குழலிசை

2
அன்புள்ள ஜெயமோகன்

நீலம் வாசித்துக்கொண்டிருந்தபோது ஒரு விதமான போதைநிலைதான் இருந்தது. அதன்பிறகு கடிதங்களையும் கூடவே வந்துகொண்டிருந்த படங்களையும் பார்த்துப்பார்த்துதான் என்னுடைய எண்ணங்களை நான் வளர்த்துக்கொண்டேன். நீலம் என் வாசிப்பில் ஒரு மாஸ்டர்பீஸ். நீங்கள் எழுதியதிலும்கூட அதுதான் மாஸ்டர்பீஸ் என்று சொல்வேன். சிறந்தநாவல் என்றால் என்னென்ன இருக்கவேண்டும் என்று சொல்லப்படுகிறதோ அதெல்லாமே இந்த சின்னநாவலில் இருப்பதை பெரிய ஆச்சரியம் என்றுதான் சொல்வேன்.

மூன்று கதாபாத்திரங்கள்தான். ராதை, கிருஷ்ணன், கம்சன். ஆனால் மூன்றுபேருடைய வாழ்க்கையின் ஒட்டுமொத்தமும் இந்த நாவலுக்குள் இருக்கிறது. நல்ல நாவல்களை வாசிக்கும்போது நான் அடையும் எண்ணம் என்னவென்றால் அது நாம் பார்த்துக்கொண்டிருக்கும்போதே நம்மை அறியாமலேயே வளர்ந்துகொண்டு போகும் என்பதுதான் வாசித்துமுடிக்கும்போதுதான் நாவல் வேறொன்றாக ஆகி நம்மை புதிய இடத்துக்குக்கொண்டுவந்துள்ளது என்பது தெரியும்.

அந்தமாதிரியான நாவலாக மழைப்பாடலும் வண்ணக்கடலும் இருந்தது. மழைப்பாடலில் சத்யவதியும் குந்தியும் வளர்ச்சி அடைவது பெரிய ஒரு மன எழுச்சியைக் கொடுத்தது. ஆனால் அது நாவல் முடிந்தபோதுதான் நம் கவனத்துக்கே வந்தது. நீலத்திலும் ராதை மாறிக்கொண்டே இருப்பதும் கண்ணன் வளர்ந்துகொண்டே இருப்பதும் நமக்குத்தெரியவேயில்லை. வாசித்துமுடிக்கையில் அந்த வளர்ச்சி நம் மனதை தொட்டு அதிர்ச்சியை அளிக்கிறது.

ராதை முதலில் கண்ணனின் காலைப்பார்க்கிறது ஒரு தொடக்கம். அதன்பின்னர் அவன் அவளை ராதை என்று அழைப்பது. அதன்பின் அவள் அவனுக்கு குழலை எடுத்துக்கொடுப்பது. அதன்பின் அவன் அவளுடைய நிர்வாணத்தைப்பார்ப்பது. அதன்பின் அவள் அவனுடைய குழலைக்கேட்டு வீட்டைவிட்டுச்செல்வது. இப்படிப் படிப்படியாக அவள் மாறிக்கொண்டே இருக்கிறாள். அந்தமாற்றம் நிகழ்ந்து முடியும்போது நாவல் பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கிறது

பொதுவாக அலங்காரம் அணி எல்லாம் உள்ளநடை என்றால் மிகவும் தளர்வாக இருக்கும். சொல்லவேண்டியதை நடைக்காகப்போட்டு நீட்டியிருப்பார்கள். லா.ச.ராமாமிருதத்தின் பிற்காலக்கதைகளிலே இதைத்தான் காணமுடிகிறது. அந்த வளர்த்தலே இந்தநடையிலே இல்லை. ஒரு ஆவேசமான நிகழ்ச்சியைக்கூட -‘கண்ணீருடன் கைநீட்டி அக்ரூரர் அருகே வந்தார். அவன் நீலமேனி தழுவ வந்தவர் நிலம் நோக்கிக் குனிந்து தாள்தொட்டு தலையில் வைத்தார்- .என்று சுருக்கமாகத்தான் நீலம் சொல்கிறது. இந்த அடர்த்திகாரணமாகத்தான் இதை மீண்டும்மீண்டும் வாசிக்கவைக்கிறது. முழுமையான செறிவான ஒருநாவல் என்று சொல்லலாம்

ராஜாராம்

11

அன்புள்ள ஜெ சார்

நீலம் முடியும்போது கண்ணன் ராதையின் சிலைமுன் குழலூதும் காட்சியை வாசித்துவிட்டு அந்த எண்ணத்திலேயே இருந்தேன். அதன்பிறகு கண்ணனுக்கு ராதை குழலை எடுத்துக்கொடுக்கும் அத்தியாயத்தை வாசித்தேன்.

பலராமனுக்கு கிருஷ்ணைன் இசை கேட்கிறது. அவன் அது என்ன சொல்கிறது என்று சொல்கிறான்

அதே இசை!” என்று பலராமன் வியந்தான். “என்ன சொல்கிறது மூங்கில்?” என்றான். “என்ன சொல்கிறது? நீயே சொல்” என்று அதை மீண்டும் வாசித்தாள். பலராமன் “வரமாட்டாயா என்று சொல்கிறது” என்றான். “அப்படியா சொல்கிறது? அதுவும்தான் காத்திருக்கிறதா?” என்ற ராதை மீண்டும் வாசித்து “இப்போது?” என்றாள். “இப்போதும் அதையேதான் சொல்கிறது” என்றான் பலராமன்

அதைத்தான் கடைசியிலும் பார்க்கிறோம். கடைசியில் காத்திருக்கிறவள் ராதை இல்லை, கண்ணன்தான். அவளுடைய சன்னிதியில் வந்து நின்று அவன் பாடுவது அதைத்தான்

முத்தமிட்டு மீட்டும் இசைக்கருவியென பிறிதொன்றில்லை. சிறகிலெழுந்த இசையை விஷக்கொடுக்கிலும் உணர்ந்த முதற்கருவண்டு முத்தமிட்டு முத்தமிட்டு துளைத்து எழுந்த பொன்மூங்கில் அறிந்திருக்காது மூங்கில்குலமே அதன் வழியாக இசைகொள்வதை

அந்த வதையை ராதை கடந்துவிட்டாள்.கிருஷ்ணன் அனுபவிக்கிறார் .

ஸ்ரீராம்

வெண்முரசு நாவல் தொடர்பான அனைத்து விவாதங்களும்

மழையின் இசையும் மழையின் ஓவியமும் மழைப்பாடல் பற்றி கேசவமணி


வியாசமனம் முதற்கனல் பற்றி மரபின் மைந்தன்

முந்தைய கட்டுரைஒரு தனிப்பட்ட விண்ணப்பம்
அடுத்த கட்டுரைநம் அறவுணர்ச்சி