மரபும் மறு ஆக்கமும்

varaha

அன்புள்ள ஜெ

நீங்கள் வெண்முரசுநாவலில் இந்து தொன்மங்களை இன்னும்பிரம்மாண்டமாக ஆக்கிச் சொல்வதைப்போலத் தோன்றுகிறது. வராகஅவதாரத்துடன் ஹிரண்யாக்‌ஷன் மோதுவதை வண்ணக்கடல் நாவலில் சொல்லியிருக்கும் இடம் உதாரணம். அங்கே அந்தப்பன்றியை cosmic darkness ன் அடையாளமாக காட்டிவிடுகிறீர்கள்

விண்ணையும் மண்ணையும் வென்று நிகரற்றவனாக அலைந்த ஹிரண்யாக்‌ஷன் ஒருமுறை விண்கடல்மேல் ஒளித்தேரில் செல்லும்போது எதிரில் இருண்ட பெருஞ்சுழி ஒன்றைக் கண்டான். அவன் விழிகளுக்கு அது ஒரு பெரும்பன்றி என்று தோன்றியது. அதன் சுழிமையம் பன்றியின் கண்கள் போல மதம்பரவிய இருளொளியாக மின்னியது.

அந்தப்பன்றியின் கண்களை black hole ஆக உருவகிக்கிறீர்கள் என்று தெரிகிறது. அதை பெருமாளில் விஸ்வரூபத்தோற்றமாக பார்ப்பது இன்றைக்கு மிகப்பெரிய ஓர் அனுபவத்தை அளிக்கிறது.

ஹிரண்யாக்‌ஷன். அதை நெருங்கியபோது ஆயிரம் கோடி இடியோசைகள் என பன்றி தன் வயிற்றுக்குள் உறுமியது. அதன் கரிய முடிமுட்கள் சிலிர்த்தெழுந்தன. மதவிழிகளின் சுழிக்குள் ஓர் ஒளி மின்னி அணைந்தது. கூவியபடி அதன்மேல் பாய்ந்த ஹிரண்யாக்‌ஷன் அவ்விழிகளே பெருவெளியாக எழுவதைக் கண்டான். அவ்விழிச்சுழியின் முடிவிலா ஆழத்துக்குள் சென்று மறைந்தான். ‘ஓம்!’ என்ற ஒலியுடன் பன்றி மீண்டும் தன் பெருந்தவத்துக்குள் அமிழ்ந்தது.

[வண்ணக்கடல் 60 ] என்னுடைய கேள்வி என்னவென்றால் இப்படி நவீன அறிவியலையும் இன்றைய தரிசனங்களையும் பழைய தொன்மங்களுக்குமேல் ஏற்றுவதற்கு நம் மரபின் அனுமதி உண்டா என்பதுதான்

சாரதி

காளி ஒரு நவீன  ஆக்கம்
காளி ஒரு நவீன ஆக்கம்

அன்புள்ள சாரதி,

இந்து தெய்வங்கள் உருவாகிவந்த விதம் பற்றிய ஒரு வரலாற்றுப் புரிதல் இருந்தால் இதை தெளிவாக அணுகமுடியும். இல்லையேல் உதிரித்தகவல்களைக்கொண்டு சண்டை போடுவதாகவே முடியும்.

இந்ததெய்வங்கள் இப்படியே எக்காலமும் இருந்தன, மனிதனால் அப்படியே ‘கண்டடையப்பட்டன’ என்பது ஒரு பக்திமனதின் எளிமைப்படுத்தல் இவை எல்லாம் வெறும் சமூகவியல் குறியீடுகள். சமூகவியல், மானுடவியல் ஆய்வுகளைக்கொண்டு முழுமையாகப்புரிந்துகொள்ளமுடியும் என்பது இன்னொரு வகை எளிமைப்படுத்தல்

இவை ஆதிப்பழங்குடி மனம் அது சென்று தொட்டு உணர்ந்த ஓர் அகஉண்மையை புறவயமாக வெளிப்படுத்த கண்டடைந்த அடையாளங்கள். உள்ளே இருப்பதைக் குறிக்கும் வெளிப்பொருட்கள். ஆகவே இவை படிமங்கள். தாய்மை, மரணம், பிறப்பு , பேரன்பு, பேரறம் என பல கருதுகோள்களை இவை குறியீடாக நின்று உணர்த்துகின்றன.

அக்கருதுகோள்கள் ஆதிமானுட உள்ளத்தில் இக்குறியீடுகளகாவே உதித்தனவா, இல்லை அவை குறியீடுகளைக் கண்டடைந்தனவா என்பதெல்லாம் விரிவான ஆய்வுக்குரியவை.குறியீடாகவே அவை உருவாயின என்பதே என் எண்ணம். சொல்லும்பொருளும் சேர்ந்தே உருவாகின்றன. தெய்வமும் விக்ரகமும் பிரிக்கமுடியாதவை.

அவ்வாறு கண்டடையப்பட்ட குறியீடுகள் தலைமுறை தலைமுறையாக தியானிக்கப்படுகின்றன. ஒவ்வொருதலைமுறையிலும் வாழ்க்கை மாறுகிறது. சூழல் மாறுகிறது. அதற்கேற்ப அந்தக் குறியீடுகள் மாறுபடுகின்றன, வளர்கின்றன இப்பரிணாமத்தை நாம் இந்துதெய்வங்களில் எல்லாம் காணமுடியும். அவை பலகோணங்களில் விரிவாக்கம் செய்யப்படுகின்றன. சமானமான குறியீடுகளுடன் இணைகின்றன. பிறகுறியீடுகளுடன் உரையாடுகின்றன. நாம் இன்று வழிபடும் தெய்வ உருவங்கள் பல்லாயிரமாண்டுக்கால மெய்ஞான தரிசனம் மற்றும் யோகசாதனையினால் கொஞ்சம் கொஞ்சமாகத் திரட்டப்பட்டவை

ராமனும் ராவணனும் போர்புரிகிறார்கள். டிஜிட்டல் படம்
ராமனும் ராவணனும் போர்புரிகிறார்கள். டிஜிட்டல் படம்

காளியானாலும் சிவன் ஆனாலும் அவை கண்முன் தெரியும் படிமைகள். மானுடஉள்ளம் ஆழத்தில் அறிந்த சில தரிசனங்களின் புறவெளிப்பாடுகள். அவை நம் முன் உள்ளன. அவற்றின் வழியாக அந்த மெய்மைதரிசனம் நோக்கிச் செல்லமுடியும். அதையே தியானம் என்கிறோம்.

இன்று நாம் இதே உருவங்களை தியானிக்கையில் நம்முடைய இன்றைய வாழ்க்கை, இன்றைய அறிவியல், இன்று நம்முள்செல்லும் படிமங்கள் அதனுடன் கலக்கின்றன. அவ்வாறுதான் சாத்தியம். ஆகவேதான் நேற்று நம் முன்னோர் அடைந்த அனைத்தையும் தொடர்ந்து நாம் மறு ஆக்கம் செய்கிறோம்.

ஏதாவது ஒரு விக்ரகத்தை எடுத்துப்பார்த்தால் தெரியும் அதிகபட்சம் முந்நூறாண்டுகளுக்குள் அவ்வடிவம் மாறிவிட்டிருப்பதை. உதாரணமாக நாம் காலண்டர் வடிவங்களை ‘மரபானவை’ என அங்கீகரிக்கிறோம். ஆனால் அச்சுவடிவம் வந்தபின்னர் உருவானவை. அவற்றுக்கு முன் டச்சு ஓவியங்களின் பாணியில் ராஜா ரவிவர்மா வரைந்த தெய்வ ஓவியங்கள் உருவாகியிருந்தன அதற்கு முன் சிலைகளும் சுவரோவியங்களும் இருந்தன.

அச்சிகலைகளே தொடர்ந்து உருமாறியவவை. பார்த்ததுமே காலத்தைச் சுட்டிக்காட்ட முடியும். நாயக்கர் காலகட்ட சிலைகள் சோழர்காலகட்டச் சிலைகளை விட மாறுபட்டவை. அப்படியே பல்லவர்காலம் வரை செல்லமுடியும்

சிலைகள் ஏன் மாறுகின்றன? ஏனென்றால் தியானத்தில் எழும் சமகாலம் மாறுகிறது, அதன் மூலம் அடையும் தரிசனம் விரிவடைகிறது என்பதனால்தான். தியானம் மூலம் சிலைகளையும் தொன்மங்களையும் தெய்வங்களையும் அணுகினால் அது இன்றைக்கும் நிகழும். வெறுமே கும்பிட்டால் அவை அப்படியே இருக்கும்.

இன்று தியானிப்பவனுக்கு நடராஜர் பிரபஞ்சசக்தியை சரிபாதியாகக் கொண்டு பிரபஞ்சகாலத்தை உடுக்கோசையாக்கி ஆடும் பிரபஞ்சகாரணமாகிய சிவம்தான். பெருமாள் அனந்தகாலத்தை மூன்றுமடிப்பாக ஆக்கி பள்ளிகொண்டிருக்கும் பிரபஞ்சரூபன்தான்.

உண்மையில் அந்த உருவகங்கள் அப்படித்தான் உள்ளன. அவை cosmic meaning கொண்டவையாகவே பல்லாயிரம் வருடங்களாக உள்ளன. அந்த பிரபஞ்சத் தோற்றத்தை நாம் வெளியே கற்பனையில் முன்வைக்கும் விதம் மட்டும் மாறியிருக்கிறது. அதுவும் பெரிய மாறுதலெல்லாம் இல்லை. சொற்களில், காட்சியமைப்பில் ஒரு சிறிய மாற்றம் அவ்வளவுதான்

ஜெ

வெண்முரசு நாவல் தொடர்பான அனைத்து விவாதங்களும்

மழையின் இசையும் மழையின் ஓவியமும் மழைப்பாடல் பற்றி கேசவமணி

வியாசமனம் முதற்கனல் பற்றி மரபின் மைந்தன்

முந்தைய கட்டுரைஓர் இந்து சமூகம்
அடுத்த கட்டுரைநோபல்-ஐரோப்பா-கடிதம்