«

»


Print this Post

ஒளி வாழ்த்து!


ஒளியே!

 

 
மித்திரனுக்கும் வருணனுக்கும் கண்ணை,
சூரியனை,
வணங்குங்கள்.
தொலைவில் தெரிபவன்! விண்ணின் மணிக்கொடி!
தெய்வங்களில் பிறந்தவன், தேவர்களில் மகத்தானவன்!
அலகிலாப் பேரொளியின் புதல்வன்! அவனைத் துதியுங்கள்!

என்னுடைய இந்த மெய்ச்சொற்கள்
எத்திசையிலும் சூழ்ந்து காக்கட்டும்!
விண்ணும் மண்ணும் நாட்களும் பரவியிருக்கும் இடமெங்கும்
இச்சொற்களும் பரவட்டும்!
அசைகின்ற அனைத்தும் இளைப்பாற,
வளம்தரும் விண்நீர்கள் பொழிய,
எழுகின்றான் கதிரவன்!

சூரியனே, உன் சிறகுள்ள வெண்குதிரைகளை
பொற்தேரிலே பூட்டி நீ எழும்போது
பழைய இருளரக்கர்கள் எவரும்
உன்னை நெருங்குவதில்லை!
பழைய ஒளியுடன் நீ சென்றணையும்போதே
இதோ புதிய ஒளியுடன் கிழக்கிலெழுகிறாய்!

பரிதி! இருளகற்றி உயிர்களைச் சுடரச்செய்யும்
உன்னுடைய பேரொளியால்
எங்கள் வறுமையை, அறியாமையை, நோயை,
கொடுங்கனவுகளை அகற்று!

ஒவ்வொருநாளும்
சினமில்லாத புதிய புன்னகையுடன் எழுகிறாய்!
அத்தனை நெறிகளையும் நடத்துகிறாய்.
இன்று உன்னிடம் எங்கள் வேண்டுதல்களைச் சொல்கிறோம்.
தேவர்கள் அவற்றை உன்னிடம் சொல்லட்டும்!

ஒளியும் புவியும் நீரும்
இந்திரனும் மருத்துக்களும்
கேட்கட்டும் எங்கள் துதிகளை!
சூரியனை கண்டு எங்கள் துயர்கள் அகல்க!
எங்கள் குலமெல்லாம் நீடுவாழ்ந்து
மங்கல மூப்பெய்துக!

நல்லுள்ளமுள்ளோர், நல்விழிகொண்டோர்,
நன்மக்களுள்ளோர், நோயற்றோர், பாவமற்றோர்
தினந்தோறும் உன்னை போற்றுக!
சூரியனே, நல்லோரைக் காப்பவன் நீ!
நாள்தொறும் எழுபவன் நீ!
விழிதூக்கி உன் அழிவிலா மகத்துவத்தை நாங்கள் பார்க்கிறோம்.

விண்ணவனே! அனைத்தையும் காணும்விழியே!
பேரெழில் கொண்டவனே! ஒளிர்பவனே!
கண்களையெல்லாம் காட்சியாக்குபவனே!
பரந்திருக்கும் பெருங்கடலில் எழுபவனே!
உன்னை தினமும் காண
நாங்கள் நீடு வாழ்வோமாக!

பொன்னிறக் கூந்தல் கொண்டவனே!
உன் ஒளியைப்பருகி
பகலில் வாழும் உயிர்களெல்லாம் ஊக்கம் கொள்கின்றன.
இரவில் இளைப்பாறுகின்றன
நீ பாவத்தை அகற்றி
நோய் நீக்கி
உயிரை அள்ளி வீசியபடி
தினந்தோறும் எழுந்து வருக!

ஒளியால் எங்களுக்கு நலம்புரிக!
பகல்களால் எங்களுக்கு ஆசிபுரிக!
பனியால் எங்களுக்கு இன்பம் அளி.
வெப்பத்தால் எங்களுக்கு இன்பம் அளி
செங்கதிரே! எங்கள் வழிகளில்,
எங்கள் இல்லங்களில்,
எங்களுக்கு நலம் நிறைய
எல்லா செல்வங்களையும் எங்களுக்கு அருள்க!

விண்ணவர்களே!
எங்கள் இருவகை வளர்ப்புயிர்களும் நலம் கொள்க.
சுற்றமும் சூழ்ந்தவையுமான அவை
பருகவும் உண்ணவும்
கருணைகொண்ட இயற்கையாக வந்து பொலியுங்கள்!
எங்களுக்கு நலத்தையும் உவகையையும் தூய்மையையும்
அள்ளி வழங்குங்கள்!

நாங்கள் எங்கள் நாக்கால், உள்ளத்த்தால்,
அறியாமையின் விசையால்,
பாவங்களைச் செய்து தெய்வங்களைச் சினப்படுத்தியிருப்பின்
வசுக்களே, விண்ணவர்கூட்டமே,
அந்தச் சினத்தை எங்களை அச்சுறுத்தும்
பாவத்தின் மீதே செலுத்துங்கள்!

ஆம் அவ்வாறே ஆகுக!

 

[ரிஷி அபிதவன் சூரியனை நோக்கி கூறியது. ரிக்வேதம் பத்தாம் மண்டிலம் 37 ஆவது பாடல்

 

உன்னுடைய சூரியன்

 

உனக்கு சந்தோஷம் தருவது எதுவோ

அதுவே உனக்கு சூரியன்

உதாரணமாக ஒரு சாப்பாட்டுப்பொட்டலம்

ஒரு பப்பாளிப்பழம்

ஒருநண்பனின் முகம்

ஒரு குவளைத்தண்ணீர்

ஒரு கண்ணாடி

இன்னும்

காகிதத்தில் பொதியப்படாத கவிதைகள்

என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

ஒரு சாப்பாடுப் பொட்டலம்

அப்போதைய நிறைவை உனக்கு அளிக்கவில்லை என்றால்

ஒரு பப்பாளிப்பழம்

அன்றைய பொழுதை இனிமையாக்கவில்லை என்றால்

ஒரு நண்பனின் முகம்

உன் முகத்திற்கு ஒளியேற்றவில்லை என்றால்

ஒருகுவளைத்தண்ணீர்

உன்தாகம் தணிக்கவில்லை என்றால்

ஒரு கண்ணாடி முன்

நீ புன்னகை கொள்ள இயலவில்லை என்றால்

காகிதத்தில் பொதியப்படாத கவிதைகளாய்

உனக்கு உன் வாழ்க்கை ஒருபோதும் காணப்படவில்லையெனில்

உணர்ந்துகொள்

நீ இருக்குமிடம் ‘சூரியமறைவுப்பிரதேசம்’

தேவதேவன்

[தேவதேவன் கவிதைகள். தமிழினி]

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/6276

6 comments

Skip to comment form

 1. RVS_Mani

  ரிக் வேத காலம்தொட்டு இன்று வரை மாறாம இருப்பது, மனிதனோட இந்த வேண்டுதல்தான் போல கடவுளாக கருதும் யாவற்றிலும்,
  “எங்கள் வறுமையை, அறியாமையை, நோயை,
  கொடுங்கனவுகளை அகற்று!………………….”

 2. ஜெயமோகன்

  English translation of the song you have published in your web is brought out in the link below.And the translation is by Mr.Ralph T.H. Griffith, [1896].
  http://uthamanarayananperspectives.blogspot.com/2010/01/hymn-on-sun-translation-by-writer.html

 3. ஜெயமோகன்

  uthamanrayanan has sent you a link to a blog:

  An English translation of the poem of shri.Devadevan

  Blog: uthamanarayanan
  Post: Poet Devadevan’s Poem / Your Sun
  Link: http://uthamanarayananperspectives.blogspot.com/2010/01/poet-devadevans-poem-your-sun.html


  Powered by Blogger
  http://www.blogger.com/

 4. ஜெயமோகன்

  அன்பு ஜெயமோகன்,

  உங்களின் ரிக்வேத ஒளி மொழியாக்கம் அருமையான ஒன்று .
  அந்த பிரார்த்தனையில் வரும் வசுக்களும் மற்றும் யாரைக் குறிக்கிறது ?
  சூரியனை புகழ்ந்த அந்த பகுதி சொந்தம் மண்ணை புகழ்ந்து பாடிய யெருசலேமின் பாடகன் சோலமனை நினைவுப் படுத்துகிறது. அன்றெல்லாம் மண்ணின் குணங்களை பாடுவதும் அதை காப்பாற்றுவதற்காக ஹோமங்களும் யாகங்களும் நடைபெற்றது. இன்று சொந்தம் குடும்பத்திற்கான செழிப்பை மட்டும் நாடி யாகம் செய்யும் தலைவர்கள் கூட இருக்கிறார்கள். பொங்கல் கொண்டாடும் பழக்கம் எத்தனையோ நூற்றாண்டுகளாக தலைமுறை தலைமுறையாய் கைமாறி வந்து இன்றும் உள்ளது. ஆனால் நாட்டை ஆளும் மன்னர்களால் பிரஜைகளுடன் சேர்ந்து மண்ணுக்காக ,அதில் இருக்கும் காட்டை காப்பதற்காக ,விவசாயத்தையும் அதற்கு உதவும் இணங்கிய விலங்குகளை காப்பாற்றுவதற்காக எத்தனையோ யாகங்கள் நடந்தன. முக்கியமாக காடுகளையும் காட்டில் வாழும் புலிகளையும் ,(புலிகள் தான் காடுகளை காப்பாற்றுகிறார்கள் என்ற ஆணித்தரமாக நம்பியவர்கள் நம் முன்னோர்கள்,) ரட்சிக்க பிரார்த்தனைகள் நடந்தன. அதனாலேயே மரங்கள் நின்று நதிகள் விரிந்தன . அந்த கலாச்சாரம் எப்போது எப்படி நம்மை விட்டு சென்றது.

  நிறையவே வேதங்களையும் உபநிஷத்துக்களையும் தெரிந்தவர் நீங்கள். ஏன் ஏன் இப்படி ஆகி விட்டது ?

  எனெக்கென்னமோ பொங்கல் கொண்டாடும் எல்லா தகுதியையும் நாமும் நம் நாடும் இழந்து விட்டதாக நினைக்கிறேன் .

  உங்களின் அறிவுபூர்வமான கருத்துக்கள் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும் .
  பூமியின் பசுமை இனியும் குறையாமல் இருக்கும் உங்களின் வார்த்தைகளுக்கு அந்த திறன் உண்டு J

  http://www.neelabhumi.blogspot.com/

  http://maniblogcom.blogspot.com/2010/01/blog-post_10.html?showComment=1263476472648_AIe9_BG18TYWSEQi63l9Dz8GygpL9KeZOfTe9vdnqvCVViHfjVTHGBrip3plNuIsFrA4_W-m7UJoHi7ZEQgYoYHkfQyprRCRcoLeqoz3ZrnKZgxci07258vuoHiKisooRc8wvOPfTiqIZ85j3HkJfqP9xcOAd3vm1l0XLpX8ldRlXaypGyMv9cON7QBvkVnyxKUuqYfvByAdZoFkW5IfjnZ22aEqizM4LA#c519840738215909392

  அன்புடன் பணிவுடன்
  பூஷண தேவி

 5. RV

  அன்புள்ள ஜெயமோகன்,

  இந்த ஒளி வாழ்த்து, கந்தர் ஷஷ்டி கவசம் இதை எல்லாம் பார்த்தால், சூரியனே (முருகா, பிள்ளையாரப்பா ஏசுவே உன்னை நான் துதிப்பேன், எனக்கு மூட்டு வலியை சரயாக்கு, முதுகு வலியை குணப்படுத்து, மூட்டை மூட்டையாக பணம் கொடு என்று கேட்பதைத் தவிர கடவுளுக்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லையோ என்று தோன்றுகிறது! சூரிய உதயத்தையோ, அஸ்தமனத்தையோ பார்க்கும்போது – அதுவும் திட்டம் எதுவும் இல்லாமல் எதேச்சையாக பார்க்கும்போது ஏற்படும் மன நிறைவு இந்த ரிக் வேதக் கவிதையில் உங்களுக்கு கிடைக்கிறதா?

  அன்புடன்
  ஆர்வி (நூவார்க், கலிஃபோர்னியா)

 6. mmurali

  அன்புள்ள ஜெ

  தாவரங்களும்
  என்புள்ளவைகளும்
  என்பிலாதனவும்
  மண்ணும்.. ஈரமும்
  விண்ணும் மேகமும்
  கடலும் நுரையும்
  உலகின் விளிம்பில்
  உதயவனை எதிர்நோக்குவது
  தற்போதைய சூர்ய மண்டலத்தின்
  நுண் அதிர்வாக விரியும்

  நன்றி தெரிவித்தல்
  வழிபாடாக மலர்வது ஒரு பாரம்பர்யம்

  தேவைகளை பூர்த்தி செய்வது ஒரு தேவையாக..
  உலகமும் கதிரவனும் இணைந்து..
  அரங்கேறும் தருணம்

  தினமொரு நாளாக வாய்க்கும்

  நன்றி
  முரளி

Comments have been disabled.