நான் காசர்கோட்டில் பணியாற்றியபோது புணிஞ்சித்தாய என்ற ஓவியர் ஒருவர் மங்களூரில் இருந்தார். கர்நாடகத்தில் பிரபலமான நவீன ஓவியர். நேரடியாக ஓவியம் வரைந்து விளக்கும் நிகழ்ச்சி ஒன்றுக்காக அவர் காசர்கோடு வந்திருந்தார். நான் உயிரோடு ஒரு நவீன ஓவியரை அப்போதுதான் பார்த்தேன்
அவர் வரையும் விதம் ஆச்சரியமானது. முதலில் திரையில் வண்ணங்களை அள்ளி வீசுவார். அவை வழிந்துவர வர அவற்றை கத்தியால் நீவி ஓவியமாக்குவார். தற்செயலும் அவரும் சேர்ந்து வரையும் ஓவியங்கள். தரையில் அமர்ந்து நீர்வண்ண ஓவியம் வரைந்தார். காகிதத்தைமுதலில் ஈரமாக்கிக்கொண்டார். வண்ணம் ஊற ஆரம்பித்தது. அதையும் ஓவியத்தின் பகுதியாக்கினார்.நான் அவரது வரையும் முறை பற்றிக் கேட்டேன். ‘ஓவியத்தில் கடவுளுக்கும் ஓர் இடம் கொடுப்போமே’என்றார்.
நீண்டகாலம் கழித்து மோகன்லாலின் நடிப்புமுறை பற்றி மணிரத்னம் சொன்னார். ஒத்திகையில் செய்யப்பட்ட ஒன்றை அவர் சற்றே மாற்றித்தான் செய்வார். தரையில் வரையப்பட்ட கோடுமேல் வரமாட்டார். தொடவேண்டிய துணைநடிகரை தொடமாட்டார் ‘தெய்வமும் ஒந்நு எடபெட்டோட்டே’ என்பார்
கலையில் கடவுளுக்கு ஓர் இடமுண்டு என்று கலைஞன் அறிவான். ஆகவேதான் அவன் தன்னை அவருக்குச் சமானமாக அவ்வப்போது நினைத்துக்கொள்கிறான். இலக்கியத்தில் மொழியின் தற்செயலுக்கு பெரும்பங்குள்ள வடிவம் கவிதை. மொழி கவிஞனின் திட்டங்களைக் கலைக்கையில் நல்ல கவிதை சாத்தியமாகிறது
நவீனத்தமிழில் அபூர்வமாகவே மொழியால் கலைக்கப்பட்ட சித்தம் கவிதையாகி வெளிவருகிறது. பிரமிள், தேவதேவன், ஆத்மாநாம், அபி, சு.வில்வரத்தினம் என நான் விரும்பும் சில விதிவிலக்குகள் உண்டு. அத்தகைய விதிவிலக்குகளின் ஆக்கங்களின் சிறிய பட்டியலில் இடம்பெறும் கவிதைகளைக் கொண்டது குமரகுருபரனின் ‘ஞானம் நுரைக்கும் போத்தல்’
குமரகுருபரனின் மொழி அவரது திட்டங்களுக்குள் இருந்து ஆரம்பித்து அதன் சில நுனிகளை நீர்வண்ண ஓவியங்களின் விளிம்புகள் போல மெல்லக் கலைத்துக்கொண்டிருக்கிறது. அந்தக் கலைதல் அளிக்கும் கற்பனைச்சாத்தியம்தான் அவற்றை சிறந்தகவிதைகளாக ஆக்குகின்றது
ஒருகவிதையில் நான் முதலில் தேடுவது புத்தம்புதிய சொற்சேர்க்கைகள்தான். அவற்றை செயற்கையாக உருவாக்கும் கவிஞர்கள் உண்டு. அவை அக்கவிதைகளை தாளமுடியாத இம்சைகளாக ஆக்கிவிட்டிருக்கும். இயற்கையாக அச்சொற்சேர்க்கைகள் நிகழும்போது மொழி புதியதாக பிறந்திருக்கும்
புராதனம் மண்டிக்கிடக்கும் வெட்டவெளி
காட்டைநிரப்பும் மனதொன்றின் வேகம்
நதியின் உதட்டு ஈரம்
தூரம் நிறைகிறது தூரத்தின் ஆற்றாமை
என்பது போன்ற சொல்லாட்சிகளை இத்தொகுதியின் கவித்துவத்தை எனக்குக் காட்டுபவையாகச் சொல்வேன்.
தன்னியல்பாக வேதிவினை புரியாத தனிமங்கள் வினையூக்கி ஒன்றின் இருப்பினால் அதை நிகழ்த்தும். கவிதையில் தீவிரமான உணர்ச்சி ஒன்றின் இருப்பு அவ்விதமான சொல்லிணைவுகளை உருவாக்கும். அந்த ரசாயனக்கலவையில் வினையூக்கி கலந்திருக்கவேண்டும் என்பதில்லை. அதைப்போல இச்சொற்சேர்க்கையில் அந்த உணர்ச்சி இருந்தாகவேண்டுமென்பதும் இல்லை
இத்தொகுதியில் பல கவிதைகள் என்னுள்ளே தேவதேவனின் சிறந்த கவிதைகளின் மீட்டலை மீண்டும் நிகழ்த்தின. பின்தொடர்வார் இல்லாத தேவதேவனின் தனிப்பாதையில் இன்னொரு பாதத்தடம் பரவசம் அடையச்செய்கிறது. தேவதேவன் இத்தலைமுறையில் என் கவிஞர். இக்கவிதைகள் முதலில் எனக்குப்பிரியமானவையாக ஆனது அதனால்தான்.
யாருடைய பூக்கள் நாம்?
நமது ஆழத்தில் விழுந்துகிடக்கும்
அந்தப்பூவை மலரவைத்தவன்
எவன்?
யாருடைய பூக்கள் நாம்?
பூக்களைப்பற்றி
இப்போது ஏன்
பேசிக்கொண்டிருக்கிறோம்
பூக்கள் அறியுமா பிரிவை
பூக்கள் கையசைக்குமா?
இது தீராது
நீ உன் சிகரெட்டை பற்றவை
வழியனுப்பு
பிரிவதுமில்லை
விலகுவதுமில்லை பூக்கள்
*
இக்கவிதைகளில் எங்கும் தொடாமல் இதற்கு அப்பால் நிற்கும் ஓர் உணர்வு உள்ளது. கவிதைக்குள் விளக்கப்படாதது. அந்த தொடாதுநிற்கும் தன்மையின் தத்தளிப்பும் அலைக்கழிப்பும்தான் பெரும்பாலான கவிதைகளில் வெளிப்பட்டிருக்கிறது. மொழியை கலையவைக்கும் அம்சமும் அதுவே
பலகவிதைகளில் தேவதேவனின் சிறந்த கவிதைகளின் கார்வையை கேட்டேன். முக்கியமான கவிதைகள் அவை. மெல்லும் விழிகள்,யாரின் நினைவிலும், ஆயிரம் வருடங்களுக்கு முன்னே…மீளமீள அவற்றை நள்ளிரவின் அமைதியில் வாசித்துக்கொண்டிருந்தேன்
அப்போது ஓர் எண்ணம் ஏற்பட்டது. இவை தேவதேவன் கவிதைகள் அல்ல.அவர் இவற்றை எழுதமுடியாது. இப்படிச் சொல்லலாம். அள்ளமுடியாமையின் திகைப்பைச் சொல்பவை தேவதேவனின் கவிதைகள் .அள்ளி கையில் எடுக்கப்பட்டவற்றை என்னசெய்வதென்றறியாமையின் தவிப்பைச் சொல்பவை இக்கவிதைகள். தேவதேவன் நின்றிருப்பது உலகியலில் இருந்து ஞானியரை நோக்கி. இக்கவிதைகள் உலகியலில் நின்றிருக்கின்றன. ஞானியர் பின்னால் எங்கோ இருக்கிறார்கள்.
மொழிநடையிலும் தேவதேவன் கவிதைகளில் இருந்து இவை பெரிதும் மாறுபடுகின்றன. தேவதேவன் கவிதைகளில் உள்ள பரவசமூட்டும் புறவுலகம் இதில் இல்லை. அடையாளப்படுத்திக்கொள்ள முடியாத ஓர் உலகம், அதிலிருந்து எழும் ஓர் அகவுலகம் மட்டுமே உள்ளது
அத்துடன் இக்கவிதைகளின் கவிமொழி இன்னும் செறிவானதாக உள்ளது. தேவதேவனிடமிருப்பது ஒரு நேரடி ஒழுக்கு. இவற்றில் வரிகளுக்கிடையே உள்ள இடைவெளிகள் அதிகமாக உள்ளன. வியப்புதான், கவிதை என்பது ஒன்றிலிருந்து ஒன்று பற்றிக்கொள்ளும் ஓட்டம் என்பார்கள். இப்படி நேர் எதிர்த்திசையில்தான் பற்றிக்கொள்ளும்போலும்
கனவொன்றை வாழ்ந்தேன்
கனவொன்றை வாழ்ந்தேன்
மீளவே இல்லை
வலியிலிருந்து தப்பமுடியாத ஒரு தீவு
அக்கரையற்ற கடலில் மிதக்கிறது
நினைவுப்பாசி பூத்திருக்கிறது
ஆழத்தில்
நனவு அத்தனை சுகமானதாக இல்லை
யாருக்கும்
==================
[ஞானம் நுரைக்கும் போத்தல். கவிதை தொகுப்பு. ஆசிரியர் : குமரகுருபரன். ஆதிரை பதிப்பகம். முதல் வெளியீடு]