உடலின் முழுமை

art

அன்புள்ள ஜெ சார்,

நீலத்தை வாசித்துவாசித்துத் தீரவில்லை. கண்ணனைச் சின்னக்குழந்தையாக உருவகம் பண்ணிய இடத்தில் இருந்து முதியவராக கொண்டு வந்து நிறுத்தியது வரை ஒரே மனமே கற்பனைசெய்திருக்கிறது என்பதே ஆச்சரியமாக இருந்தது. அந்தச்சின்னக்கண்ணனை எழுதும்போதுகூட நீங்கள் அவனை பெரியவராக, வினைமுடித்து வானம் போகப்போகக்கூடியவராக நினைத்திருந்தீர்கள் என்பதே வியப்புதான்.

என் மனசிலே இருந்து சின்னக்கண்ணன் தவறவே இல்லை.ஒரு குழந்தையைப்பற்றி எல்லாவற்றையுமே சொல்லிவிட்டீர்கள் அது சின்னப்பிள்ளையாக இருந்தபோது நீங்கள் எழுதியவரிகளை திரும்பப்போய் வாசித்தபோது ஏற்பட்ட பிரமிப்பு அதிகம் அம் என கீழுதடு அழுந்த, மு என்று மேலுதடு வளைந்து மேலே குவிந்திருக்க அத்தனை குழந்தைவாயும் சொல்லும் அச்சொல்லிலா நீயும் வந்தமைந்திருக்கிறாய்? அய்யோ, நீயுமொரு குழந்தையேதானா? அப்போதே ராதைக்குத்தெரியும். அது வெறும் குழந்தை கிடையாது என்று. ஆனால் வெறும் குழந்தைமாதிரி வந்து படுத்து மாயம் காட்டுகிறது.

இங்கிருந்து இவ்வுடல்கொண்டிருக்கும் பெரும்பாவத்தை இறந்திறந்து களைகிறேன். உன்னை அள்ளி உண்டு நானாக்குகிறேன். உன்னைத்தழுவி என்னுள் செலுத்திக்கொள்கிறேன். வாய்திறந்தொரு கருஞ்சுழிப்பெருவெளியாக எழுக. உன் உணவாகி உன்னுள் மறைகிறேன். இருத்தலென்றறியும் இப்பெரும்வதையில் இருந்து இருளில் உதிர்கிறேன். ஆதலென்றாகும் அப்பெருங்களியில் ஏதும் எஞ்சாமலாகிறேன்.

என்றுதான் குழந்தையை முதலில் பார்த்ததுமே ராதை நினைக்கிறாள். அவள் கடைசிவரை ஏங்கியதும் கடைசியிலே வந்து சேர்ந்ததும் அங்கேதான் என்று கடைசி அத்தியாயங்களை வாசிக்கும்போது தெரிந்தது. சொல்வெளி திகைத்து பொருள்வெளி மலைத்து இப்புவியில் திரண்டதோர் பித்துப்பெருவெளியின் விளிம்பில் நின்று கண்ணீர் துளிக்கிறேன் என்ற வரியை வாசிக்கும்போது கடைசி அத்தியாயத்தை முதலில் எழுதிவிட்டு அங்கே சென்றீர்களோ என்ற பிரமிப்புதான் வந்தது

செவ்விதழ்க் கீழ்நுனியில் வழிந்து திரண்டு நின்றிருந்த ஒரு துளி அமுதை ராதை தன் சுட்டுவிரல் நுனியால் தொட்டு மெய்விதிர்த்து கண்பனித்தாள். அந்த இடத்தை ஆரம்பத்திலே வாசித்தபோது ‘கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ பொற்பூர வாய்தான் தித்தித்திருக்குமோ’ என்ற ஆண்டாளின் ஏக்கம் தான் மனதில் இருந்தது. ஆனால் கடைசி அத்தியாயத்தை வாசித்தபோது தெரிந்தது அந்தத் துளிதான் அவளுக்கு வந்த அந்த நாத ஆராதனை என்று

மனுஷ உடல் ஒரு அற்புதம் என்று சொல்வார்கள். அதில் ஒவ்வொன்றும் மற்ற எல்லா உறுப்புகளுக்குமானது. பிரிக்கமுடியாதது. அப்படி நீலம் ஒரே அமைப்பாக இருக்கிறது. தனித்தனியாக எழுதியதுபோல இல்லை. வரிசையாக எழுதியதுமாதிரியும் இல்லை. ஒட்டுமொத்தமாக ஒரு விஸ்வரூபமாக நாவலை ஒரே நிமிஷத்தில் பார்த்து எழுதியதுமாதிரி இருக்கிறது

நன்றி சார்

சாரங்கன்

LORD-KRISHNA-RADHA-HANDMADE-Modern-Oil-Painting-Hindu-Religious-God-Goddess-Art-200827235978
அன்புள்ள ஜெ

ராதை அறிமுகமான இரண்டாவது அத்தியாயத்திலேயே ஒரு முத்தாய்ப்பு வருகிறது. உண்மையிலே அதுதான் நாவல் தொடங்கும் முதல் அத்தியாயம்.

பருவமடைந்த அவளைக் கூட்டிக்கொண்டு வருகிறார்கள். யமுனை கரைமேல் அவளுக்குப்பிடித்தமான மரக்கிளையை வெட்டிக்கொள்ளச் சொல்கிறார்கள். அவள் தேர்ந்தெடுப்பது நீலக்கடம்பை


உயர்ந்த செம்மண் மேட்டில் இந்த இளங்காலையில் அத்தனை பெரிய பொற்தழல் எப்படி எழுந்தது? அது பூத்துலைந்த நீலக்கடம்பு. அத்தனை மரங்களிலும் அறிந்த நாள்முதல் நான் விரும்பியது இந்த மரத்தைமட்டுமே

கொஞ்சம் கூட யோசிக்காமல் ராதை போய் அந்த மலர்கடம்பின் கிளையைத்தான் ஒடித்துக்கொள்கிறாள். அதைப்பற்றித்தான் நினைத்துக்கொள்கிறாள். அந்தமரம் அவளுக்கு அன்னையாகவும் தோழியாகவும் இருக்கிறது. ஒரு நிரந்தரமான தோழி என்று சொல்லலாம்

ஒவ்வொருநாளும் நான் வந்தமர்ந்து நீர்ப்பெருக்கை நீள்விழிகளால் நோக்கியிருந்தது இதன் அடியில் மட்டுமே. மலர் உதிர்த்தும் குளிர்தென்றல் வீசியும் என்னை பல்லாயிரம் முறை வாழ்த்தியது இந்த முதுமரம். இதன் அழகிய சிறுமலர்களை என் காதுகளில் எத்தனை முறை குண்டலங்களாக அணிந்திருப்பேன்.

அந்த மரத்தின் கீழே நின்றபோதுதான் அவ்வழியாகப்போகும் படகைப் பார்க்கிறாள். அதிலே கண்ணன் அன்று பிறந்த சின்னக்குழந்தையாகப் போகிறான். அவனுடைய கால்களை மட்டும் காண்கிறாள்

அதன்பிறகு அவள் கடைசி அத்தியாயத்தில் அவள் அந்த நீலக்கடம்பின் அடியில் தெய்வமாக நின்றிருக்கிறாள். யமுனைக் கரையில் நின்ற இளநீலக் கடம்பு. அதனடியில் சிறுபீடம் ஒன்றின்மேல் சிற்றாடை கட்டி செந்தாமரை மொட்டேந்தி நின்றிருந்தாள் ராதை. முகிழ்த்த சிறுமுலையும் முறுவலிக்கும் இதழ்களும் விரிந்த மலர்முகமும் விழிநிறைந்த ஒளியுமாய் காத்திருத்தாள்.

இப்போது சின்ன ராதை இருக்கிறாள். அவளும் அந்த நீலக்கடம்பில் ஏறித்தான் விளையாடுகிறாள். அவளும் யமுனையிலே கண்ணனைப்பார்க்கிறாள். படகு விலகிச்செல்லவில்லை. நெருங்கி வருகிறது. சின்னக்குழந்தை இல்லை, முதிய கண்ணன். கால்தெரியவில்லை. பீலி அணிந்த முடி தெரிகிறது

ஒவ்வொரு வரியையும் ஆயிரம் முறை யோசித்து எழுதியதுபோல இருக்கிறது இந்நாவல் ஜெ

முரளி

வெண்முரசு நாவல் தொடர்பான அனைத்து விவாதங்களும்

மழையின் இசையும் மழையின் ஓவியமும் மழைப்பாடல் பற்றி கேசவமணி


வியாசமனம் முதற்கனல் பற்றி மரபின் மைந்தன்

முந்தைய கட்டுரைவண்ணக்கடல் எதிர்வினைகள் அனைத்தும்
அடுத்த கட்டுரையானைடாக்டரும் யானைகளும்