ஆண்,பெண்,சமூகம் – இருகடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்

ஆங்கிலத்தில் எழுதுவதற்கு மன்னிக்கவும்

என் கணவர் ஸ்ரீனிவாசன் உங்கள் அன்னா கரீனினா மதிர்ப்புரையை வாசித்துச் சொன்னார். என் நோக்கில் அன்னாவின் துயரமும், கடைசியில் அவள் அடைந்த வீழ்ச்சியும், சமூகத்தினால் உருவாக்கப்பட்டதே. சமூகம் திருமணத்தை முறித்துக்கொள்வதற்கான முழு அதிகாரத்தையும் ஆண்களுக்கே அளிக்கிறது.  அவளுடைய துயரம் என்பது முறைப்படி விரான்ஸ்கியை மணம்புரிய முடியாமல்போனது, மகனை சந்திக்கமுடியாமல் போனது ஆகியவற்றால்தான்.அ வை முழுக்க முழுக்க அவள் முன்னால் கணவரின் கட்டுப்பாட்டில் விடப்பட்டிருந்தன. . அவர் அதை அன்னாவை தண்டிப்பதற்காக பயன்படுத்தினார். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

சுபா ஸ்ரீனிவாசன்

அன்புள்ள சுபா

நீங்கள் சொல்வது பெரும்பாலும் உண்மையே. பெரும்பாலான சமூகங்களில் குடும்பம் என்ற அமைப்பை உருவாக்குவது- கலைப்பது இரண்டுமே ஆண்களால் நிகழ்த்தப்படுகிறது. அதில் பெண் சிக்கிக் கொண்டிருக்கிறாள். ஆகவே அவளுக்கு உள்ளே செல்வதும் வெளியே வருவதும்  துயரமானதாக இருக்கிறது. கிட்டி அவளுடைய திருமண நாளில் வினோதமான முறையில் மகிழ்ச்சியை இழப்பதை நாம் அன்னா கரீனினாவில் காண்கிறோம். ‘போரும் அமைதியும்’ நாவலில் இதைவிட ஆழமான ஒரு இடம் வரும். ராஸ்டோவ் குடும்பத்தில் இளம்பெண்கள் நடனமாடும்போது இரு பாட்டிகள் தாங்கள் திருமண உறவுக்குள் நுழைவதற்கு முன்பிருந்த மகிழ்ச்சியான நிலையை எண்ணி சேர்ந்து கண்ணீர் உகுப்பார்கள்.
அன்னாவின் பிரச்சினைகளை எளிமைப்படுத்திக்கொள்ள முடியாது. சமூகம் அவள் கரீனினை விட்டுவிட்டுச் சென்றதை சாதாரணமாக பார்த்திருந்தால் அவளுக்கு குற்றவுணர்ச்சி உருவாகியிருக்குமா, அந்த துயரம் நிகழ்ந்திருக்குமா என்று கேட்டால் இல்லை என்றே சொல்ல வேண்டியிருக்கும். விரான்ஸ்கிக்கு அன்னாவுடன் வரும் பிரிவே அவள் மீது சமூகம் காட்டிய புறக்கணிப்பின் எதிர்வினையாகத்தான். அது அவளை  எதிர்மறையாக மாற்றியதனால்தான் அவன் அவள்மீது சலிப்பு கொள்கிறான்.

இப்படி பல கேள்விகள்… பல கோணங்கள். தல்ஸ்தோய் அவை அனைத்தையும் தொட்டுக்கொன்டுதான் எழுதியிருக்கிறார்

ஜெ
 

88

அன்பு ஜெ!

           ஆணுக்கு நிகரான சம உரிமை வேண்டும் என போராடும் பெண்களின் நிலைப்பாட்டை என்னால் சரிவர புரிந்‌துகொள்ள இயலவில்லை. உண்மையில் சம உரிமை என அவர்கள் எவ்வெவற்றை கருதுகிறார்கள் என்பது அவர்களுக்கே இன்னும் பிடிபடவில்லையோ என கருதுகிறேன். மரபாய் அவர்கள் செய்து வரும் வீடு சார்ந்‌த பணிகளை ஆண்களும் பகிர்ந்‌துகொள்ள வேண்டும்  எனும் அவர்களது நிலைபாட்டை இன்றைய இளைய சமுதாயத்தின் ஒரு அங்கத்தினனாய் என்னால் ஓரளவு புரிந்‌துகொள்ள முடிகிறது. எனினும் உடற்கூறுகளின் அடிப்படையில் வெவ்வேறு அமைப்புகளைப் பெற்றிருக்கும் போதிலும் ஆண்கள் செய்யக்கூடிய எல்லா வேலைகளையும் தாங்களும் செய்ய வேண்டுமெனவும் செய்யமுடியுமெனவும் கருதும் அவர்களது நிலைப்பாடு எனக்கு விதண்டவாதமாகவே படுகிறது.

உண்மையில் சம உரிமை என அவர்கள் எதைக் கருதுகிறார்கள்?

உங்கள் பார்வையில் சம உரிமை என எவற்றைக் கருதுகிறீர்கள்?

(உங்களை சிரமப்படுத்த மனமில்லை என்ற போதிலும் எப்போதாகிலும் தாங்கள் இதற்கு பதிலளிப்பீர்கள் எனும் நம்பிக்கையில் இதனை எழுதுகிறேன்)

நன்றியுடன்,

லோ. கார்த்திகேசன்

அன்புள்ள கார்த்திகேசன்

இந்த விஷயத்தை அறிவுபூர்வமாக எத்தனை வேண்டுமானாலும் கட்சிகட்டி அலசலாம்.  ஆனால் உணர்வு ரீதியாக, மனசாட்சியின் தளத்தில் நாமனைவரும் உண்மையை அறிந்திருக்கிறோம்.

சுதந்திரம் என்பது இரு தளத்தில், இரு அடிப்படைத்தேவைகளுக்காக தேவைப்படுகிறது. உண்மையான இன்பத்தை அடைவது, ஆன்மீகமான முழுமையை அடைவது. அதற்கான வாய்ப்பு அத்தனை சமூக உறுப்பினர்களுக்கும்  உள்ளதா என்பதே இங்குள்ள கேள்வி. சமத்துவம் தேவையாவது அங்கேதான்.

ஏன் தொழில்களில் சமத்துவம் கோரப்படுகிறது? உழைப்பு என்பது உண்மையான மனநிறைவை உருவாக்கும் வழி என்பதனால்தான். உழைப்பின் பல தளங்கள் விலக்கப்படும்போது ஓர் ஆளுமையின் பல ஆழங்கள் வெளிப்பாட்டுக்கு வாய்ப்பில்லாமலேயே போய்விடுகின்றன. நிர்வாகம், தொழில்நுட்பத்திறன், வணிகம் என எத்தனையோ தளங்களில் ஓர் ஆளுமைக்கு உள்ளார்ந்த தனித்திறன் இருக்கலாம். தனக்கிருக்கும் தனித்திறனை வெளிப்படுத்துவதற்கான ஒரு புற வாய்ப்பை பெறும்போதே உழைப்பு மனநிறைவளிப்பதாக ஆகிறது. அந்த வாய்ப்பு ஒவ்வொரு ஆளுமைக்கும் வழங்கப்படவேண்டும் — ஆணானாலும் பெண்ணானாலும்.

ஆன்மீகமான மலர்ச்சி என்பது தன் வாழ்க்கையை அதற்கேற்ப அமைத்துக்கொள்ளும் சுதந்திரத்தை முதல் நிபந்தனையாகக் கொண்டது. அதற்கான புறத்தடைகள் வேறுவிஷயம். ஆனால் சமூகமே அதை தடைப்படுத்தும்போது அது அநீதியாக ஆகிறது. 

ஆன்மீக முழுமை என்பது தன் வாழ்க்கையை தெரிவுசெய்யும் உரிமையில் இருந்து ஆரம்பிப்பதாகும். உள்ளே நாடோடியாக இருப்பவன் வெளியேயும் நாடோடியாக இருப்பதற்கான வாய்ப்பு, உள்ளே தனிமையில் இருப்பவன் வெளியேயும் தனியனாக இருப்பதற்கான வாய்ப்பு என அதை விளக்கலாம். உறவுகளை உருவாக்குவதும் துறப்பதும் எல்லாம் இந்த அடிப்படையிலேயே  நிகழவேண்டும். அந்த வாய்ப்பு மறுக்கப்படும்போதே ஆன்மீகமான திரிபுநிலைகள் சாத்தியமாமின்றன. இன்று நம் சமூகத்தில் ஆன்மீக சுதந்திரம் ஆண்களுக்கு மட்டுமே உள்ளது என்பது வெளிப்படை.

சிந்திக்கும் உரிமை, வெளிப்பாட்டுரிமை எல்லாமே இதில் அடங்கும். ‘எப்படியும் யோசிக்கும்’ உரிமை இல்லாமல் ஒருவர் ஆன்மீகமான நகர்வையே அடைய முடியாது. இந்த சுதந்திரம் மீது சமூகக் கட்டுப்பாடுகள், சூழல் கட்டுப்பாடுகள் இருக்குமென்றால் அவற்றை மீறுவதிலேயே உளச்சக்தி செலவாகிவிடுகிறது. ஆன்மீக நகர்வே நிகழாமலாகிவிடுகிறது. அவை உருவாக்கும் ஆழ்மனப் பாதிப்புகள் எல்லாவகையான படைப்பூக்க நிலைகளையும் பாதிக்கின்றன. ஒருவருடைய ஆளுமை எதிர்மறையாக ஆவதே அவரை ஆன்மீகமாகக் குறுகச் செய்து விடும். தடைகளால் கட்டப்பட்ட ஒருவர் எதிர்மறையாக ஆகாமலிருப்பது மிகவும் கடினம். இதெல்லாம்தான் இன்றும் பெண்களின் சிக்கல்.

இந்தக்கோணத்தில் யோசித்தால் உங்கள் கேள்விக்கான பதில் திட்டவட்டமாக  கைக்குச் சிக்குவதே

ஜெ [மறுபிரசுரம் 2011]

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 1
அடுத்த கட்டுரைவிதிசமைப்பவர்கள்