நீலம் மலர்ந்த நாட்கள் 2

2

[தொடர்ச்சி- நீலம் மலர்ந்த நாட்கள் 1 ]

மதுரையில் இருந்து நான் மட்டும் சென்னை சென்றேன். விமானநிலையத்தில் அடுத்த அத்தியாயத்தை எழுதினேன். சென்னையில் கிரீன்பார்க் ஓட்டலில் என் பிரியத்துக்குரிய அறையே வேண்டுமென்று கேட்டு வாங்கிக்கொண்டேன்.

கிரீன்பார்க் ஒரு விசித்திரக்கலவை. கீழே அது மிகப்பரபரப்பான ஒரு நட்சத்திரவிடுதி. மதுக்கடைகள், சந்திப்பு மையங்கள். மூன்றாவது மாடிக்கு மேலே மிகமிக அமைதியான, அழகிய உலகம். நான் ஒரு மாதம் வரை கீழே என்ன நிகழ்கிறது என்று அறியாமலேயே மேலே தங்கியிருக்கிறேன். காலை உணவுக்கு வருவேன். கூடம் வழியாக காருக்குச் செல்வேன். மற்றபடி அதற்கும் எனக்கும் சம்பந்தமே இருப்பதில்லை.

கிரீன்பார்க்கின் கண்ணாடிச்சாளரத்தை ஒட்டிய மேஜை. அங்கிருந்து பல கதைகளை எழுதியிருக்கிறேன். என்னைச்சூழ்ந்து நன்கு பராமரிக்கப்பட்ட அறை. பார்த்துப்பார்த்து பேரழகாகிப்போன சுவர் ஓவியங்கள். அறையில் 22 டிகிரி குளிர் வரை கூட்டிவைத்துக் கொள்வதை நான் விரும்புவேன். நேர்த்தியான தட்டுகளில் உணவு. அழகிய கண்ணாடிப்பாத்திரங்களில் பானங்கள். கண்ணாடிச்சன்னல் வழியாகத் தெரிந்த நீலநீர்நிறைந்த நீச்சல்குளம். முழுமையான அமைதி. அழகை, நேர்த்தியை, சொகுசை அப்போது போல எப்போதுமே விரும்பியது இல்லை.

நீலத்தை எந்தச் சிக்கலுமில்லாமல் எழுதமுடிந்தது. அமர்ந்தாலே போதும் ஒரு வரி முளைக்கும். அந்த வரியின் சந்தமே மொழியை முன்னெடுத்துச்சென்றது. நான் வாசித்த குமரகுருபரர் பாடல்களும் திருப்புகழும் எனக்குள்ளே ஆழ்நினைவாக இருப்பதை அந்தச் சந்தம் மற்றும் சில சொற்கள் வழியாக அறிந்தேன். என்னை நானே கண்டுகொண்டேன்.

சற்று எழுதி அப்படியே எங்கோ நினைவில் தொலைந்து போவேன். அல்லது ஒரு குட்டித்தூக்கம் போட்டு கனவுக்குள் சென்று மீள்வேன். மீண்டும் எழுதுவேன். முடித்தபின் நான் எழுதிய வரிகளை பரவசத்துடன் வாசித்துக்கொண்டேன். மீண்டும் மீண்டும் வாசித்து சிறுசிறு மாற்றங்கள் செய்துகொண்டே இருந்தேன். ஒரு அத்தியாயம் விட்டு நான் விலக ஆறுமணிநேரம் வரை ஆகியது.

குற்றாலத்தில் புதிய எசக்கி சுற்றுலாவிடுதி, கோழிக்கோடு தாஜ் கேட்வே, எர்ணாகுளம் தாஜ் கேட்வே, தொடுபுழா மூன்லிட் என வசதியான விடுதிகளில் மாறிமாறி தங்கிக்கொண்டிருந்தேன். தொடர்ந்து இளமழை பெய்துகொண்டே இருந்தது நான் சென்ற இடமெங்கும். மழை ஈரம் நிறைந்த நிலம் மீது மேகத்தால் வடிகட்டப்பட்ட வெயில் பரவும் அழகு கேரளம் முழுக்க நிறைந்திருந்தது.

நீலம் எழுதிய அனுபவத்தை பதிவுசெய்யவேண்டுமெனத் தோன்றியதற்குக் காரணம் அதை எழுதிய இந்த ஒன்றரைமாதக் கால அனுபவத்துக்கு நிகராக என் இலக்கிய வாழ்க்கையில் இன்னொரு காலகட்டம் இருந்ததில்லை என்பதற்காகவே. உளவியல் ரீதியாக புனைவு நிகழும் விதத்தை ஆராய விரும்புபவர்களுக்கோ இலக்கிய விமர்சகர்களுக்கோ இந்தப் பதிவுகள் பயன்படக்கூடும்.

பெரும்பாலும் நீலத்தின் ஒரு அத்தியாயத்தை ஒருநாளில் எழுதினேன். அபூர்வமாக இரண்டு அத்தியாயங்கள். இளமையில் அம்மா அப்பாவின் மறைவுக்குப்பின் நிம்மதியற்று அலைந்த நாட்களில்தான் இதைப்போல மிகக்குறைவாகத் தூங்கியிருக்கிறேன். சராசரியாக ஒருநாளில் மூன்று மணிநேரம். இரவு இரண்டு மணிமுதல் அதிகாலை ஐந்துவரை. ஆனால் இந்நாட்களில் மிக அதிகமாக வேலைசெய்யவும் முடிந்திருக்கிறது. எப்போதும் களைப்பை உணரவில்லை.

நினைத்தால் வியப்பாக இருக்கிறது. சென்னையில் இருந்து கோழிக்கோடு சென்றேன். அங்கிருந்து மீண்டும் சென்னை. சென்னையில் இருந்து குற்றாலம். இரண்டுநாட்கள் கழித்து சென்னை திரும்பி கிறித்தவக்கல்லூரியில் உரை. மறுநாளே மீண்டும் குற்றாலம். அங்கிருந்து நாகர்கோயில் வந்து இரண்டுநாட்கள். பின்பு கோவையில் இரண்டுநாட்கள். அங்கிருந்து சென்னை. சென்னையில் இருந்து ஹைதராபாத். திரும்ப சென்னை. உடனே எர்ணாகுளம். அங்கிருந்து தொடுபுழா. அங்கிருந்து நாகர்கோயில். மீண்டும் சென்னை.

இந்நாட்களில் மூன்று வெவ்வேறு திரைப்படங்களுக்கான வேலைகள். மணிக்கணக்கான விவாதங்கள், எழுத்துப்பணி. கூடவே பல கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். எம்.டி.வாசுதேவன் நாயரைப்பற்றிய ஒரு நீளமான ஆய்வுக்கட்டுரையை முடித்தேன். ஐந்து நாவல்கள் வாசித்தேன். லட்சுமி சரவணக்குமாரின் கானகன், எஸ்.செந்தில்குமாரின் முறிமருந்து, ஸ்டெஃபானி மேயரின் ஹோஸ்ட் என்ற அறிவியல்புனைகதை, Shahriar Mandanipour எழுதிய Censoring an Iranian Love Story என்ற நாவல். என் இன்றைய மனநிலையில் எல்லாமே சிறப்பாக எழுதப்பட்டிருப்பதாக தோன்றுகிறது.

அத்துடன் மனோஜ் குறூர் எழுதிய நிலம்பூத்து மலர்ந்ந நாள் என்ற நாவலின் கைப்பிரதியை வாசித்து கருத்துரை கொடுத்தேன். முக்கியமானநாவல். அதை கே.வி.ஜெயஸ்ரீயிடம் மொழியாக்கம் செய்ய அனுப்பினேன். மலையாள நாவல் வெளிவரவுள்ளது.

இவ்வளவும் சாத்தியம்தான். தெரிசனம்கோப்பு மருத்துவர் மகாதேவன் ஒருமுறை இதைப்பற்றிச் சொன்னார். இது ஒருவகையில் பிறழ்வுநிலை. அதீதமான செயலூக்கம். இது bipolar disorder ரின் அடையாளம் என்றும் கணிசமான படைப்பாளிகளுக்கு உள்ள சிக்கல்தான் என்றும் சொன்னார். ஆனால் அதன் அடுத்தபடியாக வரும் கடும் மனச்சோர்வு, செயலின்மை எனக்கு இதுவரை நிகழவில்லை. ஆனால் அப்படி நிகழுமோ என்னும் அச்சம் இன்னும்கூட உள்ளது.

3

இந்நாட்களில் என் மனநிலையை நானே கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தேன். ஒன்று உணவின் மீதான தீராத விருப்பு. நாலைந்து கிலோ எடை அதிகமாகி பாதிச்சட்டைகள் போடமுடியாமலாகிவிட்டன. உணவின் சுவை அதிகரித்ததுபோல. இனிப்பு பற்றிய நினைவு இருந்தபடியே இருந்தது.

அத்துடன் வண்ணங்கள் மீதான பெரும் பரவசம். வழக்கமாக எனக்கு மண்நிறம், தவிட்டுநிறம் பிடிக்கும். ஆனால் இப்போது பளிச்சிடும் வண்ணங்களையே விழைந்தேன். இந்நாட்களில் பல்லாயிரம் ராஜஸ்தானி குற்றோவியங்களைப் பார்த்திருப்பேன். பூக்கள், பறவைகள், மரங்கள், மழை வெயில் என இயற்கையின் எல்லாவற்றிலும் பெரும் பற்று எழுந்தது. அதற்கேற்ப கணிசமான நாட்கள் குற்றாலத்திலும் தொடுபுழாவிலும் பசுமையின் மடியில், பூக்களின் நடுவில், இளமழையில் இருந்தேன்.

இதே மனநிலை பெண்கள் விஷயத்திலும் நீடிப்பதை உணர்ந்தேன். படைப்பூக்கநிலை என்பது எப்போதுமே மிகையான பாலுணர்வு நாட்டமும்தான். ஆனால் இது அதன் உச்சநிலை. எல்லா பெண்களும் அழகிகளாகத் தெரியும் நிலை. முதிராஇளமையில்தான் சிலவருடங்கள் அப்படி இருக்கும். பின் மனதில் என்னென்னவோ வந்து நிறைந்துவிடும்.

இதை ஓர் அபாரமான அழகனுபவமாக, பரவசமாகச் சொல்லலாம். நளினமான உடலசைவுகள் உள்ளத்தைச் சொடுக்கி அதிரச்செய்தன. விழிமுனைகள் சருமங்களின் ஒளி. ஒவ்வொன்றிலும் நிறைந்திருக்கும் முழுமை. பூக்களில் நிறைவில்லாத வடிவமே இல்லை. இளம்பெண்களிலும்தான் என்று பட்டது. அது அந்தரங்கத்தின் ஒரு கொண்டாட்டம். அழகுணர்ச்சியின் கொந்தளிப்பு மட்டும் அல்ல அது உயிரின் ஆதாரமான ஒரு களிப்பு.

அதை காமம் அல்ல, வேறு ஒன்று என்றெல்லாம் சொல்ல மாட்டேன். அது சுய ஏமாற்று. ஆனால் அது எளிமையான ‘விழைவு’ அல்ல. உண்மையிலேயே அழகுக்கான ஆவல்தான். ஏன் என்றால் எங்கும் வெல்லவோ கொள்ளவோ தோன்றவில்லை. கண் ஒன்றே போதும் என்ற நிலை. பெண்களை மிக அண்மையாக, உள்ளும் புறமும் தெரியும் என்பதுபோல உணரும் நிலை அது என படுகிறது. அவர்கள் மீதிருந்து பார்வையை விலக்கவேமுடியாது.

அத்துடன் கொஞ்சம் விபரீதமான, வித்தியாசமான ஒருவிஷயம். கனவுகளில் பெண் இடத்தில் பலமுறை என்னை உணர்ந்தேன். பெண்களின் அருகாமையில் கூட பெண்ணாக உணரும் ஒரு மனநிலை அபூர்வமாக வந்து மீண்டு எனக்கே அச்சத்தை அளித்தது. உடனடியாக அதை வலுக்கட்டாயமாகக் கலைத்துக்கொள்வேன். உண்மையில் மிகக்கடுமையான உழைப்பு வழியாக என் சமநிலையை நான் தக்கவைத்துக்கொண்டேன்.

Radha-Rani

தமிழ்நாட்டுப்பெண்களைப் பொறுத்தவரை அவர்களைப் பார்ப்பது கற்பழிப்புக்கு நிகரான குற்றம். மலையாளப்பெண்கள் கொஞ்சமேனும் புரிந்துகொள்ளக்கூடியவர்கள். ‘நாகரீகமிழந்து’ பெண்களைப் பார்க்கக்கூடாது என கண்களைக் கட்டுப்படுத்துவது எளியதல்ல. என்னை காமாந்தகாரன் என பலர் நினைத்திருக்கக் கூடும். அதிருஷ்டவசமான சினிமாவில் அழகிய பெண்களும் அதிகம். அவர்கள் தவறாக நினைப்பதுமில்லை.

அத்துடன் இசை. தினமும் இசைகேட்டுக்கொண்டிருந்தேன். வழக்கம்போல ஒரு சினிமாப்பாட்டில் ஆரம்பிக்கும். அங்கிருந்து விதவிதமான பாடல்கள் வழியாக இந்துஸ்தானி பாடல்களைச் சென்றடைவேன். உதாரணமாக மலைச்சாரலில் இளம்பூங்குயில் ஒருநாள். பொன்னல்ல பூவல்ல பெண்ணே ஒருநாள். அங்கிருந்து பித்துப்பிடித்து வெவ்வேறு இசைகள் வழியாக அலைந்து திரும்பிவந்தாலும் அதுதான் அந்த நாளின் பாடல்.

இசைஞானத்தில் நான் வியக்கும் ஆளுமையான சுகா [சுரேஷ் கண்ணன். தாயார் சன்னிதி உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்] பல நாட்கள் உடன் இருந்தார். நினைவில் எழுந்த பாடல்களை மாறிமாறிச் சொல்லிக் கொண்டிருப்பது அவருக்கும் எனக்குமான ஒரு இனிய வழக்கம். அருமையாகப் பாடுவார். மிகச்சிறந்த இளையராஜா ரசிகர். ராஜாவுக்கு நெருக்கமானவரும்கூட. ஒவ்வொருநாளும் பாடல்களில் திளைத்தோம்

இந்தமனநிலையில் சினிமாப்படப்பிடிப்பில் இருந்ததும் சிறப்பாகவே இருந்தது. சினிமாவின் சிறந்த அம்சமே படப்பிடிப்பு என்ற கொண்டாட்டம்தான். வேறெந்த தொழிலிடத்திலும் சினிமாப் படப்பிடிப்பில் உள்ள கொண்டாட்டம் இருக்கமுடியாது. ஏனென்றால் அங்கே நடிகர்கள் முதல் சிகையலங்காரக்காரர்கள் வரை அத்தனைபேரும் ஏதோ ஒருவகையில் கலைஞர்கள். நையாண்டி, சிரிப்பு, சினிமா, இசை என பேச்சு இருக்குமே ஒழிய ஒருபோதும் அரசு அலுவலகங்களைப்போன்ற அன்றாடப்பேச்சு, உலகியல் கவலைகள் சற்றும் இருக்காது.

இம்முறை கமல்ஹாசனுடன் நெடுநேரம் இருந்தேன். எனக்கு பல ஆண்டுகளாக தெரியுமென்றாலும் அவரை அணுகியறிந்தது இந்தப்படப்பிடிப்பின்போதுதான். அவரது விதவிதமான வாழ்க்கை அனுபவங்களை வயிற்றைப்பற்றிக்கொண்டு கண்ணில் நீர்வந்து எழுந்தோடும்படி நகைச்சுவையுடன் சொன்னார். ஒரே உடலில் நூற்றுக்கணக்கான மனிதர்கள் தோன்றி மறையும்படி நடித்தார். இந்த மனநிலையில் சிரித்துக்கொண்டே இருக்க விரும்பினேன்.

படப்பிடிப்பில் இளவரசு வந்திருந்தார். அருள்தாஸ் வந்திருந்தார். எல்லாமே உற்சாகமான சந்திப்புகள். அதிலும் தொடுபுழாவில் கலாபவன் மணியுடன் செலவிட்ட நாட்களும் சிரித்து களித்தவை.

இந்த நாட்கள் முழுக்க என்னை நான் பலவாகப் பகுத்துக்கொண்டிருந்தேன். வேலைகள். அன்றாடக் கொண்டாட்டங்கள். பயணங்கள் என வெளியே ஓர் உலகம். உள்ளே எப்போதுமே நீலத்தில்தான் இருந்தேன். படப்பிடிப்பின் நடுவேகூட திடீரென அமர்ந்து எழுதினேன். ஒவ்வொரு எண்ணத்தின் இடைவெளியிலும் அடியில் நீலத்தின் மொழி ஓடிக்கொண்டிருப்பதை உணரமுடிந்தது. அந்த மையம் ஒரு கணமேனும் கலையவில்லை.

வெண்முரசு தொடங்கியநாளில் இருந்தே நான் நாலைந்துநாட்கள் முன்னதாகவே எழுதிச்சென்றுகொண்டிருப்பேன். சிலசமயம் 15 அத்தியாயங்கள் கூட முன்னால் சென்றிகொண்டிருந்தேன். இது எனக்கு பயணங்களுக்கு வசதி. ஷண்முகவேல் வரையவும் வசதி.

ஆனால் நீலம் மட்டும் மிகமிக இக்கட்டான நிலையில் எழுதப்பட்டது. பல அத்தியாயங்களை அன்று காலை தொடங்கி மதியம் முடித்தேன். ஷண்முகவேல் மாலையில் வரையத்தொடங்கி நள்ளிரவு 12 மணிக்குத்தான் படம் அனுப்பி வைத்தார். ஸ்ரீனிவாசன் நள்ளிரவில் அமர்ந்து பிழை திருத்தினார். இந்த அளவுக்கு பதற்றம் இருந்ததே இல்லை.

காரணம் தொடக்கம் நிகழாமல் வீணான நாட்கள். ஆகஸ்ட் 10 ஆம் தேதி ஆரம்பிக்கத்தான் வேண்டுமா என்ற ஐயம் நண்பர்களுக்கிருந்தது. ஆனால் சொன்னதை மாற்றவேண்டாம் என்று தோன்றியது. இந்த அறிவிப்புகள், தேதிகள் எல்லாமே எனக்கே நான் போட்டுக்கொள்பவை. அவற்றை நான் மாற்ற ஆரம்பித்தால் எழுதப்போவதே இல்லை என்று நினைத்தேன்.

[மேலும்]

வெண்முரசு விவாதங்கள்

வியாசமனம் மரபின்மைந்தன் முத்தையா முதற்கனல் பற்றி எழுதும் விமர்சனத் தொடர்

முந்தைய கட்டுரைகலாய்ப்புகள்
அடுத்த கட்டுரைதேன்கடல்