«

»


Print this Post

அந்த சபை..


அன்புள்ள ஜெ,

மிகப் பெரிய வாசிப்பு பின்புலம் சிந்தனைப் பரப்பும் உள்ள உங்களிடம் இளம் தகப்பனாகக் கீழ்க்கண்ட கேள்வியைக் கேட்க விரும்புகிறேன்.

தங்கள் குழந்தைகளுக்கு அவையத்து முந்தியிருப்பச் செய்யும் நன்றியை நீங்களும் ஆற்றுகிறீர்களா ? எனில், அவர்கள் முந்தியிருக்க வேண்டும் என்று நீங்கள் நம்பும், விரும்பும் ’அவை’ எது ?

அவர்கள் வளர்ந்து தற்சார்புள்ள மனிதர்களான பின் அவர்களிடமிருந்து உங்கள் எதிர்பார்ப்பு என்ன ?

பல்லாயிரம் தந்தையர் மனதில் இக்கேள்விகள் இருக்கக்கூடும். தாங்கள் பதிலளிக்க இயலுமாயின் மிக மகிழ்வேன்.

நன்றி.

அன்புடன்,

மதி

 

அன்புள்ள மதி,

பொதுவாக இம்மாதிரி விஷயங்களில் இலட்சியவாதக் கருத்துக்களை விட நடைமுறைசார்ந்த கருத்துக்களையே நான் வைத்துக்கொள்ள விரும்புவேன். ஆனால் நடைமுறைவெறி இருக்காது. வேண்டுமென்றால் ‘நடைமுறைஇலட்சியவாதம்’ என்று சொல்லலாம்.

நான் புரிந்துகொண்ட சில விஷயங்கள் உண்டு. அதில் முதலாவது குழந்தைகளை நாம் ‘வளர்க்க’ முடியாது. அவை வளர்கின்றன. அவற்றுக்கு சூழல் அளிக்கும் பலநூறு பாதிப்புகளில் ஒன்று மட்டுமே நாம். கொஞ்சம் பெரிய, கொஞ்சம் தீவிரமான பாதிப்பு என்று வேண்டுமானால் சொல்லலாம்.  அந்தப்பாதிப்புகளை வாங்கி வளரும் அவன் ஆளுமையின் விதை அவனுக்குள் பிறவியிலேயே உள்ளது.

ஆகவே குழந்தைகளை நாம் நம் விருப்பப்படி வளர்க்க முடியும் என்பது பெரிய மடமை. அவர்கள் நன்றாக வந்தாலும் சரி, வரவில்லை என்றாலும் சரி அதில் நம் பங்களிப்பு ஒரு சிறு பகுதிதான். அதற்கான பொறுப்பையோ பாராட்டையோ நாம் ஏற்றுக்கொள்வது அபத்தமானது.

ஆக, நாம் அவர்களை எங்கும் ‘முந்தியிருக்க’ச் செய்ய முடியாது. அவர்கள் முந்துவது அவர்களிடம், அவர்களை உருவாக்கும் பலநூறு சக்திகளிடம், அவர்கள் எதிர்கொள்ளும் பலநூறு விசைகளிடம் உள்ளது.

நாம் செய்யக்கூடுவது நாம் அளிக்கும் சூழல் சிறப்பாக இருப்பதாகக் கவனித்துக்கொள்ளலாம் என்பது மட்டுமே. அந்தப்பொறுப்பு மட்டுமே நமக்கு உள்ளது. அதில் நான் செய்வதென்ன என்று கேட்டால் என்னால் சில சொல்ல முடியும்.

ஒன்று, நான் அறிவியக்கத்தை நம்பக்கூடியவன். ஆகவே என்னுடைய நம்பிக்கைகளை அவர்களிடம் பகிர்ந்துகொள்கிறேன். என்னுடைய வாசிப்பையும் சிந்தனைகளையும் அவர்களுக்கு அளிக்கிறேன். அவர்களை ஒருவகையில் என் மாணவர்களாகவே நினைக்கிறேன்.

இரண்டு, சாத்தியமான உற்சாகமான சூழலை வீட்டில் அவர்களுக்கு அளிக்கிறேன். மகிழ்ச்சியான பெற்றோர் அளவுக்கு குழந்தை விரும்பும் பிறிதில்லை. ஆகவே குடும்பத்தில் மனக்கசப்போ பூசலோ நிலவ விடுவதே இல்லை.

மூன்று, ஒவ்வொருநாளும் அவர்களிடம் நேரம்செலவழிக்கிறேன். அப்போது வேடிக்கையும் சிரிப்பும் பேசும் பகிர்தலுமாகவே நேரம் செல்லவேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன் [நான் ஒரு நல்ல மிமிக்ரி நடிகன் என்பது என் பிள்ளைகள் மட்டுமே அறிந்த ரகசியம்]

நான்கு, அவர்களிடம் எப்போதும் பேசிக்கொண்டிருக்கிறேன். அவர்களின் நினைப்பு, அவர்களின் தரப்பு என்று ஒன்றை கேட்க எப்போதும் உயன்றுகொண்டிருக்கிறேன். அவர்களிடம் தூரமோ விலக்கமோ நிகழக்கூடாது என எண்ணுகிறேன்.

அப்படியானால் அவையத்து முந்தியிருப்பச் செயல் என்று எதைச் சொன்னார் வள்ளுவர்? நான் விவேகம் சார்ந்து ஒரு தவறான விஷயம் குறளில் இருக்காது என நினைப்பவன். குறள் சொல்வது என்ன?

‘அவை’ என்று குறள் சொல்வது சமூக அரங்கை. ஒரு தந்தையின் கடமை ஏற்கனவே இருக்கும் ஒரு சமூக அரங்கில் தன் மகன் நிற்பதற்குத் தேவையான அனைத்தையும் அளிப்பது. கல்வி, சமூக அந்தஸ்து போன்றவை. நான் இன்றைய சமூக அமைப்பில், இன்றைய கல்வியமைப்பில் என் மகனுக்கு என்னால் சாத்தியமான சிறந்ததை அளிக்க வேண்டும். இதுவே நடைமுறை உண்மை. இதைத்தான் குறள் சொல்கிறது.

ஆனால் குழந்தைகளின் சவாலே வேறு. என் மகன் சம்பிரதாயமான கல்விக்குள் பொருந்த முடியாமல் மூச்சுத்திணறுகிறான். அதில் அவனால் முதலிடம் வர முடியாது. ஒரே பாடத்தை மீண்டும் மீண்டும் படித்து அபப்ழுக்கில்லாமல் பிரதி எடுப்பது அவனுக்குச் சலிப்பூட்டுகிறது. அவனுடைய வாசிப்பு பள்ளிப்பாடத்துக்கு வெளியே விரிகிறது. பள்ளிப்பாடத்தை மட்டுமே மீளமீளப் படிப்பவர்களுக்கானது இந்த அமைப்பு. இதில் அவனை ‘முந்தியிருக்க’ ச் செய்வதற்காக அவனிடம் நான் எதிர்பார்க்கக் கூடாது.  அதற்காக அவன் மேல் நான் வன்முறையைச் செலுத்த முடியாது. அவனுடைய சவால்கள் அவனுக்கு மட்டுமே உரியவை, அதன் வெற்றி தோல்விகளும்.

குறளும் அதையே சொல்கிறது. மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி அவர் எதிர்பார்த்ததைச் செய்வது என்றோ அவையில் முந்துவது என்றோ சொல்லவில்லை. அவன் தந்தைக்குப் பெருமை சேர்த்தல் என்றே சொல்கிறது. சேர்க்க முயல்தல் என்று கூடச் சொல்லலாம். என் அப்பாவை நான் மகிழ்வித்திருக்கவேண்டுமென்றால் நாகர்கோயிலில் ஒரு நல்ல ஆடிட்டராக ஆகியிருக்க வேண்டும். ஆனால் அபப்டி ஆகியிருந்தால் பாகுலேயன்பிள்ளை என்றபெயரை பல்லாயிரம் பேர் இன்று அறிந்திருக்கமாட்டார்கள்.

இந்தப் புரிதல் இல்லாமையாலேயே பலவகையான பதற்றங்கள் உருவாகின்றன. பொறியியலில் முதல்தர வெற்றியை அடைந்தபின் சினிமாவில் உதவி இயக்குநராக ஒரு பையன் வந்து வெயிலில் காய்ந்து அலைவதைக் கண்டு அந்த தந்தை என்ன பாடுபடுவார் என்று எனக்குப் புரிகிறது. அந்தப் பையனின் இடத்தில் கொஞ்சகாலம் முன்பு வரை இருந்தேன், இப்போது அந்த அப்பாவின் இடத்துக்கு மாறிவிட்டேன்.

ஆக, நமக்கு நம் சமூகம் அளித்திருக்கும் அவையில், கல்வியின் பொருளியலின் மேடையில், முந்தியிருக்கச் செய்வதும் முந்தவேண்டும் என்ற கட்டாயத்தை விதிக்காமலிருப்பதும்தான் நம் கடமைகள்.

ஜெ

நமது கைகளில்….

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/6292/

4 comments

Skip to comment form

 1. jrc

  அன்பு ஜெ,

  ஒரு மிக நீளமான, ஆழமான கருத்தோட்டத்தை உருவாக்கும் வெளிப்பாட்டை எதிர்பார்க்க வைத்த தலைப்பில் ஏமாற்றி விட்டீர்கள். ஆனாலும் அந்த புகைப்படம் (ஏற்கனவே பார்த்திருந்தாலும்) ஏமாற்றத்தைத் தணித்தது. கலில் ஜிப்ரானின் குரல் தெளிவாகக் கேட்டது : யுவர் சில்றன் ஹவே நாட் கம் பிரோம் யு; பட் ஹவே கம் த்ரௌக் யு.

 2. Ramachandra Sarma

  நேரமின்மை.

 3. rameshkalyan

  அன்புள்ள ஜெ.மோ

  இந்தக் கேள்விக்கான குடைச்சலையும் அதற்கான விடையளிப்பாக என் சுய பரிசீலனைகளையும் மேற்கொண்டிருக்கும் ஒரு தந்தை என்கிற முறையில் நான் உங்களைப் போலத்தான். (இது வரை ) ஜெஆர்சி சொல்வதுபோல கலில் ஜிப்ரானை மேற்கோள் காட்டாமல் இதை சிந்திக்க முடிவதில்லை.குறிப்புகளை உங்களோட பகிர விரும்புகிறேன்.

  என் வீட்டு அறையில் ஒட்டி வைத்திருக்கும் ஜிப்ரான் இது:
  Your children are not your children.
  They are the sons and daughters of Life’s longing for itself.
  They come through you but not from you,
  And though they are with you yet they belong not to you.

  உங்கள் குழந்தைகள் உங்களுடைய குழந்தைகள் அல்ல. அவர்கள் தானே தனக்காக ஏங்கிக் காத்திருக்கும் வாழ்க்கையின் மகனும் மகளும் ஆவர். அவர்கள் உங்கள் மூலமாக வந்தார்களே தவிர உங்களிலிருந்து வரவில்லை. அவர்கள் உங்களோடு இருந்தாலும் உங்களுக்கே சொந்தமானவர்கள் அல்லர்.

  Don’t compalin your children are not listening to you; they are watching you.

  ஒரு முறை என் எண்ணங்களை கோடிட்டபடி என்னுடைய ஆசிரியர் திரு.சபாநாயகம்-(எழுத்தாளர் விமர்சகர்) அவர்களுக்கு கடிதம் எழுதியிருந்தேன். என் பாதை சரியா என்று அறிய. அவர் தன் பதில் கடிதத்தில் என் வழி சரி என்பதை சொன்னதோடு “நீ செடியை வைக்கலாம், நீரூற்றி வளர்க்கலாம் ஆனால் என்னவாக பூ பூக்கவேண்டும் என்பது அதன் விருப்பம் என்று ஜெயகாந்தன் சொல்லுவர் . அதுவே நினைவுக்கு வருகிறது” என்று சொல்லியிருந்தார்.

  இவை ஒரு தகப்பனாக (தாயாக) அதிக ஊட்டம் தந்து பிரயாசைப்படுவது அவனுடைய எதிர் காலத்தை நாம் அறிந்த நல்வழிப்படுத்தலேயாகும். ஆனால் வளரும் போதே மாறிவரும் சமூக அமைப்பும் சமூக தேவைகளும் நிர்பந்தங்களும் பாதையை மாற்றி அமைத்துக்கொண்டே வருகின்றன. நிதர்சன தளத்தில் ஒரு புள்ளியில் அந்த dynamisam வரும்போது நாம் பின்தங்கி விடுவோம். அப்போது அந்த அவையில் அவன் (அவள்) நம்மை விட முந்தி இருப்பான்(ள்). (அவையில் முந்துதல் அவர்கள் விருப்பம்) .

  நாம் ஒரு சரியான பெற்றோருக்குரிய திசையில் நடந்தால் (அது ஒரு மகனுக்கு சரியான மகனுக்குரிய திசையை காட்டும்) . அறிவியல் பூர்வமாக கருத்தூட்டம் செய்யும் அதே வேளையில் வாழ்வின் நல்லியல்புகளை நடத்தை பூர்வமாக அறியச்செய்யும்போது அவர்கள் வாழ்விற்கான முழுமைக்கான அடிக்கல் நாட்டப்படுகிறது. நல்லவனாகவும் வல்லவனாகவும் இணைந்து இருக்கவேண்டிய நிர்பந்தமே இன்றைய சவால்.

  As there is a problem in transliterate In English please. As part of the society, we need to think from the expected point of view of societal significance. So, I went to a Educational Councellor with psychological aspect also. I will share it in my next (if allowed)

  Thanks JM for having this platform to discuss healthy discussions.

  Ramesh Kalyan
  [email protected]

 4. nkpblogs

  மதி
  நயதக்கோர் மற்றும் தேர்வு பதிவுகளை படிக்கும் போது அவையத்து முந்த பிள்ளைக்கு என்ன செய்ய வேண்டுமென தெரியும்

Comments have been disabled.