நீலம் -வரைபடம்

675

ஜெ,

நீலம் நாவலை நான் இன்னும் வாசித்து முடிக்கவில்லை. அதன் அமைப்பு கதையோட்டமாக இல்லாமல் மாறிமாறிச் செல்வதனால் எனக்கு கடினமாக இருக்கிறது. என்னைச் சுழற்றி அடிக்கிற மொழி காரணமாக என்னால் அதை விட்டு விலகவும் முடியவில்லை. அதை வாசிப்பதற்கு ஏதேனும் வழிகாட்டிக் குறிப்பு எழுதமுடியுமா?

செல்வன்

அன்புள்ள செல்வன்

நீலம் நாவலுக்கு நான் எழுதிய பின்னட்டைக் குறிப்பு இது

 

நீலமேகவண்ணனாகிய கண்ணனின் கதையைச் சொல்லும் நவீன நாவல் ‘நீலம்’. கண்ணனின் இளமைத்தோழியான ராதையை மையமாக்கி கண்ணனின் கதை விரிகிறது. ராதை அறியும் கண்ணன் ஒரு சித்திரம். அவளைச்சுற்றி இருப்பவர்கள் அறியும் கண்ணன் இன்னொரு சித்திரம். ராதை அறிவது குழந்தையை, தோழனை, காதலனை. அவள் கொண்டது அழியாத பிரேமை. மறுபக்கம் கம்சனின் சிறையில் பிறந்து கோகுலத்தில் வளர்ந்து மதுரையை வென்றடக்கும் கிருஷ்ணனின் கதை.

கம்சனும் ராதை அளவுக்கே கிருஷ்ணனை எண்ணிக்கொண்டிருந்த உபாசகனே. அவன் சென்ற வழி ஒன்று. ராதை சென்ற வழி பிறிதொன்று. இருவழிகளையும் இருவகை யோகமரபுகளுக்கான குறியீடுகளாகவும் இந்நாவல் கையாள்கிறது. ராதாமாதவம் என்று ராஸமார்க்கம் என்றும் சொல்லப்படும் கிருஷ்ண உபாசனையின் அதை உணரும் வாசகர்களுக்காக முன்வைக்கிறது

பூத்துக்குலுங்கும் விருந்தவனம், பெருகிச்செல்லும் யமுனை, வேய்குழல்நாதம் என இனிமையை அனைத்து வரிகளிலும் நிறைத்துவைத்திருக்கிறது இந்நாவல். பித்தின் விளிம்பில் நடனமிட்டுச்செல்லும் மொழி. ஒவ்வொருவரியையும் வாசிக்கவைக்கும் கவித்துவம். கண்ணனை இலக்கியம் வழியாக அணுகிச்செல்லும் ஒரு யோகம் இது

இந்த நாவலை சுருக்கமாகத் தொகுத்துக்கொள்ள இந்த வரைபடமே போதுமானது என நினைக்கிறேன். நாவலைப்புரிந்துகொள்ள வெண்முரசு விவாதங்கள் தளத்தில் உள்ள ஏராளமான கடிதங்களும், விளக்கங்களும் உங்களுக்கு உதவலாம்

ஜெ

முந்தைய கட்டுரைவீழ்ச்சியின் அழகியல் – எம்.டி.வாசுதேவன் நாயர் -1
அடுத்த கட்டுரைஜெயகாந்தனும் வேதமும்