வசந்தபாலனின் ‘அங்காடித்தெரு’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு திருச்செந்தூர் சுற்றுப்பகுதிகளில் நடைபெறுகிறது. படம் தொடங்கிய நாளில் இருந்து நான் படப்பிடிப்புப்பகுதிக்கே போய் பார்க்கவில்லை- தேவையானபோது இணையத்தில் தொடர்புகொள்வதுடன் சரி. ஆகவே ஒரு வாரம் சென்று வேடிக்கை பார்த்துவிட்டு வரலாமென்று கிளம்பி சென்ற 20-8-08 அன்று திருச்செந்தூர் போனேன். அங்கே கோயில் அருகே விடுதியில் வாசம்.
அதிகாலை ஐந்துமணிக்கு ‘வேக் அப் டீ’ வந்துவிடும். படப்பிடிப்பில் காண்டீன் ஊழியர்களின் பங்களிப்பு மிக மிக ஆத்மார்த்தமானதாக இருப்பதையே நான் இதுவரை கண்டிருக்கிறேன். சென்னையில் இருந்து கூடவே வந்து கல்யான மண்டபம் வாடகைக்கு எடுத்து மூன்றுவேளைக்கும் சமைத்துப் பரிமாறுவார்கள். ஒருமுறைகூட அதிகாலை டீ தாமதமாக வந்து நான் பார்த்ததில்லை. படப்பிடிப்பு முடிந்து இரவுணவு அளித்தபின் அவர்கள் தூங்க பன்னிரண்டு மணி ஆகிவிடும். ஐந்து மணிக்கு குழுவினர் தங்கியிருக்கும் எல்லா விடுதிகளுக்கும் டீ செல்லும் .எப்போது அவர்கள் தூங்குவார்கள் என்றே தெரியாது.
பொதுவாக சினிமா ஊழியர்களின் தீவிரமான ஒருங்கிணைந்த உழைப்பை நான் வேறுஎங்குமே கண்டதில்லை. ஒரு இடத்துக்கு கிரேன் போகவேண்டுமென்று இயக்குநர் சொன்னால் அது போயாகவேண்டும். வெயில், மழை, குன்று, பள்ளம் எதுவானாலும். காலை வெயில்வரும் நேரம் முதல் வெயில் அணைவது வரை வேலை. அந்த அளவுக்கு தீவிரமாக அரசு ஊழியர்கள் வேலைசெய்தால் நாலில் ஒருபங்கினரை வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள்.
ஆறரை மணிக்கு படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் இருப்போம். நாசரேத், சாத்தான்குளம் பகுதிகளில் தேரிக்காடுகளில் படப்பிடிப்பு.
அந்தநிலம் விசித்திரமானது. வத்தல் மிளகுபரப்பியதுபோன்ற ஆழ்ந்தசெம்மண். அதன்மேல் கன்னங்கரிய பனைமரங்கள். இப்போது சமூகவனத்துறையின அக்கேஷியா மரங்களை நட்டிருக்கிறார்கள். காயோகனியோ கிடைக்காத மரங்கள், ஆனால் ஆடுகள் மேயாதவை. ஆகவே அவை எதிர்கால தேரிக்காடுகளாக ஆகிக் கொண்டிருக்கின்றன. காலைமுதல் மாலைவரை வெயிலுக்கு ஏற்ப செம்மண்ணின் நிறம் மாறுவது ஓர் அலாதியான அனுபவம்.
ஏறத்தாழ 2500 சதுர கிலோமீட்டர் அகலத்துக்கு விரிந்துகிடக்கும் காடுகள் வனத்துறை கட்டுபாட்டில் உள்ளன. அதேயளவு பகுதி பட்டாநிலமாகவும் இருக்கிறது. செம்மண் என்றால் களிபோன்ற உறுதியான செம்மண் அல்ல. பொலபொலவென்ற செம்மணல். அதில் ஊடுருவிய மினுமினுக்கும் டைட்டானியம் தாது சிவந்த சருமத்தில் நீலநரம்புவலை போல தெரியும். அதற்காக டாட்டாவும் வைகுண்டராஜனும் மோதிக் கொள்கிறார்கள்! மழைநீர் தடங்களில் மாமிசக்கதுப்புபோல மணல்வரிகள்.
மேகமற்ற ஆழ்நீலவானத்தில் இருந்து வெண்ணிற நெருப்புமழை போல வெயில். சமீபகாலத்தில் எங்கும் நான் இந்த அளவுக்கு வெயிலை அறிந்ததில்லை. அதிலும் இந்த பருவத்தில் குமரிமாவட்டத்தில் எந்நேரமும் தூறலும் சாரலுமாக வானம் இருண்டே இருக்கிறது. படப்பிடிப்பு இடத்தில் அத்தனைபேரும் வெயிலில் காய்ந்து வியர்த்து ஊற்ற நான் மட்டும் குடையுடன் நாற்காலியிலேயே இருந்தேன். ஆனால் வெயிலால் மிகவும் பாதிக்கப்பட்டதும் நான்தான். களைத்துச் சோர்ந்து முகம் கறுத்து கன்னத்தோல் உரிந்து வறுவலாகிவிட்டேன்.
படப்பிடிப்பு என்றால் வேறுவழியே இல்லை. வசந்தபாலன் முழுநேரமும் வெயிலில்தான் இருந்தார். அவர் ‘வெயில்’ வசந்தபாலன். புழுதிக்காற்றில் உடம்பெல்லாம் செம்மண். அறைக்கு வந்து தலைதுவட்டினால் வெண்ணிற டர்க்கிடவல் சிவப்பாக ஆகிவிடும். திரும்பிவந்து குளிக்கும்போது ஒருகணம் உடல் சில்லிட்டு கடுமையாக குளிரும். பின்னர் சற்றே எரியும். பிறகு அழுத்தமான ஒரு விடுதலை உணர்வு. தொலைக்காட்சிப்பெட்டியை போட்டதுமே தூக்கம் வந்து சொக்கும்.
வெயில் எரியும் நிலத்து மக்களும் அந்த தாவரங்கள் போலத்தான் இருக்கிறார்கள். தடித்த, தொப்பை விழுந்த, எவரையுமே காணமுடிவதில்லை. வரண்டதலைமுடி, கருகிய முகம், உலர்ந்த உடல்… ஆண் பெண் குழந்தைகள் அனைவருமே அப்படித்தான். பலகிலோமீட்டருக்கு ஆளே தென்படாத முள்காட்டில் தன்னந்தனியாக இளம்பெண்கள் முள்விறகு வெட்டிசேர்த்து சுமந்துசென்று கொண்டிருந்தார்கள். உடைமுள், கருவேலங்காடுகளில் செடிகளும் மரங்களும் இலையே இல்லாமல் இரும்பால்செய்யப்பட்டது போல முழுக்க முழுக்க முள்ளாக சிலிர்த்து நிற்க குழந்தைகள் கால்களில் செருப்பே இல்லாமல் ஊடே அலைகின்றன.
ஓர் அன்னியனின் கண்ணால் அந்த நிலத்தையும் மக்களையும் பார்க்கும்போது சில மனப்பதிவுகள் ஏற்படுகின்றன. ஆராய்ச்சி செய்து சென்றடையும் முடிவுகளைப் போலவே இவையும் முக்கியமானவைதான். போகிறபோக்கில் கண்ணில் படுகின்றவை. சொல்லிக் கேட்பவை… ஆர்.எம்.கே.வி மற்றும் போத்தீஸ் விளபரங்கள் இல்லாத இடமே இல்லை. சுவர்களெங்கும். அதைவிட்டால் மஸ்கோத் அல்வா,பேரீட்சை அல்வா விளம்பரங்கள். மக்களின் முக்கிய உணவே அல்வாதானா என்று நினைக்கத்தோன்றும்.
ஊர்பெயர்கள் பெரும்பாலும் நல்ல தமிழில் இருக்கின்றன. அறிவான்மொழி, நாலுமூலைக்கிணறு… ஓர் ஊரின் பெயர் நங்கைமொழி. உடனே அருண்மொழி நங்கைக்கு ·போன் போட்டுச் சொன்னேன். ஊர்கள் மிக விலகி பொட்டல்காடுகள் நடுவே உள்ளன. ஓலைக்கூரை கொண்ட வீடுகள் அனேகமாக இல்லை. ஆனால் ஓட்டுவீடுகளையும் குடிசைகள் என்றுதான் சொல்லவேண்டும். ஓலை வீட்டின் குளிர்ச்சி இல்லாத சூளைஅறைகள் அவை.
பெரும்பாலும் எல்லா ஊர்களிலும் பண்ணையார்வீடுகள் காலியாக பூட்டி கிடந்து மௌனமாக பாழடைந்து கொண்டிருக்கின்றன. அவர்கள் நகரங்களுக்குக் குடிபெயர்ந்துவிட்டார்கள். கிறித்தவர்கள் அதிகமாக வாழும் சில ஊர்களில் மிகப்பெரிய கைவிடப்பட்ட பங்களாக்கள் பல காணக்கிடைத்தன. பொதுவாக இப்பகுதியில் கிறித்தவமதப்பிரச்சாரம் அதி உக்கிரமாக நடைபெறுகிறது. தற்போது அதிகமாக மதமாற்றம் நிகழும் இடங்களில் ஒன்று. பால் தினகரனுக்குப் பின்னர் தனியார் மதப்பரப்புநர்களில் ஆகப்பெரிய நட்சத்திரங்களான மோகன் சி லாசரஸ் மற்றும் அப்பாத்துரையின் தலைமையகம் இங்கே நாலுமாவடி என்ற ஊரில்தான் உள்ளது.
தமிழகத்தின் செல்வாக்கான வணிகர்கள் பலருக்கு இதுவே சொந்த இடம். தினதந்தி குடும்பத்தினரின் சொந்த ஊரான காயாமொழியில் முத்தாலம்மன் கொடைவிழாவை ஒட்டி பெரியவர் சின்னவர் இருவருக்கும் பிரம்மாண்டமான சுவரெழுத்துகக்ள் காணப்படுகின்றன. சரவணபவன் ராஜகோபாலின் ஊரும் அருகேதான். மழை அதிகமாக இல்லாததனாலும் போக்குவரத்து குறைவு என்பதனாலும் சாலைகள் பழுதடையாமல் செம்மண் நடுவே கரிய நேர்கோடாக செல்கின்றன. காடுகளுக்குள் எப்போதும் மயில் அகவல் ஒலி. அவ்வப்போது சாலையைக் கடக்கும் கீரிகள்.
காலையில் முயல்கள் வெளிவரும் என்றார்கள். ஆறு நாய்களுடன் வேட்டைக்குச் சென்ற கும்பல் ஒன்றைச் சந்தித்தேன். ராஜபாளையம் இனம் போல ஒல்லியாக உருவிவிட்டது போன்ற உடலுடன் ஆனால் தவிட்டு நிறத்தில் இருந்த நாய்கள். டாபர்மானின் உள்ளூர் வடிவம்போல. மிகமிக அமைதியானவை. படப்பிடிப்புக்கு நடுவே வந்து ஆள்கூட்டம் நடுவே நின்று அமைதியாக வேடிக்கை பார்த்தன. ராஜபாளையம் நாய்கள் அந்த வெக்கையை தாக்கு பிடிக்காதாம். ஒருகிலோமீட்டர் ஓடினாலே படுத்துவிடும். இவை ராஜபாளையம் ஆணுக்கு உள்ளூர் அன்னையில் உருவாக்கப்பட்ட கலப்புகள். எத்தனை ஓடினாலும் களைக்காதவை. ஒருநாள் முழுக்க தாகம் தாங்கும்.
நாய்களை நாள் வாடகைக்கு எடுக்க முடியும் என்ற தகவல் எனக்கு ஆச்சரியம் அளித்தது. யார் கூப்பிட்டாலும் வேட்டைக்குவந்து கட்டளைகளுக்கு கீழ்ப்படியுமாம். வாடகைக்குக் கொடுப்பவர் கொடுக்கும் குச்சியை கையில் வைத்திருந்தால் போதும். ”கடிக்குமா? என்றேன். ”சேச்சே. வேட்டை நாய் எங்கியாவது கடிக்குமா? ”என்றார்கள். சாம்பல்நிற முயல்கள் அங்கே அதிகம். அவற்றைப்பிடித்தால் குடலும் ஈரலும் நாய்களுக்கு. கொடுத்தால் கூட அவை பிறபகுதிகளை உண்பதில்லை. காட்டு இலாகா நிலத்துக்குள் பொதுவாக வேட்டைக்குச் செல்லமாட்டார்கள். மாட்டிக் கொண்டால் பிரச்சினை. முயல்வேட்டை என்பது பெரும்பாலும் லாபமில்லாத விளையாட்டுதான்.
நிலங்களில் கருவேல மரங்களை வளர்த்து அதற்கு கருவேலமர முட்களாலேயே வேலிபோடப்பட்டிருப்பதை காணலாம். கருவேலம் ஒரு லாபகரமான வேளாண்மையாம். அதற்கு ஒன்றுமே செய்ய வேண்டியதில்லை. நட்டு வளரவிட்டால் போதும். ஐந்துவருடங்களில் குத்தைகைக்காரர்கள் வெட்டி காகித ஆலைக்கு அனுப்பிவிடுவார்கள். டன் ஒன்றுக்கு ஐந்தாயிரம் வரை விலை உண்டு. ஏக்கருக்கு ஐந்துவருடத்தில் இருபது டன் தேறும். கருவேலமரக்காட்டுக்குள் பறவை ஒலிகள். அங்கே அவை எதை தின்கின்றன?
காயாமொழிக்கு அருகே படப்பிடிப்பை விட்டு விலகி நடக்கப்போனேன். ஆள் நடமாட்டமே இல்லாத கருவேலங்காட்டுப்பாதையில் ஆடுகளுடன் வந்த ஆத்தங்கரை நாடாரைச் சந்தித்தேன். அவரது இயற்பெயரே அதுதான், சாமிபெயர். ஆடுமேய்ப்பதுதான் முக்கிய தொழில். இந்த ஊர் ஆடுகளின் சுவை வேறு எங்கும் வராது என்றார். காரணம் வெயில்தான். மழை உள்ள ஊர்களில் ஆடுகளின் சருமம் இத்தனை பளபளப்பாக இருக்காது. கருவேலத்தளிரைத்தான் அதிகமும் உண்கின்றன. மலையாளத்தானுக்கு அந்த அருமை தெரியும் ‘பொன்விலை’ கொடுத்து ஆடுகளை வாங்கிக் கொள்வார்கள்.
நாடாருக்கு நாலு பையன்கள் மூன்று பெண்கள். கடைசிப்பெண் கல்யாணத்துக்கு நிற்கிறாள். அவளுக்கு இருபதுபவுன் சேர்த்து வைத்திருக்கிறார். கல்யாணச்செலவுகளுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் கைவசம் இருக்கிறது. அரசாங்கம் கொடுத்த டிவி இரண்டு கிடைத்தது. காரணம் வீட்டில் மூன்று ரேஷன் கார்டுகள். மகன்கள் குடும்பமும் சேர்ந்துதான் வாழ்கிறார்கள். ஒரு டிவி, கியாஸ் அடுப்பு இரண்டையும் பெண்ணுக்குச் சீதனமாக எடுத்து வைத்து விட்டிருக்கிறார். செந்தூரான் கண் பார்க்கணும். ஆடுமேய்த்தே பிள்ளைகளை எல்லாம் கரையேற்றிவிட்டார் நாடார். சிவாஜி ரசிகர். இப்போது படமே பார்ப்பதில்லை, சிவாஜியின் எல்லா படங்களையும் பார்த்தாகிவிட்டது.
பதினைந்து நிமிடத்தில் தன் வாழ்க்கைக்க¨யை சுருக்கமாகச் சொல்லிவிட்டு ஆடுகளை திருப்பி என்னுடன் ஊருக்குத் திரும்ப தயாரானார் நாடார். அவர் வீட்டுக்குப் போய் நான் ஒரு தேத்தண்ணி குடித்தே ஆகவேண்டும் என்றார். வீடு மேலும் நான்கு கிலோமீட்டார் அப்பால். மன்றாடி அதை தவிர்த்துவிட்டேன்.
இப்பகுதியெங்கும் நிறைந்திருக்கும் பனைமரங்கள் பல லட்சம் இருக்கும். கிட்டத்தட்ட அனைத்துமே அப்படியே பல வருடங்களாக சும்மாவிடப்பட்டிருக்கின்றன. ஐந்து சத பனைகள் கூட பயன்பாட்டில் இல்லை. ஆனாலும் இப்பகுதியில் நிறைய தரமான கருப்பட்டி மற்றும் பதநீர் கிடைக்கிறது. இந்தபனைகள் தமிழ்நாட்டின் மாபெரும் சொத்து. பனைகளை பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தாலே இங்குள்ள கிராமப்புற வறுமையை கிட்டத்தட்ட முற்றாக துடைத்துவிடலாம்.
ஆனால் அரசு கள் எடுப்பதை முழுமையாகவே தடைசெய்து வைத்திருக்கிறது. கள் வேறு எந்த மதுபானத்தைவிடவும் ஆரோக்கியமானது. பனைமரங்களில் ஏற்றுவதற்கு அதிக ஆள் கிடைப்பதில்லை என்பதும் பதநீரை காய்ச்சி கருப்பட்டியாக ஆக்க நிறைய விறகு தேவைப்படுகிறது என்பதும் கருப்பட்டி விலையை உச்சத்தில் வைத்துள்ளன. நவீன அறிவியல் முறைகளைப் பயன்படுத்தி கள்ளையும் பதநீரையும் சரியாக புட்டிகளில் அடைத்து விரிவாக வணிகம் செய்ய முடியும் என்றால் தமிழகம் பலகோடி ரூபாய் வருமானத்தைப் பெற முடியும். பலகாலமாகவே பற்பல பொருளியல் நிபுணர்களும் அமைப்புகளும் அதற்காகக் குரல் கொடுத்து வந்தாலும் அரசு பொருட்படுத்தவில்லை என்றார்கள்.
இருபத்தேழாம் தேதிவரை திருச்செந்தூரில் இருந்தேன். அன்று காலையிலேயே கிளம்பி கோயிலுக்குச் சென்றேன். திருச்செந்தூரில் ஆவணித்திருவிழா. கூட்டம்கூட்டமாக கிராமத்து மக்கள் வந்து கோயிலைச்சுற்றி ஆயிரக்கணக்கில் இரவு தங்கியிருந்தார்கள். விரிக்கபப்ட்ட பிளாஸ்டிக் சாக்குகளில் வெள்ளித்தண்டை போட்ட கரிய குட்டிக்கால்களுடன் குழந்தைமுருகன்கள் தூங்கினார்கள். பெண்முகங்களில் தெரிந்த குதூகலமும் பரபரப்பான உரத்த குரல்களும் மனதை மலர்வித்தன. அதிகாலையில் அலங்காரரூபனாக தீப ஒளியில் மின்னிய கல்யாணமுருகனையும் கடலையும் பார்த்துவிட்டு திரும்பிவந்தேன்.