ஜெயமோகன் அவர்களுக்கு
வெண்முரசு இணையதளங்கள் – http://www.jeyamohan.in/?p=62997
இன்று இந்த சுட்டியில் வெண்முரசுக்கான இனயதளங்களை குறிப்பிட்டு இருக்கக்கண்டேன். தவிர ஒரு பெட்டியும் தளத்தில் பொதுவாய் சேர்க்கப்பட கண்டேன்.
இவை தவிர தாங்கள் ‘பனி மனிதன்’, ‘அறம்’ ஆகிய படைப்புகளுக்கும் விவாத தளங்கள் தொடங்கி எதோ ஓரிரு பதிவில் சுட்டியும் கண்டதாய் ஞாபகம்.
இப்பொழுது நீலத்திற்கு அனைவரும் குறிப்பிடுவது போல் நான் அறம் படித்தபொழுது (குறிப்பாக தாயார் பாதம்) உங்கள் தளத்தில் தொடர் கடிதங்களாய் ஒரு பதிவு கண்டேன். அதில் ஒரு பெண்மணி குறிப்பிட்ட கருத்தை சரியான அலைவரிசையில் இருக்கிறது என்றும் குறிப்பிட்டு இருந்தீர்கள். நிச்சயம் அந்த கதை எனக்கு அவர் சொல்லிய கருத்திற்கு பின் இன்னும் ஆழமானதாக இருந்தது. எப்படி நான் விட்டேன் என்றும் எண்ணினேன்.
இவை போல எனக்கு மாடன்விளி-யில் ஏதோ சரியாக பிடி இல்லை இன்னும்.
அ.முத்துலிங்கம் அவர்கள் ஒரு சிறுகதை அவர் தளத்தில் எழுதி, புரியாவிட்டால் புரியவைக்க எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். அவை வந்தால் மட்டும் புரிவைப்பேன் என்று ஒரு முறை பதிவிட்டு இருந்தார். நான்தான் எஞ்சினியர் படித்து (?) புதிர்களுக்கு அஞ்சாதவர்கள் கும்பலில் ஒருவன் ஆயிற்றே.. மின்னஞ்சல் அனுப்பி பின் அடுத்த பதிவில் அவரே பதில் தர விடை கண்டேன்.
கேட்க வந்தது என்னவென்றால் ஒருவரின் complete profile-ல்லில் அவர்களுடைய எல்லா தளங்களும் பட்டியலிட்டிருக்கும் blogger-ல். உங்களுடயதில் அப்படி இல்லை. இது ஒரு இடைஞ்சலாக இருக்கும் மற்றும் ஒரு விளக்கம் இல்லாமல் புரிந்து கொள்ளும் முயற்சியும் கெடும் என்று தவிர்க்கப்பட்டுள்ளனவா? மற்றும் இவைகள் போலவே தாங்கள் வேறு தளங்களும் தொடங்கி உள்ளீர்களா (விஷ்ணுபுரம் தவிர – வெண்முரசு, பனி மனிதன் பாணியில்)?
இவைகள் தவிர ஒன்று, நான் நண்பர்களுடன் சென்னையில் தங்கி கணினியில் வேலை பார்க்கிறேன். வெண்முரசு தொடங்கிய புதிதில் என் அறை நன்பன் ஒருவனிடம் வெண்முரசு பற்றி பேசப்பேச விவாதத்துக்காகவே அவன் வெண்முரசு படிக்க ஆரம்பித்து, அடுத்து விஷ்ணுபுரத்தில் மூழ்கியே விட்டான். விடுமுறை நாளில் சாப்பிட கூட வராமல்! பயங்கர வேகமாகவும் படித்து வருகிறான். எனக்கு பொறாமையாக இருக்கிறது! கொற்றவைக்கு அட்டைபோட்டு அவன் கண்ணில் படாமல் வைத்துள்ளேன்
நன்றி
வெ. ராகவ்
அன்புள்ள ராகவ்
பொதுவாக என்னுடைய நூல்களை வாசித்தபின் கடிதங்கள் வந்துகொண்டே இருக்கும். அவ்வப்போது மதிப்புரைக்குறிப்புகளும் வரும். அவற்றை இந்த தளத்திலேயே பிரசுரிப்பேன், சுட்டியும் அளிப்பேன்
வெண்முரசு வந்தபின்னர்தான் ஒன்று தோன்றியது அதற்கான எதிர்வினைகளை தொகுக்கலாமே என. ஏனென்றால் ஏராளமான எதிர்வினைகள். நூற்றுக்கணக்கில். அவை ஒரே இடத்தில் கிடைத்தால் வாசகர்கள் மாற்றுவாசிப்புகளை அறிய உதவும் என எண்ணினேன்
ஆகவேதான் முக்கியமான எல்லா நூல்களுக்கும் அவ்வாறு இணையதளங்கள் தொடங்கப்பட்டன. அவற்றைப்பற்றிய கட்டுரைகளுக்குக் கீழே அவற்றைப்பற்றிய சுட்டிகள் இருக்கும். அவை வழியாக அந்தத் தளத்துக்குச் செல்லமுடியும்
விஷ்ணுபுரம் இணையதளம்
[விஷ்ணுபுரம் சம்பந்தமான அனைத்துக்கட்டுரைகளும் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன, நாவலைப்புரிந்துகொள்வதற்கான பிற கட்டுரைகளும் உண்டு]
பின் தொடரும் நிழலின் குரல் இணையதளம்
பனிமனிதன் இணையதளம்
காடு இணையதளம்
இவை தவிர
விஷ்ணுபுரம் வாசகர் வட்ட இணையதளம்
நண்பர்களால் நடத்தப்படுகிறது
விஷ்ணுபுரநண்பர்களால் இரு இணையதளங்கள் நடத்தப்படுகின்றன
காந்தி இன்று இணையதளம் நண்பர் சுநீல் கிருஷ்ணனால் தொடங்கப்பட்டு அவரது நண்பர்களால் நடத்தப்படுகிறது
குருநித்யா இணையதளம் நண்பர் ஸ்ரீனிவாசனால் நடத்தப்படுகிறது
ஜெ