நீலம் மலர்ந்த நாட்கள் -1

1

செப்டம்பர் 24, 2014 காலை பதினொரு மணிக்கு நீலம் எழுதிமுடித்தேன். நாவல் எப்போது முடியும் என நேற்று முன்தினமே தெரிந்திருந்தமையால் பெரிய தத்தளிப்பு ஏதும் இல்லை. நாவல்கள் முடியும்போது உருவாகும் தனிமையும் வெறுமையும் சற்றுநேரம் சூழ்ந்திருந்தன. சற்றுநேரம் இசை கேட்டேன். ஒரு நீண்ட நடை சென்றுவந்தேன். நண்பர் ஈரோடு கிருஷ்ணனிடமும் அஜிதனிடமும் நீண்டநேரம் பேசினேன்.

வண்ணக்கடல் திட்டமிட்டபோது அதற்குள் கிருஷ்ணனின் கதையும் வந்துவிடும் என எண்ணினேன். இரண்டாவது அத்தியாயத்தில் பிரம்மம் ஒரு கைக்குழந்தையாக தன் எச்சிலை தானே உணர்ந்து விழித்தெழுந்து லீலையில் ஈடுபடுவது அதையே குறிப்புணர்த்துகிறது.

ஆனால் நாலைந்து அத்தியாயங்களுக்குள்ளாகவே அதன் போக்கு தெரிந்துவிட்டது. ஒருபக்கம் கைவிடப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட மனிதர்களின் கதையின் ஒழுக்கு. மறுபக்கம் நிலக்காட்சிகள் வழியாக பல்வேறு மறைந்துபோன தத்துவங்களின் பரிணாமம். அது வளர்ந்துசென்று புறக்கணிக்கப்பட்ட ஓர் உலகைக் கண்டடைகிறது. ஒன்றை ஒன்று அர்த்தம்கொள்ளச்செய்யும் இரு சரடுகள். அதில் கண்ணன் இல்லை.

கண்ணனின் கதையை மட்டும் ஒரு தனிநாவலாக எழுதலாம் என முடிவெடுத்தேன். ஆனால் எப்படி எங்கே என தெளிவு வரவில்லை. உள்ளூர அலைந்துகொண்டிருந்தபோது நீலம் என்ற சொல் வந்தது. வண்ணக்கடலில் நீலம் என்பதே அந்த கண்டடைதல். தலைப்பை அறிவித்தபின்னரும் எதை எழுதுவது என்பது பிடிகிடைக்கவில்லை.

ஏனென்றால் மகாபாரதத்தில் உள்ள கிருஷ்ணன் வேறு நாம் அறிந்திருக்கும் நீலமணிவண்ணன் வேறு. மகாபாரதத்தின் மூலப்பகுதிகளில் இருந்து ஒப்பீடுகளின் வழியாக திரட்டப்படும் கிருஷ்ணனின் ஆளுமை ஞானியான அரசன் என்பது மட்டுமே. பல்வேறு பகுதிகள் முரண்பட்ட சித்திரத்தை அளிப்பதோடு இடைச்செருகல்களும் அதிகம். நாமறிந்த கண்ணனின் கதை பாகவதத்தில் இருந்து உருக்கொண்டது. பின்னர் பல கதைகளாக வளர்ந்தது.

பாகவதத்தின் மனநிலையே வேறு. அது பக்திக்காவியம். மகாபாரதத்தின் உணர்வுநிலை பக்தி அல்ல. மகாபாரத வரிசையில் பாகவதத்தை அடிப்படையாகக் கொண்ட நீலம் வருவது குழப்பத்தையும் ஒருமையின்மையையுமே உருவாக்கும். இதில் வரும் கண்ணனை பிறநாவல்களில் வரும் கிருஷ்ணனுடன் குழப்பிக்கொண்டால் புரிதல்பிழையே மிகும்.

ஆனால் நம் மரபிலேயே இந்த இரட்டைநிலை இருக்கிறதே என்று பிறகு பட்டது. பரம்பொருளே குழந்தையாகி வந்தது. ஆனால் அரசியல்சதிகளிலும் போரிலும் ஈடுபட்டது. இரண்டும் நம் மனதில் முரண்படாமல் இணைக்கப்பட்டுள்ளன. ஆகவே பிரச்சினை எழாது என முடிவெடுத்தேன். நீலத்தின் பேசுபொருள் மகாபாரத கிருஷ்ணனின் கதை அல்ல, பாகவதக் கண்ணனின் கதை

இன்னதென்று முடிவெடுக்காத நிலையிலேயே காஷ்மீர் பயணம். பயணத்தின் அனுபவவெள்ளத்தின் அடியில் நீலம் குறித்த நினைப்பு அசையாதபாறை போல அமர்ந்திருந்தது. பஞ்சாப் வந்தபோது ஈரோடு கிருஷ்ணனிடம் சொன்னேன். ‘ராதையின் பார்வையில் கிருஷ்ணனின் கதையைச் சொன்னால் என்ன?’ நல்ல திட்டம் என்று உற்சாகப்பட்டார்.

ஆனால் பாகவதத்தில் ராதை இல்லை. பாகவதம் எழுதப்பட்டு மேலும் ஐநூறாண்டுக்காலம் கழித்து உருவான கதாபாத்திரம் அவள். அவளுடைய இன்றைய சித்திரம் பெரும்பாலும் ஜெயதேவரின் பன்னிரண்டாம் நூற்றாண்டு இசைப்பாடல் தொகையான அஷ்டபதியில் இருந்து அழகியலையும் நிம்பார்க்கரின் உரைகளில் இருந்து தத்துவத்தையும் பெற்றுக்கொண்டு உருவாகி வந்தது.

இவ்விரண்டையும் எப்படி இணைப்பது என்ற வினா இருந்துகொண்டிருந்தது. என்னைப்பொறுத்தவரை ஒரு நாவலுக்குரிய மொழிநடைதான் அதை கொண்டுசெல்லும் விசை. அது தானாக உருவாகிவரும்வரை காத்திருக்கவேண்டும். நீலத்தின் மொழிநடையை என்னால் மனதில் உருவகிக்கவே முடியவில்லை. அது ஒரு தத்தளிப்பாகவே இருந்துகொண்டிருந்தது

2

காஷ்மீர் பயணம் முடிந்து திரும்பி நாலைந்து முறை எழுதமுயன்றேன். நாவல் உருவாகவில்லை. அறிவித்த நாள் நெருங்கிக்கொண்டிருந்தது. ஆகஸ்ட் 20. கடுமையான காய்ச்சல் ஆரம்பித்தது. இமயப்பயணத்தில் ஏற்பட்ட தொற்று என்று தோன்றியது. ஆகஸ்ட் 17 அன்று தமிழினி வசந்தகுமாரின் மகன் திருமணம். 16 ஆம் தேதியே நானும் அருண்மொழியும் சென்றுவிட்டோம். மதுரையில் நண்பர் கனராவங்கி ரவி ஏற்பாடு செய்த விடுதியில் தங்கியிருந்தோம். அன்றுமுழுக்க நிலைகொள்ளாத தன்மை. எல்லாமே தவறாக இருப்பதுபோல ஒரு எண்ணம். காய்ச்சல் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தது.

பலநாட்களாகவே தொடர்ந்து இரவில் சரியாகத் தூக்கமில்லாமல் இருந்தேன். காய்ச்சலுக்கான மாத்திரைகள் சற்று மயங்கச்செய்யும், மீண்டும் விழிப்புவரும். அன்று இரண்டு மாத்திரைகள் போட்டுக்கொண்டேன். அரைமணிநேரம் தூங்கியிருப்பேன். அற்புதமான ஒரு கனவு. நடைமுறையில் மாத்திரையின் விளைவாக காய்ச்சல் இறங்கியதன் விளைவு அது. ஆனால் கனவை புரிந்துகொள்ள அப்படி ஒரு நடைமுறைத்தளம் தேவையில்லை.

நான் ஒரு பெரிய ஜப்பானிய காமிக்ஸ் நூலை வாசிக்கிறேன். மிகப்பெரியது. அட்டையால் ஆன தாள்கள். ஜப்பானிய பாணி ஓவியங்கள். ஆனால் எல்லாமே ஒரு மூன்றுவயதான குழந்தை வரைந்தவை போலிருந்தன. பளிச்சிடும் மிட்டாய் வண்ணங்கள். கிளிப்பச்சை, ஆரஞ்சு, பொன்மஞ்சள். நடுவே ஒளிவிடும் ஊதா, நீலம். அதில் கண்ணனின் கதை.

என்ன கதை என சரியாக நினைவில்லை. ஆனால் கண்ணனுக்கு அஜிதன் சாயல் இருந்தது. சைதன்யாவின் சாயலும் இருந்தது. அத்துடன் சமகாலத்துச் சித்திரங்கள். செல்பேசி, கணிப்பொறி. கூடவே எங்கோ ஒரு எலக்டிரானிக் சிந்தஸைஸரின் ஓசையும் கேட்டுக்கொண்டே இருந்தது.

வெளியே யாரோ வரும் ஒலி. விழித்துக்கொள்ளாமலேயே அடுத்த கனவு. ஈரோடு கிருஷ்ணனும் நானும் ஒரு சிறிய கோயிலில் நின்றிருக்கிறோம். இமாலயப்பிரதேசத்து கோயில். நான் ஒருவரியைச் சொன்னேன். ’இது யார் எழுதியது சொல்லுங்கள் பார்க்கலாம்’ என்றேன். ‘இது ஆண்டாள் சார். நான்லாம் மனப்பாடமா சொல்வேன்’ என்றார். நான் சிரித்துக்கொண்டு ‘இல்லை, இது பெரியாழ்வார்’ என்று சொல்லி பையிலிருந்து ஒரு அச்சிட்ட தாளை எடுத்துக்காட்டினேன். அதில் அந்த வரி மட்டும் இருந்தது. கீழே பெரியாழ்வார் என்ற பெயர்.

விழித்துக்கொண்டேன். அந்தவரி துல்லியமாக நினைவில் இருந்தது. ‘உலகறிந்து எழுந்தவர் ஒருங்குணர்ந்து உய்ந்திடும் ஒரு பொருள் நீ’ எழுந்துசென்று கம்ப்யூட்டரை திறந்து அதை மட்டும் எழுதினேன். மேலே வரவில்லை. மீண்டும் எழுதினேன். இருபது முப்பதுமுறை திரும்பத்திரும்ப.

kalki

அது சேவலின் ஓசை என்று தோன்றியது கொக்கரக்க கொக்கரக்க கொக்க்ரக்கோ கோ என்ற ஒலி. ஆனால் நான் விரும்பியது குயிலின் ஒலி. இன்னும் சற்று நேரம் கழித்து அந்த வரியை எழுதினேன். ‘கானுறைவோய்! கடலுறைவோய்! வானுறைவோய்! வளியுறைவோய்! எங்குளாய் இலாதவனாய்?’ சந்தம் அமைந்துவிட்டது. அந்த அத்தியாயத்தை எழுதிமுடித்தேன். எழுத எழுத உடம்பு சிலிர்த்தது. நறுமணங்களை என்னால் உணரமுடிந்தது. நெஞ்சு விம்மி உதடுகள் துடித்தன. கடைசியில் கண்ணீர் வழிய தொடங்கியது

எவருமே இல்லாத அறையில் அமர்ந்து அழுதேன். பின்னிரவு மூன்றுமணிக்கு கிருஷ்ணனுக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன். எழுதிவிட்டேன் என்று. அதன்பின் தூங்க முடியவில்லை. அருண்மொழியை எழுப்பி எழுதிவிட்டேன் என்றேன். அவளுக்கு அரைத்தூக்கம் ‘சரி’ என்று திரும்பிக்கொண்டாள். அரங்கசாமிக்கும் ஏ.வி.மணிகண்டனுக்கும் குறுஞ்செய்தி அனுப்பினேன். அனைவரும் உறங்கிக்கொண்டிருந்தனர். நான் மட்டும் கண்ணனுடனும் ராதையுடனும் தனித்திருந்தேன்

[மேலும்]

வெண்முரசு நாவல் தொடர்பான அனைத்து விவாதங்களும்

முந்தைய கட்டுரைபெண் எனும் ராதை
அடுத்த கட்டுரைகலாய்ப்புகள்