நீலப்பேருரு

1

ஜெமோ

இன்றைய நீலம் அதன் இன்னொரு பக்கத்துக்குத் திரும்பி உச்சம் அடைகிறது. ராதை ஒரு விஸ்வரூபத்தை காண்கிறாள். கல் உடைக்கும் கழனியுழும் கண்ணனைப் பார்த்தபோது. இங்கே வசுதேவரும் மதுராபுரியின் மக்களும் வேறு ஒரு விஸ்வரூபத்தைப் பார்க்கிறார்கள்.

அறமெனும் இறைவன். அழிவற்றவன்.
ஆயிரம் கோடி சொற்களாலும் மறைத்து விடமுடியாதவன்.
தெய்வங்களும் விழிநோக்கி வாதிட அஞ்சுபவன்.
நாநிலம் அறிக! நான்கு வேதங்கள் அறிக!
நன்றும் தீதும் முயங்கும்.
வெற்றியும்தோல்வியும் மயங்கும்.
நூல்களும்சொல் பிழைக்கும்.
தேவரும் நெறி மறப்பர்.
ஒருபோதும் அடிதவறுவதில்லை அறம்

என்ற வரிகள் வழியாக அவன் இந்த பிரபஞ்சம் முழுக்க நிறைந்திருக்கும் ஒரு அறப்பேருருவை [மகாதர்மகாயம் என்று புத்தமரபிலே சொல்வார்கள்] காட்டிவிடுகிறான். தர்மநியாயங்கள் எல்லாம் சரிதான், ஆனால் மானுடன் மீறவே முடியாத அறத்தின் சில இடங்கள் உண்டு என்று அவன் சொல்லும் இடம் தான் உண்மையான விஸ்வரூபம்

“கொல்லாதது அறமல்ல. பழி வெல்லாதது தெய்வமும் அல்ல.”

இந்த விஸ்வரூபத் தோற்றம் ஏன் கம்சனுக்குக் கிடைக்கவில்லை. நியாயப்படி அவனுக்குத்தானே கிடைத்திருக்கவேண்டும்? அவனுக்குக் கிடைத்தது மிகச்சிறிய தோற்றம். அவன் மடியிலே சின்னக்குட்டி

நான் நினைக்கிறேன். அவன் வளர்ந்துவிட்டான். ராதையின் மறுபக்கம் அவன். அவனே அதைச் சொல்கிறான். ராதையும் சிறியவடிவத்திலேதான் பார்த்தாள். அவளால் கையாளக்கூடிய வடிவத்திலே. அவர்கள் இருவருமே வளர்ந்துவிட்டவர்கள். விஸ்வரூபம் அவர்களுக்கே தெரியும்.

சும்மா யோசிப்பதுதான். ஆனாலும் இப்படியெல்லாம் பல வழிகளில் சிந்தனைகலும் உணர்ச்சிகளும் பீரிட்டுச் செல்வது ஒரு நல்ல அனுபவம். நன்றி

சாமிநாதன்

Krishna+cosmic

ஜெ

ராதையின் கதை முடிவடைந்தபோதே நாவல் முடிந்துவிட்டது என்ற எண்ணம் வரத்தொடங்கிவிட்டது. கம்சன் மோட்சம் அடைந்த பிறகு முக்கியமான கதைப்பகுதி ஒன்று இருக்கிறது என்றே தோன்றவில்லை. இன்று ஒரு வகையில் நாவல் மங்கலம் பாடிவிடும் என்று நினைத்தேன். ஆனால் இன்றைய அத்தியாயத்தை வாசித்தபோதுதான் அடடா நாவல் இப்படித்தானே முடியமுடியும் என்று நினைத்தேன்.

ஆரம்பத்தில் இருந்தே இந்த ‘ரத்தம்’ வந்துகொண்டே இருக்கிறது. கிருஷ்ணன் ரத்தத்தில் பிறந்தான் ரத்த ஆற்றிலே நீந்தி வளர்ந்தான்.அவன் காலுதைத்து கிளம்பச்செய்த அறச்சக்கரம் ரத்தத்தின் தடம் உடையதுதான். அதைத்தான் நந்தன் பார்க்கிறான். அதைப்பார்த்தபிறகுதான் இவன் கம்சனைக் கொல்வான் என்று நந்தன் நினைக்கிறான். அக்ரூரர் பார்ப்பதும் அந்த ரத்தவெள்ளம் தானே?

கிருஷ்ணன் இப்படித்தான் செய்யமுடியும். கீதையில் அவன் சொன்னதே இதுதானே.“கொல்லாதது அறமல்ல. பழி வெல்லாதது தெய்வமும் அல்ல.” என்ற வரி கீதையின் சாங்கிய யோகத்தின் சாராம்ஸம் தானே.

கண்ணனென அங்கே நின்றது
காலமென வந்த ஒன்று.

இருமுனையும் மின்னும் கூர்வாள்.
யுகமழித்து யுகம் படைக்கும் யோகம்.
உதிர நதியிலெழும் பெருங்கலம்.
ஒருநாளும் அணையாத நீதியின் பெருவஞ்சம்.

என்ற வரியைப்போல கண்ணனை விளக்கமாகச் சொல்ல அதிகம்பேரால் முடிந்தது இல்லை.

ராதைக்கு கண்ணன் காட்டியது மலர் முகம். வசுதேவருக்கு வைர முகம். ’மென்மலர் வைரமென்றானது’. கிருஷ்ணன் என்ற வைரத்திலே மலரின் ஒளியை ஜெயதேவர் கண்டதுதான் ராதாகிருஷ்ணன். மகாபாரதக் கிருஷ்ணன் வைரவாள் மட்டும்தான்

இரண்டு கிருஷ்ணர்களையும் ஆரம்பம் முதலே கச்சிதமாக இரண்டு கதையோட்டங்களாக பின்னிக் கொண்டுவந்து. அதிலுள்ள அமைப்பும் அழகானது. ரத்தத்தில் நனைந்த வைரவாள் மாதிரியான கிருஷ்ணனை ‘எல்லாரும்’ பார்க்கிறார்கள். ஆயர்கள், சூதர்கள், இடைச்சி, பாட்டிகள், அக்ரூரர், யசோதை, ரோகிணி,நந்தன் என்று பலருடைய பார்வை. எல்லாரும் ஏதோ ஒருவகையில் கிருஷ்ணனில் உள்ள அந்த கூர்மையான வாளைத்தான் கண்டுபிடிக்கிறார்கள்.

ஆனால் ராதை மட்டும்தான் மலரை கண்டுபிடிக்கிறாள். அவள் வாளைப்பார்க்கவே இல்லை. அத்தனைபேர் பார்த்த வாளைவிட அவள் பார்த்த மலர் அதிகமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அதனால்தான் கிருஷ்ணன் இன்றைய தீர்ப்பை அளிக்கும்போது திகைப்பு ஏற்படுகிறது அவன்

பரித்ராணாய ஸாதூனாம் விநாஷாய ச துஷ்க்ருதாம்
தர்மசம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே

என்று சொன்னவன் என்பதை மறந்து அழகான சின்னப்பையனாக மட்டுமே பார்க்கிறோம். இந்தத் திகைப்பே நீலத்தின் வெற்றிதான். நீலன் என்று பெயரிடாமல் நீலம் என்று பெயரிட்டதை இப்போதுதான் புரிந்துகொள்கிறேன். அவன் பெரிய புதிர். கண்ணுக்கு மலர். கைதொட்டுப்பார்த்தால் வாள். வாழ்க்கை முழுக்க அப்படித்தான். முப்பதாண்டுக்காலமாக நான் கிருஷ்ண உபாசகன். நான் அறிந்தது அப்படித்தான்

ஆசிகள் ஜெ

சுவாமி

krishna-christ

இனிய ஜெயம்,

இன்றைய அத்யாயம் மீண்டும் என்னை உங்கள் படைப்புகளின் அடிப்படை உணர்சிகள் அவை கொள்ளும் வினாக்கள் நோக்கி அழைத்துச் செல்கிறது.

தேவகி கண்ணனைக் கண்டு கொள்கிறாள். பின் கண்ணனாக மட்டுமிருந்த அவளது கைப்பாவை, ஒரு போதும் மீளாத அவளது ஏழு மதலைகளின் துயரமாகிக் கனக்கிறது.
கண்ணனால் கூட ஈடு செய்ய இயலா தாயின் துயரம்.

தேவகிக்காவது கண்ணன் ஒருவன் இருக்கிறான். ஆனால் என் பீஷ்மருக்கு?
கங்கைக் கரையில் தென்றலென சுழலும் அவரது சகோதரர்களின் மூச்சுச் காற்றை நுரைஈரலில் தேக்கியபடி அவர் காக்கும் தனிமை. சுமக்கும் துயரம். தேவகியின் துயரைக் காட்டிலும் எடை கூடியது.

கண்ணன் கர்ஜிக்கிறான் ” மண்ணில் கருணை கொண்ட அறமென்று எதுவுமில்லை”.

” “குழவியர் குருதியில் கைதொட்ட எவரும் கழுவேறாது இங்கு எஞ்சலாகாது. இதுவே நீதியென இப்புவி அறியட்டும்!” ”

வெண் முரசு மட்டுமல்ல, உங்கள் அனைத்து நாவல்களும் எதோ ஒரு துரியப் புள்ளியில் ஒன்றுதான்.

இந்த வாசகத்தை வாசிக்கும்போது என் அடி மனதிலிருந்து மின்னலென ஒரு வாசகம் எழுந்து வந்தது.

புகாரின் அஞ்சிப் பின்னடைந்தார். அவனது கண்களுக்குள் நீலச் சுடர் ஒளிர்ந்தது.

”தண்டம்தான் எனது நீதி எனில். இந்த ஒவ்வொரு குழந்தையின் பொருட்டும் இவ்வுலகை மும்முறை நான் அழிப்பேன் ”

என் ஏசு சொல்கிறான், கருணையும் அறமும் வேறு வேறல்ல.

எப்போதும் நான் உங்களிடம் ஒரு நிலைப்பாட்டை முன்வைக்கையில் அந்த நிலைப்பாட்டின் மறுபக்கத்தை தர்க்கப்பூர்வமாக முன் வைத்து என் அகத்தை விசாலப் படுத்துவது உங்களது பாணி.

இனிய ஜெயம் இவ்விரண்டு சீற்றத்தும் இடையே நிகழ்ந்தது தான் அறம் எனும் விழுமியத்தின் பண்பாட்டு வளர்ச்சி இல்லையா?

மற்றொரு நாளின் இனிய துவக்கம். இன்றைய வாசிப்பு.

கடலூர் சீனு

அன்புள்ள சீனு,

கிருஷ்ணன், ஏசு என்னும் இரு முகங்களும் என்னைப்பொறுத்தவரை ஒன்றை ஒன்று நிரப்புபவை.

கிருஷ்ணன் நீதியின் வாளேந்தியவன். ஆனால் எல்லையற்ற கருணை கொண்டவனாகவும் அவனை அறியும் பல இடங்கள் உண்டு. ஜெயதேவரும் சைதன்யரும் கண்ட கிருஷ்ணன் ஒரு நீலமலர். யுகமுடிவில் கல்கியாக திரும்பிவரும் கிருஷ்ணர் ஒரு கைக்குழந்தை.

ஏசு முடிவற்ற மன்னிப்பின் திருவுரு. ஆனால் ‘சமாதானத்தையல்ல பட்டாக்கத்தியையே கொண்டுவந்தேன்’ என்று அவரது கூற்று ஒன்று உள்ளது. செம்பழுப்பு ஆடையும் வைரமுடியும் மன்னிப்பற்ற வாளுமாகவே அவர் மீண்டுவருவார் என்கிறார்கள்

ஒரே உண்மையின் இரு முகங்கள்.

ஜெ


[வெண்முரசு தொடர்பான வாசகர்கடிதங்கள், விவாதங்கள் அடங்கிய இணையதளம்- வெண்முரசுவிவாதங்கள்]

வியாசமனம் மரபின்மைந்தன் முத்தையா முதற்கனல் பற்றி எழுதும் விமர்சனத் தொடர்

முந்தைய கட்டுரைசேட்டை
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 37