வெண்ணைக்கண்ணன்

jpegimage004
அன்புள்ள ஜெயமோகன்

நீலத்தை வாசித்த அளவுக்கு நான் வெண்முரசின் எந்த நாவலையும் ஈடுபட்டுப்போய் வாசித்தது கிடையாது. வெண்முரசுதான் நான் மிகவும் கூர்ந்து வாசித்த நாவல். என் வாசிப்பு சிவசங்கரியிலே ஆரம்பித்து அம்பை வரைக்கும் வந்திருக்கிறது. எனக்கு ஜானகிராமன் மேல் பெரிய ஈர்ப்பு இருந்தது. உங்கள் நாவல்களிலே காடு, இரவு மட்டும்தான் வாசித்திருந்தேன். விஷ்ணுபுரம் கொஞ்சம் வாசித்தேன். ஓடவில்லை. வெண்முரசு ஆரம்பத்திலே கொஞ்சம் இழுத்தது. அதன்பின்னர் நடை பழக்கமாகிவிட்டது. பிரச்சினை இல்லை. இப்போது தொடர்ந்து வாசிக்கிறேன்

முதற்கனலில் அம்பை, மழைப்பாடலில் சத்யவதியும் குந்தியும், வண்ணக்கடலில் ஏகலைவனின் அம்மா ஆகிய கதாபாத்திரங்களை மிகவும் விரும்பினேன். வெண்முரசை திரும்பத்திரும்ப வாசித்துக்கொண்டே இருந்தேன். எங்கோ ஒரு உலகிலே இதெல்லாம் உண்மையாகவே நடந்துகொண்டிருக்கிறது என்றெல்லாம் தோன்றும். எனக்குப்பிடித்தமான எழுத்தாளர்கள் நிறையபேர் உண்டு. ரேமண்ட் கார்வர் பிடிக்கும். ஜும்பா லாகிரி பிடிக்கும். இப்போது கொஞ்சநாளாக முரகாமி. நான் ஆங்கில இலக்கியம் படித்தவள். பழைய எழுத்தாளர்களிலே டிக்கன்ஸ் ரொம்பப் பிடிக்கும்.ஆனால் தமிழிலே படிக்கும்போது வரும் இந்த நெருக்கம் அதிலே எல்லாம் இல்லை. வெண்முரசு நான் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த ரொட்டீன் வாழ்க்கையில் பெரிய அர்த்தத்தை அளித்துவிட்டது.

ஆனால் நீலம் அப்படி இல்லை. இதன்நடை ஆரம்பத்திலே கொஞ்சம் கஷ்டப்படுத்தியது. வரிவரியாகத்தான் வெண்முரசையே வாசிக்கவேண்டும். இந்த நாவலை ஒவ்வொருவரியையும் பலதடவை வாசிக்கவேண்டும். வாசிக்க வாசிக்க விரிந்துகொண்டே போயிற்று. என் ஆபீஸில் இரு தோழிகள் வாசித்தார்கள். ஓடவில்லை என்று சொல்லிவிட்டார்கள். இன்னும்கொஞ்சம் கற்பனையும் உழைப்பும் தேவை என்று சொல்லிவிட்டேன். நீலம் எனக்கு ஒரு வாழ்க்கை அனுபவம் – லைஃப்டைம் எக்ஸ்பீரியன்ஸ் என்று சொல்வார்களே அது. அதை எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை

நான் நினைப்பதைச் சொல்ல பயப்படுக்கொண்டுதான் இதுவரைக்கும் ஒன்றிரண்டு வரியாக கடிதம்போட்டுக்கொண்டிருந்தேன். அதை நீங்கள்கூட தப்பாக நினைக்கலாம். ஆனால் வெண்முரசு விவாதங்களிலே வரும் கடிதங்களை வாசித்தபோது நானும் அந்த லெவலுக்கு வாசித்திருக்கிறேன் என்ற தன்னம்பிக்கை ரொம்ப வந்தது. அதனால்தான் இதை எழுதுகிறேன்.

நீலம் ஆரம்பத்திலே கண்ணனைக் கைக்குழந்தையாகவே காட்டியது. கவிழ்ந்து குப்புத்துக்கொள்வது, வாயில் எச்சில் விழுவது, தத்தக்காபித்தக்க நடப்பது. பல வரிகளை வாசித்து வாசித்து தீரவில்லை. பொதுக்குக் கை என்று சொல்லிக்கொண்டே இருப்பேன். வெண்ணைதிருடிச்சாப்பிடும் காட்சி மாதிரி ஒரு அற்புதமான காட்சியை இனி நீங்களே எழுதிவிடமுடியாது. ஆழ்வார்களெல்லாம் எழுதிய இடம்தான். ஆனால் இது புதிசு. அதிலும் பலராமன் சொல்லும் அரிய ஆலோசனைகள் இருக்கிறதே. அற்புதம். சான்ஸே இல்லை

அதன்பிறகு ராதையின் பிரேமை வந்து கிருஷ்ணன் பெரியவனாக வளர்ந்தபோதெல்லாம் நானும் மனம் மாறி கூடவே வந்துவிட்டேன். ஆனால் கதைமுடிந்ததும் அதையெல்லாம் அப்படியே அழித்துவிட்டு திரும்பிப்போய் கிருஷ்ணனைக் கைக்குழந்தையாகவும் வெண்ணைக்கண்னனாகவும் நினைக்க ஆரம்பித்துவிட்டேன். எனக்கு குருவாயூர் மிகவும் பிடித்தமான ஊர். நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போதுதான் முதலில் போனேன். குருவாயூரில் கண்ணனைக் கண்ட அனுபவம் மறக்கவே இல்லை. அந்தக்கண்ணன் வளர்ந்து 80 வயசாக வருவதெல்லாம் மனசுக்கு ஒட்டவே இல்லை.

திரும்பத்திரும்பப் போய் அந்த குட்டிக்கிருஷ்ணனுடைய லீலைகளைத்தான் வாசித்துக்கொண்டே இருக்கிறேன். அதிலே உள்ள மோகம் குறையவே இல்லை. அவனுக்கு ராதை பறவைகளையும் வானத்தையும் காட்டிக்கொடுப்பது. அதைவிட அவன் முதல்முதலாக அவளைப் பெயர் சொல்லி கூப்பிடுவது. அதைத்தான் பெயரறிதல் என்று எழுதியிருந்தீர்கள். அதை வாசிக்கும்போதுதான் கடைசிக்காட்சியில் புல்லாங்குழல் ராதை என்று கூப்பிடுவதன் தாத்பர்யம் புரிந்தது

என்னசொல்வது? ஒரு கனவு. கலையாமல் கையிலேயே வைத்திருக்கலாம் இந்தக் கனவை

அகிலா லட்சுமண்

வெண்முரசு நாவல் தொடர்பான அனைத்து விவாதங்களும்

 

முந்தைய கட்டுரைசத்யார்த்தியின் நோபல் -ஐயங்கள்
அடுத்த கட்டுரைநோபல்பரிசுகள் -விவாதம்