அன்புள்ள ஜெமோ
நீலம் வாசித்துமுடித்த மீட்டல் மனசுக்குள் இருந்துகொண்டே இருந்தது. ஏற்கனவே முதற்கனல், மழைப்பாடல் வண்ணக்கடல் எல்லாம் வாசித்தபோது எழுதவேண்டும் என்று நினைப்பதுண்டு. ஆனால் என்ன எழுதுவது என்று ஒரு தயக்கம். ஏனெறால் என்னால் அதிகமாக எழுதமுடியாது. நான் நினைப்பதை தப்பாகத்தான் சொல்லமுடியும். என் எழுத்தை வாசித்தால் அது அமெச்சூர்த்தனமாக இருக்கும் என்று நினைப்பேன். ஆங்கிலத்தில் ஒருமாதிரியான ஆபீஸ்நடை எழுதமுடியும். மற்றபடி எனக்கும் தமிழுக்கும் சம்பந்தமே இல்லை. நான் வளர்ந்தது பிலாயில். தமிழே படிக்கவில்லை. எழுத்துக்கூட்டி கல்கி வரை வாசித்தவன் இணையம் வந்தபிறகுதான் தமிழிலே வாசிக்க ஆரம்பித்தேன். முதலில் வாசித்தது ஊமைச்செந்நாய். அதன் தீவிரம் காரணமாக கொஞ்சநாள் அதையே நினைத்துக்கொண்டிருந்தேன் அதன்பிறகு உங்கள் நூல்களை வாங்கினேன். காடு ஏழாம் உலகம் கன்யாகுமரி அனல்காற்று வாசித்தேன். இப்போதுதான் விஷ்ணுபுரம் வாங்கினேன்
ஜெ நீலம் பற்றி எழுதாமலிருக்கவே முடியாது என்று தோன்றியது. நீலத்திலே எனக்குப்பிடித்த அம்சம் என்னவென்றால் கண்முன்னாடி வந்து குழந்தையாக நிற்கும் கிருஷ்ணன் பரம்பொருளின் வடிவம் என்று ராதைக்கும் யசோதைக்கும் ரோகிணிக்கும் நந்தகோபனுக்கும் அக்ரூரருக்கும் கம்சனுக்கும் எல்லாம் தெரிகிறது என்பதுதான். பாகவதம் நான் வாசித்ததில்லை. ஆனால் அதன் கதையெல்லாம் என் பாட்டி சொல்லித்தெரியும். அப்போதே எழுந்த கேள்வி என்பது கிருஷ்ணனின் வாய்க்குள் யசோதை ஈரேழு உலகத்தை பார்க்கிறாள். அவன் காளியன் மேல் ஏறி நடனமாடுவதைப்பார்க்கிறார்கள். இந்த அற்புதங்களை எல்லாம் பார்த்தபிறகும் அவனை எப்படி சின்னப்பையனாக நினைத்தார்கள் என்றுதான்
அதற்கு பாகவதம் தெரிந்தவர்கள் சொல்லும் பதில் அதெல்லாம் பகவானின் மாயை என்பதுதான். பகவான் உடனே மாயையால் அவர்களுடைய கண்களைக் கட்டி மீண்டும் அவனை சின்னப்பாலகனாக நினைக்கவைத்தான் என்றுதான் விளக்கம் சொல்வார்கள். அந்த விளக்கம் ஒரு புராண விளக்கம். அதைப்போல பல மாயங்கள் வழியாகத்தான் புராணக்கதைகளை விளக்கிக்கொள்ள முடியும். நவீன நாவலுக்கு அதெல்லாம் ஆகாது. ஆகவேதான் நான் நீலத்தில் வேறு ஒரு பதிலை எதிர்பார்த்தேன்
ஆச்சரியம், நீங்களும் மாயையைப்பறித்தான் சொல்கிறீர்கள். மாயை என்பது பகவானின் லீலைதான். ஆனால் அது அங்கே கண்ணனுக்கு மட்டும் உள்ளது இல்லை. எல்லா பிள்ளைகளும் அம்மா அப்பாக்களை மாயையால் கட்டிப்போட்டிருக்கிறது. நமக்குத்தெரியும் சின்னக்குழந்தைகளெல்லாம் ஒரு பெரிய அற்புதங்கள்தான் என்று. எங்கிருந்து வருகிறது என்பதே ஆச்சரியம். குழந்தை கையில் இருக்கும்போது அந்த ஆச்சரியம் அடிக்கடி வந்து அப்படியே குளிர வைக்கும். அதேமாதிரி குழந்தைகள் உலகத்தைப்புரிந்துகொள்ளும் விதமும் பேச ஆரம்பிப்பதும் எல்லாமே ஆச்சரியம். அதெல்லாமே பரம்பொருளின் லீலைகள்தான். ஆனால் நாம் வாழும் சின்ன உலகத்திலே அதை வைத்து விளக்கிக்கொள்வதனால் அந்த லீலையையை நாம் காண்பது. அதுதான் மாயை
அந்தமாயையில்தான் கிடக்கிறார்கள் எல்லாரும். அவர்களெல்லாருமே கிருஷ்ணனை உடனடியாக அவர்களுக்குப் பிடித்தமான வடிவத்துக்கு மாற்றிக்கொள்கிறார்கள். அவனை பாலனகவும் காதலனாகவும் காண்கிறார்கள். கடலை சின்ன குப்பியிலே பிடித்துக்கொண்டு வருவதுபோல. அதையும் ஒருவரியில் நீங்களே சொல்கிறீர்கள். சொல்லப்போனால் நாம் இந்த வாழ்க்கையில் எங்கும் காணக்கிடைக்கும் பரம்பொருளின் லீலையை நம்முடைய எளிமையான அன்றாட வாழ்க்கையின் mundane விஷயங்களை வைத்து சின்னதாக ஆக்கிக்கொள்கிறோம். குழந்தைகள் பிறப்பு சாவு.
ஏன் என் வீட்டுக்குமுன்னால் நூற்றுக்கணக்கான புங்கமரங்கள் உண்டு. கோடையில் அத்தனைமரமும் ஒரேநாளில் சரியாகப் பூக்கும். அந்தமாதிரி பூப்பது எப்படி என்று யோசிக்கப்போனாலே லீலையைத்தான் போய்ச்சேருவோம். ஆனால் அது புங்கமரம் அப்படித்தான் பூக்கும் என்று போய்க்கொண்டே இருப்போம் அதுதான் மாயை என்பது.கிருஷ்ணலீலையிலே நான் கண்டது அந்த மாயையைத்தான். அதை அழகாகச் சொல்லியிருந்தீர்கள். எல்லாருமே மாயையிலேதான் போய்விழுகிறார்கள்
இங்குள்ள அனைத்தும் ஆற்றும் அங்குள பொருள் ஒன்றைக் கண்டேன். எங்குமுளது வந்து என் கையில் தவழ்ந்ததை அறிந்தேன். என்னவன் என்னுயிர் என்று மன்னுயிரெல்லாம் மயங்கும் வண்ணம் உணர்ந்தேன். அக்கணமே அவனிலிருந்து உதிர்ந்து எங்கோ சென்று நின்றேன்.என்று கண்ணனின் பாட்டி வரியாசி சொல்கிறாள். அதேமாதிரித்தான் கண்ணனின் அப்பா நந்தகோபனும். அவன் யாரென்று அவருக்குத்தெரியும். கம்சனைக்கொல்ல அவன் போகலாம் என்று அவர் நினைப்பதே அதனால்தான். ஆனால் தந்தையின் கெத்தைக் கடைப்பிடித்துக்கொள்கிறார்
அதேபோல அக்ரூரருக்கும் தெரியும். அவர் ரத்தத்தைப் பார்த்துவிட்டார். இரக்கமற்றவன் கண்ணன் என்று நினைக்கிறார். ஆனால் அவரே கண்ணனிடம் நீதியைப்பற்றி பேசுகிறார். இரக்கம் காட்டலாமே என்று யாதவர்களின் மூத்தவராக நின்று வாதாடிப்பார்க்கிறார்.
நம்முடைய வாழ்க்கை என்பதே உண்மையிலே கடவுளிடம் நாம் செய்யும் negotiation என்று நான் நினைப்பதுண்டு. கடவுள் பெரிய சதுரங்கத்திலே நம்மை நிறுத்துகிறார். நாம் என்னசெய்கிறோமென்றால் சின்னச்சின்ன சதுரங்கக் கட்டங்களிலே விளையாடுகிறோம். கடவுள் இதுக்குள் வந்து நமக்கு அனுக்ரகம் பண்ணவேண்டுமென நினைக்கிறோம். இதைத்தான் மாயை என்கிறார்கள்.
வாஸன்
வெண்முரசு நாவல் தொடர்பான அனைத்து விவாதங்களும்