«

»


Print this Post

சக்கரியா மீது தாக்குதல்


மலையாள எழுத்தாளர் சக்கரியா கேரள நவீன இலக்கியவாதிகளில் மிக முக்கியமானவர். அங்கதமும் ஆழ்ந்த விவேகமும் கவித்துவத்துடன் வெளிப்படும் அவரது கதைகள் எண்பதுகளில் கேரள இலக்கியத்தில் திருப்புமுனையாக அமைந்தவை. சென்ற பத்துப்பதினைந்து  வருடங்களாக சக்கரியாவின் படைப்பூக்கம் வற்றிவிட்டது.ஆனால் நாடறிந்த கலாச்சாரவாதியாக அவர் இன்று கேரள சமூகத்தின் பண்பாட்டு விமரிசனங்களில் பலவற்றை உருவாக்குபவராக இருக்கிறார்

 

சக்கரியா

வடகேரளத்தில் உள்ள பய்யன்னூர் நகரில் காந்தி பார்க்கில் ஜனவரி 9 ஆம் தேதி மதுநாயர் என்ற எழுத்தாளர் எழுதிய ‘காபோயுடே நாட்டிலும் வீட்டிலும்’ என்ற நூலின் வெளியீட்டுவிழாவுக்காகச் சென்றிருந்தார். விழாவில் அவர் பேசியதற்கு மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்டுக்கட்சியின் ஆதரவாளர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார்கள். அவர் பேசி முடிந்து காரில் ஏறப்போகும்போது ஆறுபேர் கொண்ட ஒரு குழு அவரை தடுத்து காரின் சாவியைப்பிடுங்கி வைத்துக்கொண்டு கெட்டவார்த்தைகளால் வசைபாடினார்கள். அவரை இரண்டுமுறை அடித்தபோது அவர் பின்னால் சரிந்து கார்மேல் விழுந்தார். ஊரார் கூடி தடுக்கவே அவர்கள் சக்கரியாவை விட்டுவிட்டார்கள்.

பய்யன்னூரில் இருந்து சக்கரியா கிளம்புவதற்குள்ளாகவே இது கேரளத்தில் மையச்செய்தியாக ஆகியது. கலை இலக்கியத்துறைகளில் உள்ள முக்கியமான அத்தனைபேரும் கடுமையான கண்டனம் தெரிவித்தார்கள். இது ‘எழுத்தறியாக் கும்பலின்’ வன்முறை என்று பிரபல வரலாற்றாசிரியர் எம்.ஜி.எஸ்.நாராயணன் சொன்னார். மார்க்ஸிஸ்டு கம்யூனிஸ்டுக் கட்சி மன்னிப்புகோரவேண்டும், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது. அரசு கடுமையாக நடவடிக்கை எடுக்கும் என்று அறிவித்தாலும் அந்த நம்பிக்கை தனக்கு இல்லை என்று சக்கரியா சொல்லியிருக்கிறார்

சக்கரியா அப்படி என்னதான் பேசினார்? டிசம்பர் மாதம் இருபதாம் தேதி கேரளத்தில் ஒரு பரபரப்பான நிகழ்ச்சி நடைபெற்றது. கேரளத்தில் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் தலைவரான ராஜ்மோகன் உண்ணித்தான் என்பவர் ஜெயலட்சுமி என்ற பெண்ணுடன் கேரளத்தில் மலைப்புறம் மாவட்டத்தில் மஞ்சேரி என்ற இடத்திற்கு தன்னுடைய கட்சிக்கொடியுள்ள காரில் மாலை ஏழரை மணிக்கு வந்தார். அங்கே அவர் அஷ்ர·ப் என்ற தொழிலதிபரின் ஊருக்கு வெளியே உள்ள வாடகை வீட்டுக்குச் சென்றார். அங்கே அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது  மார்க்ஸிய கம்யூனிஸ்டுக் கட்சியின் தொண்டர்களும்  இஸ்லாமிய அடிப்படைவாத கட்சியான பி.டி.பி யின் ஊழியர்களும் [இரு கட்சிகளும் கேரளத்தில் கூட்டணியாகச் செயல்படுகின்றன] அந்த வீட்டைச் சுற்றி வளைத்துக்கொண்டார்கள்.

 

ராஜ்மோகன் உண்ணித்தான் 

உண்ணித்தானும் ஜெயலட்சுமியும் வெளியே இழுத்து போடப்பட்டு தாக்கப்பட்டார்கள். தொலைக்காட்சி ஊடகங்கள் வந்து கும்பல் அவர்களை இழுத்து அலைக்கழிப்பதையும் அடிப்பதையும் ஜெயலட்சுமி அழுவதையும் நேரடி ஒளிபரப்பினார்கள். போலீஸ் வந்து இருவரையும் கைதுசெய்தது. ஆரம்பத்தில் இதில் சட்டவிரோதமாக எதுவுமே தென்படவில்லை என்று போலிஸ் சொன்னாலும்கூட மார்க்ஸிஸ்ட் கட்சியின் கட்டாயத்தால்  ‘ஒழுக்கக்கேடான நடவடிக்கைகளில்’ ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டி உண்ணித்தான் மற்றும் ஜெயலட்சுமி மீது வழக்கு போட்டது. மறுநாள் போலீஸ் நீதிமன்றத்தில் அவர்களை ஆஜராக்கியது. நீதிமன்றம் அவர்களை ஜாமீனில் விடுதலை செய்தது.

தான் எந்த தவறும் செய்யவில்லை என்று உண்ணித்தான் சொன்னார். ஜெயலட்சுமி ஒரு சேவாதள் உறுப்பினர். மணமானவர். கணவர் ஓர் ஆயுர்வேத வைத்தியர். கொல்லத்தைச் சேர்ந்தவர். ஜெயலட்சுமி அஷ்ர·புடன் இணைந்து ஒரு தையல்தொழிற்சாலையும் ஆயத்த ஆடை ஏற்றுமதியும் செய்தாராம். ஆனால் பின்னர் அந்த தொழிலை நிறுத்திக்கொண்டார்கள். தன்னுடைய மூலதனத்தை தந்துவிடும்படி ஜெயலட்சுமி கோரியும் அஷ்ர·ப் பல வருடங்களாக காலம்கடத்தியிருக்கிறார். ஆகவே ஜெயலட்சுமி உண்ணித்தானிடம் மன்றாடினார். உண்ணித்தான் ஜெயலட்சுமியை ஏழு வருடங்களாக அறிந்தவர். ஆகவே அவர் அஷ்ர·பிடம் பேசினார். அஷ்ரப் கேட்டுக்கொண்டதிற்கிணங்கவே அவர் ஜெயலட்சுமியுடன் மஞ்சேரிக்கு வந்தார் — இது உண்ணித்தானின் தரப்பு.

உண்ணித்தான் சொல்லும் வாதங்கள் இவை. ஒன்று கள்ள உறவுக்காக ஒருவர் எத்தனையோ மலைவாச ஸ்தலங்கள், கடலோர விடுதிகள் அருகே இருக்கும்  கொல்லத்தில் இருந்து கட்சிக்கொடி வைத்த காரில் பகலில் கிளம்பி இரவு ஏழுமணிக்கு மஞ்சேரிக்கு வரவேண்டியதில்லை. மேலும் அஷ்ர·ப்புடன் தனக்கு முன்னரே எந்த தொடர்பும் இல்லாதபோது முன்பின் தெரியாத ஊரில் அவர் விட்டுக்கு பெண்ணுடன் வருவது அவசியமே இல்லை. மேலும் சம்பவங்கள் நடந்தது இரவு ஏழு முதல் பத்து மணிக்குள். பெண்ணுடன் வரும் எவரும் கொஞ்சம் ஊரடங்கிய பின்னரே வருவார்கள்.

உண்ணித்தானும் ஜெயலட்சுமியும் போலீஸ் வேனில்

 

கடைசியாக, ‘ஒழுக்கக் கேடான’ விஷயங்கள் நடந்தது என்றால்கூட அதில் முதல்குற்றவாளி அந்த வீட்டை அதற்கு பயன்படுத்திய அஷ்ர·ப் தான். அவர் இதுவரை விசாரிக்கப்படவில்லை. அவரது பெயரே குற்றப்பத்திரிக்கையில் இல்லை. மேலும் வீட்டுக்குள் அவர் இருந்திருக்கிறார், ஆனால் தங்கள் சொந்த ஊரைச்சேர்ந்த அவரை கெட்ட செயல்களை செய்தார் என்று ‘ஊரார்’ கண்டிக்கவோ தண்டிக்கவோ இல்லை. அவர் காட்சிக்கே வரவில்லை. இன்றுவரை அவரது பெயர் எங்கும் எழுந்து வரவில்லை

தாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது அஷ்ர·ப் தகவல் அனுப்பித்தான் பி.டி.பி ஊழியர்கள் கம்யூனிஸ்டு ஊழியர்களுடன் வந்தார்கள் என்று உண்ணித்தான் சொல்கிறார். அத்தனைபேர் அந்த சிறு ஊரில் இயல்பாகக் கூட வாய்ப்பே இல்லை. அவர்கள் அஷ்ர·பால் ஏற்பாடு செய்யப்பட்டவர்கள் என்கிறார் உண்ணித்தான். ஆனால் உண்ணித்தானை கட்சியைவிட்டு தற்காலிகமாக நீக்கிய காங்கிரஸ் கட்சி மேல் விசாரணைக்கு ஆணையிட்டிருக்கிறது. ஆரம்பத்தில் கட்சியின் கைரளி தொலைக்காட்சியில் இதை மீண்டும் மீண்டும் காட்டிய கம்யூனிஸ்டுக் கட்சி விசாரணைக்குப் பின் சட்டென்று அடக்கி வாசிக்க ஆரம்பித்தது. .

ஆனால் அந்த விவகாரம் கேரளத்தில் ஒரு கலாச்சார விவாதமாக மாரியது. ஓர் அரசியல்தலைவரின் அந்தரங்கம் வெளியே வந்ததில் தவறில்லை, அது சமூகத்திற்கு தெரியவேண்டியதே என்று ஒரு தரப்பு சொல்லும்போது இடதுசாரிகள் இந்தமாதிரி கலாச்சாரப் போலீஸாக மாறுவது சரியா என்ற வினா இன்னமும் வலுவாக எழுந்து வந்தது. ஏனென்றால் இந்த நிகழ்ச்சிக்குச் சமானமான பல நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. காதலர்கள்கூட கம்யூனிஸ்டுக் கட்சியின் இளைஞர் பிரிவான டி.வை.எ·ப் அமைப்பால் ‘கையும்களவுமாக’  பிடிக்கப்பட்டு அவமானப்படுத்தப்படும் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அத்துடன் சமீபமாக அப்துல்நாஸர் மதனியின் பி.டி.பி  தாலிபான் பாணியிலான ஒழுக்க விசாரணைகளை கிராமங்கள் தோறும் நடத்தி வருகிறது.

ராஜ்மோகன் உண்ணித்தான் சட்டப்படி எந்த தவறும் செய்யவில்லை என்று பரவலாகச் சொல்கிறார்கள் ஒருவர் தனக்குப்பிடித்த ஒரு பெண்ணுடன் தனியாக இருந்தால், அந்த இருவரும் வயதுவந்தவர்களாக இருந்து பரஸ்பர சம்மதத்துடன் அந்த உறவு நடந்திருந்தால், அதில் சட்டபூர்வமாகத் தவறேதும் இல்லை. அந்த உறவை கண்டிக்க வேண்டியவர், சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டியவர் அவரது மனைவிமட்டுமே. அது ஒரு குடும்பகுற்றமே ஒழிய சமூகக் குற்றமல்ல. அந்தரங்க உறவுகளில் தலையிட்டு ஆள்கூட்டம் நடுவே ஒரு பெண்ணை இழுத்தடித்து அவமானப்படுத்த யாருக்கு உரிமை இருக்கிறது என்று கேட்கிறார்கள்.

இந்நிலையில் உண்ணித்தானின் மனைவியின் கருத்து முக்கியமானதாக ஆகியது. அவர் எதிர்வினையாற்றவேண்டும் என்று  கம்யூனிஸ்டுக் கட்சி எதிர்பார்த்தது. ஆனால் அவரது மனைவி  தன்னுடைய குடும்பவிவகாரத்தில் எவரும் தலையிடவேண்டியதில்லை, இது ஒரு எதிர்கட்சிச் சதி என தனக்குத்தெரியும் என்று சொல்லிவிட்டார். கம்யூனிஸ்டுக் கட்சியையும் பி.டிபியையும் கடுமையாகத் தாக்கிவந்தவர் உண்ணித்தான். அதற்காகவே அவர் பழிவாங்கப்பட்டார் என்றார்.  

ஆத்திரமடைந்த கம்யூனிஸ்டு தொண்டர்கள் உண்ணித்தானின் வீட்டுக்குள் நுழைந்து அவர் மனைவியை தாக்கினார்கள். தாக்கப்பட்ட உண்ணித்தானின் மனைவி காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்கு சென்றுவிட்டு போலீசுக்குச் செல்வதற்குள் கம்யூனிஸ்டுக் கட்சியினர் போலீஸில் உண்ணித்தானின் மனைவி அவரிடம் பேசப்போன தங்களை தாக்கியதாக புகார்கொடுக்கவே போலீஸ் புகார்கொடுக்க வந்த உண்ணித்தானின் மனைவியையே கைது செய்து உட்கார வைத்து வழக்குபதிவுசெய்தார்கள்.

சகரியா பய்யன்னூரில் பேசியது இதைத்தான். சகரியா ‘ஓர் ஆணும் பெண்ணும் விரும்பி உடலுறவு கொண்டால் அது கிரிமினல் குற்றமா என்ன?’ என்று கேட்டார். ”ஒழுக்கம் நிபந்தனையாக இருந்தால் அதை வெளிப்படையாகப் பேசுங்கள். அது அத்தனைபேரையும் கட்டுப்படுத்தட்டும். ஆனால் ஒரு தனிநபரின் வீட்டை சட்டவிரோதமாகச் சூழ்ந்து கொண்டு அவரையும் அவர் தோழியையும் வெளியே இழுத்துப்போட்டு அடிப்பதற்கு யார் இவர்களுக்கு அதிகாரம் அளித்தது? கும்பல்களா ஒழுக்கத்தைக் கண்காணிப்பது?” என்று கேட்டார்.

பல வருடங்களுக்கு முன்னர் டி.வை.எ·ப்.ஐ இயக்கம் ஆரம்பிக்கப்பட்டபோது அந்த இயக்கத்தின் தொடக்கவிழாவில் நடந்த மனிதச்சங்கிலியில் கேரளத்தின் அத்தனை கலாச்சார நாயகர்களுன் வந்து நின்று கைகோர்த்தார்கள் என்று நினைவுகூர்ந்த சக்கரியா அத்தகைய ஓர் இயக்கம் மதவெறி தாலிபானிய அமைப்புகளுடன் கைகோர்த்துக்கொண்டு கலாச்சாரப்ப்போலீஸ் வேலைகளில் ஈடுபடுவது வெட்கக்கேடனது என்றார். ”கேரளத்தில் முற்போக்கு எழுச்சியை உருவாக்கிய கம்யூனிஸ்டுப் பேரியக்கம் இந்த இழிநிலைக்குச் சரிந்தது குறித்து வருந்துகிறேன்” என்றார்.

இதற்குத்தான் பய்யன்னூர் மார்க்ஸியர்கள் எதிர்ப்பு தெரிவித்து சகரியாவைத் தாக்கினார்கள். அதில் முன்னாள் மார்க்ஸிஸ்ட் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தனின் மகனும் உண்டு என்று சகரியா குற்றம்சாட்டுகிறார். போலீசில் புகார் செய்யப்போவதில்லை என்று சொன்ன சகரியா ”கேரளத்தின் உட்துறை அமைச்சரின் தொகுதியில், கேரளத்தை ஆளும் கட்சியால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. போலீஸ¤க்குச் சென்றால் ஏற்கனவே ராஜ்மோகன் உண்ணித்தானின் மனைவிக்கு நிகழ்ந்ததே தனக்கும் நடக்கும்” என்றார்.

கேரளக் கலாச்சாரச் சூழலில் கடுமையான விவாதங்களை உருவாக்கியிருக்கிறது இந்த நிகழ்ச்சி. கம்யூனிஸ்டுக் கட்சி இதற்கு கண்டனம் தெரிவித்து என்ன நடந்தது என்று விசாரிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறது.

கருத்துக்களை முன்வைக்கும் ஒரு எழுத்தாளன் மீதான தாக்குதல் என்பது கண்டிக்கத்தக்க குண்டர்த்தனம் அன்றி வேறல்ல. உண்ணித்தான் விவகாரத்தில் மாற்றுத்தரப்புகள் எவருக்கும் இருக்கலாம். ஆனால் அடிப்படையான கேள்விகளை ஒட்டிய பொதுவிவாதங்கள் இத்தகைய சந்தர்ப்பத்தில்தான் எழமுடியும். அதை விவாதிப்பது கலாச்சாரவாதிகளின் உரிமை. தனிமனித அந்தரங்கம் குறித்த சக்கரியாவின் கருத்துக்கள் விரிவாக விவாதிக்கப்படவேண்டியவை. அந்த விவாதத்தை வன்முறையால்  எதிர்கொண்டது வழியாக அந்த கம்யூனிஸ்டுக் கட்சித்தொண்டர்கள் தங்கள் அமைப்பிற்கு இழிவையே உருவாக்கியிருக்கிறார்கள்.

தோன்றாத்துணை

மலையாள இலக்கியம்

சாக்கியார் முதல் சக்கரியா வரை

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/6255

10 comments

Skip to comment form

 1. snramesh

  பாமியன் புத்த சிலைகளை அழித்த தலிபான்கள் , ஹூசைன் ஓவியங்களை எரித்த சிவசேனை, பப்புக்கு வந்த பெண்களை அடித்து விரட்டிய ராம சேநா, குஷ்பூவை துடைப்பதோடு வரவேற்ற பா ம க, இப்போது கேரளத்தில் ஜெயலட்சுமியை அடித்த இந்திய மாணவர் அமைப்பு மற்றும் மதனியின் பி.டி.பி கட்சியினர் – எல்லாம் ஒரே குட்டை ஒரே மட்டை. இவர்கள் வேண்டும் தெய்வம் வேறாயினும் இவர்கள் கோட்பாடுகள் எல்லாம் ஒன்றுதான்.

 2. Ramachandra Sarma

  அது கிரிமினல் குற்றமா என்ன? – ஆமாம் அந்த வாய்ப்பு தமக்கு கிடைக்காதா என்று ஏங்குபவர்களுக்கு. மனிதனின் மனத்தால் எத்தனை குரூரமானதாக இருக்க முடிகிறது.

 3. raghunathan

  அன்பு ஜே சார். அரசியல் பேச, எழுத மாட்டேன் என்கிறீர்கள். இன்றைய சமூகத்தின் பல அவலங்களுக்கு (உன்னிதனுக்கும், அவர் மனைவிக்கும், சக்காரியவுக்கும் ஆனது போல்) அரசியல் கட்சிகள் அவர்தம் தொண்டர் படைக்குத் தரும் மூர்க்க பலமே காரணம் இல்லையா?
  மது கோடாவின் ஊழல் அரசியல் கட்டுரையில் (குமுதம் ஒ பக்கம்) ஞானி இந்தத்
  தொண்டர்கள் எதற்காக இப்படி உழைக்கிறார்கள் என்று எழுதியிருந்தாரே .
  இன்று காலை நடைப்பயிற்சியில் தெரு முனை சாயாக்கடையில் காதில் விழுந்த உரையாடல். ஒரு நாலு முழ வேட்டி, அரைக்கை வெள்ளை சட்டை, காலில் செருப்பில்லை, சைக்கிளை ஒருக்களித்து சாய்த்துக்கொண்டு மற்றவரிடம் (மடித்துக்கட்டிய கைலி, சிவந்த கண்கள், hangover முடியாத பிசிறுப் பேச்சு ) கேட்கிறார் – என்னாப்பு, வடடசசெயலாளரா வந்திர்றையா? அதற்கு மற்றவர் பதில் – 5 லட்சம் வாங்கித்தருவியா?
  ஒரு நிமிடம் மலைத்தேன். இந்த உத்தியோகத்தில் இவ்வளவு சம்பளமா
  மற்றவர் இவ்வளவு பணத்தை என்ன பண்ணுவார்? அதர்மக்காரியங்கள் செய்வார்.
  மேலும் தேவை வரும். மேலும் பணம் பண்ணுவார். இந்த வியாபாரத்தில் யாரை வேண்டுமானாலும் அடிப்பார், வெட்டுவார் இல்லையா?
  அரசியல் சுத்தமாகாத வரை இத்தகைய சமூக அவலங்கள் எப்படிக்குறையும்?

 4. ஜெயமோகன்

  அன்புள்ள ரகுநாதன்
  அரசியல் பேசவேண்டாம் என நான் சொல்வதில்லை. எனக்கு அரசியலில் நான் சொல்லக்கூடியது என- பிறர் பொதுவாகச் சொல்லாத- அதிக விஷயங்கல் இல்லை என்றே சொல்கிறேன்
  ஜெ

 5. jeeves

  கம்யூனிஸ்டுகளின் போலித்தனம் கேரளாவில் வெளிப்பட ஆரம்பித்து நாளாகிவிட்டதல்லவா.. இந்த மட்டில் சக்கரியாவை விட்டார்களே என்று சந்தோஷம்.

  அது கிடக்கட்டும் மூச்சுக்கு முன்னூறு தடவை கேரளாவையும், சக்கரியாவையும் தனக்கு துணைக்கு இழுக்கும் எழுத்தாளர் இது பற்றி மூச்சு விடக்கூடக் காணோமே ? அது சரி காரியமெனில் தானே கால் தேவைப்படும்

 6. Wilting Tree

  கம்யூனிஸ்டுகள் இப்படித்தான். நம் தமிழ்நாட்டில் உடனடியாக நஷ்ட ஈடு கொடுத்திருப்பார்கள்.

  கொலை செய்யப்பட பிணத்தினால் லாபம் வந்தால், செத்துப்போனவனுக்கு தியாகி பட்டம். லாபம் இல்லாவிட்டால் இளிச்சவாயன் பட்டம். லாபம் வேண்டுமானால் புத்திசாலித்தனம் வேண்டும் அல்லது அதிர்ஷ்டம் வேண்டும்.

  வெட்டுப்பட்ட இன்ஸ்பெக்டர் குடும்பத்திற்கு 7 லட்சம் கொடுத்தது கழக அரசு. செத்தாலும் மீடியாமுன் சாக வேண்டும்.

  இன்னாரின் பிள்ளை, பெண்டாட்டி, அப்பன் என்று ஸமூகத்தில் அறிமுகம் செய்துகொள்ளலாம். உலகம் கொண்டாடும்.

  தொழுநோய் வந்தும் சுதந்திரத்திற்குப் போராடி அழிந்து போனார் சுப்ரமணிய சிவா. நேரு குடும்பத்தைத் தவிர வேறு யாருக்கும் ஆளத் தெரியாது என்கிறார் ராகுல் காந்தி.

 7. ஜெயமோகன்

  அன்பு ஜெயமோகன்,
  சக்கரியா விவாதம் சம்மந்தமாக…..
  உங்களுடைய பல கட்டுரைகளிலும் ஒரு பெக்குலியர் outlook தெரியும். பல விஷயங்களிலும் ஒரு கிரிமினல் silence -உம்.அதற்கும் மேலாக partial truth மட்டும் சொல்லி தன் வாதத்துக்கு வலு சேர்க்கிற அந்த so called _______.
  சக்கரியாவும் ஜெயமோஹனும் இவ்விஷயத்தில் ஒரே தூவல் பக்ஷிகள் தான்.
  இருந்தாலும் சொல்லப்படுகிற விஷயங்கள் சம்பந்தப்பட்ட தகவல்களையாவது உங்களது மசாலா கற்பனைகளை சேர்க்காமல் தெரியப்படுத்த ரப்பர் மற்றும் சில நல்ல சிறுகதைகளை படைத்தவரிடம் வேண்டுகிறேன்.
  சுஜித் குமார்,
  அருமனை.

  [email protected]

 8. sankar.manicka

  அன்புள்ள ஜெயமோகன்,
  சக்காரியா ரீடிஃபில் பேட்டி கொடுத்திருக்கிறார். படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

  http://news.rediff.com/interview/2010/jan/20/there-is-a-lot-of-sex-starvation-in-kerala.htm

 9. Ramachandra Sarma

  படிச்சேன்… ரொம்ப வெளிப்படையான நேரடியான லைட்டான பேட்டியா இருக்கு.

 10. Ramachandra Sarma

  பேட்டிய படிச்சதுக்கப்புறம்தான் தெரியுது. ஏன் நம்மூர் எழுத்தாளர் ஒருவர் அங்கே இவ்வளவு பிரபலமான இருக்காருன்னு. :) எல்லாம் வறட்சி செய்யும் மாயை.

Comments have been disabled.