இந்தியப் பயணம் சில சுயவிதிகள்

நண்பர்களுடன் கூட்டாகப் பயணம்செய்வது கடந்த இருபது வருடங்களாகவே எனக்கு வழக்கமாக உள்ளது. நண்பர்கள்தான் மாறிக்கொண்டிருக்கிறார்கள். பலர் ‘வயதாகி’ பின்தங்கிவிட்டிருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த அனுபவங்களில் இருந்து பயணத்துக்குத் தேவையான சில அடிப்படை சுயவிதிகளை நான் கண்டறிந்திருக்கிறேன். இவற்றை நாமே உருவாக்கிக் கொள்ள வேண்டிய மனநிலைகள் என்று கூட சொல்லலாம்.

இவ்விதிகளின் அடிப்படை என்ன? முதல்விஷயம், ஒரு பயணத்தில் பலர் சேர்ந்துசெல்வதென்பது பாதுகாப்பு,செலவைக்குறைத்தல் போன்ற புறவசதிகளுக்காகவே. அடிப்படையில் பயண அனுபவம் என்பது அந்தரங்கமானது, தனிமையில் உணரப்படுவது. ஆகவே பயணத்தில் இருக்கும் ஒருவர் பிறரது வசதிகளையும் பிறது அந்தரங்கத்தையும் பாதிக்காத வகையில் செயல்பட்டாக வேண்டும். அதற்காக ஒரு சுயகட்டுப்பாடு அனைவருக்கும் தேவை. 

இரண்டாவதாக, பயணத்துக்குரிய மனநிலைகளை நாம் பயின்று உருவாக்கிக் கொள்ளாவிட்டால் பயண அனுபவத்தை இழக்க நேரிடும். ஒரு பூவை ரசிப்பதற்குக்கு கூட அதற்கான மனப்பயிற்சியை நாம் உருவாக்கிக் கொள்ளவேண்டியிருக்கிறது. பல முக்கியமான விஷயங்களை தன்னுள்ளேயே சுழன்றுகொண்டிருக்கும் இயல்புடைய நம் மனம் உதாசீனம் செய்துவிடும். தன்னிச்சையான அனுபவம் என்பது நம் மனத்தின் தடைகளைத்தாண்டி நமக்குள் தற்செயலாக வருவதேயாகும். அது மிக அபூர்வமானது. பலசமயம் முக்கியமற்றது.

விதிகள், பிறருக்காக…
================

1. பயணத்தில் நம்முடைய அலைவரிசைக்கு உட்பட்ட நண்பர்களை தேர்வு செய்வது மிக மிக முக்கியமானது. தெரியாத நண்பர்களுடன் பயணம்செய்வதை தவிர்த்துவிடுவது அவசியம். எழில் நிறைந்த காட்டுக்குள் பயணம்செய்யும்போது சினிமாப்படத்தைப்போட்டு மகிழ்ந்து பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு ஆசாமி நம் அருகில் இருப்பதே நம்மை குலைத்துவிடும்.

2. பயணம்செய்யும்போது இரு நண்பர்கள் நடுவே சிறிய மன உரசல் வந்தால்கூட அது அத்தனை பேருடைய மனநிலையையும் சீரழித்துவிடும். அவர்கள் பணம்செலவுசெய்து செய்யும் பயணத்தை சிதைக்க நமக்கு உரிமை கிடையாது. ஒருபோதும் ஒரு பயணத்தில் அகங்கார மோதல்கள் சொற்கலப்புகள் நிகழக்கூடாது. அதற்கான வாய்ப்புகளை முழுக்கமுழுக்க தவிர்த்துவிட வேண்டும்.

ஆகவே பயணத்தில் பிறரை கண்டிப்பது, விமரிசிப்பது கூடாது. விவாதங்கள் இறுதி எல்லையை தொட்டதுமே நிறுத்திவிடவேண்டும். கூடுமானவரை கடுமையான மாற்றுக்கருத்துக்களைச் சொல்லக் கூடாது. கிண்டல்கள்கூட எல்லை கடக்கக் கூடாது. பலசமயம் சில சில்லறை விஷயங்களுக்காக உரசல்கள் உருவாகி மொத்தப் பயணமும் மனச்சோர்வுமிக்கதாக ஆகிவிட்டிருக்கிறது. என்னைப்பொறுத்தவரை பயணத்தின் இந்த கட்டுப்பாட்டை மீறிவிட்ட ஒருவருடன், அவர் எத்தனை நல்ல நண்பராக இருந்தாலும், மீண்டும் ஒரு பயணம் செய்ய மாட்டேன்.

3. பயணத்தை ஒவ்வொருவரும் ஒரு வகையில் எதிர்கொள்ளலாம். சுறுசுறுப்பாக இருப்பவர்கள் உண்டு. மிகவும் உள்வாங்கி அமைதியடைபவர்களும் உண்டு. ஆகவே ஒருவரை இன்னொருவர் எப்படி நடந்துகொள்வது என்று வற்புறுத்தக் கூடாது. பிறரது மனநிலைகளுக்குள் புகுவதும்கூடாது.

4. அதேசமயம் ஒரு பயணத்தின்போது அதில் உள்ளவர்களின் பொதுவான வசதியே நம்முடைய வசதி என்ற உணர்வு ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும். நம்முடைய தனிவசதிக்காக பிறரை காக்க வைப்பதோ அவர்களின் வசதிகளை மாற்றச் செய்ய முயல்வதோ பயணத்துக்குரிய மனநிலைக்கு நேர் எதிரானவை. பொதுவாக எதற்கும் எப்போதும் தயார், எந்த நிபந்தனைகளும் இல்லை என்ற வகையான நண்பர்களே பயணத்துக்கு உகந்தவர்கள். எது எப்படி போனாலும் காலையில் எனக்கு காபி வேண்டும் என்று கேட்கும் ஒரு நண்பர் மொத்தப்பயணத்தையே குலைத்து இம்சையாக ஆகிவிடுவார்.

இந்த கட்டுப்பாடு இல்லாமையால் சில பயணங்களில் ஒரு குறிப்பிட்ட ஓட்டலில் சாப்பிடுவதா வேண்டாமா, ஒரு குறிப்பிட்ட விடுதியில் தங்குவதா இல்லையா என்று நடுத்தெருவில் நின்று மணிக்கணக்காக விவாதித்துக் கொண்டிருப்பவர்களை பார்த்திருக்கிறேன். அங்கே அவ்வளவுதூரம் பயணம் செய்துவந்த நோக்கமே மறந்துபோய் அதுவே பெரிய விஷயமாக இருக்கும். சிலசமயம் அதை மேலும் நீட்டித்து ‘அப்பவே சொன்னேனே’ என்று மறுநாளும் பேசிக் கொண்டிருப்பார்கள்.

5. பயணங்களில் ஒருபோதும் நிகழக்கூடாத ஒன்று இரு கோஷ்டிகளாக பிரிந்துவிடுவது. ஐந்துபேரில் மூவர் ஒரு தனிக்குழுவாக ஆகி செயல்பட ஆரம்பிப்பது. சில நண்பர்களுக்கு இயல்பாகவே அப்படி கோஷ்டி சேர்க்கும் மனநிலை உண்டு. தயக்கமே இல்லாமல் அப்படிப்பட்டவர்களை பயணத்தில் இருந்து தவிர்த்துவிட வேண்டும்.

6. பயணத்தில் ஒருபோதும் வசதிக்குறைவுகளைப் பற்றி வெளியெ சொல்லக்கூடாது. அவ்வசதிக்குறைவுகளை உடன்வருபவர்கள் உணராமல்கூட இருக்கலாம். அவர்கள் உற்சாக மனநிலையில் இருக்கும்போது நாம் ஒருவசதிக்குறைவை வாய்விட்டுச் சொல்வதன்மூலம் அவர்களின் மனநிலையை சிதறடிக்கிறோம். 

7. பயணத்தில் ஒரு இடம் நம்மை கவராமல் இருக்கலாம். ஏமாற்றம் அளிக்கலாம். அதையும் வாய்விட்டுச் சொல்லக்கூடாது. ஏனென்றால் நம்முடன் வருபவர் ஆழமான முறையில் அந்த இடத்தால் கவரப்பட்டிருப்பார். வாய்விட்டுச் சொல்லப்படும் சொற்கள்  உடனடியாக பிறரது மனநிலையை மாற்றியமைக்கின்றன. ஒரு இடம் உங்களைக் கவரவில்லை என்றால் பேசாமல் இருங்கள். அங்கிருந்து சென்றபின் அதைப்பற்றி பேசுங்கள்.

8.பயணத்தில் நாம் நமக்கு நினைவுக்கு வந்த பழைய விஷயங்களைப் பற்றி பிறரிடம் அதிகமாகப் பேசக்கூடாது. கூடுமானவரை அந்தந்த இடங்களின் மனநிலையில் இருக்க வேண்டும். இது அனேகமாகச் சாத்தியமில்லை என்றாலும் தேவையான ஒன்று.

விதிகள், நமக்காக…
===============

1. பயணம் பற்றி நாம் கொண்டுள்ள மனநிலையைப்பற்றி நமக்கே ஒரு தெளிவு இருக்க வேண்டும். இன்பத்துக்காக அல்லது உல்லாசத்துக்காக பயணம் செய்கிறோமா அல்லது அனுபவத்துக்காக பயணம்செய்கிறோமா என்ற தெளிவே முதன்மையானது. இன்பச்சுற்றுலா என்பது செலவேறிய ஒரு கேளிக்கை. அதற்கான இடங்களும் முறைகளும் முற்றிலும் வேறு. நான் அப்படிப்பட்ட பயணங்களை தனிப்பட்ட முறையில் வெறுக்கிறேன்.

நான் உத்தேசிக்கும் பயணம் என்பது ஒரு திறந்த அனுபவ வெளி. அங்கே துன்பமும் இன்பமும் அனுபவங்களே. சிக்கல்களும் பிரச்சினைகளும் கூட அனுபவங்களே. அவ்வனுபவங்களை தேடித்தான் பயணம் செய்கிறோம். அவை நிகழும்போது நமக்கு அச்சமும் பதற்றமும் கோபமும் எல்லாம் ஏற்படலாம். ஆனால் பின்னால் திரும்பிப் பார்க்கும்போது அவையும் நம் பயண அனுபவத்தைச் செழுமைப்படுத்தியிருப்பதைக் காணலாம். அனைத்துவகையான அனுபவங்களுக்கும் நம்மை திறந்து விடுவதே பயணம் என்பது. அந்தமனநிலை நமக்கு இருக்குமென்றால் எல்லாவற்றையுமே ரசிக்க ஆரம்பித்துவிடுவோம். வழிதவறுவது, வண்டி உடைந்துவிடுவது, தங்க அறையில்லாமல் தெருவில்நிற்பது எல்லாமே சுவாரசியமாக ஆகிவிடும்.

2. பயணத்தை நாம் மேற்கொள்வதே நம் அன்றாட வாழ்க்கையின் முடிவற்ற சுழற்சியில் இருந்து விடுபட்டு சாதாரணமாக நமக்கு நிகழாத அனுபவங்களை அடைவதற்காகத்தான். அதற்கு நம் அன்றாடவாழ்க்கையில் இருந்து துண்டித்துக் கொள்வது மிகமிக முக்கியமானது. செல்போனில் இருந்து காதை விலக்காமலேயே பயணம்செய்பவர்களை நான் கண்டிருக்கிறேன். செக்குமாடு திறந்தவெளியிலும் சுற்றிச் சுற்றித்தான் வருமாம். மானசீகமான செக்கு மாட்டை விடுவதேயில்லை.

பயணம் கிளம்பியதுமே அன்றாட வாழ்க்கையை முழுமையாக துண்டித்து பின்னால் விட்டுவிடுவதே உகந்தது. அதற்கு முடியாவிட்டாலும்கூட முடிந்தவரை அன்றாட வாழ்க்கைசார்ந்த விஷயங்களை கழற்றிவிட்டுவிட்டு செல்லவேண்டும். நாம் நம் சொந்த விஷயங்களைப் பற்றிய எண்ணங்களுடன் வந்தால் நம் குழுவின் மனநிலையையும் கலைத்துவிடுவோம்.

3. ஒருபோதும் ஒரு இடத்தை இன்னொன்றுடன் ஒப்பிடக்கூடாது. ‘என்ன இருந்தாலும் அந்த எடம் அளவுக்கு இல்லை’ என்ற மனநிலையே தவறானது. அது உண்மையில் அப்போது தோன்றும் ஒரு மேலோட்டமான மனப்பதிவு மட்டுமே. ஒவ்வொரு இடத்துக்கும் அதற்கான தனித்தன்மையும் மனநிலையும் உண்டு. ஒப்பிட்டோமென்றால் அந்த தனித்தன்மையை நாம் காணாமல் போய்விடுவோம். மேலும் அந்த ஒப்பீட்டை வாய்விட்டுச் சொல்லிவிட்டால் பிறர் அனுபவமும் சிதறும்

4. பயணத்தில் இரண்டுவகையில் நாம் இடங்களை ‘பார்க்கிறோம்’ நாம் அறியாமலேயே நம் ஆழ்மனம் இடங்களைப் பார்த்து உள்வாங்கிக் கொண்டிருக்கிறது. அந்த இடங்கள் பின்னால் நம் நினைவில்வரும்போது நாம் நாமே உணராமல் பல விஷயங்களை கவனித்திருப்பதைக் காணலாம். ஆனால் அத்துடன் நாம் பிரக்ஞைபூர்வமாக அந்த இடங்களைப் பார்க்கவேண்டியிருக்கிறது.

ஓர் இடத்தை ‘இனி இங்கே வரப்போவதேயில்லை’ என்ற எண்ணத்துடன் கவனமாகக் கூர்ந்து பார்ப்பது மிகவும் முக்கியமானது என்று உணர்ந்திருக்கிறேன். உண்மையில் இந்தியா போன்ற பெரிய தேசத்தில் பெரும்பாலான இடங்களுக்கு நாம் மீண்டும் போகப்போவதேயில்லை. அந்த உணர்வு இருக்குமென்றால் நாம் ஒரு காட்சியைக்கூட தவறவிடமாட்டோம்.

5. எந்த இடத்திலிருந்தும் நினைவுச்சுவடுகளை கொண்டுவரவேண்டியதில்லை என்பது என் எண்ணம். புகைப்படங்கள்கூட நான் எடுப்பதில்லை. நம் நினைவில் ஒரு விஷயம் இருந்தால் பிற சின்னங்கள் தேவையில்லை. நினைவில் இல்லாதபோது அவை வெறும் குப்பைகளாக ஆகிவிடும். அப்படி கொண்டுவந்த பொருட்களை நெடுநாள் வைத்திருப்பவர்கள் மிகமிகக் குறைவே

பயணங்களை நம் உடல் நிகழ்த்தினால் மட்டும் போதாது.மனமும் கூடவே சென்றாக வேண்டும், அங்கெல்லாம் இருந்தாக வேண்டும். மனதை சிறிது பயிற்றுவித்தால் மட்டுமே அதற்குப் பழகும்.

இந்தியச்சுற்றுப்பயணத் திட்டம்

இந்திய சுற்றுப்பயணம்:கடிதங்கள்

முந்தைய கட்டுரைஇந்தியப்பயணம்:கடிதங்கள்
அடுத்த கட்டுரைஆத்திசூடி:கடிதங்கள்