அக்காமலையின் அட்டைகள்.

இணையத்தில் எங்கள் பயணங்களைப்பற்றி படித்த கோவை வாசகரான அருண் அவருக்கு அறிமுகம் இருந்த சென்னை வழக்கறிஞர் செந்திலை தொடர்புகொண்டு நான் எழுதியிருப்பது அவரைப்பற்றித்தானா என்று கேட்டார். செந்தில் ஆமாம் என்றபோது அவர் தான் ஒரு பயணத்திட்டத்தை அமைப்பதில் ஆர்வமாக இருப்பதைச் சொன்னார். சென்னை செந்தில் என்னைத்தொடர்புகொண்டு உடுமலை சின்னாறு வழியாக ஒரு மலைப்பயணத்தை ஏற்பாடுசெய்ய அருண் ஆர்வமாக இருக்கிறார் என்றார். நானும் உடன்பட்டேன்.

திட்டமிட்டபடி சென்ற ஆகஸ்ட் 13 அன்று ரயிலில் கிளம்பி 14 காலையில் நான் ஈரோடு சென்று சேர்ந்தேன். ரயில்நிலையத்துக்கு விஜயராகவனும் அவரது குட்டிப்பையன் சூரியாவும் வந்திருந்தார்கள். மெரிடியன் ஓட்டலில் அறைபோட்டிருந்தார்கள். அங்கே தங்கி சற்றே இளைப்பாறினேன்.நண்பர்கள் சிவாவும் தங்கமணியும் அறைக்கு வந்தார்கள். பேச்சு எப்படியோ காந்திக்கு திரும்பியது.சி.எ·ப்.ஆன்ட்ரூஸ், வெரியர் எல்வின் முதல் லாரி பேக்கர் வரை மேலைநாட்டினர் பலர் காந்தியை சந்தித்ததுமே ஆழமான மனஎழுச்சிக்கு உள்ளாகி பெரும் இலட்சியங்களுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டதைப்பற்றிப் பேசினேன். அந்த அளவுக்கு காந்திக்கு இந்தியர்கள் தங்களை அர்ப்பணித்துக் கொண்டார்களா என்ற ஐயம்  எனக்கு உண்டு. நேரு,பட்டேல் உட்பட பெரும்பாலான காந்தியவழித்தோன்றல்களுக்கு அதிகாரம் சார்ந்த ரகசியத்திட்டங்கள் இருந்தன, அதிகாரமா காந்தியா என்ற கேள்வி எழுந்த போது அவர்கள் முன்னதையே தேர்ந்தெடுத்தார்கள்.

மதியம் செந்தில் வந்தார், ஈரோடு மாமன் மெஸ்ஸில் சாப்பிட்டோம். நான், சென்னை வழக்கறிஞர் செந்தில்,  ஈரோடு சிவா, ஈரோடு நண்பர் பாபு, வழக்கறிஞர் கிருஷ்ணன், நண்பர் தங்கமணி விஜயராகவன் ஆகியோர்  விஜயராகவனின் மாருதி ஆம்னி வண்டியில் சின்னாறு நோக்கிக் கிளம்பினோம். மூன்றுமணியளவில் உடுமலையில் எங்களைச் சந்திப்பதாக அருண் சொல்லியிருந்தார். உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சில நண்பர்கள் அவருடன் வருவதாக ஏற்பாடு. அந்த நண்பர்கள் தொடர்ந்து தாமதப்படுத்திக் கொண்டே இருந்தார்கள். நாங்கள் சின்னாறு நோக்கிச் சென்றோம். அழகிய மலைவளைவுகள். உயரமில்லாத மரங்கள் செறிந்த சரிவுகள். மாலை பயணம் இனிதாகவே இருந்தது.

சின்னாறு அருகே ஏரிமீதுள்ள பாலத்தில் நின்று நீரை வேடிக்கை பார்த்தபோது நான் தூரத்தில் மீன்கள் நீந்தும் அலைநகர்வைக் கண்டேன். மீன்கள் ஒன்றுக்குப் பின் ஒன்றாக வருவது போலிருந்தது. சிலகணங்களுக்குப் பின் முதலையோ என்ற ஐயம் ஏற்பட்டது. அந்த ஐயம் ஏற்பட்டதுமே முதலையை ‘பார்க்க’ முடிந்தது. மிகப்பெரிய முதலை நீரை மென்மையாக ஊடுருவி மறுகரை நோக்கி வந்தது. அதன் வாலின் சுழற்சியையும் நாசியையும் நன்றாகவே கண்டோம். கரையோரத்துப் புதர்களுக்குள் சென்று மறைந்தது. தன் தூங்குமிடத்தில் இருந்து இரைதேடுமிடத்துக்கு அன்றாட ‘அலுவல்பயணம்’

அருண் வந்துசேர இருட்டிவிட்டது. நாங்கள் சென்று சேரவேண்டிய காவல்கோபுரம் சாலையிலிருந்து தள்ளி காட்டுக்குள் இருந்தது. மூட்டை முடிச்சுகளுடன் இருட்டுக்குள் தடுமாறி அங்கே ஏறிச்சென்றோம். அது சின்னாறு நீர்த்தேக்கத்தையும் சூழ்ந்துள்ள மலைகளையும் ஒரே பார்வையில் பார்க்கும்விதத்தில் அமைந்தது. மாலையில் அங்கே வந்திருந்தால் அற்புதமான காட்சியாக இருந்திருக்கும். அப்போது வானில் நிலவை மேகம் மூடியிருந்தது. காட்சிக்கோபுரத்தின் முன் அமர்ந்து பொட்டலத்தில் கொண்டுவந்திருந்த சப்பாத்திச் சுருள்களை சாப்பிட்டோம். காவல்கோபுரம் மீது ஏறி அமர்ந்து சூழ்ந்து நிழலோவியமாக விரிந்த வானையும் மலையடுக்குகளையும் காட்டையும் பார்த்தோம். காட்டின் அமைதி, காட்டின் ரீங்காரம். அதிக குளிர் இருக்கவில்லை.

மறுநாள் காலை நான்குமணிக்கே கிளம்ப வேண்டும் என்று அருண் சொன்னதனால் உடனே படுத்துவிட்டேன். வெறும் சிமிண்டு தரையில் படுத்தபோதும்கூட களைப்பு நல்ல தூக்கத்தை அளித்தது. மூன்றுமணியளவில் விழிப்புவந்தபோது உடுமலை நண்பர்கள் எழுந்து அமர்ந்திருந்தார்கள். தூரத்தில் யானை பிளிறல் கேட்டதாகச் சொன்னார்கள். மேகம் விலகி முழுநிலவு வானில் நிற்க காடும் மலைகளும் பளிங்கு வெளியாக எங்களை வளைத்திருந்தன.

நான்குமணிக்கு கிளம்பி இருட்டுக்குள் இறங்கி சின்னாறு செக்போஸ்டை அடைந்து கார்களை அங்கே விட்டுவிட்டு ஒரு மட்டடோர் வேனில் ஏறி உடுமலைபேட்டைக்குச் சென்றோம். அங்கே உணவுக்குச் சொல்லியிருந்த இடத்தில் ஒன்றரை மணிநேரம் தாமதம். போகும் வழியில் ஒரு மலையருவியருகே இறங்கி காலைக்கடன்களை கழித்தோம். சிவாவும் செந்திலும் அந்த குளிரிலும் அருவியில் குளித்தார்கள். வால்பாறைக்கு நாங்கள்  திட்டத்துக்கு இரண்டுமணிநேரம் தாமதமாகச் சென்று சேர்ந்தோம்.

வால்பாறையில் இருந்து அக்காமலை. அக்காமலையில் அரசு தேயிலைத்தோட்டத்தைத்தாண்டி வனப்பாதை ஆரம்பம். எங்களுடன் ஒரு வனக்காவலரும் துணைக்குவந்தார். அடர்ந்த காடுகள் இருபக்கமும் வேலியிட்ட காட்டுக்குள் வேன் சென்றது. கல்பாவப்பட்ட சாலை. அந்தக்காடு புலிகள் சரணாலயமாக  அறிவிக்கப்படவிருக்கிறது. எனவே குடியிருப்புகள் காலிசெய்யப்படுகின்றன. சாலைகள் புதுப்பிக்கப்படுவதில்லை.

நினைத்ததுபோலவே எங்கள் வேன் ஒரு சேற்றுப்பள்ளத்தில் சிக்கி செயலிழந்துவிட்டது. அதை அத்தனை பேரும் தள்ளினோம். தள்ளி நகர்த்தினால் அடுத்த சக்கரம் புதைந்து கொள்ளும். அதை நகர்த்தினால் ஆக்ஸில் புதைந்து கொள்ளும். ஜாக்கி போட்டு தூக்கி விலக்கி மீண்டும் உந்தி மீண்டும் தள்ளி…டிரைவர் சேறோடு சேறாக கலந்துவிட்டிருந்தார். இரண்டுமணிநேரம் கழித்து ஒருவழியாக வேன் வெளிவந்தது. அங்கேயே எங்களை விட்டுவிட்டு வேன் திரும்பிச் சென்றது.

பயணத்திட்டத்தின்படி நாங்கள் எட்டுமணிக்கு அக்காமலைக்கு உள்ளே இருந்த ஒரு மலைபங்களாவுக்குச் சென்றுசேரவேண்டும். அங்கிருந்து பதினைந்து கிலோமீட்டர் நடந்து இறங்கி இன்னொரு பங்களா. அங்கே தங்கி விட்டு காலையில் கிளம்பி பத்து கிலோமீட்டர் நடந்து மதியம் உடுமலைக்குச் சென்று சேரவேண்டும். ஆனால் அப்போதே மதியம் இரண்டுமணி ஆகிவிட்டிருந்தது. ஆறு கிலோமீட்டர் நடந்தால் தான் அந்த மலைப்பங்களா வரும். சரி, அங்கே சென்று இரவுதங்கிவிட்டு காலையில் திரும்பி வால்பாறைக்கே செல்வோம் என்று முடிவெடுத்தோம்.

நடக்க ஆரம்பித்தோம். மதியம் இரவு இரண்டுவேளைக்குமான உணவு, தண்ணீர்ச்சுமைகள். ஆனால் மலைப்பாதை மிகமிக அழகாக இருந்தது.ஒருபக்கம் ஓங்கிய மலைச்சிகரங்கள். அவற்றின் மீது நீங்காத மழைமேகம். மேகங்களிலிருந்து நீர் நேரடியாக மலைகள் மீது இறங்கி அருவிகளாகக் கொட்டிக் கொண்டிருந்தது. வரையாடுகள் அதிகமாக இருக்கும் மலைச்சிகரம் அது என்றார் வன அலுவலர். மலையுச்சி ஆதலினால் மரங்கள் இல்லை. சில இடங்களில் சில்வர் ஓக் அல்லது பைன் மரக்கூட்டங்கள். மற்றபடி கண்தொடுதூரம் வரை பசும்புல்வெளி மட்டுமே. அமைதியை பச்சைவண்ணத்தில் வரைந்தது போன்ற விரிவு.

சிறுத்தைகளின் எச்சங்கள் எங்கும் கிடந்தன. அங்கே மிளாக்களும் காட்டெருதுக்களும் [Gaur] அவற்றை வேட்டையாடும் சிறுத்தைகளும் மட்டுமே உள்ளன. காட்டெருதுக்கூட்டம் ஒன்றை தொலைவில் பார்த்தோம். அந்த நிலத்தின் சிறப்பு உயிரினம் அட்டைகள்தான். எந்நேரமும் மேகம் மூடி தூறல் விழுந்துகொண்டே இருக்கும் இடம் அது. ஆகவே அட்டைகள் பல்கிப்பெருகி கொத்துகொத்தாக கால்களில் பற்றி தலைவரைக்கும் ஏறின. உப்புநீரில் டெட்டால் கலந்து விட்டால் பிடிவிட்டு உதிர்ந்தன. அட்டை விட்டுவிட்டு போனால் ரத்தம் உறையாமல் கொட்டிக்கொண்டிருக்கும். கிருஷ்ணனின் கால் படுகாயம் அடைந்தது போல ஆகிவிட்டது.

களைத்துச் சோர்ந்து மலைவிடுதிக்குச் சென்று சேர்ந்தோம். சுற்றும் புல்வெளி. நடுவே அதிதூய நீர் ஓடும் சிற்றோடை. பழங்கால விடுதி. ஆனால் அங்கே தங்க முடியாது. அது பழுதுபார்க்கப்படாமல் உடைந்து ஒழுகி உள்ளே ஈரம் தேங்கி கிடந்தது. ஒன்றும் செய்ய முடியாது. அங்கே  உணவுண்டு இளைப்பாறிவிட்டு திரும்பி நடந்தோம். இம்முறை மேகம் எங்களை நன்றாகவே மூடிவிட்டிருந்தது. பன்னிரு கிலோமீட்டர் நடந்து அக்காமலை முகப்பை அடைந்தபோது இரவு ஏழரை மணி. கும்மிருட்டுக்குள் கைவசம் ஒரே சிறுமின்விளக்குமட்டும்தான். சாரல்மழை பெய்துகொண்டே இருந்தது. அக்காமலை எஸ்டேட் வழியாக மீண்டும் மூன்று கிலோமீட்டர் நடந்து சாலைக்குவந்தோம்.

நல்லவேளையாக கடைசிப்பேருந்து நின்று கொண்டிருந்தது. அதில் ஏறி அமர்ந்ததுமே அட்டைபொறுக்க ஆரம்பித்துவிட்டோம். விஜயராகவனின் கழுத்தில் எல்லாம் அட்டைகள். வால்பாறைக்கு வந்து சேர்ந்தபோது எல்லாருக்கும் களைப்பு. வால்பாறையிலேயே ஒரு அறைபோட்டு ஓய்வெடுக்கலாம் என்றார் செந்தில். ”ஒரு நல்ல டீலக்ஸ் ரூம் போட்டு சூடா வெந்நியிலே குளிச்சிட்டு மெத்தையிலே படுத்து நல்லா தூங்கணும் சார்” வால்பாறையில் மொத்தமே நான்கு விடுதிகள். நான்கிலும் அறைகள் இல்லை.

ஆகவே அடுத்த பேருந்தை இரவு பத்துமணிக்குப் பிடித்து இரவு ஒன்றரை மணிக்கு உடுமலைப்பேட்டைக்கு வந்துசேர்ந்தோம். அருணும் நண்பர்களும் கோவைக்கே செல்வதாகச் சொல்லி பிரிந்து சென்றார்கள். எங்கள் எவரிடமும் பெட்டிகள்  ஏதுமில்லை. போட்டிருக்கும் உடைகள் மேலே மழைக்கோட்டு மட்டுமே. எல்லாருமே சிக்கன்குனியா நோயாளிகள் போல நடந்தோம். களைப்பு ஏறி நிற்பதே கூட கஷ்டம். இந்த நிலையில் உடுமலைப்பேட்டையில் விடுதிகளுக்குப் போய் இடம்கேட்டால் கொடுப்பதற்கு அவன் என்ன முட்டாளா?  திசைதடுமாறும் ஆறுகுடிகாரர்கள்!

எங்கும் அறை கிடைக்கவில்லை. நடுச்சாலையில் அமர்ந்துவிட்டோம். ஒரு போலீஸ்காரர் பைக்கில் வந்து ‘யார் என்ன ‘ என்று விசாரித்தார்.பொள்ளாச்சிபோவதா? ஆனால் அங்கே போனால் இன்னும் இரவாகிவிடும். பேசாமல் சின்னாறுக்கே போகலாம் என்றார் விஜயராகவன். அவரே சென்று ஒரு மாருதி ஆம்னி வண்டியை வாடகைக்குப் பிடித்துவந்தார். அதில் ஏறி சின்னாறு செக்போஸ்டுக்கே சென்றோம்.

செக்போஸ்ட் அருகே கட்டி முடிக்கப்படாத மூன்று கடைகள் இருந்தன. காலிசெய்யவைக்கப்பட்டவை. செந்தில் சென்று செக்போஸ்டிலிருந்து துடைப்பம் வாங்கி வந்து கடைத்திண்ணையின் குப்பைகளை கூட்டினார்.”டீலக்ஸ் ரூம் கெடைச்சாச்சு. வெந்நிதான் இல்ல…என்ன செந்தில்?”என்றேன். ”போங்கசார்…”என்றார் கடுப்பாக. அங்கேயே படுத்து நன்றாகவே தூங்கிவிட்டோம். காலையில் கண்விழித்தபோது சாலை பரபரப்பாக இருந்தது. லாரிப்போக்குவரத்து.

அங்கே டீ சாப்பிட்டுவிட்டு எங்கள் வேனில் ஏறி ஈரோடுக்கு கிளம்பினோம். மதியம் ஈரோடு வந்து சேர்ந்தோம்.மீண்டும் மெரிடியன் ஓட்டல் அறை. எனக்கு இரவு பத்துமணிக்கு ரயில்.

”எல்லாமே தப்பா போச்சுன்னாலும் ஜாலியான டிரிப்..என்ன சார்?”என்றார் விஜயராகவன். உண்மைதான். ”நம்ம ஆல் இண்டியா டிரிப்புக்கு ஒரு பயிற்சி”என்று கிருஷ்ணன் சொன்னார். அவர் நடக்கும் இடமெங்கும் ரத்தம் ஒழுகியபடியேதான் இருந்தது அப்போதும்.

சின்னாறு ஏரி

புகைப்படங்கள் சிவா

இந்தியச்சுற்றுப்பயணத் திட்டம்

கணியாகுளம்,பாறையடி…

கணியாகுளம்-ஆலம்பாறை:என் மாலைநடை வழி

என்.எச்.47- தக்கலை

என்.எச்.47 என் பாதை

பருவமழைப்பயணம்-மழையில்லாமல்

முந்தைய கட்டுரைகணியாகுளம்,பாறையடி…
அடுத்த கட்டுரைஅக்காமலை:ஒருகடிதம்