இன்னொரு கொலைசிந்து

ஜெ,

கொலைச்சிந்துவுக்கு இன்னும் ஒரு சரியான உதாரணம். எஸ்.ராவைவிட கொஞ்சம் பெட்டர் இல்லையோ?

சுரேஷ்

======================================================
வேட்டை

மனுஷ்யபுத்திரன்

வன விலங்குப் பூங்காவில்
வேலியைத்தாண்டி விழுந்த மனிதனை
வெள்ளைப் புலி ஒன்று
அடித்துக்கொன்றுவிட்டது
கொல்வதற்கு முன்பு
அது அந்த மனிதனை
பத்து நிமிடங்கள்
மெளனமாக உற்றுப் பார்த்துகொண்டிருந்தது

தப்பி ஓடுவதற்கு
வழியில்லாத மனிதனை
தாக்கலாமா
என்ற தத்துவார்த்த பிரச்சினையை
அது தீர்க்க வேண்டியிருந்தது

அது வன விலங்கு பூங்காவிலியே
பிறந்தது என்பதால்
தன் மூதாதயரின் வேட்டையாடும் பழக்கத்தை
தன் ஆழ்மனதிலிருந்து எழுப்ப வேண்டியிருந்தது

அது எதிரிக்கும்
ஒரு நியாமான சண்டையிடும் வாய்ப்பை
வழங்க வேண்டும் என்பதால்
அவகாசம் எடுத்துக்கொண்டது

அந்த மனிதன் சரணடைவதற்கு
முழுமையான ஆயத்த நிலையில் இருக்கிறானா
என்பதை பரிசோதிக்க அது விரும்பியிருக்கக் கூடும்

தனக்கு அப்போது
முழுமையாக பசி எடுக்கிறதா என்பதை
உறுதிப்படுத்திகொள்ள
அதற்கு கொஞ்சம் நேரம் தேவைப்பட்டிருக்கலாம்

வேட்டை இலக்காக இருக்கும்
ஒரு விலங்கு
தன்னை கையெடுத்து கும்பிடுவது
அதற்கு ஒரு வினோதமான காட்சியாக இருந்திருக்கக் கூடும்
அதுனுடைய புராதன வேட்டை நினைவுகளில்
அத்தகையை காட்சிகள் எதுவும் இல்லை

அது மனிதர்களால் வளர்க்கப்பட்டதால்
அதற்கு
தன்னால் கொல்லப்படவிருக்கும்
மனிதனின்
மரணபயத்தை
ரசிக்கும் பழக்கம்
எப்படியோ வந்துவிட்டிருக்கவும் கூடும்

அல்லது
அது பூரணமான ஒரு காட்டு மிருகம்
என்பதால்
அந்த மனிதனை
அது அவ்வளவு நேசத்துடன்
அரவணைக்க விரும்பியது
என்பதாகவும் இருக்கலாம்

அது மனிதனைக் கண்டு
கொஞ்சம் பயந்தது
அவன் உண்மையிலேயே
நிராயுதபாணிதானா என்று
அது நிச்சயப்படுத்திக்கொள்ள விரும்பியது

பத்து நிமிட தியானத்திற்குப் பிறகு
அது அந்த மனிதனை
தனது இயற்கையின் விதிப்படி
ஒரு அறையில் கொன்றுவிட்டது

24.9.2014
இரவு 10.41

============================================
அன்புள்ள சுரேஷ்

கண்டிப்பாக. ஆனால் அதைவிட இதிலே பிலாசபி கொஞ்சம் ஜாஸ்தியாக வெந்துவிட்டது.

நான் சித்தையன்கொலைச்சிந்தை இந்த நடையிலே மறுஆக்கம் செய்திருக்கிறேன். சாம்பிள்

சித்தையன் கொலைச்சிந்து [புதுக்கவிதை]

கையில் எழுகிறது வீச்சரிவாள்
வெகுமதி
வெட்கம் கெட்டமைக்கு
உனக்கே இது என்று
வெட்டியது கழுத்தைச்சேர்த்து
பாலம்மாளை
கழுத்தைச் சேர்த்து
சதக் சதக்
சலசல
தெறித்தது ரத்தம்
தரையில் விழுந்து துடித்தது
தாலி கட்டிக்கொண்டவளை
கொன்ற துரோகி
என்றது தலை
அவனைக் கண்டு துடித்து!

முந்தைய கட்டுரைபுலியும் புன்னகையும்
அடுத்த கட்டுரைநகரும் கற்கள்