ஜெ,
கிருஷ்ணன் குவலயாபீடம் என்னும் யானையை அழித்தது பாகவதத்திலே வருகிறதா? அந்தப்பெயர் பாகவதத்தில் உள்ளதுதான் என நினைக்கிறேன் இல்லையா? அதற்கு என்ன அர்த்தம்?
கிருஷ்ணன் அந்த யானையைக்கொல்வது கஜசம்ஹாரமூர்த்தி என்ற புராணத்துக்குச் சமானமாக உள்ளதே. இங்கிருந்துதான் அங்கே போயிருக்குமா?
சிவராஜ்
அன்புள்ள சிவராஜ்
எனக்கு நீலம் பற்றி வரும் கடிதங்களில் சைவர்கள் மிகமிகக்குறைவு என்பதை கவனிக்கிறேன் . பலசைவர்களுக்கு பாகவதக்கதைகள் எளிமையாகக்கூட அறிமுகமாகவில்லை என்றும். வைணவர்களும் இதேயளவில்தான் இருப்பார்கள் என்று நினைக்கிறேன்
அந்தக்கதை பாகவதத்தில் உள்ளதுதான். குவயலம் என்றால் குவளைமலர். குவளைமலர்ப்பீடம் என்றுபொருள்.
கம்சன் நெஞ்சில் இருந்த நீலமலர்ப்பீடம் அது என்று சொல்லலாம். அதை அழித்து அவனை வெல்கிறான் கண்ணன்
யானையை கொல்வதும் வெல்வதும் அக்காலத்தில் ஒரு வீரனின் உச்சகட்ட வெற்றியாகக் கருதப்பட்டது. குருநாதர்களையே போரில்கொன்ற காலகட்டத்தில் யானையைக்கொல்வதொன்றும் பெரிய விஷயமல்ல. சங்க இலக்கியத்திலும் ‘களிறு எறிந்து பெயர்தல்’ பெரிய வீரச்செயலாக கருதப்பட்டது.
அந்தவகையில் பெரும் வீரச்செயலாகக் கருதப்பட்டிருந்த அந்த செயலே தெய்வங்களுக்கும் அளிக்கப்பட்டிருக்கலாம்.
அது பின்னர் வளர்ந்தது. யானை என்பது கருமை, இருள். மதம்.அதை வெல்வது என்பது தமோகுணத்தை வெல்வது. கஜசம்ஹாரமூர்த்தியின் சிற்பம் அந்தப்பொருள்கொண்டதுதான். அது இருளைப் போர்த்தி கொஞ்சமாக வெளிப்படும் சிவனைக் காட்டுகிறது. அவருக்கு இருபக்கமும் இரு நிலவுகள்போல இரு தந்தங்கள்
யோக இரவு -க்கு அதுவே குறியீடு என்பார்கள். அது இரு பிறைநிலவுகள் கொண்டது என சொல்லப்படுவதுண்டு
கிருஷ்ணன் யானையைக்கொன்றது இந்த அளவுக்கு குறியீட்டுடன் அங்கே சொல்லப்படுவதில்லை. அது கம்சனின் மதம் அறுத்தல் என்றுமட்டுமே பொருள் கொள்ளப்படுகிறது
ஜெ
வெண்முரசு நாவல் தொடர்பான அனைத்து விவாதங்களும்