«

»


Print this Post

ரோடுரோலர் சிந்தனைகள்


அன்புள்ள ஜெ,

இந்த ந்யூயார்க் டைம்ஸ் கட்டுரை  சிந்திக்க வைப்பதாக உள்ளது. கடந்த ஐம்பது ஆண்டு காலமாக தனித்தன்மை கொண்ட அமெரிக்கர்களுக்கு உருவாக்கப்பட்ட  மன நோய் சிகிச்சை வழிமுறைகள் எவ்வாறு மற்ற கூட்டு மற்றும் பன்முக தன்மை கொண்ட கலாச்சாரங்களுக்கு எந்த மாற்றுதலும் இல்லாமல் ஏற்றுமதி செய்யப்படுவதை சுட்டிக்காட்டுகிறது.

http://www.nytimes.com/2010/01/10/magazine/10psyche-t.html?em

அன்புடன்

சிவா – ஹ்யூஸ்டன்

அன்புள்ள சிவா

மிக முக்கியமான கட்டுரை. ஏற்கனவே பல கட்டுரைகளில் இதை உளவியலாளரான நித்ய சைதன்ய யதி சொல்லியிருக்கிறார். இன்னமும் விரிவாக இதை அணுகும் நித்யா இந்திய செவ்வியல் இலக்கியங்களைப் புரிந்துகொள்ள மேலைக் கோட்பாடுகளை  அப்படியே போட்டுப்பார்ப்பதும் அப்படிப்பட்ட முட்டாள்தனமே என்கிறார். ஆனால் இன்றுவரை நம் கல்விக்கூடங்களில் நடந்துகொண்டிருப்பது அதுவே

இன்னும் பார்த்தால், இந்த எளிய உளவியல் கருவிகளைக் கொண்டுதான் காந்தி முதல் ரமணர் வரையிலான இந்திய ஞானிகளின்  மனத்தை ஆராய்கிறார்கள். பாரதியையும் தாகூரையும் புதுமைப்பித்தனையும் ஜானகிராமனையும் ஆராய்கிறார்கள். மேலைநாட்டார் செய்வதாவது பரவாயில்லை, அது அவர்களின் வழி எனக்கூறிக்கொள்ளலாம். இங்கே உள்ள அறிவுஜீவிகள் அங்குள்ள கோட்பாடுகளை அப்படியே இங்கே இறக்குமதி செய்வதில் உள்ள வன்முறையும் அழிவும் சாதாரணமானதல்ல. இன்றுவரை இதுவே எந்தவிதமான மாற்று எண்ணமும் இல்லாமல் செய்யப்படுகிறது.

கொஞ்சம் பின்னால் திரும்பிப்பாருங்கள். பத்தாண்டுகளுக்கு முன்னால் சட்டென்று தகர்ப்பமைப்பு [டிகன்ஸ்டிரக்ஷன்] என்று இங்குள்ளவர்கள் ஆரம்பித்தார்கள். அவர்கள் யாராவது அதற்குள் ஒரு இந்திய வகையை ஓர் இந்திய நோக்கை உருவாக்குவதற்காகவாவது முயன்றார்களா? இல்லை. அப்படியே அந்த வழியை இங்கே கொண்டுவந்தார்கள். ·பூக்கோ என்கிறார்கள், லக்கான் என்கிறார்கள், குளோட் லெவிஸ்டிராஸ், ஆலன் டண்டிஸ் என்கிறார்கள் என்கிறார்கள். நாட்டாரியல், குறியியல், மொழியியல்… எத்தனை அறிஞர்கள் எத்தனை சிந்தனைத்துறைகள்… தங்கள் சமூகத்தை ஆராய அவர்கள் உருவாக்கிய கருவிகளை அப்படியே இங்கே கொண்டுவருகிறார்கள். கருவிகளை மட்டுமல்ல அவர்கள் அங்கே கண்டுபிடித்த முடிவுகளைக்கூட அப்படியே இங்கே கொண்டுவருகிறார்கள். உடலரசியல் என்றும் விளிம்புநிலைக் கதையாடல் என்றும், நிராகரிப்பின் அரசியல் என்றும் எத்தனை ப்ளா ப்ளாக்கள்…

இவை எதற்குமே இங்கே நிகழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கையில் இருந்து எந்த ஆதாரமும் எடுக்கபப்ட்டதில்லை. இங்கே எழுதப்படும் இலக்கியங்களில் இருந்து எதுவும் பெற்றுக்கொண்டதில்லை. அப்படியே அசட்டு மொழியாக்கம் செய்து தமிழ்ச்சிந்தனையின் தலையில் கட்டிவிடுகிறார்கள். இதன் விளைவாக இங்கே உண்மையான சிந்தனைகளே எழ முடியாதபடி ஆகிறது. இங்கே உள்ள அனைத்துமே திரிக்கப்படுகின்றன. கடந்த இருபதாண்டுக்காலமாக இதை நான் கடுமையாக சொல்லிவருகிறேன்

இந்த மனநிலையில் உள்ள ஆழமான தாழ்வுணர்ச்சியை, அதன் விளைவான அறியாமையை, நமுடைய பண்பாட்டின் தனித்தன்மையைச் சுட்டிக்காட்டும்போது ஒருவர் பாரம்பரியவாதியாக ஆகிவிடுவார். பாரம்பரியவாதி இந்துத்துவவாதி அல்லவா? இந்துத்துவாதி கடபபரையுடன் பாபரின்கும்மட்டத்தை இடிக்கச் சென்றவன் தானே? முடிந்தது கதை…

நல்லவேளை வெள்ளைத்தோலர்கள் நியூயார்க் டைம்ஸிலேயே சொல்லிவிட்டார்கள். இதையும் அபப்டியே மேற்கோளாக இங்கே கொஞ்சநாளில் எதிர்ப்பார்க்கலாம்…

ஜெ

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/6258/

7 comments

Skip to comment form

 1. stride

  அன்புள்ள ஜெ,

  நீங்கள் எழுதியது ஜெஃப்ரி க்ரிபால் எழுதிய Kali’s Child’ஐ ஞாபகப்படுத்தியது. மேற்கத்திய உளவியல் கோட்பாடுகளை உபயோகப்படுத்தி ராமகிருஷ்ணர் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை மேற்கோள் காட்டி அவர் ஓரின சேர்க்கையாளர் என்று பிரகனப்படுத்தி புகழ் பெற்றார் க்ரிபால். முழுக்க முழுக்க மேற்கத்திய உளவியலை சார்ந்து சிறிது கூட வங்காள வைணவம் மற்றும் தந்திர பாரம்பரியத்தையும் அதன் சடங்குகளின் உள்தளங்களையும் பொருட்படுத்தாமல் க்ரிபால் செய்தது அதன் அமெச்சூர்தனத்துக்காகவே நகைச்சுவை ஊட்டுகிறது.

  இதன் மறுபக்கம் ஒரு மேற்கத்தியர் வந்து பல்லாண்டு காலம் ஆய்வு செய்து இது போன்ற சிந்திக்க வைக்க கூடிய ஆக்கம் ஒன்றை உருவாக்கும் போது நம்மவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற எண்ணம் எழுகிறது. செய்து கொண்டிருக்கிறார்கள் ஆனால் யாரும் படிப்பதில்லை என்றால் அது என் போன்ற வாசகர் மீது தான் பிழை.

  பி.கு – தங்களின் “வெள்ளைத்தோலர்கள்” உபயோகம் ரசிக்கும்படி இருந்தது.

  சிவா

 2. நவீன்

  ஜெ,
  >>இந்த மனநிலையில் உள்ள ஆழமான தாழ்வுணர்ச்சியை, அதன் விளைவான அறியாமையை, நமுடைய பண்பாட்டின் தனித்தன்மையைச் சுட்டிக்காட்டும்போது ஒருவர் பாரம்பரியவாதியாக ஆகிவிடுவார். பாரம்பரியவாதி இந்துத்துவவாதி அல்லவா? இந்துத்துவாதி கடபபரையுடன் பாபரின்கும்மட்டத்தை இடிக்கச் சென்றவன் தானே? முடிந்தது கதை…

  அதில் கொஞ்சம் உண்மை இருக்கிறது, இல்லையா? எல்லா தத்துவங்களையும் உள்ளடக்கும் இந்திய பண்பாடுன்னு சொல்றவங்க, அந்த பண்பாட்டை பாதுகாக்க வன்முறையை கையில் எடுக்குரவன்களோட cognitive dissonance ஐ புரிஞ்சிக்க முடியல. மாறாக இந்திய பண்பாட்டுல இருக்கிற அறியாமைகளை சுட்டி காட்டினால், நீ நாலு எழுத்து படிச்சிடேனா உனக்கு எல்லாம் தெரியுமா, வேலைய பாத்துட்டு போ-நு சொல்றாங்க.

  பெண்கள் சாமி/அருள் வந்து ஆடி அது வேணும் இது வேணும்னு கேக்குறது நம்ம பண்பாட்டில இருக்கு. அது அந்த பெண்களோட ஆழ் மனதில் இருக்கிற அபிப்ராயங்கள்/ஆசைகள்; அது தான் சாமியா ஆடுதுன்னு சொன்னால், சாமி குத்தம் வந்திரும்னு சொல்லுறாங்க. இப்போ பார்த்தால் சாமி அடுரத அவ்வளவா பாக்க முடியறது இல்ல; காரணம் பெண்கள் ஏறக்குறைய தங்கள் லட்சியங்களை ஆசாபாசங்களை நிவர்த்தி செஞ்சுக்க முடியுது.

  Scientific method எல்லோர்துக்கும் பொதுவானது. அது பண்பாடு, கலாசாரம், மரபு இதுக்கெல்லாம் அப்பாற்பட்டது. இதுக்கெல்லாம் orthogonal ஆனதுன்னு வேணும்னா சொல்லலாம். மனித குலத்துக்கே பொதுவான, மனிதனுக்கு மட்டுமே சொந்தமான தர்க்கம், பகுத்தறிவு-ஐ அடிப்படையா கொண்டது. அறிவியாலேயே துல்லியமான விடைகளை குடுக்க முடியும். தப்பான விடைகளை சரி செஞ்சுக்க முடியும். ஆனால் தர்க்கம் எல்லார்த்துக்கும் விடை குடுக்காதுங்கறது தெரிஞ்ச விஷயம். இருந்தாலும் நாம ஆத்மார்த்தமா நம்புகிற விஷயங்களையும் அவ்வப்போது அறிவியலை பிரயோகிச்சு பரிசொதிச்சிகிட்டே இருக்கனும்கிறதுதான் என்னோட கருத்து. ஏனென்றால், அறிவியல் வளர்ந்துகிட்டே இருக்கிற துறை. நேத்து நாம மாயஜாலம்னு நெனச்ச ஒரு விஷயம், இன்னைக்கு இயற்க்கை சூட்சுமமா நிரூபணம் ஆகும்.
  இது புரிஞ்சால்தான் பாரம்பரியவாதிக்கும் பழமைவாதிக்கும் வித்தியாசம் தெரியும்.

  இன்னொரு முக்கியமான விஷயம், எது அறிவியல்னு தெரிய வேணும். உளவியல் ஒரு fuzzy சயின்ஸ் அப்படின்னு ஒரு பலமான கருத்து உண்டு. /நமுட்டு சிரிப்பு/

  நவீன்.

 3. Ramachandra Sarma

  எனக்கென்னவோ தெரியலைங்க.. இந்த பகுத்தறிவுன்ற வார்த்தைய கேட்டாலே சிரிப்பு சிரிப்பா வருது. அதுசரிங்க மனசை ஏன் ஆராயனும், அதுவும் அடுத்தவங்க மனசை. அதுவும் அவங்க செத்துபோனதுக்கப்புறம்?

 4. ஜெயமோகன்

  அன்புள்ள நவீன்

  உங்களுடைய கேள்விகளில் உள்ள முக்கியமான இடறல் என்பது நிரூபணவாத அறிவியலுக்கும் [empiricism] , அநிரூபணவாத [anti empiricism] சமூக அறிவியல்களுக்கும் இடையேயான வேறுபாடு உங்கள் மனத்தில் துல்லியமாக இல்லை என்பதே. முந்தையவை கையாளும் விஷயங்கள் பெரும்பாலும் புறவயமான பொருட்களால் ஆனவை. அவை உலகம் முழுக்க, மானுடர்களுக்கு அனைவருக்கும் பொது. ஆனால் சமூக அறிவியல் கையாளும் விஷயங்கள் அகவயமானவை. உள்ளம் சமூகம் கலாச்சாரம் என்பவை எல்லாமே உருவகங்கள். அவை எச்சூழலில் எப்படி உருவகிக்கப்படுகின்றன என்பதை ஒட்டியே பொருள் அளிக்கக்கூடியவை.அவற்றை நிரூபணவாதக் கருத்துக்கள் போல கையாள்வதில் உள்ள அபத்ததையே சுட்டிக்காட்டினேன். நம் ‘அறிவுஜீவிகள்’ ஓர் அநிரூபணவாத கருதுகோள் மேலைநாட்டில் முன்வைக்கப்பட்டதுமே ‘அங்கே எல்லாத்தையும் மாத்திட்டான்’ என்று கொள்ளும் உற்சாகம், ஒரு புதிய செல்போனை கொண்டுவருவதுபோல ஒரு கருத்தைக் கொண்டுவருவதில் உள்ள அப்பாவித்தனம் ஆகியவற்றையே நான் குறிப்பிட்டேன். இங்கு ஒரு கருத்து இங்குள்ள சமூக, பண்பாட்டுச் சூழலில் வைத்துமட்டும்தான் உருவகிக்கப்பட முடியும்.

 5. kavirajan

  பின் நவீனத்துவ சூழலில் மனிதர்கள் கலாச்சார தனித்துவத்தை இழந்து விடுகிறார்கள் என்பது என் வாதம்… வேண்டுமென்றால் நாம் ஒரு கருதுகோளை உருவாக்கி மேலை நாட்டினரை ஆராயலாம்…தவறு சிந்தனை தேக்கத்தால் உருவாகிறது… நீங்கள் ஒரு கலாசார மீட்புவாதியாக அடையாளம் காணப்படும் ஆபத்தை உணர்ந்தாகவே தெரியவில்லை

 6. ஜெயமோகன்

  ஆனால் பின் நவீனத்துவம் மனிதர்கள் கலாச்சாரத் தனித்தன்மைகளை இழந்துவிடுவதாகச் சொல்லவில்லை. நவீனத்துவமே உலகளாவிய போக்குகளை உருவாக்கி அந்த வகையான ரோடு ரோலர்களை உலகமெங்கும் அனுப்பி வைக்கிறது என்கிறார்கள். பின்நவீனத்துவம் பிராந்திய தனித்தன்மைகள் விளிம்புகள் ஆகியவற்றைப் பற்றி அதிகமாக கவலைப்படுகிறது. அவற்றை பன்மையின் அடையாளங்களாக அணுகுகிறது. அவற்றை முன்வைக்கவேண்டும் என்று சொல்கிறது ‘ எது மிகமிகப் பிராந்தியத்தன்மை கொண்டதோ அது உலகளாவியது’ என்று ஒரு பின்நவீனத்துவ பொன்மொழி
  ஜெ

 7. நவீன்

  மதிப்பிற்குரிய ஜெ,
  உங்களுடைய மைய கருத்தில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. இயற்கை அறிவியல்கள் மட்டுமே ‘உண்மையான’ அறிவியல். அகவயமான சமூக உளவியல், பொருளாதாரம், கலாரசனை எல்லாம் ஒருங்கிணைப்பான முறையிலயே ஒரு சமூகத்தில் திணிக்கபடனும் என்பதில் எனக்கு முழு உடன்பாடு. ஆனால், உயிர் வேதியியல், ஜீன் ஆராய்ச்சி துறைகள் இன்னும் வளரும்போது மானுடம் பொதுவான சில அகவிஷயங்களும் தெளிவாகும்கிறது என்னோட ‘நம்பிக்கை’.

  ஆட்சேபனை எனக்கு நீங்கள் நகைப்பா சொன்ன விஷயத்தில்தான். உங்களை பாரம்பரிய வாதியாக அடையாளம் காட்டிகொண்டு, ஒரு வகையான தற்காப்பு நிலை எடுக்கிறீர்கள். நீங்கள் கையாளும் பாரம்பரியமும் நடைமுறையில் உள்ள பாரம்பரியுமும் ரொம்ப வித்தியாசபடுகிறது. உங்களை போன்ற அறிவு ஜீவிகள் இந்து ஞான, தத்துவ, யோக மரபுகளை முன் வைகிறார்கள். நடைமுறையில் சம்பிரதாயங்கள் – பக்தி, வருணம், மனு தர்மம், சகுனம், ஆருடம் – மட்டுமே பாரம்பரியமா கொண்டாடபடுது. ‘பாரம்பரிய வாதிகள்’ பெரும்பாலும் சம்பிரதாயங்களுக்கு மட்டுமே வாதிடுகிறார்கள். சம்பிரதாயங்கள் வெறும் சம்பிரதாயங்கள் மட்டுமே. அவை தர்க்க ரீதியா பரிசோதிக்கப்பட்டு வளரனும். அப்படிப்பட்ட ஒரு சமுதாயமே ‘வளரும்’ என்பது என் கருத்து. இந்த பரிசோதனையை ஒவ்வாத பாரம்பரிய வாதிகள் கூறுவது தான் இந்த ‘மேற்கத்திய நாகரிக திணிப்பு’ போன்ற குற்றச்சாட்டுகள். இந்த inertia தான் சமுதாய சீர்திருத்தங்களுக்கு பெரிய முட்டுக்கட்டையா இருக்கு. இந்த நிலையில் உங்களை போன்ற அறிவு ஜீவிகள் அந்த அணியில் சேரும்போது எந்த ஒரு சீர்திருத்தத்துக்கும் வாய்ப்புகள் குறைந்து போகிறது. காந்தி சீர்திருத்த வாதிகளின் உச்சம்னு சொன்னால் மிகை ஆகாது. தன்னோட பாரம்பரிய ஞானத்தை பரிசோதித்துக்கொண்டு, ஆபிரகாமிய மரபுகளில் இருந்து பல நல்ல சங்கதிகளை எடுத்து சமரசம் செய்ய முயன்றார். ஆனால் அந்த மகானாலேயே ஒன்னும் சாதிக்க முடியவில்லை. அதற்கு முக்கிய காரணம் நம் மக்களல்ல; நம் அறிவு ஜீவிகள் முதலில் அவரது தத்துவங்களை ஏற்றுகொள்ளாததுதான். இன்னைக்கு காந்தி ஒரு வெற்று அடையாளமாக எஞ்சி இருக்கிறார் என்பது உண்மை.

  அறிவு ஜீவிகளான உங்களுடைய முக்கியமான கடமை, பாரம்பரிய வாதிகள் என்ற அணியில் இருந்து கொண்டு அக, புற வன்முறையில் ஈடுபடும் விளிம்பு வசிப்பான்களை கண்டிக்க வேண்டியது.
  நவீன்.

Comments have been disabled.