இணையும் கண்ணிகளின் வலை

now

நீலம் வாசிக்கும்போது சில இடங்கள் ஏன் இத்தனை விரிவாக வந்துகொண்டிருக்கின்றன என்ற எண்ணம் வந்தது. உதாரணமாக இந்திரனை கிருஷ்ணன் தடுக்கும் அத்தியாயம். இந்திரவிழாவில் வேதவேள்விகள் செய்யப்பட்டன. அதை கிருஷ்ணன் தடுத்தார். கோவர்த்தனகிரி பூசையை ஆரம்பித்தார். சுவிரா ஜெயஸ்வால் அதைத்தான் சொல்கிறார். ஐராவதி கார்வேயும் அதைப்போலத்தான் எழுதியிருக்கிறார் என்பது என் ஞாபகம்

இரண்டு விஷயங்கள்தான் அதிலே முக்கியம். அதாவது வேதவேள்விகளின் கர்மகாண்டத்தை கிருஷ்ணன் தடுக்கிறார். பயன்கருதி செய்யும் பலிபூசைகள் தேவை இல்லை என்கிறார். ஒவ்வொருவரும் அவரவர் செயல்களின் விளைவுகளைத்தான் அனுபவிக்கிறார்கள். ஆகவே நல்லசெயல் நல்ல விளைவை உருவாக்கும் என்று சொல்கிறார்.தத்துவார்த்தமாகப் பார்த்தால் அவர் சடங்குசம்பந்தமான கர்மக் கொள்கையை மறுதலிக்கிறார். தனிமனிதன் சம்பந்தமான கர்மக்கொள்கையை முன்வைக்கிறார்

அதோடு இன்னொருவிஷயம். அந்தக்காலத்திலே இந்திரன் பெரியதெய்வம். இந்திரனை கிருஷ்ணன் இல்லாமல் செய்கிறார். இந்திர வழிபாடு இல்லாமலாகி கிருஷ்ண வழிபாடு தொடங்குவதையேதான் இந்தக்கதை காட்டுகிறது என்கிறார்கள்.இந்திரன் பல இயல்புகளை கிருஷ்ணன் மேல் வைத்தார்கள் என்கிறார்

ஆனால் இந்திரவிழாவில் பசுவை பலிகொடுப்பது. அதை கிருஷ்ணன் தடுப்பது . அப்போது அவர் பேசும் தத்துவங்கள்.[அந்தக்கதை புத்தர்கதைக்கும் ஏசு கதைக்கும் நெருக்கமானது] என்று அந்த அத்தியாயம் விரிவாக இருக்கிறது. அவ்வளவு விரிந்து செல்வது ஏன் என்ற எண்ணம் வந்தது. கதைக்காகச் செய்கிறீர்கள் என்று நினைத்தேன்

ஆனால் கடைசியில் கம்சனை கிருஷ்ணன் கொல்வதும் [யானையைக்கொல்கிறான். யானை இந்திர வாகனம்] குழந்தைப்பலிகொண்டவர்களைக் கொல்வதும் பார்த்தபோது அந்த அத்தியாயத்தின் இடம் புரிந்தது. அங்கே கருணையின் வடிவமாக இருக்கிறான். ஆநிரைகளை காக்க மலையை தூக்குகிறான். அதே கிருஷ்ணன்தான் இங்கே அத்தனை கொலையாளிகளையும் கழுவிலே ஏற்றுகிறான். அதுவும் இதுவும் ஒன்றுதான். இரண்டுமே தெய்வத்தின் வேலைதான்

கோவர்த்தனகிரி தூக்கும் அந்த அத்தியாயமும் கழுவேற்றும் அத்தியாயமும் கச்சிதமாக ஒன்றை ஒன்று சமனம் செய்கின்றன. அவற்றை இணைத்துப்புரிந்துகொண்டால்தான் புரியும் என்று தோன்றியது
“மூத்தோரே, அன்னையரே, ஆயர்குலத்தோரே, கேளுங்கள். யுகம் புரண்டு மாறினும் ஏழ்கடல் வற்றி மறையினும் வான் உருகி அழியினும் வேதம் பொருள் விலகினும் மாறாது நின்றிருக்கும் என்சொல்!”

என்று சொல்கிறான் கிருஷ்ணன்.

“விண்ணவன் பலி விழைந்தால் தன் வைரக்கோல் கொண்டு அவனே அதை அடையட்டும். நம் கை வாள் முனையால் நம் அன்னை கழுத்தை நாமே அறுத்திடலாகுமா?”

என்று கருணையாக பேசுகிறான். ஆனால் அதே கிருஷ்ணன் தான் அங்கே குழந்தைகளின் குருதியிலே தொட்ட எவரும் கழுவேறாமல் இருக்க்க்கூடாது என்று சொல்கிறான். அங்கே தன் சொல்லைப்பற்றி கூறவில்லை. அறத்தின் குரலைப்பற்றிச் சொல்கிறான்

வெற்றியும் தோல்வியும் மயங்கும். நூல்களும் சொல் பிழைக்கும். தேவரும் நெறி மறப்பர். ஒருபோதும் அடிதவறுவதில்லை அறம்

என்று சொல்கிறான். அந்த வரிகள் இரண்டையும் இணைத்து வாசித்தபோது ‘நானே அறத்தின் குரல்’ என்று அவன் சொல்வதுபோலவே இருந்த்து

சாரதி

KRISHNA___by_molee (1)

அன்புள்ள ஜெமோ

நீலம் நாவலிலேயே எனக்கு கஷ்டமாக இருந்த அத்தியாயம் 13. திருணாவர்த்தன் வரும் இடம். அதில் என்னென்னவோ வருகிறது. மொழியை தொடர்வதே கஷ்டமாக இருந்தது. பத்துமுறையாவது அதை வாசித்திருப்பேன். அந்த வரிகளே எனக்கு மனப்பாடம் மாதிரி இருந்தன. மூலாதாரக்காற்று வரும் இடம். பிராணனைப்பற்றியது. அதெல்லாம் பிடிகிடைத்தது. காற்று என்பதனால் அது பறவைகளைப்பற்றிய பேச்சு வருகிறது என்றும் தெரிந்தது.

உண்மையில் அதில் விழிகளை பிய்த்து இமைகளை சிறகுகளாக கொண்ட பறவைகளாக ஆக்குவது. அந்தப்பறவைகள் அலைமோதுவது எல்லாம் எதற்காக என்றே தெரியவில்லை. அந்த அத்தியாயத்தை நீக்கிவிட்டாலும் நாவலில் ஒன்றும் குறைவதில்லை என்றும் நினைத்தேன். ஆனால் அதன் கடைசி அத்தியாயத்தில் மதுராவில் இருந்து ரத்த நிறமான பறவைகள் பறந்து போனது என்று வாசித்தபோது இந்த அத்தியாயம்தான் நினைப்பில் வந்து அதிர்ச்சி அளித்த்து

பறக்கும் சிறகிருக்க ஒருபோதும் கொம்பில் அமைவதில்லை கூண்டில் நிலைப்பதில்லை இப்பறவைகள்.

என்று வருகிறது 16 ஆம் அத்தியாயத்தில். ஆனால் 37 ஆம் அத்தியாயத்தில்

நகரெங்கும் நிறைந்திருந்த செங்குருதிச் சிறகுள்ள ஆயிரம் பறவைகள் அன்றே அகன்று சென்றன என்றனர் சூதர். நான் கண்டு அஞ்சிய பறவைகள். அணையாக்கனல் விழிகள். அலைபாயும் சிறகுகள். ஒருபோதும் கூடணையாதவை. ஒற்றைச்சொல்லை கூவிச்சூழ்பவை. மதலைச்சிறுசொல். மாயாப்பழிச்சொல்.

என்று வருகிற இடம் அதை மிகச்சரியாகப் பொருத்திவிடுகிறது. நீங்கள் ஒரு அபோதாவஸ்தையில் இவற்றைச் சரியாக பொருத்தித்தான் பார்க்கிறீர்கள் என்று தெரிந்த்து. அவற்றை அறிவுபூர்வமாக ஆராய்ச்சி பண்ணினால் தப்பாகத்தான் போகும் என்று நினைத்துக்கொண்டேன்

சிவராம்

படங்கள் நன்றி http://molee.deviantart.com/

வெண்முரசு நாவல் தொடர்பான அனைத்து விவாதங்களும்

மழையின் இசையும் மழையின் ஓவியமும் மழைப்பாடல் பற்றி கேசவமணி


வியாசமனம் முதற்கனல் பற்றி மரபின் மைந்தன்

முந்தைய கட்டுரைகன்யாகுமரி
அடுத்த கட்டுரைபாலுணர்வெழுத்து- சாரு- கடிதங்கள்