழவைக்கக்கூடிய, காக்கக்கூடிய, கருத்து வேறு எதுவும் இல்லை.

3. வேதங்கள் இயற்கையைக் கும்பிட்டன என்று எட்டாம் வகுப்புப் பாடத்தில் படித்து அதையே நம்பிக்கொண்டிருப்பவர்கள் நம்மில் பலர். வேதங்களில் இயற்கை வல்லமைகள் எப்போதும் பிரபஞ்சப் பெருவல்லமையின் பிரதிநிதிகளாக, குறியீடுகளாகவே வருகின்றன என்பதற்கு இந்தக் கவிதையும் ஓர் உதாரணம் என்பதை வாசகர்கள் உணர முடியும். வானில் தெரியும் சூரியன் என்ற எரியும் கோளத்திடம் இந்தப் பிரார்த்தனை செய்யப்படவில்லை.  இக்கவிதையில் சூரியன் பிரபஞ்சம் முழுக்க பரந்துள்ள ‘பேரொளியின்’ புதல்வன் என்றே சொல்லப்பட்டிருக்கிறது. மூலச்சொல் த்யேயஸ் . அதற்குச் சரியான பொருள் ‘கருத்துவடிவிலான பேரொளி’ என்பதாகும்.  அந்த அகம் அறியும் பேரொளியை இந்த விழிகாணும் ஒளியின் வழியாகச் சென்று தொடும் ஓர் மனஎழுச்சி இவ்வரிகளில் உள்ளது. இதையே கவிதை என்கிறார்கள்.

4. இக்கவிதையின் மனநிலை மண்ணில் வாழ்வு அளித்துள்ள நிலையாமையை நோயை அறியாமையை அறிந்துகொண்டு விண்ணின் அழியாத சோதியைப் பார்க்கும் ஒரு ஆதிமனத்தின் எழுச்சி. உலகின் எந்த மொழியிலும் அதுவே கவிதை என்று சொல்லப்படுகிறது. எல்லா மகத்தான கவிதைகளும் நிலையற்றவற்றை எளியவற்றை அழியாத மகத்தான ஒன்றுடன் இணைக்கின்றவையாகவே இருக்கும் என்பதைக் காண்பீர்கள். இன்றைய புதுக்கவிதை வரை.

அதற்கப்பால் மொழியையே எளிய படிமவெளியாக வைத்திருந்த ஆதிமனம் அடைந்த  நுண்ணிய படிமங்களால் ஆனது இக்கவிதை. விண்ணின் மணிக்கொடியாக, விழிகளுக்கு ஒளிதரும் விழியாக, வானின் இமையாத சாட்சிவிழியாக, பொற்பிடரிகொண்ட முகமாக சூரியனை வர்ணித்துப்போகும் வரிகளையே எக்காலமும் கவிதை என்று உலகு அறிந்திருக்கிறது. ஒரு லௌகீக மனத்துக்கு அது வெறும் வருணனையாகப் படக்கூடும். சங்கப்பாடல்களில்கூட வர்ணனைகளை தவிர்த்துவிட்டு ‘அர்த்தம்’ சொல்பவர்கள் நம்மிடையே உண்டு. ஆனால் எல்லா தொல்கவிதைகளும் வர்ணனையால்தான் கவிதையாகின்றன.

5. கடைசியாக, ஒரு கவிஞனுக்கே உரிய முத்தாய்ப்புள்ள கவிதை இது. எங்கள் பாவங்களுக்கு தண்டனையாக எங்கள் பாவங்களையே எரித்துவிடு என்ற வரியில் உள்ள நுண்ணிய தாவலையே இன்றும் கவிதை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. ஒரு கவிதையாகவே இது உலகில் இன்றும் எழுதப்படும் நவகவிதைகளுக்கு நிகரானவை இவ்வரிகள்.
*

கவிதை இல்லாமல் இயற்கையை ‘நேரடியாக’ ரசிப்பது பற்றி விரிவாகவே பேசவேண்டும். இம்மாதிரி கருத்துக்களை நாம் அறிவுத்தளத்தில் ஓர் அந்தர வெளியில் நின்று உருவாக்கிக் கொள்கிறோம். ஒரு கவிதையில் சூரிய உதயத்தை ரசிக்காத ஒருவரால் வெளியே நிகழும் சூரிய உதயத்தை ரசிக்க முடியுமா என்ன? அது என்ன, பூமி சூரியனை நோக்கி திரும்பி மண்மீது வெளிச்சம் வருகிறது, அவ்வளவுதானே?

நித்ய சைதன்ய யதியும் நடராஜகுருவும் இமயமலைக்குச் செல்கிறார்கள். [குருவும் சீடனும், தமிழாக்கம் ப.சாந்தி, எனி இண்டியன் வெளியீடு] நடராஜ குரு சொல்கிறார். இந்த இமயமலை நமக்கு காளிதாசனால் காட்டித்தரப்படுகிறது. அவனில்லாமல் இதைப் பார்க்க முடியாது என்று.

ஆதிவாசிகள் இயற்கையழகை உணர்வதேயில்லை. அவர்களூக்கு அது ஒரு பொருள்வய நிகழ்வு மட்டுமே. இயற்கையை அழகாக ஆக்கியது கவிதை. ஆதிமனிதன் அதை கவிதையாகக் காணமுற்பட்ட கணம் முதல் அது நிகழ ஆரம்பித்தது. செவ்வொளியை பொன்னிறப் பிடரிமயிராக அவன் எண்ண ஆரம்பித்தக் கணம்!

அந்தக் கணம் முதல் மானுட மனம் இயற்கையை கவிதையால் அடையாளப்படுத்திக் கொண்டே இருக்கிறது. உலகில் எழுதப்பட்ட கவிதைகளில் தொண்ணூறு சதவீதக் கவிதைகளும் இயற்கை வர்ணனைகளே. இன்று எழுதப்படும் கவிதைகளில் தொண்ணூறு சதவீதக் கவிதைகளும் ஒருவகையில் இயற்கை வர்ணனைகளே

இயற்கை அமானுடமானது. தன்னளவில் பூர்ணமானது. மனிதன் அதை மானுட உணர்ச்சிகளால் அடையாளப்படுத்தி தன்வயப்படுத்துகிறான். அதன்பின்னரே இயற்கை அவனுடன் உரையாட ஆரம்பித்தது. அதன்பின்னரே சூரிய உதயத்துக்கும் அஸ்தமனத்துக்கும் கடல் அலைக்கும் மழைக்கும் எல்லாம் ‘அர்த்தம்’ வந்தது. அந்த அர்த்தத்தை உருவாக்கி அளிப்பதே கவிதையின் பணி.

அந்த அர்த்ததையே நாம் இயற்கையில் ரசிக்கிறோம். அந்த அர்த்ததை உணர்ந்துதான் மன எழுச்சி கொள்கிறோம். அந்த அர்த்தம் இல்லாத இயற்கை நமக்கு முற்றிலும் அப்பாற்பட்டது. அதை ஒருவேளை மகாஞானிகள் தங்கள் வெறுமை நிலையின் உச்சியில் உணரக்கூடும். பிறருக்கு அது சாத்தியமல்ல.

அந்த அர்த்தம் நமக்கு மொழிவழியாகவே அளிக்கப்பட்டு விடுகிறது. நாம் பிறந்து விழுவதே அதில்தான். அதை இயல்பாக நாம்  அறிந்துகொண்டிருக்கிறோம். ஒரு கவிதை கூட வாசிக்காத ஒருவன்கூட காளிதாசன் கண் வழியாகவே இமயத்தைப் பார்க்கிறான். கம்பனின் கண்வழியாகவே காவிரியைப் பார்க்கிறான். அவர்களின் உருவகங்கள் மொழியாக மாறி நம்மை சூழ்ந்துள்ளன.

எமர்சன் அவரது ‘இயற்கை’ [Nature] என்ற புகழ்மிக்க கட்டுரையில் இயற்கை நமக்கு மொழிவடிவமாகவே உள்ளது என்கிறார். மொழியால் மட்டுமே இயற்கையை நம்மால் உணர முடியும்.

 

ஆனால்  நாம் அவற்றுக்கு ‘பழகி’ விட்டிருக்கிறோம். ஏன் நமக்குச் சூரிய உதயம் ஒரு பொருட்டே அல்ல. ஏனென்றால் அது நம் அன்றாட நிகழ்வாக ஆகிவிட்டிருக்கிறது. அதற்கு வழக்கமான ஓர் அர்த்தத்தை அனிச்சையாகக் கொடுத்தபின் நமது மனம் அடுத்த வேலைக்குச் செல்கிறது.

கவிதை அந்த பழக்கத்தை குலைக்கிறது. ‘பரிச்சயமழிப்பு’ என்பதே கவிதையின் முதல் வேலை. நாம் அன்றாடம் பார்க்கும் ஒரு விஷயத்தை கவிதை பிறிதொன்றாக ஆக்குகிறது. புதிய கோணத்தில் புதிய பொருளில். எல்லா கலைகளும் செய்வது அதையே. தினம் சூரியன் உதிக்கிறான், ஏன் அதை வரைய வேண்டும் என்று கேட்டாலும் இதுவே பதில்.

நாம் இன்று காணும் இயற்கைக்காட்சிகள் இந்த நூற்றாண்டின் மகத்தான திரைப்பட ஒளிப்பதிவாளர்களால் உருவாக்கி நமக்களிக்கப்பட்டவை.  அவர்களின் காமிரா நம் கண்ணை பழக்கிவிட்டிருக்கிறது. அவர்களை முந்தைய ஓவியங்கள் வடிவமைத்தன. அந்த ஓவியங்களை கவிதைகள் தூண்டின.

நீங்கள் சூரிய ஒளியைப் பார்க்கையில் உங்கள் கண்ணை ரெம்ப்ராண்ட் தீர்மானிக்கிறார். தன் ஓவியங்கள் வழியாக, அந்த ஓவியங்களைக் கண்ட ஒளிப்பதிவாளர்கள் வழியாக. நீங்கள் ‘சும்மா’ போய் சூரியனை பார்த்துவிட முடியாது -மகாயோகியாக இருந்தாலொழிய.

ஆனால் அதற்கும் நாம் பழகிவிடுகிறோம். அப்போது புதிய கலை மீண்டும் நம்மை ‘கலைக்கிறது’. அவ்வாறு ஒவ்வொரு முறையும் கலையால் புதிதாக துலக்கித்தரப்பட்ட இயற்கையை , கலையால் பரிச்சயமழிக்கப்பட்டு காட்டப்பட்ட புதிய இயற்கையை,  ரசிக்காத ஒருவருக்கு உண்மையில் இயற்கை அனுபவமே கிடையாது. அவர் இயற்கை அனுபவம் இருப்பதாக எண்ணிக்கொண்டிருக்கிறார், அவ்வளவுதான். ”சூரிய உதயமா, அதை நான் சின்னவயசிலேயே பார்த்துட்டேன்’ என்ற அளவில்.

இயற்கையை ஒவ்வொருநாளும் பார்ப்பவரே இயற்கையை அறிய முடியும். ஒவ்வொரு கணமும் பார்ப்பவரே இயற்கையை உணர முடியும்.  கவிதையும் கலைகளும் இல்லாமல் அந்த நிரந்தரப் புதுமை இயற்கைக்குச் சாத்தியமே அல்ல. நடராஜகுருவின் சொற்களில் ‘இயற்கை கலையை பின்பற்றுகிறது’ .ஆகவே கவிதையில் நிகழாத சூரிய உதயம் வெளியே நிகழப்போவதில்லை.

எளிமையாகச் சொல்கிறேனே, குற்றாலம் அருவியை மலைமத்தகத்தின் தந்தம் என்றோ மலைராணி முந்தானை என்றோ மலைமகளின் வெண்புன்னகை என்றோ பொருள்கொள்ளும் மனமே அதை பரவசம் கொண்டு ரசிக்கிறது. குறைந்தபட்சம் அதை மலையின் கை என்றோ ஆசி என்றோ அது எண்ணியாகவேண்டும். இல்லையேல் எஸ்.வி.வியின் தாசில்தார் மனைவி கேட்டது போல ”என்னமோ குத்தாலம் மகா அற்புதம்னீகளே, இங்கேயும் தண்ணி மேலேர்ந்து கீழதானே விழுது?” என்று கேட்க வேண்டியிருக்கும்.

அத்துடன் ஒன்று, ‘திட்டம் இல்லாமல்’ இயற்கையைப் பார்ப்பது என்று சொல்கிறீர்களே அதுவே பிழை. அனிச்சையாக இயற்கை உங்கள் கண்ணுக்குப் பட்டுக்கொண்டே இருக்கும்போது சட்டென்று ஒரு தற்செயல் திறப்பில் நீங்கள் ஒரு மனச்சலனத்தை அடைவதை இயற்கை அனுபவம் என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள். அது இயற்கை அனுபவமே அல்ல, அது ஓர் ஆச்சரியம் மட்டுமே. சில கணங்களில், மிகமிகச்சில கணங்களில், அது விலகிப்போகும். நீங்கள் அடிக்கடி அதைப் பார்ப்பதில்லை என்பதனால் நினைவில் வைத்திருப்பீர்கள். ‘எண்பத்தெட்டிலே  ஒருவாட்டி திருப்பதிக்கு ரயிலிலே போனப்ப நெலா பாத்தேன். அருமையா இருந்தது’ என்பவர்களை பார்த்திருக்கிறேன். அது இயற்கை அனுபவமல்ல, அகம் அறியும் ஒரு அதிர்ச்சியோ சலனமோ மட்டுமே

இயற்கையை அதை இயற்கை என்பதனால் விழிப்பை உருவாக்கிக்கொண்டு பார்க்க வேண்டும். தோரோவின் வால்டன் குறிப்புகளில் மிக விரிவாக அதை விவரிக்கிறார். இயற்கையை ஓர் ஓவியத்தைப் பார்ப்பது போல அதற்கென்றே அமர்ந்து மனம் கொடுத்து ரசிக்க வேண்டும். ஒரு சூரிய உதயத்தைப் பார்க்க கிளம்பிச் செல்லலாம். இயற்கையை திட்டமிட்டு, அணுவணுவாக, கவனமாக,  விழிப்புணர்வுடன் பாருங்கள், அந்த அனுபவம் வேறு. அது எளிமையான ஆச்சரியம் அல்ல. இயற்கை மெல்லமெல்ல கண்முன் விரிந்து பிரம்மாண்டம் காட்டும் நிலை அது.
ஒவ்வொருநாளும் உதயத்தையும் அஸ்தமனத்தையும் நான் ஈடுபட்டு ரசிப்பவன். இயற்கையுடன் இருத்தல் என்பதே என் யோகம் என்று எண்ணுபவன். இயற்கையுடன் இருப்பதற்காகவே காடுகளில் ஊர்களில் அலைபவன். ஆகவேதான் இந்தக் கவிதை எனக்கு தேவைப்படுகிறது. இது புற ஒளியை  அக ஒளியாகவும் அர்த்தப்படுத்துகிறது. ஒரு விண்கோளத்தில் இருந்து மண்மீது விழும் பௌதிகமான ஒளியை அலகிலா பிரபஞ்ச ஆற்றலாகவும், முடிலியின் அருளாகவும்  எனக்குக் காட்டுகிறது. இவ்வாறு விரிவாக்கி அர்த்தப்படுத்திக்கொண்ட இயற்கையில்தான் என் மனம் விரிய முடியும். அதுவே இயற்கை அளிக்கும் அனுபவம் என்பது.

ஏனென்றால் நான் யோகியோ தூய மிருகமோ அல்ல. கற்பனை கொண்ட மனிதன்.

ஜெ

ஒளி வாழ்த்து!

முந்தைய கட்டுரைஈரோடு நூல்வெளியீடு பங்கேற்பாளர்கள்
அடுத்த கட்டுரைஅந்த சபை..