காளி

22222
அன்புள்ள ஜெ

நீங்கள் வெண்முரசில் காளி என்ற படிமத்தை நிறையவே பயன்படுத்துகிறீர்கள். பாய்கலைப்பாவை, கொற்றவை, காளி என்றெல்லாம் பெண்களை உருவகப்படுத்தும் வரிகள் ஏராளமாக வருகின்றன. அம்பை பாய்கலைப்பாவையாகச் சுட்டிக்காட்டப்படுகிறாள். ராதையும் தன்னை காளியாக உணரும் இடம் வருகிறது

இந்து மத ஆராய்ச்சியாளரும் வைணவருமான என் நண்பர் இது பெரிய பிழை என்றும் மகாபாரதக் காலக்கட்டதிலும் அதற்கு முன்பு வேதங்களிலும் காளி என்ற தெய்வமே இல்லை என்றும் சொல்கிறார். காளி என்பது குப்தர்காலகட்டத்தில் உருவாகி வந்த போர்த்தெய்வம் என்றும் அது தேவிபாகவதம் போன்ற நூல்கள் வழியாக பிற்பாடுதான் நிறுவப்பட்டது என்றும் சொல்கிறார்

ஒரு ஐயமாகவே இதைக் கேட்கிறேன்

சரவணன் சுப்ரமணியம்

காளி - நவீன கிராஃபிக்ஸ்  வடிவம்
காளி – நவீன கிராஃபிக்ஸ் வடிவம்

அன்புள்ள சரவணன்,

இன்று இம்மாதிரி ஐயங்களை மிக எளிதாக கூகிள் வழியாக தீர்த்துக்கொள்ளலாம். கொஞ்சம் தகவல்களை ஞாபகம் வைத்துக்கொண்டு அறிஞராக தோற்றமளிக்கும் காலம் மாறிவிட்டது.

வேதங்களிலோ அல்லது உபநிடதங்களிலோ ஒரு தெய்வம் இல்லை என்றால் அக்காலகட்டத்தில் அந்த தெய்வம் இல்லை என்று வாதிடுவதே அபத்தமானது. வைதிகஞானம் ஒரு தரப்பு. அது தன் தெய்வங்களையே முன்வைக்கும்.

வேதகாலத்திலேயே அவைதிக மரபுகளும் அவர்களுக்கான தெய்வங்களும் இருந்திருக்கின்றன. தெய்வங்கள் அப்படி ‘திடீரென்று’ தோன்றிவருபவை அல்ல. அவற்றுக்கு எப்போதும் ஒரு நீண்ட வரலாற்றுப்பின்புலம் இருக்கும். பழங்குடி வழிபாடுகள் வரை அதன் வேர்களைத் தேடிச்செல்லமுடியும்

அவைதிக மரபில் பல அன்னைத்தெய்வங்கள் வழிபடப்பட்டிருந்தன. பழங்குடி வழிபாட்டில் உள்ள அன்னைத்தெய்வங்களைப்பற்றி ஆய்வாளர்கள் இன்று விரிவாக பதிவுசெய்துவிட்டார்கள். மண்ணையும் பிறப்பையும் இறப்பையும் காலத்தையும் இரவையும் எல்லாம் அன்னையராக வழிபடுவது இந்தியப்பழங்குடிமரபில் எப்போதும் உள்ளது. அந்த மனநிலையை வேதங்களிலும் காணலாம்

வேதகாலத்திலேயே அவைதிக மரபுகளை வைதிகஞானம் உள்ளிழுக்கத் தொடங்கிவிட்டது. காளி அவ்வாறு அவைதிக மரபில் இருந்து உள்ளே சென்ற தெய்வமாக இருக்கலாம். வைதிகமரபில் ஏற்கனவே இருந்த ராத்ரி தேவி வாக்தேவி போன்ற அன்னையருடன் அந்த தெய்வ உருவகம் இணைந்திருக்கலாம்.

Kali_by_willbrownmedia

காளி என்ற சொல் இரவுதேவி, கரியவள், காலமேயானவள் என்ற பொருள் கொண்டது . அந்தச்சொற்களில் குறிக்கப்படும் தெய்வம் அதர்வவேதத்தில் குறிப்பிடப்படுகிறது. உபநிடதங்களில் காளிபற்றிய குறிப்புகள் உள்ளன. மகாபாரதத்தில் பல இடங்களில் தேவியரில் காளியும் குறிப்பிடப்படுகிறாள். எங்கெங்கே காளி பற்றிய குறிப்புகள் உள்ளன என்று வெட்டம் மாணி பட்டியலே போட்டிருக்கிறார்.

அதோடு இன்னொன்று, வேதகாலத்தில் சிவனும் விஷ்ணுவும்கூட இன்றுள்ள பெருந்தெய்வங்களகா இருக்கவில்லை. அவ்விரு தெய்வங்களும் இன்றையவடிவில் உருவாகி வளர்ந்துவந்த அதேகாலகட்டத்தில்தான் காளி என்றதெய்வ உருவகமும் வளர்ந்து முழுமைபெற்றது. இந்து மதத்தின் ஆறுமதங்களில் சாக்தமும் ஒன்று.

தேவிபாகவதம் [தேவிமகாத்மியம்] என்ற நூல் கிபி இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்கிறார்கள். கிருஷ்ணபாகவதத்தின் அதேகாலகட்டமாக இருக்கலாம். அந்நூலே தேவியின் அதுவரை வழிபடப்பட்டு வந்த எல்லா வடிவங்களையும் ஒன்றாகத் தொகுத்து ஒரே தெய்வத்தின் முகங்களாக மாற்றியது.

காளி என்பது பெண்மையின், தாய்மையின் உக்கிரமான பாவம். அது ஒரு இயற்கைத்தரிசனம். ஆகவே உலகமெங்கும் இயல்பிலேயே எல்லா மதங்களிலும் உருவாகி வந்திருப்பதைக் காணலாம்

ஜெ

வெண்முரசு நாவல் தொடர்பான அனைத்து விவாதங்களும்

மழையின் இசையும் மழையின் ஓவியமும் மழைப்பாடல் பற்றி கேசவமணி


வியாசமனம் முதற்கனல் பற்றி மரபின் மைந்தன்