ஒளி வாழ்த்து!

ஒளியே!

 

 
மித்திரனுக்கும் வருணனுக்கும் கண்ணை,
சூரியனை,
வணங்குங்கள்.
தொலைவில் தெரிபவன்! விண்ணின் மணிக்கொடி!
தெய்வங்களில் பிறந்தவன், தேவர்களில் மகத்தானவன்!
அலகிலாப் பேரொளியின் புதல்வன்! அவனைத் துதியுங்கள்!

என்னுடைய இந்த மெய்ச்சொற்கள்
எத்திசையிலும் சூழ்ந்து காக்கட்டும்!
விண்ணும் மண்ணும் நாட்களும் பரவியிருக்கும் இடமெங்கும்
இச்சொற்களும் பரவட்டும்!
அசைகின்ற அனைத்தும் இளைப்பாற,
வளம்தரும் விண்நீர்கள் பொழிய,
எழுகின்றான் கதிரவன்!

சூரியனே, உன் சிறகுள்ள வெண்குதிரைகளை
பொற்தேரிலே பூட்டி நீ எழும்போது
பழைய இருளரக்கர்கள் எவரும்
உன்னை நெருங்குவதில்லை!
பழைய ஒளியுடன் நீ சென்றணையும்போதே
இதோ புதிய ஒளியுடன் கிழக்கிலெழுகிறாய்!

பரிதி! இருளகற்றி உயிர்களைச் சுடரச்செய்யும்
உன்னுடைய பேரொளியால்
எங்கள் வறுமையை, அறியாமையை, நோயை,
கொடுங்கனவுகளை அகற்று!

ஒவ்வொருநாளும்
சினமில்லாத புதிய புன்னகையுடன் எழுகிறாய்!
அத்தனை நெறிகளையும் நடத்துகிறாய்.
இன்று உன்னிடம் எங்கள் வேண்டுதல்களைச் சொல்கிறோம்.
தேவர்கள் அவற்றை உன்னிடம் சொல்லட்டும்!

ஒளியும் புவியும் நீரும்
இந்திரனும் மருத்துக்களும்
கேட்கட்டும் எங்கள் துதிகளை!
சூரியனை கண்டு எங்கள் துயர்கள் அகல்க!
எங்கள் குலமெல்லாம் நீடுவாழ்ந்து
மங்கல மூப்பெய்துக!

நல்லுள்ளமுள்ளோர், நல்விழிகொண்டோர்,
நன்மக்களுள்ளோர், நோயற்றோர், பாவமற்றோர்
தினந்தோறும் உன்னை போற்றுக!
சூரியனே, நல்லோரைக் காப்பவன் நீ!
நாள்தொறும் எழுபவன் நீ!
விழிதூக்கி உன் அழிவிலா மகத்துவத்தை நாங்கள் பார்க்கிறோம்.

விண்ணவனே! அனைத்தையும் காணும்விழியே!
பேரெழில் கொண்டவனே! ஒளிர்பவனே!
கண்களையெல்லாம் காட்சியாக்குபவனே!
பரந்திருக்கும் பெருங்கடலில் எழுபவனே!
உன்னை தினமும் காண
நாங்கள் நீடு வாழ்வோமாக!

பொன்னிறக் கூந்தல் கொண்டவனே!
உன் ஒளியைப்பருகி
பகலில் வாழும் உயிர்களெல்லாம் ஊக்கம் கொள்கின்றன.
இரவில் இளைப்பாறுகின்றன
நீ பாவத்தை அகற்றி
நோய் நீக்கி
உயிரை அள்ளி வீசியபடி
தினந்தோறும் எழுந்து வருக!

ஒளியால் எங்களுக்கு நலம்புரிக!
பகல்களால் எங்களுக்கு ஆசிபுரிக!
பனியால் எங்களுக்கு இன்பம் அளி.
வெப்பத்தால் எங்களுக்கு இன்பம் அளி
செங்கதிரே! எங்கள் வழிகளில்,
எங்கள் இல்லங்களில்,
எங்களுக்கு நலம் நிறைய
எல்லா செல்வங்களையும் எங்களுக்கு அருள்க!

விண்ணவர்களே!
எங்கள் இருவகை வளர்ப்புயிர்களும் நலம் கொள்க.
சுற்றமும் சூழ்ந்தவையுமான அவை
பருகவும் உண்ணவும்
கருணைகொண்ட இயற்கையாக வந்து பொலியுங்கள்!
எங்களுக்கு நலத்தையும் உவகையையும் தூய்மையையும்
அள்ளி வழங்குங்கள்!

நாங்கள் எங்கள் நாக்கால், உள்ளத்த்தால்,
அறியாமையின் விசையால்,
பாவங்களைச் செய்து தெய்வங்களைச் சினப்படுத்தியிருப்பின்
வசுக்களே, விண்ணவர்கூட்டமே,
அந்தச் சினத்தை எங்களை அச்சுறுத்தும்
பாவத்தின் மீதே செலுத்துங்கள்!

ஆம் அவ்வாறே ஆகுக!

 

[ரிஷி அபிதவன் சூரியனை நோக்கி கூறியது. ரிக்வேதம் பத்தாம் மண்டிலம் 37 ஆவது பாடல்

 

உன்னுடைய சூரியன்

 

உனக்கு சந்தோஷம் தருவது எதுவோ

அதுவே உனக்கு சூரியன்

உதாரணமாக ஒரு சாப்பாட்டுப்பொட்டலம்

ஒரு பப்பாளிப்பழம்

ஒருநண்பனின் முகம்

ஒரு குவளைத்தண்ணீர்

ஒரு கண்ணாடி

இன்னும்

காகிதத்தில் பொதியப்படாத கவிதைகள்

என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

ஒரு சாப்பாடுப் பொட்டலம்

அப்போதைய நிறைவை உனக்கு அளிக்கவில்லை என்றால்

ஒரு பப்பாளிப்பழம்

அன்றைய பொழுதை இனிமையாக்கவில்லை என்றால்

ஒரு நண்பனின் முகம்

உன் முகத்திற்கு ஒளியேற்றவில்லை என்றால்

ஒருகுவளைத்தண்ணீர்

உன்தாகம் தணிக்கவில்லை என்றால்

ஒரு கண்ணாடி முன்

நீ புன்னகை கொள்ள இயலவில்லை என்றால்

காகிதத்தில் பொதியப்படாத கவிதைகளாய்

உனக்கு உன் வாழ்க்கை ஒருபோதும் காணப்படவில்லையெனில்

உணர்ந்துகொள்

நீ இருக்குமிடம் ‘சூரியமறைவுப்பிரதேசம்’

தேவதேவன்

[தேவதேவன் கவிதைகள். தமிழினி]

முந்தைய கட்டுரைசக்கரியா மீது தாக்குதல்
அடுத்த கட்டுரைகாந்தியை எப்படி வகுத்துக்கொள்வது?