அலைச் சிரிப்பு

கடைசிச் சரடும் அறுபட்டபின்னர்தான் வானம் சொந்தமாகிறது பட்டத்துக்கு என ஒரு வரி உண்டு. அல்லல்கள் வழியாக தன்னை அறுத்துக்கொண்ட ஒரு மனம் அடையும் சிரிப்புக்கு எல்லை இல்லை. அத்தகைய சிரிப்பு புனைவுலகை காலைவெயில் என ஒளிபெறச்செய்கிறது. மிகச்சிறந்த உதாரணம் வைக்கம் முகமது பஷீர். கவிதையை கையில் வைத்திருக்கும் மணி போல மிளிரச்செய்கிறது. மிகச்சிறந்த உதாரணம் கல்பற்றா நாராயணன்

பலவகையிலும் கல்பற்றாவுடன் ஒப்பிடத்தக்கவர் கவிஞர் இசை. இசையின் சிரிப்பு கல்பற்றாவின் புன்னகையிலிருந்து வேறுபட்டது. தத்துவம் அற்றது. தன்னை ஒரு தெருமனிதனாக நிறுத்திக்கொள்வதன் கொண்டாட்டம் கொண்டது அது.

கல்பற்றாவை போலவே இசையும் அவரது வெளிப்பாட்டுமுறையின் மொழிநுட்பங்கள் பலவற்றை சமகால புனைவெழுத்தில் இருந்து பெற்றுக்கொண்டிருக்கிறார் என்ற எண்ணம் ஏற்படுகிறது

மேகம் கட்டிலுக்கடியில் தவ்ழ்ந்து போகையில்
அவரது தொந்தி நிலத்தில் தோய்ந்து மோசமாக மூச்சு முட்டியது

போன்ற வரியை நாம் சுந்தர ராமசாமியிலோ அசோகமித்திரனிலோ வாசித்திருக்கமுடியும் அந்த உத்திகளைக்கொண்டு மேலும் செறிவான உரைநடையை உருவாக்க முடிந்தமையாலேயே இவை கவிதைகளாகின்றன

இக்கவிதைகளை பொதுவாசகர்கள் வகைப்படுத்த சற்று சிரமப்படக்கூடும். கவிதையில் எப்போதுமே உள்ள கவித்துவப்புனைவுதான் இது. குறுந்தொகை போன்ற சங்ககாலப்படைப்புகளிலேயே இவை அழகாக வெளிப்பட்டுள்ளன. வெறும் நான்கு வரிகளில் ஒரு வாழ்க்கைச்சித்திரம் வரையப்பட்டுவிடும். தமிழில் கலாப்ரியா அத்தகைய பல நல்ல கவிதைகளை எழுதியிருக்கிறார்.

அது கதையாக அன்றி கவிதையாக ஏன் கொள்ளப்படுகிறது என்றால் அதன் கூறப்பட்ட பகுதி சிறியது குறிப்புணர்த்தல் அதிகம் என்பதனாலும் அது சித்திரத்தால் அளிப்பதைவிட அதிக இலக்கியவிரிவை சொல்லிணைவுகளால் அளிக்கிறது என்பதனாலும்தான்.

நவீனக் கவிதைகளில் படிமங்கள் மெல்ல வழக்கொழியத் தொடங்கியது தொண்ணூறுகளில். காட்சி ஊடகங்களின் புதிய சாத்தியங்கள் படிமம் என்ற கவிதைஉத்தியை வேறுதிசையில் உச்சிக்குக் கொண்டுசென்றபோது கவிதை புதிய சாத்தியங்களைத் தேடியது நுண்மொழிபு [micro narrative] என்றோ நுண்புனைவு [Flash fiction] என்றோ வகைப்படுத்தப்படும் உத்தி அதன் விளைவாக உலகளாவிய கவிதையில் ஆழமாக வேரூன்றியது [90 களில் இந்த உத்திபற்றி நான் விரிவாக எழுதியிருக்கிறேன்]

நுண்மொழிபு சிறப்பாக வெளிப்பட்ட கவிதைகளை முகுந்த் நாகராஜன் எழுதியிருக்கிறார். இசையின் கவிதைகளும் அந்த வடிவத்துக்குள் வருபவை. அக்கவிதைகளில் உள்ள ‘நான் ஒரு காட்சியை மட்டும்தான் சொல்கிறேன்’ என்னும் பாவனைக்குமேல் நேரடியான ஓர் உணர்ச்சி வெளிப்பாடும் இணைந்த கவிதைகள் இசை எழுதுபவை

புனைகதையின் தொடக்கம் போல இயல்பான வேடிக்கையுடன் தொடங்கி எளிய விவரணை வழியாக அன்றாடக்காட்சி ஒன்றை வேறு ஒரு கோணத்தில் காட்டி கடைசி வரிகளில் ஒரு செவ்வியல் தன்மையை விளையாட்டாகவோ அல்லது விளையாட்டுபோன்ற ஒரு கனத்துடனோ பூசிக்கொண்டு அமையும் கவிதைவடிவை இசை தனக்கென வடித்திருக்கிறார். இவ்வடிவுக்கு இவரது கவிதைகள் வழியாக நாம் பழக்கப்படும்போதே கவிதையின் இறுதியில் அவ்வரிகளைத் தேடி மனம் செல்கிறது. அந்த இறுதிவரிக்குப்பின் முதல் வரி நோக்கி மீண்டு வருகிறது

ஹஸ்தினாபுரம் ரயில் வண்டி

ஹஸ்தினாபுரத்திலிருந்து
சோமனூர் ரயில்வே ஸ்டேஷனில் இறங்கினேன்.
ஒரு கணம் ஒன்றுமே விளங்கவே இல்லை.
காலம் திகைத்து முழித்தது.
பிளாட்பாரத்தின் சிமெண்ட் பெஞ்சில்
மல்லாந்து படுத்திருந்த குடிகாரன்
சத்தமாக பாடிக்கொண்டிருந்தான்.
ஐஸ் வண்டிக்கு கை நீட்டிய
அழுக்குக் குழந்தையை அவள் தாய்
அடித்து இழுத்துப் போனாள்.
பக்கத்து பள்ளிவாசலில் இருந்து பாங்கு ஒலிக்கிறது.
நான் என் தொடையைத் தட்டி
” ஊசி முனையளவு இடம் கூட கிடையாது ”
என்று சொன்னேன்
அப்போது என் மீது பூமாரி பொழிய‌
போலீஸ்காரர் விசில் ஊதுகிறார்.

ஊசிகுத்த இடமில்லாது தன்னை வெளியேற்றும் உலகை நோக்கித் திரும்பி நின்று புன்னகைக்கு நாடோடியின் பாவத்தை தனக்கென வரித்துக்கொண்டவை இக்கவிதைகள்.அந்த விடுதலையின் கொண்டாட்டத்துக்காக ஒவ்வொரு கண்ணியாக அறுத்துக்கொள்பவை. அந்த அறுபடல் ஒவ்வொன்றும் கவிதையாகியிருக்கிறது

இக்கவிதைகளை வாசிக்கையில் பெரிய துயரங்களின் மேல் போர்த்தப்பட்ட திரையின்மீது வரையப்பட்ட சிரிப்பு என தோன்றுகிறது. அப்பாலிருந்து எழும் மூச்சுக்காற்றில் அது அலையடித்துக்கொண்டே இருக்கிறது

அந்தக்காலம் மலையேறிப்போனது -இசை- காலச்சுவடு வெளியீடு

இசையின்வரிகள்

இசையின் இணையதளம்

முந்தைய கட்டுரைநஸ்ரானி
அடுத்த கட்டுரைகன்யாகுமரி