நிகர்தெய்வம்

aarambappalli11

மகத்தான தொடக்கம்
ஒவ்வொன்றுக்கும் நிகராக
இன்னொன்றை வைத்துவிடமுடியும் என்ற அறிதல்

அ என்ற ஒலிக்கு வளையும் ஒரு கோடு.
அம்மாவுக்கு இன்னும் இரண்டு கோடுகள்.
ஆசைக்கு அடத்துக்கு பசிக்கு பயத்துக்கு
அதற்குரிய சில சுழிப்புகள்.
எவ்வளவு எளிது!

சுழிகள் சுழிகளுடன் மாட்டிக்கொண்டு
வலையாகி விரிகின்றன.
அது இவ்வுலகின் நிகர் என்கிறார்கள் ஆசிரியர்கள்.
உலகிலுள்ளதை எல்லாம் அதில் பொருத்தலாம்.
அதை நான்குபக்கமும் இழுத்து இழுத்து
இவ்வுலகளவே ஆக்கலாம்.

மேலும் பலமடங்கு விரியமுடியும் அது.
அதில் உலகமே ஒரு சிறிய சுழியாக ஆகிவிடமுடியும்.
தெய்வம் இன்னொரு சுழி

அந்த ஆணவத்தைக்கண்டு
சினந்து படைக்கலமேந்தி வரும் தெய்வத்தை
எதிர்கொள்வது எப்படி?

அந்த மந்திரக்கோலை எடுக்கலாம்
சுழியாக ஆகிவிட்டதைக் கண்டு சினந்த தெய்வம்
சற்றுப் பெரிய சுழி.
அவ்வளவுதானே?

முந்தைய கட்டுரைகாளியனும் ஹைட்ராவும்
அடுத்த கட்டுரைஜெயதேவ மானசம்