«

»


Print this Post

அனைத்தும் அளிக்கப்பட்டிருக்கிறது!


அன்புள்ள ஜெயமோகன், நான் பல முறை உங்கள் இணையதளத்தை படித்தாலும், இது தான் முதல் முறையாக எழுதுகிறேன். உங்களைப்பற்றி பல பேர் பலவிதமாக சொன்னாலும்(அண்மையில்), நான் உங்களை ஒரு அறிவுஜீவியாகத்தான் நினைக்கிறன். அந்த அளவு ஆழமான சிந்தனையும், அதை பிசிறின்றி அளிக்கும் விதமும். வாழ்கையை பற்றிய உங்களின் அனுமானங்கள் ஒரு வகையில் எனக்கு வழிகாட்டியிருக்கின்றன.

குடும்பம் மற்றும் குழந்தைகள் வாழ்வை சுவாரசியமாக ஆக்க உதவும் என்ற கருத்து எனக்கும் முன்னமே இருந்தாலும், உங்கள் எழுத்தில் காணும்போது ஒரு ஆறுதல். நான் ஒன்பதாம் வகுப்பு முதலே ஒரு குழப்ப மன நிலையில் இருந்துள்ளேன். அந்த வயதில் தான் எனக்கு நாம் என் வாழ்கிறோம், என்ன செய்கிறோம் என்ற எண்ணங்கள் மிகவும் தீவிரமாக தோன்ற ஆரம்பித்தன. உட்கார்ந்த இடத்திலேயே இந்த பிரபஞ்சத்தின் எல்லையில்லாத்தன்மையையும் என் சிறுமையையும் உணர்ந்த நாட்கள் மிகவும் அதிகம்.

ஆனால் படிப்பை என் தலையாய கடமை என்று எண்ணியதால் என்னை நான் படிப்பில் தீவிரமாக ஈடுபடுதிகொண்டேன்.ஆனால் கல்லூரி சென்றதும், மீண்டும் அந்த வெறுமை தாக்கியது. அங்கேயும், என் பெற்றோர் படும் அவதியை எண்ணி நான் படிப்பில் கவனம் செலுத்தினேன். நான்காவது வருடம், வேலை கிடைத்ததும் ஏற்பட்ட ஒரு வெறுமை என்னால் சொல்லி புரிய வைக்க முடியாதது. அப்போதும் ஒரு வழியாக நான் என்னை மேல்படிப்பின் வழி செலுத்திகொண்டேன். உலகத்தில் வெறும் இன்பம் (pleasure )  தான் இருக்கிறது, மகிழ்ச்சி, வாழ்வின் உண்மையை அறிந்த பூரிப்பு, ஞானம் எல்லாம் வெறும் பொய் என்று நானாகவே முடிவு எடுத்துக்கொண்டேன். அதன் நோக்கம் வெறும் படித்து பொருள் ஈட்டி என் பெற்றோருக்கு என் கடமையை ஆற்றவேண்டும் என்ற ஒரே நோக்கம் தான். அது எனக்கு அப்போது வசதியான தத்துவமாக இருந்தது.

காமம் என்பது ஒரு எட்டாம் வகுப்ருந்தே ஒரு தொடர்ந்த ஈடுபாடாக கூடவே இருந்து வந்துள்ளது. காமத்துக்கு அப்புறம் தான் தத்துவம் எல்லாம் என்றே இருந்துள்ளேன். ஒரு கணம் பிரபஞ்சத்தின் எல்லை என்னை மலைக்க வைத்தாலும், மறு கணமே காமம் என் கவனத்தை திசை திருப்பியது உண்டு. அதே சமயம், காமத்தை வெறுத்து ஒதுக்கிய நாட்களும் உண்டு. காமம் மற்றும் பெற்றோரின் வற்புறுத்துதல் ஆகியவை மீண்டும் என்னை திருமணத்தின் பக்கம் திருப்பியது. அப்போதும் நான் ஒரு சமரசம் தான் செய்து கொண்டேன். எனக்கு வேண்டிய படி ஒரு பெண்ணை தேர்ந்தெடுக்காமல், எல்லாம் ஒன்றுதான் என்ற அரைகுறை அணுகுமுறையில், பெற்றோர் சொல்படி ஒரு பெண்ணை மணமுடிந்தேன்.

இதுவரை மிகப்பெரிய பாதிப்பு இல்லாமல் சென்ற வாழ்கை இப்போது கடினமாக ஆகி விட்டது. மனைவியின் அளவுக்கு மீறிய கோப குணத்தாலும் அதன் கூடவே சேர்ந்து கொள்ளும் அளவுக்கு மீறிய தாழ்வு உணர்ச்சி மற்றும்  மறை சிந்தனைகளாலும், இதுவரை செய்த சமரசங்களை விட மிகப்பெரிய சமரசங்களை செய்து கொண்டுள்ளேன். அவள் சிறிய அளவில் ஒரு மனநோயாளியாகவும் இருக்கலாம். நான் நினைப்பதை சொல்வதே ஒரு potential  வெடிகுண்டாக இருக்ககூடிய நிலைமையில் உள்ளேன். ஆனாலும் நான் போலி வாழ்வில் தேறி விட்டேன். ஒரு குழந்தையும் உண்டு. குழந்தையின் வசம் ஒரு பற்றுதலையும் உணர்கிறேன். சில சமயங்களில் இந்த வாழ்வை சுவாரசியமாக ஆக்க வேண்டிய உறவுகள் என்னை போன்ற ஆளுக்கு ஒத்துவராத ஒன்று என்றும் நினைப்பது உண்டு. அந்த சமயத்தில் நான் உங்களை காண்கிறேன். உங்கள் வரிகளை படிக்கிறேன். எனக்கு ஆறுதலாக உள்ளது. இது தான் சுவாரசியம் என்று சொல்லிக்கொள்கிறேன். என் மனைவியை மாற்றியும் வருகிறேன். மிக மெதுவாக.

உங்களை போல் ஒரு அறிவுஜீவி குடும்ப வாழ்வில் காட்டும் ஈடுபாடு எனக்கு ஒரு மிகப்பெரிய ஆதரவு. மனைவியின் இந்த நிலைமையால் பல  நண்பர்களை இழந்து உள்ளேன். ஆனாலும் ஒரு குருட்டு நம்பிக்கை மற்றும் தீர்மானத்துடன் பயணித்துள்ளேன். முக்கியமான முடிவுகளில் யோசிக்க வேண்டும் என்று கற்றுக்கொண்டுள்ளேன். வாழ்வின் நோக்கம் மற்றும் தத்துவசிந்தனை போன்றவற்றை கொஞ்சமாவது என் பக்கம் வைத்துக்கொள்ள உதவுவது உங்கள் எழுத்து தான். நீங்கள் ஒரு பொக்கிஷம் எனக்கு. நிஜமாக.

அன்புடன்,

எஸ்
 

அன்புள்ள நண்பருக்கு,

உங்கள் மனநிலை குறித்த விவரணையை வாசித்தேன். அந்த மனநிலைகளில் நானும் இருந்திருக்கிறேன். பிரபஞ்சத்தில், வாழ்வில் நாம் உணரும் பிரம்மாண்டம் நம்மை அர்த்தமற்றவராக சிறுத்து மண்ணோடு மண்ணாக்கிவிடும். அந்நிலையில் எந்த உலகியல்செயல்பாட்டுக்கும் பொருளிருக்காது. எதுவுமே ஆழமான மனத்தூண்டலை அளிக்காது. அவிரதி என்று பதஞ்சலி யோகம் சொல்லும்  மனநிலை அது

அந்த மனநிலையில் இருந்து நான் மீண்ட ஒரு நாளைப்பற்றி எழுதியிருக்கிறேன். தற்கொலையிந் முனையில் இருந்து எழுந்து வந்த நாள் அது. அதன்பின் நானே முடிவுசெய்துகொண்டேன், இனி வாழ்க்கையில் துயரப்பட மாட்டேன் என்று. இருத்தல் என்பதே பேரின்பம். உயிரோடிருத்தல். ஒவ்வொருநாளும். தூக்கம் விழிப்பு உணவு எல்லாமே…ஒவ்வொருகாலையும் மாலையும் கோடையும் பனியும்… ஒரு சுயப்பயிற்சி போல எல்லாவற்றையும் ரசிக்க என்னைப் பழக்கிக் கொண்டேன். மிக எளிய விஷயம் இது. இதை நான் ரசிக்கிறேந் என்று சொல்லிக்கொள்ளுங்கள் அதை ரசிக்க ஆரம்பிக்கலாம். மனித மனம் ஒன்றும் பெரிய விஷயம் அல்ல, மிக சாதாரணமாகப் பழக்கி எடுக்கக்கூடிய ஒன்று அது. பழக்கங்களால் ஆனது, சூழலை பிரதிபலிப்பது.

உங்கள் கடிதத்தில் இருந்து நான் புரிந்துகொண்டது உங்களிடம் இருந்த அவிரதியே பிரச்சினை என்று. உன் மேல் எனக்கு ஆர்வமில்லை என்ற பார்வையுடன் நீங்கள் ஒருவரைப் பார்த்தீர்கள் என்றால் அவர் உங்கள் மேல் வெறுப்பைக் கொட்ட ஆரம்பிப்பார். உங்களுக்குள் இருக்கும் அவிரதியை – விரக்தியை – இயற்கை உங்களுக்கு மேல் பிரதிபலித்துக்காட்டும்.

நான் எளிமைபப்டுத்தவில்லை. சகமனிதர்களைக் கையாள்வது அத்தனை எளிய விஷயம் அல்ல. மனிதர்களின் பேராசை, மூர்க்கம், வெறுப்பு, அறியாமை ஆகியவற்றை சந்திப்பதில் நாம் பெரிதாக ஏதும் செய்வதற்கு இல்லை. அது ஒருவகையில் நம்மை மீறிய நிகழ்வு. ஆனால் நாம் நம்மை பெரும்பாலும் சமநிலையில் வைத்துக்கொள்ளலாம்.

சமநிலை என்பதே என்னுடைய கொள்கை என எனக்கே நான் சொல்லிக்கொள்வேன். இங்குள்ள எதிலும் எனக்கு விலக்கம் இல்லை. என் ஒவ்வொருநாளும் எனக்கு உவப்பாக வேண்டும். ஒவ்வொன்றும் உவப்பாக வேண்டும். ஆனால் இவற்றை அவதானிக்கும் அளவுக்கு தூரமும் விலக்கமும் எனக்குத் தேவை. இதுவே என் வழி.

பிரபஞ்சம் மிகப்பெரியது, மனிதன் மிகச்சிறியவன் என்பது ஒரு கோணம். மிகச்சிறிய மனிதனுக்கு இந்த மிகப்பெரிய பிரபஞ்சம் அளிக்கப்பட்டிருக்கிறது என்பது இன்னொரு கோணம். நன் இரண்டாவது கோணத்தை தேர்வு செய்துகொண்டேன்

ஜெ

மறுபிரசுரம் முதர்பிரசுரம் Jan 19, 2010

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/6303/

7 comments

Skip to comment form

 1. ratan

  அன்புள்ள ஜெ.,

  நீங்கள் சொல்வது ஒரு மனப்பயிற்சி போலவே தோன்றுகிறது. தன்னம்பிக்கைப் புத்தகங்கள் காட்டும் எளிய வழிமுறையைத்தானே நீங்களும் சொல்கிறீர்கள்.

  மனதின் வெறுமையைத் தாண்டிச் செல்ல இதைவிட சிறந்த வழி கிடையாதா?

  நன்றி
  ரத்தன்

 2. ஜெயமோகன்

  அன்புள்ள ஜெயமோகன்,
  உங்கள் நேரத்தை செலவழித்து பதில் எழுதியமைக்கு நன்றி. நீங்கள் சொல்வதுபோல் நானும் எனக்கு நானே அனைத்தையும் ரசிக்கவேண்டும் என்று பலமுறை சொல்லிக்கொண்டு இருக்கிறேன். பதஞ்சலி யோகம் பற்றி எனக்கு அறிமுகம் இல்லை. நான் இது பற்றியும், உங்கள் அனுபவம் பற்றியும் நீங்கள் எழுதியதை தேடிப்படிப்பேன். சமீபத்தில் ஒரு சொற்பொழிவை மீண்டும் கேட்டேன். உங்களுக்கு ஏற்கனவே பரிச்சயம் என்றால் மன்னிக்கவும். http://www.youtube.com/watch?v=ji5_MqicxSo (ஆங்கில சப்-டைட்டில் எனக்கு உதவியது). இது ராண்டி பௌச் என்ற ஒரு பேராசிரியர் தனது கடைசி பாடமாக கார்னெகி மெல்லோன் பல்கலைகழகத்தில் ஆற்றிய உரை. புற்று நோய் வந்து சில மாதங்களே வாழ்வில் மீதமிருக்கும் நிலையில் அவர் இதை வழங்கினார். பல விஷயங்கள் அதில் எனக்கு கிடைத்தாலும்

  மூன்று விஷயங்கள் – “We cannot change the cards we are dealt , just how we play the hand ” , “Find the best in everybody. Wait long enough, and people will surprise and impress you. It might even take years, but people will show you their good side. Just keep waiting.” மற்றும் நேரத்தின் மதிப்பு, ஆகியவை எனக்கு உரைத்தன. மேலும், வாழ்கையை ஒரு வரமாக எடுத்துக்கொண்டு வாழ்வது (உங்கள் வார்த்தையில், “இருத்தலே இன்பம்”) ஒரு சாகபோகும் மனிதனின் உற்சாகம் எனக்கு உணர்த்துகிறது. அதற்கு மேல் வாழ்கையில் ஒரு passion -இன் அவசியத்தை பேசுகிறார். நான் அதை இன்னும் என் வாழ்கையில் கண்டுகொள்ளவில்லை.

  அனால் குடும்ப வாழ்க்கையில் ஒரு முரண்பாடு என்னை இன்னும் உறுத்திக்கொண்டு இருக்கிறது. மனைவியிடம் முழுவதும் உண்மையாக, உண்மையை சொல்லி இருப்பது எனக்கு ஒரு ஆசையாக இருந்தாலும், பல சமயம், அவள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டினால் அவள் பெரும் துன்பத்துக்கு ஆளாகும் நிலைமை சாத்தியமாதலால், மிகுந்த கவனத்துடன் நிலைமையை கையாள வேண்டியிருக்கிறது. அதனால் அவள் ஒவ்வொரு தடவையும் கீழே விழுந்து வாரி தான் உறவுகளை எப்படி கையாளுவது என்று கற்றுக்கொண்டு இருக்கிறாள். அனால் நான் உண்மைகளை சொன்னால் என்னை நம்புவதன் சாத்தியம் மிகவும் குறைவு, மேலும் நான் இது வரை அவளிடம் வளர்த்த நம்பிக்கையும், அவள் உள்ளத்துக்கு எனக்கு இருக்கும் அனுமதியையும் இழக்கும் அபாயம் உள்ளது.

  உண்மையாக இருப்பது முக்கியமா (என் கோபம், எரிச்சல், அவள் செய்கைகளில் எனக்கு ஏற்படும் வருத்தம், என் காதல், எல்லாம் உண்மையே) அல்லது, என் எண்ணங்களை, உணர்ச்சிகளை, (சரி, உணர்ச்சிகளை கூட விட்டுவிடலாம்), நான் அநியாயம் என்று நினைப்பவற்றையாவது வெளியே சொல்லி இருப்பது முக்கியமா? இது ஒரு போலி உறவா அல்லது நான் செய்வது ஒரு நல்ல நோக்கத்தினால் உந்தப்பட்ட தியாகமா? இந்த தியாகத்தை என் பெற்றோரும் சகோதரியும் கூட செய்து வருகிறார்கள். ஒரு (மோசமான இளம் பிராயத்தின் விளைவாக) மன நோயுள்ள குடும்ப உறுப்பினரை எப்படி கையாளுவது என்பது சாதாரண விஷயம் இல்லை என்பது எனக்கு தெளிவாக தெரிந்தாலும், உண்மையாக இருக்க விரும்புவது ஒரு பக்கம் என்னை உறுத்துகிறது. இப்போதைக்கு பொறுமை தான் நான் கடைபிடிப்பது. வருடக்கணக்கானாலும். “Just keep waiting “.

  இந்த நிலைமையில், பெரும்பாலான தத்துவங்களும் வாழ்க்கை நெறிகளும், சாதாரண மனநிலை உள்ளவர்களை நோக்கியே/பற்றியே இருப்பதால், அவற்றை தூக்கி ஏறிய அவசியமாகிறது. சின்மயானந்தர் ஒரு புத்தகத்தில், ஞானத்தை தேடும் முன்னர், உங்களுக்கு இருப்பது ஒரு தத்துவார்த்தமான (philosophical ) பிரச்சினையா அல்லது ஒரு மனோரீதியிலான (psychological ) பிரச்சினையா, அல்லது, உடல் கோளாறா (physiological problem ) என்று தெரிந்து கொள்ளுங்கள் என்கிறார். அதாவது, மனம் மற்றும் உடல் “சாதாரணமாக” இருப்பவர்களை நோக்கியே பலரும் எழுதுகிறார்கள். மன நோயுள்ள ஒருவரை கையாளுபவனுக்கு (இந்த வார்த்தையை விட சிறந்தது – நேசிப்பவனுக்கு) எந்த பாதையும் கிடையாதா என்ற கேள்வி இருந்தாலும், நான் எனக்குள்ளே நோக்கியே விடைகளை, வழிகளைக்கண்டுபிடிக்க வேண்டும் என்று அறிவேன். அன்பின் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நான் தோல்வியையும் லேசாக ஒப்புக்கொள்வதில்லை என்பதால், பலரும் விவாகரத்து செய்யக்கூடிய அளவு போகும் நிலைமைகளில் நான் பொறுமையாக இருந்துள்ளேன். முன்னேற்றம் இருக்கிறது. கண்டிப்பாக.

  இந்த பின்புலத்தில், உங்கள் எழுத்து மற்றும் வாழ்க்கை முறை எனக்கு மிகுந்த உதவியாக இருக்கிறது. பதிலுக்கு மிக்க நன்றி. நான் இன்னும் உங்கள் எழுத்தில் படிக்க நிறைய இருக்கிறது. உங்களிடம் கற்கவும் நிறையவே இருக்கிறது. சிறப்பான ஒரு விஷயத்தை காண்பது இன்பம். நேர்த்தியான இசை, தரமான உணவு முதல், கடுமையான உழைப்பின் பலனாக உருவாக்கப்படும் தொழில்நுட்பங்கள் வரை. சிறப்பு உங்கள் எழுத்திலும் எண்ணத்திலும் பீறிடுகிறது. என்னால் இதை சொல்லாமல் இருக்க முடியவில்லை. முகஸ்துதி என்று எண்ண வேண்டாம். அனால் உங்களை ஒவ்வொரு வாய்ப்பிலும் கொண்டாடவே செய்வேன்.

  அன்புடன்,
  எஸ்

  அன்புள்ள சுரேஷ்,
  அந்த இணைப்பு உதவிகரமானது -பலருக்கும். நான் அவரைப்பற்றி வாசித்திருக்கிறேன்.

  இருவகையான ‘உற்சாக’ வாழ்க்கை நோக்குகள் உள்ளன. ஒன்று, எந்த தத்துவநோக்கும் இல்லாமல் எளிமையாக வெற்றி,போகம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொன்ட வாழ்க்கை நோக்கு. இன்னொன்று வாழ்க்கையின் முழுமையில் உள்ள எல்லா தத்துவக்கூறுகளையும் தன்னுள் கொன்ட , எல்லா வெறுமையையும் அர்த்தமின்மையையும் அறிந்தபின்பும் வருகிற நேர்நிலை / உற்சாக வாழ்க்கை நோக்கு. நான் இரண்டாவதையே சொல்ல வருகிறேன்
  ஜெ

 3. ஜெயமோகன்

  அன்புள்ள ரத்தன்,

  நான் சொல்வது எளிமையான தன்னம்பிக்கைப்பயிற்சி அல்ல, இதுவும் ஒரு மனப்பயிற்சியே. ஆனால் இதில் வாழ்வின் அனைத்து வெறுமையையும் சாரமின்மையையும் உணர்ந்து உணரும் சாரம் ஒன்று உள்ளது.

  இதை நான் உலகின் ஆகப்பெரிய ‘தன்னம்பிக்கையூட்டும்’ நூலில் இருந்து எடுத்துக்கொண்டிருக்கிறேன் — கீதையில் இருந்து

  என் கீதை உரைகளில் பக்கம் பக்கமாக இதன் தத்துவமே பேசப்படுகிறது

  ஜெ

 4. Ramachandra Sarma

  இது ஒரு எளிய தன்னம்பிக்கைப்பயிற்சி என்றுதான் நானும் நினைக்கிறேன்.

  கீதையையும் உங்கள் துணைக்கு இழுக்கிறீர்கள் என்று சொல்கிறேன். கீதை என்றதுமே பலருக்கு ஒருவித கலக்கம் வந்துவிடுகிறது. நமக்கோ தெரியாது.. இவரோ அதைப்பற்றி பேசாத நாளே இல்லை. எதுக்கு வம்பு என்று ஒத்துக்கொண்டுவிடுவர்.

  அரவிந்தர் அவர் நினைத்த அனைத்தையும் எழுதியபோது யாரும் அதை பெரிய அளவில் ஒப்புக்கொள்ளாமல் கேள்விகள் கேட்டவண்ணம் இருந்தனராம். ஒரேபோடு, நான் எழுதியவை அனைத்தும் வேதங்களிலிருந்து எடுத்தவையே என்று சொன்னாராம். அவ்வளவுதான். ஒரு பயல் கேள்வி கேட்கவே இல்லையாம்.

 5. Fairplay

  Dear Jeyamohan
  I have great respect for you as a writer. But you are doing a disservice to your young fan Mr.S and his family by encouraging him to wait for ever for things to change . This young couple need professional help, a counsellor.

 6. ஜெயமோகன்

  அன்புளல் ஃப்யர்பிளே

  நீங்கள் சொல்வதையே நானும் அவருக்குச் சொன்னேன். ஒரு நிபுணர் உதவி. இந்த விவாதம் அந்த விஷயம் ஒரு பொதுக் கவனத்துக்குரியது என்பதனால்

  ஆனால் ஒன்றும் சொல்ல வேண்டும். நீங்கள் வெளிநாட்டில் இருக்கிறீர்கள் என நினைக்கிறேன். இந்தியாவில் உளவியல் ஆய்வுரையாடல் என நடைமுறையில் ஏதும் இல்லை. பெரும் பணம் வாங்கிக்கொன்டு சரசரவென மாத்திரை எழுதி அனுப்பிவிடுவார்கள். நூற்றுக்கணக்கான உதாரணங்கள் என் வாசகர்தரப்பில் உள்ளன. இதோ நீங்கள் எழுதும் கணத்திலேயே கூட ஒரு கடிதம். மருந்தில் இருந்து விடுபடுவதைப்பற்றி… நான் ஈரோடு ஜீவா சாரை அறிமுகம்செய்விப்பதாகச் சொன்னேன். இந்தியாவில் உண்மையான உளமருத்துவமே கிடையாது என்பதே நடைமுறை உண்மை

  அந்நிலையில் தன் உள்ளநிலையை தானே பரிசீலிக்க முடியக்கூடிய ஒருவர் தன்னை திருத்திக்கொள்ள தானே முயல்வதே சிறந்த வழியாகும். அதிலும் எஸ் அவர்களின் சிக்கல் உளவியல் சார்ந்தது அல்ல, அவரது வாழ்க்கை நோக்கு சார்ந்தது. அதை உளவியலாளர் என்ன செய்துவிடமுடியுமென்றும் புரியவில்லை.

  திரு எஸ் அவர்களுக்கு நான் ‘காத்திருக்கும்’படிச் சொல்லவில்லை. வாழ்க்கை சார்ந்த மாற்றுக்கோணம் ஒன்றையே சொன்னேன். அதுவே முக்கியமானது. ஓர் உளவியலாளார் அளிக்கும் ரெடிமேட் பதில்களை விட

  ஜெ

 7. shenkovi

  மாற்றுக் கோணம் மிகவும் உதவிகரமான கருத்து. நான் என் பெற்றோரின் இழப்பில் வாழ்வின் சூன்யத்தை உணர ஆரம்பித்தவன். சமீபத்தில் திருமணம் ஆகி அன்பான மனைவியால் கட்டுண்டு இருக்கிறேன். கேள்வி கேட்ட அன்பருக்கும், சிறப்பாக பதிலளித்த தங்களுக்கும் நன்றி.
  அன்புடன்,
  செங்கோவி

Comments have been disabled.