நீலம் மலர்ந்த நாட்கள் -3

ima11

[தொடர்ச்சி. நீலம் மலர்ந்த நாட்கள் 2]

அனைத்தையும் விடமுக்கியமானவை கனவுகள். ஒவ்வொருநாளிலும் நாலைந்துமுறை சிறு தூக்கங்கள் போடுவேன். படப்பிடிப்பு இடத்தில் நாற்காலியில் சாய்ந்தே தூங்கிவிடுவேன். ஓட்டலில் அமர்ந்துகொண்டே தூங்குவேன். காரில் ஏறி ஐந்து நிமிடம் கழித்து இறங்குவதற்குள் ஒரு தூக்கம். இசைகேட்கும்போது சிலநிமிடங்கள் தூங்கியிருப்பேன். இத்தூக்கங்கள் எல்லாமே கனவுகள் நிறைந்தவை.

கனவுகளை குறித்துவைக்கலாகாது என முடிவுசெய்திருந்தேன். குறித்துவைக்கவும் முடியாது. ஒருநாளில் நூற்றுக்கணக்கான கனவுகள். நீளமானவை. உதிரிபிம்பங்கள். பல கனவுகள் தொடர்ச்சியாக நாட்கணக்கில் வந்தன. கனவுகளில் வண்ணம் இருக்காது என்றார்கள். இந்தக்கனவுகள் எல்லாமே வண்ணங்கள் கொண்டவை. அதற்கு நான் பெரும்பாலும் வெளிச்சமான இடங்களில் தூங்கியது காரணமாக இருக்கலாம். இமைகள் மேல் ஒளிபட்டால் கனவுகளில் வண்ணங்கள் இருக்குமாம்.

அத்தனை கனவுகளும் இனியவை என்பது வியப்புக்குரியது. கம்சன் குழந்தைகளைக் கொல்வதன் குரூரமான சித்திரங்களை எழுதியநாளில் கூட எனக்கு வந்தவை இனிய கனவுகள்தான். நான் சென்றே இராத நிலக்காட்சிகளை நிறையவே கண்டேன். மலேசியாவும் ஆஸ்திரேலியாவும் கலந்த நிலக்காட்சிகள் அதிகம். மிக அபூர்வமாகவே அமெரிக்காவும் கனடாவும் வந்தன.

விதவிதமான மலைச்சரிவுகள். அருவிகள். பூக்கள் மண்டிய காடுகள். பறவைகளையும் மலர்களையும் நிறைய கண்டேன். பறவைகள் பறக்கும்போது அத்தனை நெருக்கமாக நிஜவாழ்க்கையில் மட்டும் அல்ல சினிமாவில்கூட பார்க்க வாய்ப்பே இல்லை. பூச்சிகளின் கண்கள்கூட தெளிவாகத்தெரியும். நீருக்கு அடியில் யானைகளுக்கு அடியில் எங்கும் எவராலும் பார்க்கப்படாதவனாக எடையில்லாமல் பறந்துகொண்டே இருந்தேன்.

தொண்ணூறுசதம் கனவுகளில் எனக்கு ஐந்துவயதுகூட ஆகவில்லை. என் இளமையில் குமரிமாவட்டம் பசுமை மண்டிய கனவுநிலமாக இருந்தது. பூக்களும் பறவைகளும் இங்குள்ளதுபோன்று எங்கும் கண்டதில்லை. நீர்நிறைந்த குளங்கள். ஒரு குளத்தின் கரையில் நின்றால் இன்னொரு குளம் தெரியும். நீர்பெருகிச்செல்லும் ஆறுகள். சோலை சூழ்ந்த சின்னஞ்சிறு சாஸ்தா, யட்சி கோயில்கள். வருடத்தில் பாதிநாள் மழை. சீவிடும் தவளையும் ஒலிக்கும் இரவு.

எங்கள் வாழ்க்கையே பூக்களுடன் பின்னிப்பிணைந்தது. ஓணத்திற்கு அத்தப்பூக்களத்துக்கான பூசேகரிப்போம். விஷுவுக்கு கொன்றைப்பூக்களும் கணிமலர்களும். பத்தாமுதயத்துக்கு புன்னைப்பூவும் தாமரைகளும். கோயிலில் புஷ்பாபிஷேகம். கோயில்சடங்குகள் ஒவ்வொன்றும் பருவங்களுடன் இணைந்தவை.அதற்குரிய மலர்கள் கனிகள். கோயிலைச் சார்ந்த வாழ்க்கை என்பது மண்ணை முழுதறிந்து வாழ்வது.

என் அம்மாவை, இளம்பருவத் தோழர்களை, தோழியரை மிகமிக அருகே கண்டேன். இறந்தவர்கள் அன்றிருந்த தோற்றத்தில் வந்தனர். அவர்களின் குரல்கள் மட்டும் அல்ல மணமும் கூட கனவில் வந்தது. இறந்தவர்களின் கண்கள் அவர்கள் இறந்தவர்கள் என்று காட்டின, அவர்கள் இறப்பதற்கு இருபது முப்பது வருடங்களுக்கு முந்தைய தோற்றத்தில் வந்தபோதும்கூட! நாய்கள், பசுக்களின் கண்களை அத்தனை அணுக்கமாக நேரில் கண்டதே இல்லை.

திரும்ப அக்கனவுகளை மீட்டும்போது மனம் ஏக்கம் நிறைந்து கனக்கிறது. நான் கேட்ட பாட்டுகளும் அந்த எழுபதுகளைச் சார்ந்தவை என்பது இந்த ஏக்கத்தால்தான். திரும்பி அங்கே செல்லும் முயற்சி. அந்த மண் இன்றில்லை. அது எப்போதைக்குமாக அழிந்துவிட்டது. குமரிமாவட்டத்தில் பெரும்பகுதி இன்று ரப்பர் மண்டி உயிரற்ற பசுமை கொண்டுவிட்டது. அந்த மலர்க்காடுகள் பெருமளவு அழிந்துவிட்டன. நானறிந்த மனிதர்களும் இல்லை. இறந்துவிட்டனர், மாறிவிட்டனர்.

ஆனால் இத்தனை துல்லியமாக அனைத்தும் உள்ளே இருக்கையில் எப்படி அழிந்துவிட்டது என்று சொல்லமுடியும்? நானிருக்கும் வரை அவை இருக்கும். நினைவுகள் மேலோட்டமானவை. அவற்றுக்கு ஒரு காரணம் தேவைப்படுகிறது. அக்காரணத்தின் ஒருபகுதியாகவே அவை எழமுடிகிறது. கனவுகள் தன்னிச்சையானவை. இவ்வுலகம் போலவே கனவுலகும் திட்டவட்டமான ஒரு யதார்த்தம்தான். அங்கே இருக்கும் ஒருமையும் வடிவ ஒழுங்கும் எங்கும் இல்லை.

radha-krishna-GK36_l

ஆம், கனவுகளில் காமம் உண்டு. மூன்றில் ஒருபங்கு காமம்தான். மூன்றில் ஒருபங்கில் காமத்தின் சாயம் உண்டு. ஆனால் தீவிரமான உடல்புணர்ச்சி நிலைகள் மிகக்குறைவு என்பது ஆச்சரியம். நிர்வாணப் பெண்உடல்கள். பெரும்பாலும் எவரென்றே தெரியாதவர்கள். நேரில் பார்த்தே இராதவர்கள். விதவிதமான உடல்களில் இருந்து என் பிரக்ஞை சேர்த்துக்கொண்ட உடல்களாக இருக்கலாம். பல நிர்வாணங்கள் கோயில்பிராகாரங்களில் சிலைகளின் பின்னணியில்.

காமம் கனவுகளில் பெரும்பாலும் ஒருவகை தவிப்பாகவே வந்திருக்கிறது. இந்த அபாரமான அழகனுபவம் உண்மையில் முதல்முறை. பாலுணர்வை தூண்டும் உறுப்புக்கள் மட்டும் அல்ல. கைவிரல்கள், கால்விரல்கள் கூட மூச்சடைக்கவைக்கும் அழகுடன் நுட்பத்துடன் துலங்கி வந்தன. அதை நான் பார்ப்பது, கனவு காண்கிறேன் என்பது, எனக்கே தெரிந்தது. ஒரு பாடலின் நடுவே அந்த இசையுடன் கலந்து ஒரு உடல் வளைந்து மறையும். பாட்டும் கேட்டுக்கொண்டிருக்கும்.

நான் ஒருபக்கம் பித்துநிலையில் இருந்தேன். மறுபக்கம் மிகமிக கறாராக அதைப் பார்த்து மதிப்பிட்டுக் கொண்டும் இருந்தேன். சொல்லப்போனால் இதையெல்லாம் எழுதவேண்டும் என்று அக்கனவு நிகழும்போதே நினைத்துக்கொண்டிருந்தேன். கனவு நிகழ்வது எனக்கல்ல, அது நான் அல்ல என்றும் தோன்றியது.

அதோடு புலன் அனுபவங்கள் தலைகீழாகிக் கிடந்தன. முத்தாரமே உன் ஊடல் என்னவோ என்று ஒரு பாட்டு. அது பாட்டரி முனையை நாவால் தொடுவது போல தித்தித்தது. நெடுநேரம் தித்திப்பாகவே இருந்தது. என் இடப்பக்கத்தில் ஒரு அருவி குளிராக கொட்டியது -நான் காரில் சென்றுகொண்டிருந்தேன், அது ஏசியின் வாய். அந்த குளிர் அடிநாக்கில் கசப்பாக இருந்தது.

அதேபோல நிறைய ஓசைகள் பொருக்கோடிய புண்மேல் கையை வைத்து அழுத்துவது மாதிரி இனிமையாக வலித்தன. ஆஹா சொல்லத்தான் நினைக்கிறேன் என்ற பாட்டு உடம்பில் குண்டூசியால் மெல்ல நெருடுவதுபோல இருந்தது. பொதுவாக சருமம் மிகவும் உணர்வுமிக்கதாகவும் சின்னத்தொடுகையிலேயே அதிர்ந்து கூசுவதாகவும் இருந்தது.

இன்னும் ஆச்சரியம். குயிலின்றே மணிநாதம் கேட்டூ -என்ற மலையாளப்பாடலை ஒரு பெண் உடலாகவே பார்த்தேன். புன்னகைத்து வந்து நின்றாள். நான் அறிந்த, அல்லது சினிமாவிலே பார்த்த எவருமே அல்ல. ஒரு நிழலுருவம். தொட்டால் அந்த இடம் கலைந்து போகும். எஞ்சிய பகுதியில் உயிரும் இருக்கும்.

இது ஒரு schizophrenic நிலை என்று எனக்கே தெரிகிறது. இதில் உள்ள கட்டற்ற தன்மை அச்சுறுத்துகிறது. எழுதாதபோதும் சொற்கள் தன்னிச்சையாக உள்ளே ஓடிக்கொண்டிருக்கின்றன. இது எதன் தொடக்கம் என எனக்குத்தெரியும். இந்த கட்டற்ற மொழிப்பாய்ச்சலை வேலியிட்டு ஒரு வடிவுக்குள் கொண்டுவருவதற்காக ஒரு கட்டுமானத்தை உருவாக்கிக் கொண்டேன். அதாவது நூலை ஒரு வரைபடமாக ஆக்கிக்கொண்டேன். பஞ்சபூதங்கள், அஷ்டநாயிகா உருவகம் போல.

அன்றாடவாழ்க்கையிலும் அதைப்போல சில திட்டவட்டமான வடிவங்களைக் கொண்டுதான் மனதுக்குள் ஓடிக்கொண்டிருக்கும் சொற்பெருக்கை பலவகையாக கட்டுப்படுத்திக்கொள்ள முயன்றேன். காலையில் இதைச்செய்வது. மாலையில் இதைச்செய்வது. அதுதான் நாவலின் வடிவம். அது இல்லாவிட்டால் இது வெறும் சொல்வெளியாகவே எஞ்சியிருக்கும்.

அதற்கான பலவகையான பயிற்சிகளை பழகி வைத்திருக்கிறேன். அதில் ஒன்று நான் இருக்கும் இடத்தை அணுவணுவாக கூர்ந்து நோக்கி அங்கே இருக்கிறேன் என்று எனக்கே சொல்லிக்கொள்வது. இந்த புறவுலகத்துப்பொருட்கள் திட்டவட்டமாக இருப்பது அளிக்கும் ஆறுதல் எவ்வளவு மகத்தானது என இந்நிலையில் இருந்தால்தான் தெரியும். பயங்கரம், அபாரம்! இப்போது நீலத்தை படிக்கையில் ‘எங்கிருக்கிறேன்’ என்ற தவிப்பு பலவகையில் அதில் இருப்பதைக் காண்கிறேன்.

கனவுகளும், மொழியின் வெறியும் ஒருபக்கமும் அன்றாட வாழ்வின் கொப்பளிப்பு மறுபக்கமுமாக கலந்து மூளையை நிறைத்து ஓடிக்கொண்டிருக்கிறது. அதிக அழுத்த மின்சாரம் ஓடும் கம்பிச்சுருள் போல மூளை கொதிப்பதை சிலசமயங்களில் உணரமுடிகிறது. உண்மையிலேயே உடலை விட தலை சூடாக இருக்கிறது. உதடு உலர்ந்தும் கண்கள் கலங்கி வழிந்துகொண்டும் இருக்கின்றன.

அத்துடன் சிலசமயம் கிரீச் என ஒலிகள் கேட்கின்றன. சிலசமயம் கண்ணுக்குள் மின்னலடிப்பது போல சில வெளிச்சங்கள். முடி பொசுங்குவது போன்றவாசனைகள். பெண்ணின் மதஜல வாசனை. புதுப்பிளாஸ்டிக் வாசனை. பல்வேறு நறுமணங்களின் சிக்கலான கலவை.

இதெல்லாம் கைவிட்டுப்போய் ஏதாவது தவறாக ஆகிவிடுமா என்ற ஐயம் இப்போதுகூட அடிக்கடி அடிவயிற்றைக் கவ்வுகிறது. நம் மூளைக்குள் நிகழ்வதை நாமே உணரமுடியும் வரை பிரச்சினை இல்லை என்று உளவியல் சொல்லும். உண்மையில் அப்படி உணரமுடிகிறதா, இல்லை அதுவும் இந்த கொந்தளிப்பின் ஒருபகுதியா என்று ஐயம் வருகிறது. மீளமுடியாதுபோகுமா என்ற சந்தேகம்.

ஆனால் மடத்தனமாக போய் ஏதாவது மாத்திரையில் விழுந்துவிடக்கூடாது என்று நினைத்துக்கொள்கிறேன். இதற்கான பயிற்சிகளில் ஒன்று நிறைய தண்ணீர்குடித்து ஏராளமாக சிறுநீர் கழிப்பது. சுத்த கிறுக்குத்தனம் என்பது எனக்கே தெரிகிறது. ஆனால் அது உதவுகிறது. சிறுநீர்போகும்போது நாம் வெறும் உடம்பாக நம்மை உணரமுடிகிறது. மூளைக்குள் இருக்கும் கொதிப்பு அல்ல நான், இந்த உறுப்புகள்தான் நான் என்று எண்ணமுடிகிறது.

rada33

அத்துடன் காய்ச்சல். தொடர்ந்து உடலில் வெப்பம் இருக்கிறது. சென்னையில் குழுமநண்பர் வேணு வெட்ராயனை நண்பர் ராஜகோபால் அழைத்துவந்தார். அவர் பார்த்துவிட்டு காய்ச்சல் கொஞ்சம்தான் இருக்கிறது என்று சொல்லி மாத்திரை தந்தார். ஆனால் அது ஒருமணிநேரம்தான் காய்ச்சலைக் குறைக்கும்.

தொடுபுழாவில் மீண்டும் காய்ச்சல். எர்ணாகுளத்தில் ஒரு டாக்டரைப் பார்த்தேன். காய்ச்சலுக்கான நடுக்கம் இருக்கிறது, ஆனால் தெர்மாமீட்டர் எதையும் காட்டவில்லை என்றார். நேற்றும் முன் தினமும் மீண்டும் காய்ச்சல். காய்ச்சலுக்கும் எழுதும் அத்தியாயங்களுக்கும் நெருக்கமான தொடர்பு இருக்கிறது.

இரு சந்தர்ப்பங்களில் உச்சகட்ட மனச்சோர்வும் தற்கொலை எண்ணங்களும் வந்து சுழற்றி அடித்தன. கம்சனைப்பற்றி ஏதோ எழுதியநாளில். ராதையின் பிரிவுநிலையை எழுதிய நாட்களில். எல்லாமே அர்த்தமில்லாத வெறுமை கொள்ளும். ஒன்றிலும் சாரம் இல்லை என்றுபடும். ஒன்றுமே செய்யத்தோன்றாது. துக்கம் வந்து தொண்டை கரகரவென்று இருக்கும். ஏதோ கெட்ட செய்தி வர எதிர்பார்ப்பதைப்போல எப்போதுமே வயிறு பொம் பொம் என்று அதிர்ந்துகொண்டே இருக்கும்.

இந்த நாட்களில் தன்னிரக்கமாக எதையாவது நினைத்தால்கூடப் போதும் உடனே கரகரவென்று கண்ணீர் வந்துவிடும். அதோடு உண்மையிலேயே உடலிலும் அந்தச் சோர்வு எழும். எழுந்துபோய் ஒரு கோப்பையை எடுத்து வெந்நீர் போடத் தோன்றாது. போர்க் போல கூர்மையான பொருட்களைப்பார்த்தால் பயம் வந்து உடல் தூக்கிப்போடும். வெளியே கிளம்பிவிட்டால்கூட சரியாகிவிடும். ஆனால் கட்டிலில் இருந்து எழவே முடியாது மனம் எழு எழு என்று சொல்லும். அந்த எண்ணம் உடம்புக்கே வந்துசேராது.

மண்டையில் ஓங்கி ஓங்கி அறையவேண்டும் என்று தோன்றும். கூச்சலிடவேண்டும் என்று தோன்றும். அழுகை வரும். ஒருநாளும் மாடிகளில் எங்கும் தங்கக்கூடாது என்று முடிவுசெய்தேன். அந்தமனநிலையில் குதித்தாலும் குதிப்பேன்.

ஆனால் என்னுடைய கடுமையான பயிற்சிகள் காரணமாக உடனே ஏதோ ஒன்றைப்பற்றி மீளமுடிந்தது. குறிப்பாக எவரிடமாவது பேசினால் போதும். எங்காவது எழுந்து போனால் போதும். சட்டென்று அழகான நாலைந்து பெண்களைப் பார்த்தால்போதும். ஆனால் அந்த வதையை வாழ்க்கையில் எந்த உண்மை நிகழ்விலும் அனுபவித்ததில்லை. உண்மையிலேயே schizophrenia நோயாளிகள் போல பெரிய வதை அனுபவிப்பவர்கள் எவரும் இல்லை. புற்றுநோயால் உடல் நைந்து வலியில் துடிப்பதற்கு நிகர் அது என நினைக்கிறேன்.

இந்த அகப்பெரும்பெருக்கை கூர்ந்து நோக்கிக் கொண்டிருக்கிறேன். குப்பையும் மலர்களுமாக ஏதேதோ மிதந்து சென்றுகொண்டிருக்கின்றன. இதன் தர்க்கமோ தொடர்போ இல்லாத தன்மை பயங்கரமாக அச்சுறுத்துகிறது சிலசமயம். சொற்களாக சிலவற்றையே ஆக்கமுடிகிறது. அதற்காக நாவில் எழுந்த சில சொல்லாட்சிகளை சொல்லிக்கொண்டே இருக்கிறேன். நீலத்தின் முதல்வரிகளை சொல்லிக்கொண்டே இருப்பேன். கொஞ்சநேரத்தில் என் முயற்சி இல்லாமலே வாய் சொல்லிக்கொண்டிருக்கும்!

உதாரணமாக இவையனைத்தையும் இவ்வுலகனைத்தையும் என இரண்டுநாட்கள் முழுக்கச் சொல்லியிருக்கிறேன். சிலசமயம் அந்த வரியை வெளியே யாராவது சொல்லிக்கொண்டு போவதை கேட்டு அதிர்வேன். சிலசமயம் அந்த வரியை டிவியில் யாராவது சொல்வார்கள்!

உண்மையில் இந்த வாழ்க்கையின் சரிதவறுகள், இடக்கரடக்கல்கள் நிறைந்த அமைப்புக்குள் நான் இருப்பதுதான் பெரும்பிரச்சினை என்று தோன்றியது. நான் செய்யவேண்டிய வேலைகளைச் செய்யவேண்டியிருக்கிறது. ‘நாகரீக மனிதனாக’ வாழவேண்டியிருக்கிறது. அது பெரும்பாவனை.

நினைத்துக்கொள்கிறேன், தெருவோடு செல்லும் பண்டாரமாக இருந்திருந்தால் பார்க்கும் பெண்கள் தவறாக நினைக்கக் கூடாது என அவர்களை முற்றாகத் தவிர்க்க வேண்டியிருக்காது. உரக்கச் சிரித்தால் கைதட்டி நடனமிட்டால் கிறுக்கன் என்பார்களோ என்று சந்தேகப்படவேண்டியிருக்காது. எல்லாவற்றையும் விட இது என்ன Schizophrenia வா அல்லது bipolar disorder வா என்று எண்ணி எண்ணி பீதியடைய வேண்டியிருக்காது.

இந்த நாட்களின் யதார்த்தமே வேறு. எனக்கு கண்ணனோ ராதையோ புனைவுக்கதாபாத்திரங்களாக இல்லை. மிக அருகே அவர்கள் இருப்பதை உடல் உணரமுடிந்தது. குறிப்பாக இரவில் எழுந்தால் அறைக்குள் அவர்கள் உடலுடன் இருக்கும் உணர்வு. மெல்லிய குரலில் அவர்களில் யாராவது பேசுவதைக் கேட்கக்கூட முடியும். ஆச்சரியம் என்னவென்றால் அது நான் எழுதிய சொற்கள். ஒருமுறை எஸ்.செந்தில்குமாரின் நாவலில் நான் வாசித்தது அப்படியே நீலத்தில் உள்ள சொற்களை.

இந்த நாட்களில் கண்ணனுக்கு மிக அண்மையில் இருந்தேன். அஜிதன் அளவுக்கு கண்ணனும் உண்மையான இருப்பு என்று உணர்ந்தேன். அது எந்தக்கண்ணன் என்று சொல்லமுடியவில்லை. என் மூளைக்குள் உள்ள கிருஷ்ணனாக இருக்கலாம். அந்த delusions எல்லாம் எப்படி ஏற்படுமென எனக்கே நன்றாகத் தெரியும். ஆனால் என்னால் கிருஷ்ணனின் வாசனையைக்கூட அறியமுடிந்தது. கிருஷ்ணனும் ராதையும் சல்லாபம் செய்வதை மிக அருகே நின்று பார்ப்பதுபோல். அவர்களும் நானும் ஒரே உலகில் ஒரே மாதிரியான உடலுடன் வாழ்வதுபோல.

உடனே கோணம் மாறிவிடும். அதைப் பார்த்த ஒருவர் என்னிடம் அதைச் சொல்லிக்கொண்டிருப்பார். சிலசமயம் இந்த மொத்தநாவலையே நான் வேறு ஒரு புத்தகத்தில் வாசித்துக்கொண்டிருப்பேன். நான் உணர்ந்த நிலையில் மிகச்சிறிய பகுதியே நீலத்தில் எழுதப்பட்டிருக்கிறது. அவ்வளவுதான் சாத்தியம்.

இப்போது நாவல் முடிந்துவிட்டது. இன்றுதான் எழுதிமுடித்தேன். ஆனால் வேகம் நிலைக்கவில்லை. ரயில் ஓடி விரைவழிவதுபோல மெல்லமெல்லத்தான் நிற்கும். எழுதி முடித்தகையோடு இணையத்தில் தேடி அஷ்டநாயிகா படங்களை எடுத்தேன். அவற்றை இணையத்தில் பதிவாக்கினேன். அதன்பின் பலமணிநேரம் பரதநாட்டியம் பார்த்தேன். மோகினியாட்டம் பார்த்தேன். நானறிந்த மோகினியாட்டக் கலைஞர் ஒருவரை அழைத்து நீண்டநேரம் பேசினேன்.

அதன்பின் நள்ளிரவு நீண்டபின் இந்த நீண்ட கட்டுரையை பலபகுதிகளாக எழுதிக்கொண்டிருக்கிறேன். இதுவும்கூட என்னை நான் மீட்டு எடுக்கும் முயற்சிதான். மீண்டுவரவேண்டும். இப்படி மொழியில் எழுதுவதுகூட இதையெல்லாம் புறவயப்படுத்தி இறுக்கமான யதார்த்தமாக ஆக்குவதுதான். இது என்னை மீட்டுக்கொண்டுவரும்.

[ 24- 09-2014/ இரவு 2.30 ]

வெண்முரசு நாவல் தொடர்பான அனைத்து விவாதங்களும்

வியாசமனம் மரபின்மைந்தன் முத்தையா முதற்கனல் பற்றி எழுதும் விமர்சனத் தொடர்

முந்தைய கட்டுரைஎன்.ராமதுரை
அடுத்த கட்டுரைஅந்தக்குழல்