பின்நவீனத்துவச் சிந்தனைகள்

தமிழில் எண்பதுகளின் இறுதியில் அமைப்புவாதமும் அதன்பின்னர் பின்அமைப்புவாதமும் முறையே தமிழவனாலும் நாகார்ச்சுனனாலும் அறிமுகமாயின. தமிழவன் ‘ஸ்டக்சுரலிசம்’ என்ற கனமான நூல் வழியாக அமைப்புவாதத்தை அமைப்பியல் என்ற பேரில் அறிமுகம் செய்தார். அந்நூலை பதிமூன்றுவருடம் கழித்து மிகுந்த உழைப்புடன் நான் வாசித்தபோது என்னை முதலில் தாக்கியதே அதுவரைக்கும் இருந்த எல்லா சிந்தனைகளையும் ‘பாடாவதியாக’ ஆக்கியபடி அவதரித்திருக்கும் புதிய மெய்ஞானம் அது என்றும் அதை முதன்முதலில் இந்தியாவுக்குக் கொண்டுவந்த அப்போஸ்தலர் தானே என்றும் தமிழவன் கொண்ட அதீதமான உற்சாகம்தான்.

அதன்பின் தமிழவனை மறுத்தபடி நாகார்ச்சுனன் கருத்தரங்கமேடைகளில் பின்அமைப்புவாதத்தை முன்வைத்தார். தெரிதா என்றபெயர் அடிபட ஆரம்பித்தது. அதுவரைக்கும் இலக்கியத்தைப்பற்றி பேசிய அத்தனைபேச்சுக்களும் அர்த்தமற்றவை என்ற சித்திரம் உருவாக்கப்பட்டது. ஒருவாச்கன் தன் அனுபவத்தைக் கூற முயன்றால் ‘அனுபவவாதம்’ என்று அது புறங்கையால் ஒதுக்கப்பட்டது. ஒரு இலக்கியபப்டைப்பின் நேர்த்தியைப்பற்றிச் சொல்ல வந்தால் அது ‘வடிவவாதம்’ என்று எள்ளப்பட்டது. படைப்பின் தரிசனத்தைப்பற்றிப் பேசுபவர்கள் ‘உள்ளொளிக்காரர்கள்’ என்று இகழப்பட்டார்கள். இது ஒரு நல்ல இலக்கியப்படைப்பு என்று சொல்லவந்த வாசகனை ‘தரப்படுத்தாதீர்கள்’ என்று விலக்கினார்கள்

அதாவது ஒரு மிகப்பெரிய நிராகரிப்பாகவே இந்தச் சிந்தனைகள் முன்வைக்கப்பட்டன.  ஆனால் அவ்வாறு நிராகரித்தபின்னர் அவர்கள்
முன்வைத்த ஆய்வுகள் ஏற்கனவே தி.க.சிவசங்கரன் போன்றவர்கள் செய்துவந்த இலக்கிய ஆய்வுகளின் தரத்தில் இருந்தன. அதாவது மொழியைக் கெல்லி அரசியலைக் கண்டுபிடித்தல். ஏற்கனவே முடிவுசெய்த நம்மவரா அல்லவரா என்ற அடிப்படையில் அந்த தோண்டுதலைச் செய்தல். எளிமையான இட்துசாரி அரசியல்சரிகளை இலக்கியத்துக்கு நிபந்தனையாக ஆக்குதல்.

எல்லாமே எளிமைப்படுத்தப்பட்டன. தி.ஜானகிராமனின் பிரச்சினை அவர் சீராக சுய இன்பம் செய்துகொள்வதில்லை என்பதே என்று கண்டுபிடிக்கப்பட்டது. ‘ஒரு சிவத்த பாப்பாத்திய கூட்டி விட்டிருந்தா மௌனி எழுதியே இருக்கமாட்டார்’ என்று சொல்லபப்ட்டது. எழுத்தாளன் இறந்துவிட்டான் என்று சொல்லி மேற்கொண்டு எழுத்தாளனைப்பற்றி உலகம் பேசப்போவதேயில்லை என்று அறிவித்தார்கள். ‘சுந்தரராமசாமி எழுதுவதும் சரோஜாதேவி எழுதுவதும் ஒன்றுதான்’ என்றார்கள். இலக்கியத்தில் இனிமேல் அழகியலே இல்லை அரசியல் மட்டும்தான் என்றார்கள். எல்லாமே இலக்கியம், ரயில்வே அட்டவணையும்கூட என்றார்கள். குடும்பத்தை தகர்க்கவேண்டும், ஓரினச்சேர்க்கையை கொண்டாடவேண்டும் அப்போதுதான் இலக்கியம் வளரும் என்றார்கள்.இலக்கியத்தில் பாலியலை அப்பட்டமாக எழுதினால் மத்திய அரசு கவிழும் என்றார்கள். அப்படி ஒர் ஆயிரம் பொன்மொழிகள்.

ஆகவே உண்மையான படைப்பியக்கத்தில் ஈடுபட்டு வந்த எழுத்தாளர்கள் அனைவருக்குமே அந்த விவாதங்கள் ஆழமான அவநம்பிக்கையை அளித்தன. அன்று [இன்றும்] தீவிரமாக எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்கள் தங்களுக்குள் சந்திக்கும்போது நக்கலாகவே அந்த அலையைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள்.ஆனால் படைப்பூக்கமே இல்லாமல் வெறும் வம்புகளினாலேயே இலக்கியத்தில் நீடித்திருந்த பெரும்கும்பலுக்கு அவர்களின் காலம் விடிந்துவிட்டது என்ற உற்சாகம் எழுந்தது. கட்டுடைப்பு, சொல்லாடல்,பிரதி, மறுவாசிப்பு, அதிகாரம், நுண்ணரசியல் போன்ற சில சொற்களைக் கற்றுக்கொண்டால் எதுவும் சாத்தியமே என்ற தைரியம் பிறந்தது. கருத்தரங்குகளில் சீரிய இலக்கியவாதிகள் நக்கல்செய்யப்பட்டு பின்வாங்க அரைவேக்காடுகள் கொடிநாட்டினார்கள்.

அதன்பின் கிட்டத்தட்ட பத்தாண்டுகள் தமிழிலக்கியத்தில் ஒரு சொற்குப்பைக்காலம் எனலாம். ஏற்கனவே இலக்கியவாதிகளையும் இலக்கிய ஆக்கங்களையும் மனம்போனபோக்கில் புரிந்துகொண்டு விளக்கி வசைபாடி வந்த அரசியல் வம்பாளர்கள் அதற்கு கட்டுடைப்பு என்று பெயர் சூட்டிக்கொண்டார்கள். ஒருசாதாரண இலக்கிய ஆக்கத்தின் அர்த்தங்களை உள்வாங்க முடியாதவர்கள் நுண்ணரசியலை நோண்ட ஆரம்பித்தார்கள். மேலைநாட்டுச் சூழலில் ஓர் சிந்தனைக்கொந்தளிப்பாக உருவான கோட்பாடுகள் அபத்தமான சில்லறைச் சொற்றொடர்களாக தமிழில் உருவம் கொண்டன. உண்மையில் இலக்கிய ஆக்கத்தில் ஒரு தயக்கமும் சோர்வும் நிலவிய காலம் இது என்று சொல்லலாம். இலக்கியவாதி எதை எழுதவேண்டும் என்று விமரிசகர்கள் சொல்ல ஆரம்பித்த அபத்தமான காலகட்டம். யதார்த்தவாதம் செத்துவிட்டது ஆகையால் மனிதர்கள் கால்களால் நடக்கும் கதைகளுக்கு இனி உலக இலக்கியத்தில் இடமே இல்லை என்று சொன்னார்கள். இளம் எழுத்தாளர்கள் விமரிசகர்களின் ஆலோசனைப்படி மாந்த்ரீக யதார்த்தங்களை கக்க ஆரம்பித்தார்கள். அந்த பெயர்களே இன்று எங்கே என்று தெரியவில்லை.

தமிழவன்

நான் அன்று விஷ்ணுபுரம் எழுதிக்கொண்டிருந்தேன். எனக்கு சிந்தனை என்றாலே ஆயிரம் வருடத்து தொன்மை கொண்டிருக்க வேண்டும் என்ற பிரமை இருந்தது. விஷ்ணுபுரம் ஓர் எழுத்தாளனாக எனக்கு அபாரமான தன்னம்பிக்கையை அளித்த ஆக்கம். அது அன்றுவரை பேசப்பட்ட அத்தனை கோட்பாடுகளையும் பெருமழைவெள்ளம் குப்பைகளை அடித்துச்செல்வது போல கொண்டுசென்று களத்தை தூய்மைசெய்தது. அது சந்தித்த எதிர்ப்புகளுக்கும் உண்மையான காரணம் அதுவே. இலக்கியம் இலக்கியப்படைப்பாலேயே தீர்மானிக்கப்படுகிறது என்று நிலைநாட்டிய நாவல் அது. அதற்கான வாசகர்களை அதுவே கண்டுகொண்டது, அதற்கான சொற்களனை அதுவே உருவாக்கிக் கொண்டது. இந்த மாற்றத்தையே முற்போக்கு விவாதங்கள் இருந்த சூழலை விஷ்ணுபுரம் இந்துத்துவத்தால் அழித்தது என்ற
கதை வழியாக இன்று பிலாக்காணம் வைக்கிறார்கள். அதைத்தொடர்ந்து தலித் இலக்கியவாதிகள் அப்பட்டமான யதார்த்தவாதம் மூலம் அந்த அலையை இடம்தெரியாமலாக்கினார்கள்.

நான் இந்த நவீனச்சிந்தனைகளுக்குள் நுழையும்போது அவை ஏற்கனவே தமிழில் காலாவதியாக ஆரம்பித்திருந்தன. மலையாளச் சிந்தனையாளர் கெ.சச்சிதானந்தன், கன்னட கோட்பாட்டாளர் டி.ஆர்.நாகராஜ் ஆகியோருடன் இருந்த நேரடியான தொடர்புகள் எனக்கு வழிகாட்டியாக அமைந்தன. பிறரை விட பலமடங்கு சிரமத்துடன் மட்டுமே என்னால் உள்ளே செல்ல முடிந்தது. ஆனால் எனக்கு ஒரு சாதகமான அம்சம் இருந்தது, நான் கீழைச்சிந்தனைகளை ஓரளவு கற்றிருந்தேன். மேலைநாட்டு சிந்தனை மரபையும் சிலவருடங்கள் கற்றிருந்தேன். அமைப்புவாதத்துடனும் பின்அமைப்புவாதத்துடனும் எனக்கு உருவான அறிமுகம் உற்சாகமூட்டுவதாகவே அமைந்தது.

வாசிக்க ஆரம்பித்த காலத்தில் எனக்கு தமிழில் அச்சிந்தனைகள் முன்வைக்கப்பட்ட, பேசப்பட்ட முறை குறித்து சொல்லொணாத கசப்பும் கோபமும்தான் ஏற்பட்டன. மிகத் தீவிரமான படைப்பூக்கம் கொண்ட ஒரு சிந்தனைக்காலகட்டம் எப்படி படைப்பியக்கத்திற்கே எதிரானதாக முன்வைக்கப்பட்டது என்ற வியப்பு. நவீனத்துவத்தின் கோட்பாட்டுவாதத்துக்கு எதிராக எழுந்த ஓர் எதிர்ப்பியக்கம் எப்படி கேவலமான கோட்பாட்டுவாதமாக இங்கே மாறியது என்ற அதிர்ச்சி. அனைத்துக்கும் மேலாக  இலக்கியப்படைப்புகளை மிக விரிவானவையாக மாற்றும் வாசிப்பியக்கமான பின்அமைப்பியல் இலக்கியப்படைப்புகளை எளிமையான கட்டுமானங்களாக ஆக்கி ‘கொண்டுகூட்டி பொருள்கொள்ளும்’ விளையாட்டாக ‘இவ்வளவுதாண்டா இலக்கியம்’ என்ற பாவனையுடன் முன்வைக்கப்பட்டது என்ற அருவருப்பு.

ரோலான் பார்த் எழுதிய ‘ஆசிரியனின் மரணம்’ என்ற கட்டுரையை நான் முதன்முதலாக வாசித்தபோது ஏற்பட்ட அதிர்ச்சி எனக்கு இன்றும் நினைவிருக்கிறது. அவர் எழுத்தாளன் என்பவனுக்கு இனிமேல் இடமே இல்லை என்று சொல்லிவிட்டார் என்று எனக்கு சொல்லபப்ட்டிருந்தது.  அக்கட்டுரையை நானே மொழியாக்கம் செய்து வெளியிட்டேன். பார்த் எழுத்தாளன் இல்லாமலாவதைப் பற்றி பேசவில்லை. ஒரு தனிமனிதனாக அவன் இடத்தை நிராகரித்து ஒரு மாபெரும் பிரதிநிதித்துவக் குரலாக அவனை ஆக்குகிறார். அதாவது இன்னும்பெரிய ஒரு எழுத்தாள இருப்பை அவர் உருவகிக்கிறார். அந்த தலைப்பை மட்டுமே அறிந்துகொண்டு ‘சுந்தரராமசாமியும் சரோஜாதேவியும் சமமே’ என்று நம்மவர்கள் கட்டுரைகளை எழுதித்தள்ளிவிட்டார்கள்.

நாகார்ஜுனன்

தமிழில் அமைப்புவாதம் பேசப்பட்டபோது மொழியியலின் அடிப்படைகள் எங்குமே குறிப்பிடப்படவில்லை என்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். சீராக மேலைநாட்டு அறிவுச்சூழலில் மொழிசார்ந்த தத்துவநோக்கு உருவாகி வந்திருக்கிறது. ரஸ்ஸல், விட்கென்ஸ்டீன். அதன்பின்னர் ருஷ்ய உருவவாதம். அதன்பின்னர் பிற்கால உருவவாதங்கள். அதன் பின்னரே பார்த்தின் அமைப்புவாதம் பேசப்பட்டிருக்க வேண்டும். அவற்றுக்கு இடையேயான உரையாடலும் முரண்பாடுகளும் பேசப்பட்டிருக்க வேண்டும். ஆனால் எந்த முறைமையும் இல்லாமல் சில நூல்களில் இருந்து எடுத்த சில பத்திகளாக இங்கே அச்சிந்தனைகள் அறிமுகம் செய்யப்பட்டன. ரஸ்ஸலின் மொழி குறித்த சிந்தனைகளையும் மொழியியலின் அடிப்படைகளையும் மேலும் பல வருடங்கள் கழித்து சொல் புதிதில் மொழியாக்கம் செய்து போட்டோம். அமைப்புவாதமே காணாமல்போன பிறகு!

பிரேமுடன் நேர் உறவு உருவாகி விவாதிக்க ஆரம்பித்தபோது ஒரு படைப்பாளியாக அமைப்புவாத விவாதங்கள் மீதான கசப்புக்கான நியாயம் இருந்தாலும் அதை இன்னமும் வரலாற்றுரீதியாக பார்க்கவேண்டும் என்று பட்டது. தமிழவன் போல தமிழில் புதியசிந்தனைகளை கொண்டுவருவதற்கான ஆர்வத்தை முன்னெடுத்த முன்னோடிகளைக் குறைசொல்வதில் பொருளில்லை. அவர்கள் செய்த பிழைகள் இரண்டு. ஒன்று, மேலைநாட்டு சிந்தனைமரபின் எந்த வரலாற்றுப்புள்ளியில் இந்த புதிய அலை கிளம்புகிறது என அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் எவருமே தத்துவம் கற்றவர்கள் அல்ல. அவர்கள் தமிழாசிரியர்கள். ஆகவே புதிய சிந்தனை அவர்களுக்கு மிதமிஞ்சிய உற்சாகத்தை அளித்தது இயல்பே. இரண்டாவதாக, தமிழ்ச்சூழலில் இந்தியமரபுச் சிந்தனைகளைப்பற்றி ஆழமான ஓர் உதாசீனமும் அதன் விளைவான பூரணமான அறியாமையும் உண்டு. ஆகவே எந்த புதிய சிந்தனையைக் கண்டும் பிரமிப்பு கொள்ளும் இடத்தில் அவர்கள் இருந்தார்கள்.

அதைவிட முக்கியமாக அவர்கள் செய்த பிழை ஒன்றுண்டு. அதை அவர்களின் எளிய மனநிலைக்கு உதாரணமாகவே சொல்லவேண்டும். அவர்கள் தங்கள் அளவில் கடும் உழைப்புடனும் கவனத்துடனும் முன்வைத்த சிந்தனைகளை புதிய மோஸ்தருக்கு அவசரமாக மாறும் விடலைகள் போல ஒரு பெரும் கும்பல் ஏற்றுக்கொண்டு தாங்கள் புரிந்துகொண்டதுபோலப் பேச ஆரம்பித்தபோது அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் இவர்கள் பின்னால்சென்றுவிட்டார்கள். இதை பிரேம் மிகவும் வருந்தி பலமுறை சொல்லியிருக்கிறார். ஒருகட்டத்தில் அவர் என்ன சொல்கிறார் என்ற புரிதலே இல்லாமல் மட்டையடி அடித்த அவரது முதிராமனத்து தோழரின் அபத்தமான குரல் வழியாகவே அவரை மற்றவர்கள் அறிய நேரிட்டது. ஆகவே பிரேமிடம் அவரது கோட்பாடுகளை அவர் தமிழகம் அறிந்த செவ்வியல்நூல்களில் போட்டுப்பார்த்து கட்டுரைகள் எழுதித்தரச்சொல்லி வாங்கி சொல்புதிதில் வெளியிட்டோம். ‘சிலப்பதிகாரம்,மணிமேகலை பெண்மையின் நாடகம்’ என்ற அவரது கட்டுரை அவரது ஆகச்சிறந்த கட்டுரை என நான் நினைக்கிறேன்.

தமிழவன்,நாகார்ச்சுனன்,பிரேம் ஆகியோரின் பங்களிப்பைப்பற்றி இப்போது குழப்பமாகவே சிந்திக்க முடிகிறது. நான் இப்போது எழுதும் இந்த மொழியையும் கலைச்சொற்களையும் அவர்கள் உருவாக்கிய அலை வழியாகவே அடைந்திருக்கிறேன். அவர்கள் படைப்பை ஆராய்வதில் எனக்கு எந்த புதிய சாத்தியத்தையும் காட்டவில்லை, அவர்களில் பிரேம் மட்டுமே இலக்கிய நுண்ணுணர்வு கொண்டவர். மற்ற  இருவருக்கும் இலக்கியம் ஏதும் புரியும் என்பதற்கு இதுவரை ஆதாரமேதும் இல்லை. மொழிச்சிக்கல்களை நீவுவதைத்தவிர ஒருபாவமும் அறியாதவர்கள். ஆனால் இலக்கியவிவாதத்துக்கான தர்க்கக் கட்டுமானத்தை உருவாக்குவதில் பங்களிப்பாற்றியிருக்கிறார்கள் என்பது என் தரப்பைச் சேர்ந்தவர்கள் என்று நான் நம்பும் முந்தைய தலைமுறை விமரிசகர்களான சுந்தர ராமசாமி போன்றவர்களிடம் என் நடையை ஒப்பிடும்போது தெரியவருகிறது. இலக்கியத்தின் நுண்மையை தர்க்கபூர்வமாக ஆக்குவதில் அவர்களுக்கு ஒரு பங்களிப்பிருக்கிறது என்று சொல்லலாம்.

பின்நவீனத்துவச் சிந்தனைகளின் ஆதாரக் கோட்பாடுகளான அமைப்புவாதம், பின்அமைப்புவாதம் ஆகியவற்றை அறிந்துகொள்வதற்கு தமிழில் அதிக நூல்கள் இல்லை. ஏற்கனவே சொன்னதுபோல கணிசமான நூல்கள் புரிந்துகொள்ளாமல் எழுதப்பட்டவை. ஆகவே அவை வளர்த்தல்களாகவும் சிக்கல்களாகவும்தான் உள்ளன. அவை புரிதல்களைவிடவும் குழப்பங்களையே அதிகம் அளிப்பவை.

இந்நூல்களின் முக்கியமான சிக்கல்கள் என எனக்குப் படுபவை நான்கு .

1. பெரும்பாலும் இவற்றைப் பேசியவர்கள் தங்களை முன்னிறுத்தவே அவற்றை பேசுகிறார்கள். ஆகவே எல்லாவற்றையும் அதீதமான சிக்கல்களாக ஆக்கி தங்களை அவற்றை உள்வாங்கிய சூப்பர் அறிவுஜீவிகளாகக் காட்டும் தோரணையை அந்நூல்களில் காணலாம்.
2. மேலைச்சிந்தனை மரபோ, அமைப்புவாதச் சிந்தனைகள் உருவான பரிணாமமோ தெரியாமல் உதிரிச் சிந்தனைகளாகவே அவற்றை படித்துக்கொண்டு மேற்கோள்களாகவும் பெயருதிர்ப்பாகவும் முன்வைத்தல்
3. வாசித்த ஆங்கிலச் சொற்றொடர்களை உள்வாங்கி தன்னுடைய சொந்த தமிழ்ச்சொற்றொடர்களாக ஆக்கிக் கொள்ளாமல் அப்படியே தமிழில் சொல்லிவைப்பது
4. கலைச்சொல்லாக்கத்தை மனம்போனபடிச் செய்வது. ஒரு விஷயத்துக்கு ஏற்கனவே கலைச்சொல் இருந்தால் அதைப் பயன்படுத்தவேண்டும். ஒரே கலைச்சொல்லையே சீராக பயன்படுத்த வேண்டும் . இவர்கள் இரண்டையும் செய்வதில்லை. ஆளுக்கொரு கலைச்சொ, இடத்திற்கொரு கலைச்சொல். ஆகவே சொற்குழப்பங்கள்.

தமிழிலேயே இச்சிந்தனைகளைக் கற்பதற்கு மிகச்சிறந்த நூல் என்றால் இப்போதைக்கு அது கோபிசந்த் நாரங் எழுதி சாகித்ய அக்காதமி வெளியீடாக வந்திருக்கும் ‘அமைப்புவாதம் பின் அமைப்பியல் மற்றும் கீழைக்காவிய இயல் ‘ என்ற நூலாகும். சற்றுப்பெரிய இந்த நூல் மிக முக்கியமான ஒரு கையேடு. ஆனால் ஒரு மாபெரும் சிக்கல் உள்ளது. இதை மொழியாக்கம் செய்தவருக்கு [எச்.பாலசுப்ரமணியம்] தமிழில் இந்த தளத்தில் ஏற்கனவே பேசப்பட்ட எதுவுமே தெரியவில்லை. ஆகவே ஏராளமான தெரிந்த கலைச் சொற்களுக்குப் பதிலாக புதிய சொற்களை போட்டு மொழியாக்கம் செய்திருக்கிறார். அச்சொற்கள் அதிகமும் கல்வித்துறை சார்ந்தவை. ஆகவே ஒரு வாசகன் கொஞ்சம் பொறுமையாக, சொற்களை கவனித்து வாசிப்பதனூடாகவே இந்நூலுக்குள் செல்லமுடியும்.
*

நான் 1992ல் டெல்லியில் சாகித்ய அக்காதமியின் ஒரு கருத்தரங்குக்குச் சென்றிருந்தபோது கோபிசந்த் நாரங்கை நேரில்சந்தித்தேன். அந்தக் கருத்தரங்குக்கு இந்திய சிந்தனைத்தளத்தின் பல பெரிய தலைகள் வந்திருந்தன. குஜராத்தியின் கணேஷ் டெவி, ஒரிஸாவின் சச்சிதானந்த மொகந்தி, கன்னடத்தின் டி.ஆர்.நாகராஜ். இவர்களுடன் கோபிசந்த் நாரங்கும் இருந்தார். சாகித்ய அக்காதமி தலைவர் சச்சிதானந்தன். நாரங் நானிருந்த அதே இந்தியா இண்டர்நேஷனல் சென்டர் கட்டிடத்தில்தான் தங்கியிருந்தார். நான் அவரிடம் இளவயதுக்கே உண்டான கூச்சத்துடன் ஓரிரு சொற்கள் பேசினேன்.

மாலையில் புல்வெளியில் அவர்கள் பேசுவதை இரண்டுநாள் நான் கேட்டுக்கொண்டிருந்தேன். இந்த மேலைச்சிந்தனைகளைப்பற்றி எனக்கிருந்த ஆழமான அவநம்பிக்கை அப்போதுதான் களையப்பட்டது. அழகியல்நிகழ்வை தர்க்கபூர்வமாக புரிந்துகொள்வதும், விளக்குவதும் வரையறைசெய்வதும் என்றுமே அறிவுத்தளத்தின் பெரும் சவாலாகவே இருந்துள்ளது. தொல்காப்பியமாகட்டும் வேதங்களின் சந்தஸ்சாஸ்திரமாகட்டும் அதைத்தான் செய்து வருகின்றன. அழகியல் என்பது மானுட உளவியலுடன், பண்பாட்டுடன் கலந்தது. ஒவ்வொரு கணமும் மாறிக்கொண்டே இருப்பது. ஆகவே அதை ஒருபோதும் முழுக்க வரையறை செய்துவிடமுடியாது. ஆனால் அதைப் பின்தொடர்வதென்பது மனிதமனத்தையும் பண்பாட்டையும் புரிந்துகொள்வதற்கான ஆகச்சிறந்த வழியாகும். ஒருபோதும் முடிவடையாத ஒரு பயணம் அது.

நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இலக்கியப்படைப்பை வாசிக்கும்போது மூன்று விஷயங்களைச் செய்கிறோம். ஒன்று அதை நாம் வாசித்த முந்தைய படைப்புகளுடன் ஒப்பிட்டு மதிப்பிட்டு ஒரு இடத்தை அளிக்கிறோம். இரண்டு, அதை நாமறிந்த வாழ்க்கையுடன் தொடர்புபடுத்தி விரிவாக்கம் செய்துகொள்கிறோம் மூன்று, இவ்விரு செயல்பாடுகளின் விளைவாக நம் வரையில் அந்நூலை குறுக்கி தொகுத்து ஒரு வரையறையை அளித்துக்கொள்கிறோம். அதன்பின் அந்த வரையறையில் இருந்தே அந்நூலை விரிவாக்கம் செய்துகொள்கிறோம்.

இலக்கிய திறனாய்வுசெய்வதும் அதையே. அந்தச் செயல்பாடுகளை இன்னும் முறையான வாசிப்புடன் இன்னமும் புறவயமான விதிகளுடனும் தர்க்கத்துடனும் செய்யும்போது அது இலக்கியத்திறனாய்வாகிறது. ஆனால் எல்லா தரப்படுத்தல்களும் மதிப்பீடுகளும் வரையறைகளும் தற்காலிகமானவையே என்ற தெளிவு விமரிசகனுக்கு இருக்க வேண்டும். அவை இலக்கியம் மீதான ஒரு மனிதனின் வாசிப்புகள் மட்டுமே. அத்தகைய பல வாசிப்புகள் சாத்தியம். அனைத்து வாசிப்புகளின் கூட்டாகவே அந்த இலக்கியம் சமூகத்தால் வாசிக்கப்படுகிறது. எல்லாமே சரிதான், எல்லாமே அரைகுறையானவையும்கூட. இந்த எல்லைக்குள் நின்றுகொண்டு அணுகினால் இலக்கியவிமரிசனம் என்பது இலக்கியம் குறித்த புரிதலை உருவாக்கும் ஒரு பயிற்சி என்ற முறையில் உதவிகரமானது என்று காணலாம். ஆகவே ஒருபோதும் இலக்கியவிமரிசனம் இலக்கியத்த அறுதியிட்டு கூறமுடியாது. வழிநடத்த முடியாது. ஆலோசனைகூறவோ திசைகளைச் சுட்டிக்காட்டவோ முடியாது.

பிரேம்

இலக்கிய விமரிசனத்தின் இந்த எல்லைகள் மீறப்பட்ட காலம் எது என்று பார்த்தால் இலக்கியவிமரிசனம் அரசியலதிகாரத்தின் குரலாக ஆன சோஷலிசக் காலகட்டத்தையே சுட்டிக்காட்ட முடியும். ‘சோஷலிச யதார்த்தவாதம்’ என்ற கருதுகோளே இலக்கியவாதிகளால் இலக்கியம் மூலம் உருவாக்கப்பட்டது அல்ல. இலக்கியவிமரிசனம் செய்த அரசியலதிகாரிகளால் வகுத்து இலக்கியவாதிகளுக்கு அளிக்கப்பட்டது. நேரடியாக கம்யூனிஸ்டு ஆட்சி இருந்த பகுதிகளில் கமிசார்கள் இலக்கிய வழிகாட்டுதல்களுடன் களத்தில் இருந்தார்கள். எழுத்துக்களை அவர்கள் அளந்து மதிப்பிட்டு அனுமதியளித்தார்கள் அல்லது நிராகரித்தார்கள்.  கம்யூனிசம்  வலுவான கருத்துத்தரப்பாக  மட்டும் இருந்த இடங்களில் உக்கிரமான பிரச்சாரம் மற்றும் கெடுபிடிகள் மூலம் எழுத்தின்மீது விமரிசனத்தின் பிடியை இறுக்கினார்கள். அரசியல் கோட்பாடுகளால் வழிநடத்தப்படுவதாகவே இலக்கியம் இருக்கமுடியும் என்றும் அரசியல் செயல்திட்டத்தின் ஒரு பகுதியாகவே அது பங்களிப்பாற்றமுடியும் என்றும் சொன்னார்கள்.

அதற்கு எதிரான ஒரு தரப்பாக இலக்கியவாதிகள் இலக்கியத்தின் அகவயத்தன்மைக்கு அதீத அழுத்தம் அளித்தார்கள்.  இலக்கியவாதியை கட்டற்ற தனிமனிதனாக உருவகித்துக்கொண்டார்கள். அவனுடைய அழகியல் தாகம், ஆன்மீகமான தேடல் ஆகியவற்றின் விளைவே இலக்கி யம் என வரையறை செய்தார்கள். முழுக்கமுழுக்க அவனுடைய அகச்சுதந்திரமே இலக்கியத்துக்கான  அடித்தளம் என்றார்கள். முந்தைய கருத்துத்தரப்பு மிகமிஞ்சிய புறவயத்தன்மையை கொண்டிருந்தமையாலேயே இது மிதமிஞ்சி அகவயத் தன்மை கொண்டிருந்தது. முந்தையது மிதமிஞ்சிய அரசியல்தன்மை கொண்டிருந்ததனாலே இது மிதமிஞ்சிய மீபொருண்மைத்தன்மை கொண்டிருந்தது. முந்தையது தனிமனிதனை மறுத்து சமூகத்தை மட்டுமே முன்னிறுத்தியதனாலேயே இது சமூகத்தை மறுத்து தனிமனிதனை முன்னிறுத்தியது.

இத்தைகய சூழலில்தான் மேலைநாடுகளில் மொழிசார்ந்த சிந்தனைப்போக்கு உருவாகி வந்தது. ஒருபக்கம் சிந்தனைகளையும் இலக்கியத்தையும்  உள்ளடக்கம் சார்ந்து எளிமைப்படுத்தும் போக்குக்கு எதிரானதாக அது இருந்தது. வெளிப்பாட்டை கவனித்து வெளிப்பாட்டே உள்ளடக்கம் என்று வாதிட்டது. மறுபக்கம் இலக்கியம் போன்றவற்றை அதிதூய ஆன்மவெளிப்பாடு என்றவர்களை நிராகரித்து அது மொழி என்ற புறவயமான அமைப்புக்குள் நிகழும் ஒரு நிகழ்வே என்று வாதிட்டது. அதாவது இலக்கியத்தின் நுண்தளங்களை நிராகரித்து அதை அரசியல்கருத்து மட்டுமாகக் குறுக்கும் போக்குக்கு அது இலக்கியம் என்ற எழுத்து-வாசிப்புச் செயல்பாட்டின் நுண்மையான நிகழ்வை விளக்கிக் காட்டியது. இலக்கியத்தின் நுண்மையை அதீதமாக மாயப்படுத்தியவர்களுக்கு அதை மொழி என்ற அமைப்பைவைத்து புறவயமாகப் பேசமுடியும் என்று காட்டியது.

கோபிசந்த் நாரங்கின் நூல் அமைப்புவாதமும் பின்அமைப்புவாதமும்  உலகளாவிய இலக்கிய விவாதக்களத்தில் என்ன பங்களிப்பை ஆற்றமுடியும் என்றும், இந்தியச்சூழலில் இதன் இடமென்ன என்றும் விரிவாக அறியவிரும்புகிறவர்களுக்கு உதவியான நூல். சம்ஸ்கிருதம், இந்தி, உருது மொழி அறிஞரான கோபிசந்த் நாரங்க்  முக்கியமாக உருது இலக்கியவாதியாகவே அறியப்படுகிறார். 1931ல் பிறந்த நாரங்க் டெல்லி பல்கலைபேராசிரியராக இருந்து ஓய்வுபெற்றவர். 1993ல் இந்த நூலுக்காக சாகித்ய அக்காதமி விருது பெற்றார். 2004ல் பத்மபூஷன் விருது கிடைத்தது.

கோபிசந்த் நாரங்

நாரங்கின் நூலைப்பற்றிய ஒரு பெரும் விவாதம் உள்ளது. அது பெரும்பாலும் ஆங்கில கோட்பாட்டு விளக்க நூல்களை அடியொற்றி எழுதப்பட்டது என்றும் பல பகுதிகள் பிற நூல்களில் இருந்து அப்படியே எடுத்தாளப்பட்டிருக்கின்றன என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அத்துடன் கீழைக்காவிய இயல்பற்றிய பகுதிகள் அப்படியே சில முக்கியமான இந்தி நூல்களில் இருந்து எடுத்து எழுதப்பட்டுள்ளன என்கிறார்கள். முனைவர் பட்ட ஆய்வேடுகளை பயன்படுத்தியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. நாரங் ஒரு மொழிபெயர்ப்பாளரே ஒழிய அசல் சிந்தனையாளர் அல்ல என்கிறார்கள்.

இருக்கலாம். இந்நூலை வாசிக்கையில் இது ஒரு சிந்தனையாளனின் நூல்போல இல்லை, ஒரு நல்ல பேராசிரியரின் பாடநூல் போலவே உள்ளது. பல பகுதிகள் ஏற்கனவே பலமுறை கூறப்பட்டு படிப்படியாக ஒரு தெளிவான ஒரு வடிவத்தை அடைந்தவை போல உள்ளன. இந்நூலின் தனித்தன்மை என்பது இது ஒரு சிறந்த தொகைநூல் என்பதும் இந்தியச்சூழலில்  நின்றபடி தெளிவாகப் பேசுகிறது என்பதும்தான்
*

கோபிசந்த் நாரங்கின் நூல் ஒரு நவீன வாசகன் கேட்கும் முதல் வினாவுடன் ஆரம்பிக்கிறது. இன்றுவரை உலகில் பலகோணங்களில் இலக்கியக் கோட்பாடுகள் பேசப்பட்டுள்ளன. அமைப்புவாதமும் பின்அமைப்புவாதமும் மேலதிகமாக என்ன சொல்கின்றன, எதை கொண்டுவருகின்றன? இவை நடப்பில் உள்ள அனைத்து இலக்கியக் கோட்பாடுகளுக்கும் அறைகூவலை முன்வைக்கின்றன என்கிறார் நாரங்க். இலக்கியம் உருவாக்கும் அனைத்தும் மொழிக்கட்டுமானங்களே என்ற வாதத்தில் இருந்து ஆரம்பிக்கிறது இந்த மாற்றுச் சிந்தனை.

பெர்டினன்ட் டி சசூர்

மிகவிரிவாக நாரங்க் இச்சிந்தனைகள் உருவாக்கும் மாற்று நோக்குகளை விளக்குகிறார்.

1. பொதுப்புத்தி சார்ந்து நாம் கொண்டுள்ள பல இலக்கிய மதிப்பீடுகளை இந்த புதியசிந்தனைகள் கேள்விக்குரியவை ஆக்குகின்றன. பொதுப்புத்தி என்பது நம் சூழலில் முன்னரே நடைமுறை சார்ந்து உருவாக்கப்பட்டு ஆராயாமல் புழங்கிக்கொண்டிருக்கும் கருத்துக்களால் ஆனது. அந்த கருத்துக்கள்பலவற்றை இந்தபுதிய சிந்தனை மரபு மறுக்கிறது. உதாரணம் மொழி என்பது எண்ணங்களைச் சொல்வது என்ற எண்ணம். அப்படி இருக்கவேண்டியதில்லை. அது எண்ணங்களை உருவாக்குவதும்கூட.

2. இலக்கியத்தில் மிக எளிதாகப் புரியக்கூடிய பல விஷயங்கள் எளிமைப்படுத்துவதன் மூலம் உருவாக்கப்பட்டவை. அவற்றின் உட்சிக்கல்களை பேசுவதன்மூலம் அவற்றை இச்சிந்தனைகள் அசைக்கின்றன. உதாரணமாக ஓர் இலக்கியம் எதார்த்தத்தைச் சொல்கிறது என்று சாதாரணமாக நினைக்கிறோம். அது அந்த எழுத்தாளர் உருவாக்கும் எதார்த்தமே. ‘உண்மையான’ எதார்த்தம் ஒன்று இல்லை.  யாராது அதை உருவாக்க வேண்டியிருக்கிறது

3 பொதுப்புத்தி சார்ந்த விஷயங்களை நாம் சாதாரணமாக ஏற்றுக்கொள்வதற்கு அவை நமக்கு பழக்கப்பட்ட மொழியில் சொல்லபப்ட்டிருப்பதே காரணம். பலசமயம் தெரிந்த சொற்றொடரை நாம் உண்மை என்று ஏற்கிறோம். மொழி ஊடுருவிப்பார்க்கக்கூடிய ஊடகமே அல்ல என்று சொல்லும் நாரங்க் அது விஷயங்களை  கட்டியெழுப்புவதற்கான ஊடகம் என்கிறார். மொழியின் இந்த இயல்பை அமைப்புவாதச் சிந்தனைகள் சுட்டிக்காட்டின, அது ஒரு புதிய திறப்பு என்கிறார்

4 மொழி என்பது ஒரு பரிமாற்றம் . ஒரு தொடர்நிகழ்வு என்று இச்சிந்தனைகள் நமக்குக் காட்டியதன் மூலம் நாம் மொழியின் அலைகளுக்குள் வாழ்கிறோம் என்ற உண்மையை புரியவைத்தன என்கிறார் நாரங்க்.

5 சமூகம் என்று நாம் சாதாரணமாகச் சொல்லிக்கொண்டிருந்த ஓர் அமைப்பு மக்களோ மரபுகளோ மட்டும் அடங்கிய ஒரு சாதாரணமான கட்டுமானம் அல்ல என்று காட்டியது  அமைப்புவாதம். அது குறியீடுகளின் ஒரு பெருதொகை என்றும் அது உருவாக்கும் ஒட்டுமொத்தமான குறியீட்டமைப்பையே நாம் மொழி என்கிறோம் என்றும் அவை சொல்லின. அந்த மொழியே நம் மனமாகவும் சிந்தனையாகவும் எல்லாம் உள்ளது என்றுகாட்டியதன் வழியாக நாம் சமூகம் என்ற கருத்தை பயன்படுத்தும் முறையையே அமைப்புவாதச் சிந்தனைகள் தலைகீழாக மாற்றியமைத்தன

6 அமைப்புவாதம் மொழிக்கும் சிந்தனைக்கும் புதிய விளக்கத்தை அளித்தது என்கிறார் நாரங். சிந்தனையின் கருவி என்றும் சிந்தனையின் ஊர்தி என்றும் மொழியை காண்பதே நம்முடைய மரபார்ந்த முறை. சிந்தனை என்பதே ஒரு மொழிநிகழ்வு என்று கூறிய அமைப்புவாதம் சிந்தனை என்பதை ஒரு சொல்லாடலாக விளக்கியது, மொழியை சிந்தனை நிகழும் சொற்களமாக காட்டியது.

ஆனால் தன் நூலில் இச்சிந்தனைகளால் மறுக்கப்பட்ட தரப்புகள் மேலதிகமான வாதங்களுடன் எப்படி தங்களை தகவமைத்துக்கொண்டு முன்னெழுந்தன என்றும்  நாரங் சொல்கிறார். அதாவது தொழில்நுப்டம் போல ஒன்று இன்னொன்றை பழையதாக்கியபடி சிந்தனைகள் முன்னகர்வதில்லை. அவை ஒரு பெரிய விவாதமாகவே உள்ளன.

இவ்வாறு ஆரம்பத்திலேயெ நவீனச் சிந்தனைப்போக்கில் அமைப்புவாதம்-பின் அமைப்புவாதத்தின் பங்களிப்பு என்ன என்பதை விளக்கிவிட்டு விரிவாக மேலே செல்கிறார் நாரங்க். அமைப்புவாதத்தின் ஆரம்பநிலைச் சிந்தனைகள் உருவான களம் முதலில் விரிவாக விளக்கப்படுகிறது. ஒ¡ரு சிந்தனைசார்ந்த  இயக்கமாக எப்படி அமைப்புவாதம் உருவாகி வந்தது, அமைப்புவாதம் என்ற கலைச்சொல் எவ்வாறு பிறவி கொண்டது என்று விளக்கியபின் அமைப்புவாதத்தின் மொழியியல் அடிப்படைகளை விரித்துரைக்கிறார். சசூரின் மொழியியல் சிந்தனைகளும் ரோமன் யாகப்ஸன் நாம் சாம்ஸ்கி போன்றவர்களின் சிந்தனைகளும் விளக்கப்படுகின்றன.

அதன்பின்னர் ருஷ்ய உருவவாதம், அதன் முதன்மைச் சிந்தனையாளரான மிகயீல் பக்தினின் மொழியியல் சார்ந்த இலக்கியக் கொள்கைகள் விளக்கப்படுகின்றன. அதன்பின்னர் கதையிலக்கணம் [மொழிபுவாதம்] சார்ந்த சிந்தனைகள். குளோட் லெவிஸ்டிராஸ், நார்த்ராப் ·ப்ரை ஆகியோரின் கொள்கைகள். கடைசியாக காவியஇயலும் அமைப்புவாதமும் என்ற விரிவான விவாதத்தில் ரோமன் யாகப்ஸன், ஜோனதன் கல்லர் ஆகியோரின் கொள்கைகள்.

இரண்டாவது பகுதி பின் அமைப்பியலின் முன்னோடிச் சிந்தனையாளரான ரோலான் பார்த்தில் ஆரம்பித்து தெரிதா நோக்கி விரிகிறது. தகர்ப்பமைப்புவாதம் [கட்டுடைப்புவாதம்] குறித்த பல தளங்களிலான விளக்கங்களுடன் தெரிதாவையும் சசூரையும் இரு தரப்பாக நிறுத்தி விவரிக்கும் விரிவான ஆராய்ச்சியும் உள்ளது

பார்த்

தமிழில் நாகார்ச்சுனன் இந்தியாவில் இருந்தவரை நிகழ்ந்த பின்அமைப்புவாத விவாதம் ஏறத்தாழ இந்தப்புள்ளியில் நின்றுவிடுகிறது. மேலே நிகழ்ந்த சிந்தனை வளர்ச்சியை இந்நூல் எஞ்சிய பாதிப்பகுதியில் விளக்குகிறது. பின்அமைப்புவாதத்தின் தாக்குதலை எப்படி மார்க்ஸியச் சிந்தனைகள் எதிர்கொண்டு அடுத்த கட்டம் நோக்கி நகர்ந்தன என்று விவரிக்கிறார் கோபிசந்த் நாரங்க். டெரி ஈகிள்டன், ·ப்ரெடெரிக் ஜேம்ஸன் ஆகியோரின் சிந்தனைகள் விளக்கப்படுகின்றன. அதன் பின் இன்று அதிகமாகப் பேசப்படும் வாசக ஏற்புக் கோட்பாடுகள் பற்றி பேசுகிறது இந்நூல்

கோபிசந்த் நாரங்கின் இந்நூலின் மூன்றில் ஒருபங்கு பகுதி கீழை அழகியல் கோட்பாடுகளைக் குறித்த ஆய்வுகளாகும். கீழைத்தேய அழகியல்கோட்பாடுகளில் எந்தெந்த பகுதிகள் அமைப்புவாதம் மற்றும் பின்அமைப்புவாதம் சந்தித்த பிரச்சினைகளைப் பற்றி பேசின என்று ஆராயும் கோபிசந்த் நாரங்க் சம்ஸ்கிருத காவியஇயலில் உள்ள தொனி கோட்பாடு, பௌத்தத்தில் உள்ள சூனியவாத கோட்பாடுகள், ஸ்போடக் கோட்பாடு போன்ற அழகியல் கொள்கைகள் ஆகியவற்றை விரிவாக அறிமுகம் செய்கிறார்.

அதன்பின்னர் உருது மொழியின் அழகியல்கோட்பாடுகளையும் அராபிய அழகியல்கோட்பாடுகளையும் அமைப்புவாத,பின்அமைப்புவாதக் கொள்கைகளுடன் இணைத்து ஆராய்ந்து விவாதிக்கிறார். நான்காவது பகுதியில் இலக்கிய அழகியலில் ஏன் இத்தனை நுண்மையான மாறுபட்ட தரப்புகள் உருவாகின்றன என்றும் இவற்றின் மூலம் உருவாகி வரும் இலக்கிய தரிசனம் என்ன என்றும் விவாதிக்கிறார்.

கோபிசந்த் நாரங்கின் இந்நூலில் உள்ள ‘இந்தியக் கண்ணோட்டத்தில் பின்நவீனத்துவம்’ என்ற கட்டுரை முக்கியமான ஒன்று. பின்நவீனத்துவத்தின் மையச்சிக்கலே இதை வரையறை செய்வது கடினம் என்று சொல்லும் நாரங்க் பின்நவீனத்துவத்துக்கு முந்தைய சிந்தனைகளான முற்போக்குவாதம் நவீனத்துவம் இரண்டும் எளிதாக வரையறை செய்யத்தக்கவை என்பதுடன் அவை ஒன்றுக்கு ஒன்று முற்றிலும் மாறுபடுபவையும்கூட என்கிறார். ஒன்று முற்போக்கு அல்ல என்றால் அது நவீனத்துவம்தான். ஆனால் பின்நவீனத்துவம் அப்படி அல்ல. ஒன்று நவீனத்துவத்திற்குள் ஓரளவு பின்நவீனத்துவக் கூறுகளுடன் இருந்துகொண்டிருக்கமுடியும்.

எவ்வாறாக மார்க்ஸ் வரலாற்றை மையமிழக்கச் செய்தாரோ ·ப்ராய்ட் மனிதத்தன்னிலையை மையமிழக்கச் செய்தாரோ அதேபோல சசூர் மொழியையும் ஹ¤ஸூர்ல் பொதுப்படையான அறிவையும் தெரிதா அர்த்தத்தின் ஒருமையையும் மையமிழக்கச் செய்தார், இது இயல்பான ஒரு பரிணாமமே என்கிறார் நாரங்க்.  பின்நவீனத்துவம் இந்தியச்சூழலில் இதுவரை நிகழ்ந்த விவாதங்களை புதிய களங்களுக்குக் கொண்டுசெல்லக்கூடும் என்று எண்ணுகிறார்

தெரிதா

இந்தியசூழலில் நவீனத்துவம் எட்டுவகையான துருவமுரண்பாடுகளை [ பைனரி] உருவாக்கியுள்ளது என்கிறார் நாரங்க்.

1. மேலைநாடு X கீழைநாடு

2, உலகமயமாக்கம் X பண்பாட்டுவேர்கள்

3, மையப்பண்பாடு X பன்முகப்பண்பாடு

4, பெரும்புராணம் X நாட்டார் புராணம்

5, மேட்டுக்குடிகள் X ஒடுக்கப்பட்ட குடிகள்

6, சம்ஸ்கிருதம் X பிராந்திய மொழிகள்

7, அரபு,பாரசீகம் X உருது, இந்துஸ்தானி

8, பிராமண காவிய இயல்X பக்தி காவிய இயல்.

நம்முடைய எல்லா சிந்தனைகளும் இந்த  துருவ முரண்பாடுகளை ஒட்டியே உள்ளன. இந்த முரண்பாடுகளை பின் நவீனத்துவம் அழித்து ஒரு புதிய விவாதத்தை உருவாக்கக் கூடும் என்கிறார்.

மேலைச்சிந்தனைகளை விதந்தோதி உடனே ஓடிப்போய் ஆரத்தழுவும் விமரிசனமில்லாத வழிபாட்டுப்போக்கையும் வெளியே இருந்து எது வந்தாலும் அதை அழிவுப்போக்காக காணும் மூர்க்கமான கீழைநாட்டு மனநிலையையும் ஒருங்கே நிராகரிக்கும் நாரங் வெளிக்காற்று ஆரோக்கியமான உடலுக்கு நல்லதே என்று கூறுகிறார்.

இந்நூலின் இறுதியில் 17 மையமான கருத்துக்களாக இந்த ஒட்டுமொத்த விவாதத்தை சுருக்கி அளித்திருக்கிறார் நாரங். இந்தத் தளத்தில் நிகழ்த்தப்படும் எந்த ஒரு விவாதத்திலும் நினைவுகூரவேண்டியவை அவை. இது ஒரு தழுவல் நூலாக இருந்தால்கூட இந்தியச்சூழலில் வைத்து இந்த கொள்கைகளை தெளிவாக விவாதிக்கும் ஒரு நூல் என்றே கூறவேண்டும். தமிழில் இன்று கிடைப்பவற்றில் சிறந்த நூலும் இதுவே

அமைப்புவாதம் பின் அமைப்பியல் மற்றும் கீழைக்காவிய இயல் கோபிசந்த் நாரங் சாகித்ய அக்காதமி வெளியீடு. தமிழாக்கம் எச்.பாலசுப்ரமணியம்

பின் நவீனத்துவம்

முந்தைய கட்டுரைடிவீட்டுரைகள்
அடுத்த கட்டுரைப.சிங்காரம்,ஒருகடிதம்