இந்தப் பெற்றோர்கள்…

அன்புள்ள ஜெயமோகன்,

பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

தங்கள் ‘அள்ளிப் பதுக்கும் பண்பாடு’ (http://www.jeyamohan.in/?p=2255) கட்டுரையை தற்செயலாக படித்தேன். அய்யா, என் மனதில் சில வருடங்களாக ஓடி கொண்டிருந்த ஒரு இம்சையான சிந்தனைக் குட்டையை இதில் படம் பிடித்துள்ளீர்கள். புகழ்ச்சிக்காக சொல்லவில்லை – நான் படித்த வெஸ்டர்ன் வரிகள் பலவற்றையும் விட இது என்னை நெருங்கியது. சொந்த மண்ணில் இருந்து வரும் புனைவுகளில் தான் எத்தனை சக்தி!

என் பெற்றோர் இன்றி நான் ஒன்றும் இல்லை. என் தந்தை புகட்டிய ஆங்கிலமும் அறிவும் தான் இன்று எம்என்சி வரை என்னை இட்டுள்ளது. குழந்தைகள் படிப்பை தவிர எதுவும் முக்கியமில்லை என்றே முழு மண வாழ்வையும் வாழ்ந்தவர்கள் பெற்றோர். விளைவு – வேலை செய்ய எனக்கு மனம் இருக்கும் வரை எந்த குறையும் இல்லை. முழு வாழ்வையும் எந்த பெரும் வசதி வாய்ப்பும் இன்றி கழித்து விட்ட அவர்களின் மனநிலை – என் சற்றே எளிய வாழ்க்கை முறையை ஏற்க சங்கடப்படுகிறது. 12 வயதில் காந்தியின் ‘The Story of My Experiments with Truth’ வாங்கி தந்த என் தந்தைக்கு இது என் வியப்பளிக்கிறது?

அதே சமயம் அவர்கள் எதிர் பார்ப்பீலும் ஒரு நியாயம் இருப்பதாக தோன்றுகிறது. ஆனால் ஒரு குழந்தை விளையாட பொம்மைகளை குவிப்பது போல – கைபெசிகளும், காரும், பிளாட் டும், பகட்டுக்கான இன்ன பிற பொம்மைகளும் (மனைவியும்?) வைத்து அழகு பார்க்க – அதற்கு வழி செய்யும் வாழ்க்கை முறை மட்டுமே தேர்வு செய்ய சொல்வதும் நியாயமா? கிட்ட தட்ட வாழ்வின் எல்லா தரிசனங்களிலும் (வேலை, உறவினர், நம்பிக்கைகள், நண்பர்கள், ரசனை) உள்ள இந்த சிந்தனை முரண்பாடு – 25 வயது வரைக்கும் வீட்டு நாயை போல வீட்டோடு வைத்து வளர்க்கும் சில பெற்றோர் போல இருந்திருந்தால் வந்திருக்காதே ?

உலகின் மிக கொடுமையான வட்டி என்பது பெற்றோர்கள், அறியா பருவத்தில் இருக்கும் தங்கள் குழந்தைகளுக்கு தங்கள் வாழ்க்கையை செலவு செய்து விட்டு பிறகு அவர்கள் வாலிபத்தில் நடந்து கொள்ள கோரிக்கைகள் வைப்பதே. இதற்க்குள் முடிவெடுக்கும் ஆற்றல் அடுத்த தலை முறைக்கு கை மாறுவதை பொறுத்து ஒருவரை பற்றி மற்றொருவரின் உணர்ச்சிகள் அமைகின்றன. ஆமாம் என்றால் – இளைஞர்கள் கோபமும், பெற்றோர் பயமும்/தவிப்பும் உணர்கின்றனர். இல்லை என்றால் – இளைஞர்கள் பயமும், பெற்றோர் கோபமும் உணர்கின்றனர். பதில் தெரிய வில்லை.

 நீங்கள் கொடுத்த பதில், ஏதோ இரண்டொரு தலை முறை பின்னர் மாறலாம் என்கிறீர்கள். ஆழ்ந்த புரிதலோடு அன்புடன் அணுகி பெற்றோரின் பதற்றத்தை விலக்கும், அவரைப் பற்றி முடிவுகள் வராமல் இருக்கும் முதிர்ச்சி கஷ்டம். அவரது பதற்றத்தை குறைத்து நிம்மதி அளிக்கும் சூழல் – மதம் அல்லது மூதாதையர் அறிவுரை மூலமோ – இல்லாததை கண்டும் கோபம் மட்டுமே மிஞ்சுகிறது.

நான் இப்படி தான் என்று வன்மையாக வாழ்வது தான் வழி போலிருக்கிறது. பெற்றோர்களின் முதுமையில் கவலை இயல்போ? ‘காடு அழைக்கிறது’ என்றால் இது தான் போலும். பார்ப்போம். இறைவன் மிகப் பெரியவன்.

புலம்பலுக்கு மன்னிக்கவும். எனக்கு என் மகனைப்பற்றி அந்தப் பதற்றம் இருக்கிறது. அவனுடைய எதிர்காலம் குறித்த அச்சம்  பிற்க்காலத்துக்காக, உங்கள் மகனின் தரப்பில் யாரோ ஒரு வழிப்போக்கன் சொன்னதாக இருக்கட்டுமே :)

 கோகுல்,

அன்புள்ள கோகுல்,

வாழ்க்கையின் ஒரு மாறுதல் காலகட்டத்தில் நடைமுறைகள் சில குலைகின்றன. அதில் ஒன்று வாழ்க்கைப்பருவங்களில் வரும் மாறுதல். நேற்று இயல்பாகவே அப்பருவங்கள் கடந்துசென்றன. குழந்தைப்பருவம், இளமையும் கல்வியும், பின்பு குடும்ப வாழ்க்கை, பின்பு விலகல் வாழ்க்கை. ஒவ்வொன்றுக்கும் அதற்கான வயது மானசீகமாக உருவாகி இருந்தது. ஆனால் இப்போது அந்த வயதுக்கணக்குகள் குலைந்துவிட்டன.

அறுபது வயதில் ‘உன் வாழ்க்கையின் ஒருகட்டம் முடிந்துவிட்டது, இனி நீ உலகியலில் மிதமிஞ்சி ஈடுபடக்கூடாது, விலகிக்கொள்’ என்று நம் மரபான வாழ்க்கைமுறை கூறும். ‘அடாடா என் பெண்ணுக்கு இன்னமும் திருமணமே ஆகவில்லையே’ என்று  அந்த அப்பா சொல்வார். பெண்ணிடம் ‘உனக்கு இருபத்தைந்தாகிவிட்டது, நீ தாய்மைக்கடமையை நிறைவேற்ற வேண்டிய வயது’ என்று நம் மரபு சொல்லும். ‘இல்லை, என் படிப்பை முடிக்க இன்னும் மூன்றுவருடம் ஆகும்’ என்பாள் அவள்.

இம்மாதிரியான மாறுதல் காலகட்டம் மிக இயல்பானது. அதற்கேற்ப மனநிலைகள் மாறுபடுவது என்பது உடனடியாக சாத்தியமல்ல. எல்லாருக்கும் சாத்தியமல்ல. அதன் விளைவான உளச்சிக்கல்களும் உளமோதல்களும் எல்லா சமூகங்களிலும் நிகழ்பவை. அவற்றை காலப்போக்கில் நம் சமூகம் அதுவே சீர்செய்துகொள்ளும் என்றே நினைக்கிறேன். காரணம் வாழ்க்கைக்கு அப்படி ஓர் ஒழுங்கு தேவை. இல்லையேல் அது முன்னகர முடியாது.

பெற்றோர் உறவில் இன்றுள்ள ஆகப்பெரிய சிக்கலை சுருக்கமாக இப்படிச் சொல்வேன். பல பெற்றோர் அடையாளச் சிக்கலில் இருக்கிறார்கள். மரபான முறையில் அவர்கள் அறுபது வயதை ஒட்டி உலகியலில் இருந்து விலகி ஆன்மீக, அற விஷயங்களில் மனதைச் செலுத்த வேண்டும். உலகியல் சுகதுக்கங்களில் மிதமிஞ்சி ஈடுபடக்கூடாது. செல்வத்தை பெருக்குவது கையாள்வது போன்றசெயல்களில் ஈடுபடலாகாது. உலகியல் உறவுகளில் உணர்ச்சிகரமாக ஈடுபடக் கூடாது.

அவர்கள் அற, ஆன்மீக விஷயங்களில் மட்டுமே அறிவுரைகளும் வழிகாட்டுதல்களும் அளிக்கலாம். அந்நிலையில் அவர்கள் சொல்லும் சொற்களுக்கு ஒரு மேலானநிலையில் இருப்பவரின் கூற்றுக்குரிய மதிப்பு அளிக்கப்படவேண்டும். இதையே ‘பெரியவங்க பேச்சை கேட்பது’ என்கிறார்கள்.

இன்று மிகப்பெரும்பாலும் முதியவர்கள் அப்படி இல்லை. இளையவர்களை விட லௌகீகமானவர்கள். ஆகவே அவர்களும் லௌகீகமான உணர்ச்சிகளுக்கும் ஆசைகளுக்கும் அடிமைகள். ஆனால் அவர்கள் தங்களை ‘பெரியவர்கள்’ ஆக உணர்கிறார்கள். பெரியவர்கள் சொல்லை இளையோர் கேட்க வேண்டும் என்று நினைக்கிறர்கள்.பையன் தான் சொன்ன ஷேரில் பணம் போடவில்லை என்று புலம்பிய ஒரு பெரியவரை சிலநாள்முன்பு பார்த்தேன். இந்த ‘கடமைக்கு’ அவர்கள் நிபந்தனையாக ‘பெத்து வளத்து ஆளாக்கினேனே’ என்ற ஆயுதத்தை பயன்படுத்துகிறார்கள்.

இந்த ‘பெரியவர்’ மனச்சிக்கல் கொஞ்ச நாளிலே போய்விடும். இங்கே வந்துகொண்டிருப்பது அமெரிக்க பொருளியல் வாழ்க்கை. அமெரிகக் நுகர்வுப் பண்பாடு. பிள்ளைகளை அதிலே இறக்கிவிட்டு தாங்களும் அதில் நீந்தியபடி இவர்கள் நூற்றாண்டுக்கு முன்னாலிருந்த மனநிலையை எதிர்பார்க்க முடியாது. அமெரிக்க குடும்ப மனநிலையே இங்கேயும் வரும். சம்பாதிக்க ஆரம்பித்த பிள்ளைகள் வேறு ஒரு பொருளியல் அலகு. வேறு ஒரு உலகம். அப்பா அவ்வப்போது ஹாய் சொல்லிக்கொண்டு தன் வேலையை தானே பார்க்க வேண்டியிருக்கும்.

அதுவரை ஒரு சின்ன உணர்ச்சிக்குழப்பம்

ஜெ

முந்தைய கட்டுரைஅந்த சபை..
அடுத்த கட்டுரைவைக்கமும் காந்தியும் 1