«

»


Print this Post

தேன்கடல்


tumblr_na4lpwKwPK1svp2b2o1_1280 இனிய ஜெயம். நீலத்தின் இறுதி அத்யாயம் ஸ்தம்பிக்க வைத்து விட்டது. கண்ணனின் குழலிசைக்காகவே ராதை இத்தனை வருடம் கல்லாய் உறைந்திருந்தாளா? மரண நொடியை முன்னுரைத்தவனுக்கும் கொடை செய்கிறான் கண்ணன். மீண்டும் கண்ணன் கை வந்து சேர்ந்தது, ராதை வசமே கண்ணன் விட்டு சென்ற குழல். இசைக்காத குழல். வைத்திருந்து காத்திருந்து கல்லென உறைந்த ராதை. கண்ணனற்ற ராதை. குழலை கண்ணன் வசம் சேர்க்கும் குட்டி ராதை. அவள் அக் குழல் வழி கேட்கும் முதல் இசையிலேயே முக்தி எய்தி விடுகிறாள். [ குழல் இசைக்க,கல்லாலான ராதை உயிர் கொள்ளும்போது, உயிர் உள்ள ராதை முக்திதானே எய்துவாள்] அந்த ராதை மதலைக் கண்ணனின் சிறு பாதங்களை முதலில் காண்கிறாள். இந்த ராதை முதிய கண்ணன் சிரசு சூடிய பீலி முதலில் காண்கிறாள். கண்ணனை பாதாதி கேசம் காண ராதைக்கு பிறவிகள் தேவைப் படுகிறது. தேன் கடலில் விழுந்து சாகும் பட்டாம்பூச்சிகள். கடலூர் சீனு 1 அன்புள்ள ஜெ வெண்முரசு ஆரம்பித்தநாள் முதல் தொடர்ந்து வாசித்துவருகிறேன். முதற்கனல் கூர்மை. மழைப்பாடல் பிரம்மாண்டம். வண்ணக்கடல் ஆழம். ஆனால் நீலம் பல படி மேல். இது ஒரு கனவு. கனவிலே எல்லாமே உண்டு. முடிந்துவிட்டதா என்று நினைத்து திரும்ப நினைவிலே ஓட்டிப்பார்த்தேன். எங்கோ பழைய காலம் மாதிரி மனதிலே நிற்கிறது. மனசால் பிடிக்கவே முடியவில்லை. என்ன இது என்று நினைத்துப்பார்த்தேன். ராதையை காற்றுவந்து தொட்டு எழுப்பும் அந்த இடம். ஆழிமுதல்வன் விரும்பிய பாற்கடலே என்று காற்று அவளை அழைக்கிறது. அந்த அழைப்பு கடைசி அத்தியாயத்திலேதான் அர்த்தமுள்ளதாக ஆகிறது. அவனுக்கு அவன் ஜெயித்த ராஜ்ஜியம் மணந்த அரசியர் ஒன்றுமே வேண்டாம். அவளுடைய பிரேமை மட்டுமே போதும் என்றுதானே வந்தான். ராதை, அமுதமாகி வந்தவளே, இனி உன் பெயர் பிரேமை என்றும் ஆகக் கடவதாக! என்று காற்று சொல்கிறது. அப்படி பிரேமையின் திருவடிவமாக அன்னை அந்த யமுனைக்கரையிலே நிற்கிறாள். கிருஷ்ண பகவான் வந்து அவளுக்கு நாதோபாசனை செய்தார் என்றால் அது அவளுடைய பிரேமைக்காகத்தானே? மூடிய வெண்பட்டை உதைத்து நழுவவிட்டு வெளிவந்து செவ்விரல்குருத்துக்களை நெளித்து காற்றில் துழாவின அன்று பிறந்த சிறுமகவொன்றின் கால்கள். மலர்வெளியை ஒளிகுன்றச்செய்தது மணிநீலம். என்று அவன் கால்களை அவள் பார்த்ததைச் சொல்கிறது கதை காற்றேற்ற சுனைபோல கரிய திருமேனி நடுங்க கண் கலுழ்ந்து வழிய கைகூப்பினார். நீள்மூச்சு நெஞ்சுலைத்தது. நெடுந்தோள்கள் குறுகின என்று அவள் முன்னால் பக்தன் மாதிரி கண்ணன் நின்றிருப்பதைப்போல ராதாமாதவ உபாசனைக்கு சிறந்த உதாரணம் வேறு ஏதும் இல்லை. நீலம் மொத்த நாவலையும் எங்கோ கொண்டுபோய்விட்டது. எப்படி மீண்டும் ஆரம்பிப்பீர்கள் என்றே தெரியவில்லை சத்யநாராயணன் வெண்முரசு நாவல் தொடர்பான அனைத்து விவாதங்களும் வியாசமனம் மரபின்மைந்தன் முத்தையா முதற்கனல் பற்றி எழுதும் விமர்சனத் தொடர்

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/62735